இந்த நிகழ்வில் பேசப்பட்ட ஒவ்வொரு கருப்பொருளும் விவாதமும் ஒன்றோடொன்று பிணைப்பினைக் கொண்டிருந்தன. மொழி, அடையாளம், கலை, பண்பாடு, பொருளாதாரம், சர்வதேச உறவு என்ற தனித்தனிக் கருப்பொருட்களில் ஆய்வுரைகளும் உரையாடல்களும் விவாதங்களும் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தாலும் அனைத்துக் கருப்பொருட்களும் தொடர்புடையவையே. புத்தாக்கச் சிந்தனையை வளர்க்கத்தக்க இத்தகு ஆய்வரங்குகள், உரையாடல்கள், செயலமர்வுகள் தமிழ்ச் சூழலில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டியவை. தேசம் கடந்த வாழ்வில்- பல்வேறு நாடுகளில் இளையவர்கள் இணைந்து – சமூக அறிவியல் தளத்தில் – புத்தாக்க சிந்தனைத் தளத்தில் பயணிக்கமுடியும். அந்த வகையில் இந்நிகழ்வு முன்னுதாரணமானது.
சுவிட்சர்லாந்து Bern மாநிலத்தில் 30.05.2026 அன்று இளையவர்களுக்கான சமூக அறிவியல் கருத்தரங்கு ((TSSS:Tamil Social Science Symposium) இடம்பெற்றது. அறிதல் – பகிர்தல் – இணைந்து செயற்படுவதற்கான முன்னெடுப்புகள் போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு கருத்தரங்கு வடிவமைக்கப்பட்டிருந்தது. இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். கருத்துரை – கலந்துரையாடல் – செயலமர்வு எனவாக முழுநாள் நிகழ்வாக அமைந்தது. கலை, இலக்கியம், மொழி, பொருளாதாரம், கல்வி, சர்வதேச அதிகார அரசியல் எனவான துறைகள் சார்ந்த கருத்துகளும் எண்ணங்களும் பகிரப்பட்டன.
தமிழ் எனும் பொது அடையாளம் எம்மை இத்தகைய நிகழ்வில் சந்திக்கச் செய்திருந்தது. புலம்பெயர் தமிழர்களாக எண்ணங்களைப் பகிர்கின்ற, இணைந்து சிந்திக்கின்ற, செயற்பாட்டு உந்துதலுக்கான ஒரு தளமாக இந்த ஒன்றுகூடல் அமைந்தது. தேசம் கடந்த தமிழ் உறவையும் செயற்பாடுகளையும் (Transnational relations and activities) இது பிரதிபலிக்கின்றது.
இத்தகு நிகழ்ச்சியை உள்ளடக்கப் பெறுமதியுடனும் நேர்த்தியுடனும் ஏற்பாடு செய்கின்றமை முக்கியமான பங்களிப்பு, தொலைநோக்குடையதும்கூட. ‘‘Transnational identity/relation’ என்ற கருத்தியல்: ‘ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளின் எல்லைகளைக் கடந்த’ என்று பொருள். பாரம்பரிய அரசுகளுக்கு அப்பாற்பட்டு, பல நாடுகளில் உள்ள சமூகங்கள், செயற்பாட்டாளர்களிடையே நடைபெறும் நிகழ்வுகள், பேணப்படும் உறவுகள், பகிர்வுகள் அல்லது செயற்;பாடுகளை குறிக்கிறது. மனிதர்களையும் இடங்களையும் இணைக்கும் சமூகம் சார்ந்த வலையமைப்புகள் (நேவறழசம), புலப்பெயர்பு, அரசியல், பொருளாதாரம், கலை, இலக்கியம், பண்பாடு போன்ற துறைகளில் இந்தக் கருத்தியல் உலகளாவிய அளவில் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிகழ்வினை அரங்கக் கலைஞரும் பல்பண்பாட்டுத் தொடர்பாளரும் (Mediative actor in Intercultural context, Berner Fachhochschule), ஆன்மீக ஆற்றுப்படுத்துகைப் Spiritual and pastoral care taker) சிவாஜினி தேவராஜா, சுவிஸ் சர்வதேச உறவுகள் ஆய்வாளருமான (Research Fellow, Swiss Institute for Global Affairs) ராஜ்கண்ணா கணநாதன், தரணிகா ராஜ்கண்ணா ஏற்பாடு செய்திருந்தனர். சிவாஜினி ஆய்வரங்கிற்குத் தலைமைதாங்கி உரைகள், அமர்வுகளை நெறிப்படுத்தினார். சுவிட்சர்லாந்து தமிழ் இளைய தலைமுறையைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் பிரகாஷ் விவேகானந்தன், கல்வித்துறையாளர் (தலைமை ஆசிரியர்) திவ்யா கிருஷ்ணதாசன்-ஆனந்தன், சர்வதேச உறவுகள் சார் ஆய்வாளர் ராஜ்கண்ணா கணநாதன் ஆகியோருடன் நோர்வேயிலிருந்து கவிஞரும் நடனக்கலை ஆளுமையுமான கவிதா லட்சுமி மற்றும் இப்பத்தியாளரும் கலந்துகொண்டு உரை நிகழ்த்தியதோடு, உரையாடல் மற்றும் செயலமர்விலும் பங்குகொண்டோம்.
மாற்றுக் கல்வியின் அவசியம்:

சுவிஸ் நாட்டில் பாடசாலைத் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிவரும் திவ்யா கிருஷ்ணதாசன்-ஆனந்தன் பள்ளித் தலைமைத்துவத்தில் தான் பெற்ற அனுபவங்களுக்கூடாக கல்வி-கற்பித்தல்-மாற்றுக்கல்வியின் முக்கியத்துவம் குறித்த கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். தனது கல்வித்துறை அனுபவங்களின் கதைகள் சிலவற்றையும் பகிர்ந்துகொண்டார். மதிப்பெண்களைத் தாண்டி பிள்ளைகளின் திறன்களை அடையாளம் காண்பதிலும் ஊக்கப்படுத்த வேண்டிய கல்விப்பார்வையின் அவசியத்தினையும் வலியுறுத்தினார். கல்வித் துறையின் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்த பிரதிபலிப்பினையும் அவரது உரை உள்ளடக்கியிருந்தது. கற்றலில் மாணவர்களிடையே சிந்தனைமுறை (Thought process/Mindset), மனவலிமை (Resilience) மற்றும் தன்னாற்றல் மேம்பாடு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டிய அவசியம் குறித்த அவர் அதிகம் வலியுறுத்தினார்.
பாரம்பரிய கல்விமுறைமைக்கு அப்பால் சிந்திப்பதற்கும், புத்தாக்க கற்பித்தல் முறைமைகளை நடைமுறைப்படுத்துவதனூடாக அடுத்த தலைமுறையை உருவாக்குவது குறித்த சிந்தனைகளை அவர் வெளிப்படுத்தினார். திவ்யா கிருஷ்ணதாசன்-ஆனந்தன் புத்தாக்க கற்றல்-கற்பித்தல் சூழல்களை உருவாக்குவதில் காத்திரமான செயற்பாடுகளிலும் உரையாடல்களிலும் ஈடுபட்டு வருபவர். மாணவர்கள், இளையவர்கள் மத்தியில் தலைமைத்துவம், தன்னாற்றல் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம், அவர்களைக் கல்வி ஊடாகவும் தனிப்பட்ட முறையிலும் மேம்பாடடையச் செய்வதில் ஆர்வம் கொண்டுள்ளார். உலகளாவிய மாநாடுகளிலிலும் பங்கேற்று வருகிறார். கல்வி என்பது மாற்றத்திற்கான ஒரு சக்திவாய்ந்த கருவி என்ற நம்பிக்கையின் அடிப்படையில், அவர் கல்வியை அனைவருக்கும் கிடைக்கச் செய்யவும் அக்கறை கொண்டுள்ளார்.
நிதி மேலாண்மை :

பிரகாஷ் விவேகானந்தன், தனிநபர் பொருளாதாரம் (Personal finance) மற்றும் நிதி மேலாண்மை குறித்து உரை நிகழ்த்தினார். சொந்த வாழ்க்கையில் நிதிவள நிர்வாகம், சேமிப்பு குறித்த நடைமுறைகள், வாய்ப்புகள், சவால்கள் குறித்த கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். மக்களாகிய நாம் அனைவரும் உலகளாவிய நிதிஅமைப்பின் ஒரு பகுதியாக இருப்பதையும், அதன் விளைவுகளையும் விளக்கினார்.
உலகளாவிய தமிழ்ச் சமூகத்திடம் உள்ள அறிவு, பொருளியல் ஆளுமை மற்றும் மூலதனம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் தளமாக உருவாக்கப்பட்டுள்ள ‘தமிழ் பொருளாதார மன்றத்தின் உருவாக்கம் தொட்டு (Tamil Economic Forum, TEF) தனது பயணம் குறித்தும் பகிர்ந்துகொண்டார். பங்குச்சந்தை நிபுணரான அவர், மாறிவரும் புவிசார் அரசியல் சூழலில் (Geopolitical landscape) முதலீட்டுத் துறை பற்றிய தகவல்களையும் விளங்கங்களையும் வழங்கினார். பொருளாதாரக் கொள்கை, உலகளாவிய சந்தைகள், ஒன்றையொன்று சந்திக்கும் புள்ளிகள் குறித்தும் பகிர்ந்துகொண்டார்.
கலை என்பது ஒரு மொழி, ஊடகம்:

கலையை ஒரு மொழியாக எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்தும், படைப்பாற்றல் (Creativity)), புத்தாக்கத்தின் இன்றியமை குறித்தும் கவிதா உரைநிகழ்த்தினார். அவரது கலாசாதனா கலைக்கூடம் மூலம் அவர் உருவாக்கிய புத்தாக்க நடனங்கள், நடனநாடகங்கள், பேசுபொருள் சார்ந்த அரங்கேற்றங்கள் குறித்தும் – தான் முன்னெடுத்துவரும் தமிழ்வழி ஆடல் கற்பித்தல் திட்டத்தின் தேவை, உள்ளடக்கம் மற்றும் சமஸ்கிருத கற்பித்தலுக்கும் தமிழ்வழி ஆடல் கற்பித்தலுக்குமிடைளிலான வேறுபாடு குறித்தும் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். பரதநாட்டியத்தில் புதிய கருப்பொருட்களைப் பேசுவதற்குத் தடையாகவுள்ள, சவாலாகவுள்ள போக்குகள் குறித்தும் கலை வெளிப்பாட்டில் மதம் வகிக்கும் பங்கு குறித்தும் விமர்சனங்களை முன்வைத்தார். கலைஞர்களுக்கு இலக்கிய வாசிப்பும் அறிதலும் பரிச்சயமும் ஏன் முக்கியம் என்பது பற்றியும், கலை குறித்த ஆழமான புரிதலையும் பார்வையையும் எவ்வாறு வளர்த்துக்கொள்ளலாம் என்பது குறித்தும் தனது எண்ணங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார்.
நடனக் கலைஞர்-ஆசிரியர், கவிஞர், எழுத்தாளர் எனப் பன்முக அடையாளங்களைக் கொண்ட கவிதா லட்சுமி ‘கலை எனும் மொழி’ எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். இவர் கலைத்துவ அழகியலோடு, புதிய கருப்பொருள்கள், இலக்கியங்களை மையமாகக் கொண்ட பேசுபொருள், சமகால சமூகப் பிரச்சனைகளைப் பிரதிபலிக்கும் வகையிலான நடன நாடகப் படைப்புகளை உருவாக்கி வருபவர் ‘தமிழ் வழி ஆடல்’ ஊடாக நடனத்தின் பாரம்பரிய வடிவம், அதன் ஆன்மா மற்றும் தத்துவ அடித்தளத்தை சிதைக்காமல், அதன் கருப்பொருளில் புதுமை செய்துவருபவர். உலகளாவிய மானிட விழுமியங்கள், சமூகப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தும் அதே வேளையில், பாரம்பரிய நடனத்திற்குப் புதிய வடிவம் கொடுத்து உலக இலக்கியங்களை அதில் உள்வாங்கிப் படைப்புருவாக்கங்களை நிகழ்த்திவருபவர். படைப்புகளுக்கான பொருளைத் தேர்ந்தெடுப்பதில் தனித்துவமான சுதந்திரத்தைக் கடைப்பிடிக்கிறார்; அத்துடன் மனித மனதின் உள்நோக்கிய தேடல்களின் அனைத்துப் பரிமாணங்களுக்கும் ஓர் அழகியல் வெளியை உருவாக்குவதன் மூலம், நடனக்கலையின் எல்லையை விரிவுபடுத்தவும் அவர் விழைகிறார்.
அதிகார அரசியலும் அறிவுலக கருத்துருவாக்கங்களும்:

எல்லைகளைத் தாண்டிச் சிந்திப்பதற்கும், சமகால காலத்தின் சிக்கல்களைச் உகந்த முறையிலும் ஆழமாகவும் புரிந்துகொள்ளப் பன்முகச் சிந்தனையின் (Multidisciplinary thinking) முக்கியத்துவம் குறித்து இளைய தலைமுறைக்கு ஊக்கமளிக்கும் வகையில் ராஜ்கண்ணா கண்ணநாதனின் உரை அமைந்திருந்தது. அதிகாரம், அறிவு, சர்வதேச உறவு எனும் தலைப்பில் அவரது ஆய்வுரை அமைந்திருந்தது. அதிகார அரசியல் சக்திகளும் அறிவுலகமும் கைகோர்த்து அதிகாரத்திற்குச் சாதகமான கருத்துருவாக்கங்களையும் கதையதடல்களையும் வரலாறுகளையும் எவ்வாறு உருவாக்குகின்றன என்பதை தெளிவுறுத்திய அவர், அவற்றை எதிர்கொள்ள வேண்டிய முக்கியத்துவத்தினையும் முன்வைத்தார்.
சர்வதேச உறவுகள் (International relations) துறையில் கல்வி, ஆய்வு அனுபவத்தினையும் பின்னணியையும் கொண்டவர். உலகளாவிய சூழமைவுகள், உலக ஒழுங்கின் மாறிவரும் பரிமாணங்கள், (Shifting world order), வரலாறுகள் மனித வாழ்வின் தொடர்ச்சியில் ஏற்படுத்தும் நீடித்த செல்வாக்கு அனைவருக்கும் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது குறித்த கருத்துகளை முன்வைத்தார். குறிப்பாக அதிகாரமும் அறிவுலகமும் எத்தகைய கருத்துருவாக்கங்களை நிலைநிறுத்துகின்றன என்பது குறித்த நுணுக்கமான பார்வையை முன்வைத்தார். சர்வதேச உறவுகள் என்பது நாடுகள் ஒன்றோடொன்று எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பது பற்றியது மட்டுமல்ல. மாறிக் கொண்டிருக்கும் இவ்வுலகில் தனிநபர்களாகவும் ஒரு சமூகமாகவும் நம்மை நாம் எவ்வாறு நிலைநிறுத்திக் கொள்கிறோம் என்பது பற்றியதுமாகும் என்றும் கூறினார்.
மொழி – அடையாளம் – தொன்மப் பெறுமதிகள் – புலம்பெயர் தமிழ் கல்வியின் போதாமைகள்:

தமிழ்மொழி, அடையாளம் தமிழ் சிந்தனை மரபு எனும் மையப்பொருளில் இப்பத்தியாளர் ரூபன் சிவராஜாவின் உரை அமைந்தது. தமிழ் தொன்ம இலக்கியங்களின் உள்ளார்ந்த பெறுமதி, அவை உள்ளடக்கியுள்ள உலகப்பொதுமையான மானிடம், அறம், அறிவு சார் தத்துவங்கள், விழுமியங்கள் – அவை உலகிற்கு வழங்கியுள்ள பங்களிப்பு – அவற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவும் பெற்றுக்கொள்ளவுமான விடயங்களை முன்னிறுத்திப் பேசினார். தமிழ்ச் சூழலில் மொழியும் பண்பாடும் எதிர்கொள்கின்ற சவால்கள், தலைமுறை இடைவெளிகள் மற்றும் பார்வைகள், தேசம் கடந்த அடையாத்தின் (Transnational identity) சாதகமான வாய்ப்புகள் புலம்பெயர் சூழலில் தமிழ்க் கல்வி சார்ந்த போதாமைகளும்; சவால்களும் உள்ளிட்ட துணைப் பொருள்களையும் அவரது உரை உள்ளடக்கியிருந்தது. புலம்பெயர் சூழலில், மொழியையும் அடையாளத்தையும் நிலைநிறுத்துவது என்பது அறிவார்ந்த சிந்தனைத் தளத்தில், நெறிமுறை விழுமியங்களுடன் கூடிய பண்பாட்டுப் பன்முகத்தன்மையைக் கடத்துவதையும் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ரூபன் சிவராஜா ஆய்வுக் கட்டுரைகள், கவிதை, மொழிபெயர்ப்பு, நாடக எழுத்துருவாக்கம்;-நெறியாள்கை ஆகிய தளங்களில் பங்களித்து வருகிறார். சர்வதேச அரசியல் மற்றும் அதிகாரக் கட்டமைப்புகள் குறித்த கட்டுரைகள், கவிதைகள், திரைப்படம், இலக்கியம், நாடகம் சார்ந்த விமரிசனத் தொகுப்புகள் உட்பட பல தமிழ் நூல்களை இவர் வெளியிட்டுள்ளார். இவரது படைப்புகள் உலகளாவிய அரசியல், சமூகம், கலை மற்றும் இலக்கியம் ஆகியவற்றை மையமாகக் கொண்டவை. ஈழம், தமிழகம், மற்றும் புலம்பெயர் ஊடகங்கள், இதழ்களில் இவரது எழுத்துக்கள் வெளிவருகின்றன.
கருத்தரங்கின் நோக்கம்:
கருத்தரங்கின் நோக்கம் பற்றி சிவாஜினி அறிமுக உரையில் கூறியதாவது:

தமிழ் சமூக அறிவியல் கருத்தரங்கம் ஒரு சாதாரண நிகழ்வு அல்ல, இது தமிழ் இளைஞர்கள் தங்கள் அடையாளம், சமூக நிலை, மற்றும் எதிர்காலத் திசை பற்றி ஆழமாக சிந்திக்க வேண்டிய ஒரு அறிவுசார் உரையாடலாக அமைக்கப்படுகிறது. உலகமயமாக்கப்பட்ட சூழலில் வாழும் நாம் பல மொழிகள், பல அடையாளங்களுடன் வாழ்கிறோம்.
இந்த நிலை ஒருபுறம் வாய்ப்புகளையும், மறுபுறம் சவால்களையும் கொண்டிருக்கின்றது. வெவ்வேறு கல்வித் துறை சார்ந்தவர்கள் ஒன்றுகூடி உரையாடுவதும் சிந்திப்பதும் விவாதிப்பதும் அரிதான நிகழ்வுகளாக உள்ளன. துறைகளுக்கிடையிலான இடைவெளியானது பெரிய சமூக‑அரசியல் கேள்விகளிலிருந்து விலகும் போக்கு ஆகியவை முக்கிய பிரச்சினைகளாக உள்ளன. பல துறைகள், பல பார்வைகள், மற்றும் பல அனுபவங்களை ஒன்றிணைக்கும் சமூக சிந்தனை அவசியம் என வலியுறித்தினார்.
இந்த கருத்தரங்கு, அறிவைப் பகிர்ந்து கொள்ளும் இடமாக மட்டும் இல்லாமல், விமர்சனச் சிந்தனை, உரையாடல், வலையமைப்பு மற்றும் கூட்டுச்செயற்பாடுகளுக்கான ஒரு தளமாகச் செயற்பட வேண்டும். எதிர்காலம் தனித்தனித் துறைசார் நிபுணர்களுக்கு மட்டும் அல்ல பல்வேறு சிந்தனைகளையும் உலகங்களையும் இணைக்கும் திறன் கொண்டவர்களுக்கே சொந்தமானது என்ற மையக்கருத்தினை அவரது உரை வெளிப்படுத்தியது.
குழுநிலைச் செயலமர்வு:
ஆய்வுரைகள், கேள்வி-பதில், உரையாடல்களைத் தொடர்ந்து குழுநிலைச் செயலமர்வு இடம்பெற்றது. செயலமர்வானது சமூகத்தின் சமகால நிலைமைகள், சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து சிந்தனை, அனுபவப் பகிர்வு மற்றும் கருத்துப்பகிர்வினை நோக்கமாகக் கொண்டிருந்தது. சமகால நிலைமையை வெளிக்கொணருவதோடு மட்டுமல்லாமல், புதிய பார்வைகள் மற்றும் தொடர்ந்து மேற்கொள்ளக்கூடிய செயற்திட்டங்களுக்கு வழிவகுக்கும் உரையாடல்களுக்கான திறவுகோலை உருவாக்குவதும் இதன் இலக்காக இருந்தது.
செயலமர்வு கேள்விகளின் அடிப்படையிலான மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. முதலில், தற்போதைய நிலைமை மற்றும் பங்கேற்பாளர்களின் அனுபவங்கள் மையப்படுத்தப்பட்டன. அதன் பின்னர், இன்றைய சூழலில் உள்ள சவால்கள், தடைகள் மற்றும் போதாமைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இறுதியாக, புதிய எண்ணங்கள், முன்மொழிவுகள் மற்றும் சாத்தியமான செயற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஒவ்வொரு பகுதியும் திறந்த உரையாடல், விமர்சன சிந்தனை மற்றும் கூட்டுப் பரிசீலனையை ஊக்குவிக்கும் கேள்விகளை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. இச்செயலமர்வு உரையாடல் முறைமையிலும் பங்கேற்பாளர்கள் திறந்த மனதோடு கருத்துகளை வெளிப்படுத்தும் அணுகுமுறையிலும் முன்னெடுக்கப்பட்டது. அவர்கள் தமது அனுபவங்களைப் பகிரவும், குழுவாக விவாதிக்கவுமுரிய வெளியைக் கொண்டிருந்தது.
ஒட்டுமொத்தமாக தமிழ் சமூக அறிவியல் ஆய்வரங்கு என்ற இந்த நிகழ்வில் பேசப்பட்ட ஒவ்வொரு கருப்பொருளும் விவாதமும் ஒன்றோடொன்று பிணைப்பினைக் கொண்டிருந்தன. மொழி, அடையாளம், கலை, பண்பாடு, பொருளாதாரம், சர்வதேச உறவு என்ற தனித்தனிக் கருப்பொருட்களில் ஆய்வுரைகளும் உரையாடல்களும் விவாதங்களும் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தாலும் அனைத்துக் கருப்பொருட்களும் தொடர்புடையவையே. புத்தாக்கச் சிந்தனையை வளர்க்கத்தக்க இத்தகு ஆய்வரங்குகள், உரையாடல்கள், செயலமர்வுகள் தமிழ்ச் சூழலில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டியவை. தேசம் கடந்த வாழ்வில்- பல்வேறு நாடுகளில் இளையவர்கள் இணைந்து – சமூக அறிவியல் தளத்தில் – புத்தாக்க சிந்தனைத் தளத்தில் பயணிக்கமுடியும். அந்த வகையில் இந்நிகழ்வு முன்னுதாரணமானது. உலகளாவிய ஈழத் தமிழ்ச் சூழலில் சமூக, அரசியல், பண்பாடு, கலை, இலக்கியம் மற்றும் அறிவியக்கத் தளங்களிற் கணிசமான தேக்கம் நிலவுகின்றது. அறிவுத்தள ஆய்வுகள், கதையாடல்கள், உரையாடல்கள், செயற்பாடுகள் இடம்பெறவேண்டியது இன்றியமையாதது. எம்மை மீளாய்வு செய்யவும், சுயவிமர்சனங்களுக்கு உட்படுத்தவும், புத்தாக்க சிந்தனைகளை வளர்த்துக்கொள்ளவும் இத்தகைய இத்தகைய தொடர் செயற்பாடுகள் பங்களிக்கக்கூடியன.
ரூபன் சிவராஜா
