Oplus_16908288
தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியது 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களும், 35 வயதுக்குட்பட்ட பெண்களும் தான். இந்தப் பெருங்கூட்டம் தங்களுக்கு அன்பானவர்களையும் ஊடுருவி வாக்கு சேகரித்தது.
இவர்களுக்கு மெத்தப் படித்தவர்களின் நுட்பமான அரசியல் எல்லாம் தெரியாது, தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லை, அவர்களுக்குத் தெரிந்தது ஒன்று மட்டும்தான்.
விஜய் ஆட்சிக்கு வந்து திரைப்படங்களில் அவர் செய்வது போலவே தீய சக்திகளை அழித்து விடுவார். அவருக்கு எதிராகக் களத்தில் நிற்பவர்கள் அனைவரும் தீய சக்திகளே.
ஆனால், அவர்களுக்கு திரைக்குப் பின்னால் விஜய் என்கிற தனி மனிதரைப் பற்றித் தெரியாது, தெரிந்தவர்களும் யார் தான் ஒழுக்கமானவர் என்கிற மனநிலைக்கு வந்துவிட்டார்கள், அவரும் நம்மைப் போலவே மானுட வாழ்வியலின் நெருக்கடிகளுக்கு ஆட்பட்டவர்.
அவருக்கு குடிப்பழக்கம் இருக்கிறது, அவருக்கு கவர்ச்சிகரமான நடிகைகளின் மீது ஆர்வம் இருக்கிறது, அந்த ஆர்வத்தால் இல்லற வாழ்வில் கசப்பு உருவாக்கி விட்டது, பெற்ற குழந்தைகளுக்கே கடன் கொடுத்து வாழும் சபிக்கப்பட்ட வாழ்வு அவருக்கு வாய்த்திருக்கிறது.
இப்போது அது அல்ல சிக்கல், விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்தவர்களால் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையைக் கொடுக்க முடியாமல் போனது.
காங்கிரஸ் கட்சி தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மோசடியான துரோகத்தை இழைத்து விட்டு திமுகவால் அந்தக் கட்சிக்குக் கிடைத்த 5 சட்டமன்ற உறுப்பினர்களுடன் தவெகவில் இணைந்து கொண்டது.
முன்னதாகவே ஆட்சி அதிகாரத்தில் பங்கு, அதிக தொகுதிகள் என்று காங்கிரஸ் தனது தகுதிகளை மீறி வாய்க்கு வந்தபடி பேசியது. சந்தர்ப்பவாதத்தின் காங்கிரஸ் முகங்களான ராகுல் காந்தி, மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, சசிகாந்த் செந்தில் மற்றும் பலர் தன்னிலை மறந்து உளறிக் கொட்டினார்கள்.
இறுதியில் செல்வப்பெருந்தகை, ப.சிதம்பரம் போன்றவர்கள் முதிர்ச்சியோடு திமுகவை அணுகி கூட்டணியை உறுதி செய்தார்கள். ஆனாலும், அது பொருந்தாக் கூட்டணிதான். திமுகவின் கடைநிலைத் தொண்டன் காங்கிரஸ் கட்சியின் அடாவடிகளை ஏற்றுக் கொள்ளவில்லை.
வாக்களிக்கவுமில்லை, காங்கிரஸ் கட்சிக்கு தென் மூலையில் இருக்கும் சில மாவட்டங்களைத் தாண்டி வாக்கு வாங்கி என்று ஏதுமில்லை, அந்தத் தென்மாவட்ட வாக்கு வங்கியும் சில தனி மனிதர்களின் உழைப்பால் உருவாக்கப்பட்டது.
விஜய் திரைத்துறையில் வளர்ந்து பொருளில் புகழில் செழித்த போதே ராகுல் காந்திக்கு அவர் மீது ஒரு ஈர்ப்பு உண்டானது, அந்த ஈர்ப்புக்கு அவர் “ஜோசப்” விஜய் என்பதும் ஒரு முக்கியமான காரணம்.
அம்மையார் சோனியா கிறிஸ்துவத்தை குழந்தைகளுக்குப் போதிக்கவில்லை என்றாலும் கிறிஸ்துவத்தின் மீது தன்னியல்பான ஒரு ஈர்ப்பு இரண்டு குழந்தைகளுக்கும் உண்டு, அதைத் தாண்டி சட்டையைக் கழற்றி விட்டு ஒரு தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில்
“நான் ஒரு “காஷ்மீரி பிராமின்”
என்று சொன்ன அதிகார ஆசை கொண்ட அற்ப மனிதர்களில் ஒருவர்தான் ராகுல் காந்தி என்பது தெரியாமல் நாமும் அவருக்கு பொன்னாடை போர்த்தி இருக்கிறோம் என்பது நம்மையும் அற்ப மனிதர்களாக மாற்றுகிறது.
காங்கிரஸ் தெளிவாக திமுகவுக்கு எதிரான ஒரு நகர்வை தவெகவுடன் இணைந்து நடத்தியது, அதன் பிறகு நாட்டின் மீது மிகுந்த அக்கறை கொண்ட கம்யூனிஸ்ட்டுகள் தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுத்தார்கள், இப்போதும் அதற்காக அவர்கள் ஏதாவது கையூட்டுப் பெற்றுக் கொண்டிருப்பார்கள் என்று நான் நம்பவில்லை.
கம்யூனிஸ்ட்டுகள் அவ்வளவு கீழ்மட்ட அரசியலுக்கு போயிருக்க மாட்டார்கள் என்று நாம் நேர்மறையாக நம்புவோம். ஆனால், திமுகவுடன் அவர்களுக்கு கருத்து முரண்களும், அவமானகரமான தேர்தல் தொகுதிப் பங்கீட்டுப் பட்டறிவும் இருந்தது.
ஒருவேளை இந்த பொதுவுடமை இயக்கங்களில் குறுக்குச் சால் ஓட்டியவர்களில் சிலர் இருக்கலாம், சி.மகேந்திரன், சு.வெங்கடேசன் போன்றவர்கள் இப்போது அந்தப் பட்டியலில் வருகிறார்கள்.
அடுத்தது இந்திய யூனியன் முஸ்லீம் லீக், அவர்கள் உண்மையிலேயே திமுகவுக்கு நெருக்கமானவர்கள், திராவிட இயக்கங்களோடு பல்வேறு சிந்தனைகளில் இணைந்து நின்றவர்கள்.
மேலும் அவர்கள் எங்கிருந்தாலும் சிறுபான்மையினர், இஸ்லாமியர்கள் என்கிற அடிப்படைவாத அழுத்தத்தை எதிர் கொள்பவர்கள், அவர்களது இடப்பெயர்ச்சி பெரிய தாக்கங்களை ஏற்படுத்தி விடாது. மேலும், அவர்கள் திமுகவை விமர்சனம் செய்யும் இடத்துக்குப் போகவில்லை. Gentlemen Politics செய்தார்கள்.
அடுத்தது விடுதலைச் சிறுத்தைகள், சிறுத்தைகள் “சோஃபா” வாங்கி இருக்க மாட்டார்கள் என்று நான் நம்பவில்லை, ஆர்டர் செய்திருப்பார்கள், அது அவர்களின் கெட்ட நேரமாக விஜய் வருவதற்கு ஒருநாள் முன்பாகவோ, ஆதரவுக் கடிதத்தை ஆதவ் அர்ஜுனாவிடம் கொடுப்பதற்கு கொஞ்சம் முன்னாள் விசிக அலுவலகத்துக்கு வந்தது தான் சிக்கல்.
மற்றபடி முனைவர் தொல்.திருமாவளவன் ஒடுக்கப்பட்டவர்களின் வாக்கு வங்கியை அடகு வைத்து அப்படியெல்லாம் செய்திருக்க மாட்டார் என்று நான் நம்புகிறேன், நம்புவோம். நீங்களும் நம்புங்கள், நம்பிக்கை தானே வாழ்க்கை.
கம்யூனிஸ்டுகள் அடித்தது அந்தர் பல்டி என்றால், சிறுத்தைகள் அடித்தது குட்டிக்கரணம், சந்தர்ப்பவாதக் குட்டிக்கரணம் என்று அதை நாம் புரிந்து கொள்ள முடியாது.
அது அரசியலில் வாய்ப்பு வரும்போது பயன்படுத்திக் கொள்வது, ஒடுக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பு எப்போது வருவது, அவர்கள் எப்போது அமைச்சராவது? வன்னி அரசுவைப் போன்ற எளிய, தலைமைக்கும், மக்களுக்கும் விசுவாசமாக இருக்கும் ஒருவர் தமிழகத்தின் சமூக நீதித்துறை அமைச்சராக வருவதற்காக இரண்டு மூன்று சோஃபாக்களைப் பெற்றுக் கொண்டால் தான் என்ன? என்ற கேள்வி எழுவதைத் தடுக்க முடியவில்லை.
பாட்டாளி மக்கள் கட்சி அதிமுகவிடம் சூட்கேஸ் வாங்கி விட்டது, பாஜகவிடம் சூட்கேஸ் வாங்கி விட்டது, சரத்குமார் பாஜகவிடம் தனது கட்சியை அடகு வைத்து விட்டார், கொங்கு மக்கள் கட்சிக்கு திமுக பணம் கொடுத்தது.
கம்யூனிஸ்டுகளின் கணக்கில் தேர்தல் செலவுக்குப் பணம் வரவு வைக்கப்பட்டது என்று வாய்க்கு வந்தபடி பேசும் அதே ஊடகவியலாளர்கள் விடுதலைச் சிறுத்தைகள் மட்டும் தங்கள் சொந்த அலுவலகத்துக்கு ஒரு நல்ல சோஃபா கூட வாங்கக் கூடாது என்று ஒரேயடியாக ஒழுக்கம் குறித்த வகுப்பெடுப்பது அவ்வளவு நாகரீகமாக இல்லை.
சரி, வாய் கிழிய திமுகவுக்கு வக்காலத்து வாங்குகிறாயே? திமுக மட்டும் என்ன ஒழுக்கமா? என்று நீங்கள் கேள்வி கேட்பீர்கள்?
உறுதியாக இல்லை, திமுகவும், இயல்பாக நீங்களும், நானும் செய்கிற அதே அரசியலைத்தான் பெரிய அளவில் செய்தது? நீங்களும், நானும் ஒடுக்கப்பட்ட மக்களை சக மனிதர்களாகப் பாவிக்கிறோமா? இல்லவே இல்லை.
நீங்களும் நானும் ஒடுக்கப்பட்ட மக்களை, எளிய உழைக்கும் மக்களின் வாழ்வை ஒரு பொருட்டாக மதிக்கிறோமா? இல்லைவே இல்லை. ஆனால், திமுக மட்டும் இவர்களை எல்லாம் மதிப்போடு நடத்த வேண்டும் என்று எதிர் நோக்குவோம், விமர்சனம் செய்வோம், வியாக்கியானம் செய்வோம்.
ஆனால் அன்புக்குரியவர்களே, உலகம் அப்படி இயக்குவதில்லையே? நம்மால் ஆனதுதானே உலகம்.
நாம் எப்படியோ அப்படியே நமது அரசியல், நாம் எதற்குத் தகுதியானவர்களோ அப்படியே நமக்கான அரசுகளும், ஆட்சியும். இப்போது நாம் ரீல்ஸ் நாயகனுக்குத் தலைமைப் பொறுப்புக்குக் கொண்டு வருவதற்கு எல்லா வகையிலும் தகுதியானவர்கள் ஆனோம், அவரும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து விட்டார்.
திமுகவின் சில அமைச்சர்கள் கடந்த 5 ஆண்டுகளில் எப்படியெல்லாம் மக்களை அவமதித்தார்கள், எப்படியெல்லாம் மக்கள் பணத்தை சுரண்டினார்கள்? எல்லா அதிகாரங்களும் தங்கள் கைகளில் நிலைத்திருப்பது போல வேடம் தரித்தார்கள். ஆனால், அந்தோ, பரிதாபம்…
காலம் அரசியல் தெரியாதவர்களை, ஆட்சி அறிவும், ஆளுமையும் இல்லாதவர்களை தேர்வு செய்து அதிகாரத்தில் அமர்த்தியது. இப்போது நாம் அதற்கு முழுத் தகுதி உள்ளவர்கள், ஆகவே நாம் கூச்சலிடக் கூடாது, அமைதியாக ஆழமாக சிந்திக்க வேண்டும். காலம் இப்போது என்ன சொல்கிறது, காலம் ரீல்ஸ் நாயகர்களின் வழியாக என்ன சொல்ல விரும்புகிறது?
“பார்ட்டி ஃபண்ட்” என்றால் என்ன?
மின்துறையில் எப்படியெல்லாம் கொள்ளை நடக்கிறது?
பள்ளிகளுக்கும் அரசியல் ப்ரோக்கர்களுக்கும் என்ன தொடர்பு?
சட்டமன்ற விவாதங்களை எப்படி நேரலையில் நடத்தலாம்?
கன்னடர்களை எப்படி தமிழக அரசியல் பிரதிநிதிகளாக டெல்லியில் நியமிக்கலாம்?
சட்டமன்றத்திலேயே எப்படி பிற கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை விலை பேசுவது?
இவற்றை எல்லாம் மக்கள் தெரிந்து கொள்வதற்கு ரீல்ஸ் நாயகர்களின் ஆட்சி வழியாக வழி வகுக்கிறது.
மக்கள் நலக்கூட்டணியைப் போலவே மற்றுமொரு முறை திராவிடக் கட்சிகளுக்கு செக் வைக்க புதிய தலைமையைத் தேடுகிறது அரசியல். இப்போது நீதி அநீதியாகலாம், அநீதி நீதியாகலாம். எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.
அதெல்லாம் சரி, அதிமுக பாரதீய ஜனதாவின் செயல்திட்டத்தின்படி அதிமுக அழிக்கப்பட்டது,
திமுக திருந்தி விட்டதா?
திமுகவும் திருந்தவில்லை, அது மதிப்பிற்குரிய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையில் தோற்றுப் போனது மட்டுமில்லாமல், அவரது மகனான உதயநிதி ஸ்டாலினை சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக்கியது.
அவரை விட நீண்ட கால அனுபவம் கொண்ட கட்சியின் மூத்த தலைவர்கள் யாரையேனும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக்கி இருக்கலாம். இன்னும் சீரிய முறையில் காகிதங்கள் இல்லாமல் பட்டறிவால் கேள்விகள் கேட்கலாம், பதிலுரைக்கலாம்.
ஏன்? அவருக்கு என்ன குறைச்சல்? அவர்தான் சனாதனத்தை எதிர்க்கிறாரே? பெரியாரின் கொள்கைகளைத் தூக்கிப் பிடிக்கிறாரே? கட்சியின் அடிமட்டத்தில் மக்களோடு மக்களாக பணியாற்றுகிறாரே?
ஆம், செய்கிறார். நான் மறுக்கவில்லை, ஆனாலும், கட்சியின் கடைக்கோடித் தொண்டனின் ஆழ்மனதில் ஏன் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக கலைஞரின் குடும்ப உறுப்பினர் தான் வர வேண்டுமா? என்கிற கேள்வி கனலாக இருந்து கொண்டேதான் இருக்கிறது அன்புக்குரிய எனது கட்சித் தலைவர்களே.
சரி, எல்லாவற்றையும் விட்டு விடுவோம், இது தமிழக அரசியலின் சோதனைக் காலம், நாம் நமது இளைஞர்களை அரசியல் படுத்தத் தவறியதன் விளைவு, ஒரு நடிகரின் அதிகாரக் கனவு என்று எல்லாம் சேர்ந்து நம்மை பின்னோக்கி இழுத்திருக்கிறது.
ஒருவேளை முன்னாள் நடிகரும், இந்நாள் முதல்வருமான மாண்புமிகு. ஜோசப் விஜய் அவர்களின் அதிகாரக் கனவு என்பதில் “நீதியின் பால் நின்று இந்த மாநில மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு இயன்றதை செய்ய வேண்டும்” என்கிற உள்ளடக்கம் இருக்குமேயானால் இந்த சோதனைக் காலத்தை அவர் கடந்து வரட்டும். வாழ்த்துவோம்.
ஆனால், ஆதவ் அர்ஜுனாவைப் போல ஒரு அரசியல் முகவர் இந்த சோதனைக் காலத்தைக் கடக்க முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்குத் துணையிருப்பார் என்பதுதான் இன்றைய நாளின் ஆகப்பெரிய காமெடி.
நாம் எதனைப் பெறுவதற்குத் தகுதியுடையவர்களோ, நாம் எதை விரும்புகிறோமோ? அதையே பெற்றுக் கொள்வோம். இதுவே பேரண்டத்தின் அரசியல் விதி. நாம் இப்போது அதைப் பெற்றுக் கொண்டோம்.
கை.அறிவழகன்
