2021 முதல் 2025 வரையிலான ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சி, வெறும் அரசியல் மாற்றமல்ல; அது திராவிடக் கொள்கைகளின் அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்ட ஒரு சமூகப் புரட்சி. ‘சமூக நீதி, சமத்துவம், உள்ளடக்கிய வளர்ச்சி’ என்ற திராவிடக் கோட்பாடுகளைத் தன் உயிர்நாடியாகக் கொண்டு, இக்காலகட்ட ஆட்சி நிர்வாகம் ஒரு புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.
பொருளாதாரம், கல்வி, மருத்துவம், பெண்கள் மேம்பாடு என அனைத்து வளர்ச்சி குறியீடுகளிலும் (Indices) இந்த ஐந்தாண்டு கால அரசு நிகழ்த்தியுள்ள சாதனைகள் பிரமிக்கத்தக்கவை; வியக்கத்தக்கவை. இந்த அரசு தொலைநோக்குப் பார்வையோடு தந்துள்ள மக்கள் நலத்திட்டங்கள், தற்காலிகமானவை அல்ல; அவை தமிழக வரலாற்றில் என்றும் அழியாத, காலத்தை வென்று நிலைத்து நிற்கக்கூடிய அழியாத் தழும்புகள். திராவிடக் கோட்பாடுகளால் ஒரு மாநிலத்தை எப்படி மாற்றியமைக்க முடியும் என்பதற்கு இந்த ஐந்து ஆண்டுகளே ஆகச்சிறந்த சான்று!
நாம் இவ்வளவு சாதனைகளைச் செய்த பிறகும், எங்கே தவறிவிட்டோம்? நாம் அடைந்திருக்க வேண்டிய இலக்குகளை ஏன் இன்னும் அடைய முடியவில்லை? இந்த அடிப்படையான கேள்வியை நாம் நிச்சயமாகக் கேட்கத்தான் வேண்டும்.
திராவிட முன்னேற்றக் கழகம் என்பது வெறும் தேர்தல் அரசியலுக்காகவோ அல்லது தற்காலிக ஆட்சி அதிகாரத்திற்காகவோ கட்டமைக்கப்பட்ட தளம் அல்ல; அது தமிழ்நாட்டின் சமூக, பொருளாதாரப் பாய்ச்சலையும், ஒட்டுமொத்த வளர்ச்சியையும் தீர்மானித்த ஒரு வரலாற்றுப் பேரியக்கம். இந்த இயக்கத்தின் அசைக்க முடியாத ஆணிவேர் “சமூக மனமாற்றம்” என்னும் சித்தாந்தப் பாறையின் மேல் ஊன்றப்பட்டுள்ளது. சமத்துவம், சாதி ஒழிப்பு, சகோதரத்துவம், சுயமரியாதை ஆகிய முற்போக்குச் சிந்தனைகளைத் தமிழ் சமூகத்தின் அடித்தட்டு மக்கள் வரை விதைத்து, அவர்களை விழிப்படையச் செய்ததே இந்த இயக்கத்தின் உண்மையான வெற்றியாகும்.
இத்தனை சாதனைகளைச் செய்த ஓர் இயக்கம், “கட்சி” என்ற அடிப்படையில் செழித்து, வலிமையான கட்டமைப்போடு திகழ்ந்தாலும், அது “இயக்கம்” என்ற இயங்கியல் விதிக்கு உட்பட்டதுதான் என்பதை மறந்ததன் விளைவே நாம் இன்று சந்திக்கும் தற்காலிகச் சறுக்கல்!
அந்த இயங்கியல் விதியின் அடிப்படையே “நிலைமம்” (Inertia – தேக்கம்) தான். இயற்பியலின் முதல் விதியே, “ஒரு பொருளின் மீது வெளிப்புற விசை ஏதும் செயல்படாதவரை, அது தன் பழைய நிலையிலேயே (ஓய்விலோ அல்லது சீரான இயக்கத்திலோ) தொடர்ந்து நீடிக்கும்” என்பதுதானே!
விதிமுறைகளின்படி, அது வெறும் பொருள்களுக்கு மட்டுமல்ல; மனிதர்களுக்கும், கொள்கைகளுக்கும், இயக்கத்திற்கும் பொருந்தும். அண்ணல் அம்பேத்கரின் வரிகளில் சொல்ல வேண்டுமென்றால் “மனிதன் எப்படி ஒரு நாள் மரணிக்கக் கூடியவனோ, அதைப்போலவேதான் சித்தாந்தங்களும், கருத்துக்களும்! ஒரு செடி துளிர்விட்டு வளர்வதற்குக் தடையின்றித் தண்ணீர் ஊற்றுவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் ஒரு புரட்சிகரமான கருத்தைப் பொதுவெளியில் இடைவிடாது பரப்புவது. நீரின்றிச் செடி காய்ந்து போவதைப் போல, தொடர் பிரச்சாரமும் தத்துவப் பகிர்வும் இல்லாத எந்தவொரு உன்னதக் கருத்தும் காலப்போக்கில் வாடி, மடிந்து, வரலாற்றிலிருந்தே மறைந்துவிடும்!”
இன்றைய திராவிட இயக்கத் தலைவர்கள் தங்களுக்குள் இருக்கும் தேக்கநிலைகளை உடைத்தெறிந்து, அதிகாரப் படிநிலைகளைக் கடந்து, எளிய மனிதர்களாய் புதிய தலைமுறையினரை நேருக்கு நேர் சந்திக்க வேண்டிய வரலாற்றுப் பொறுப்பு உள்ளது.
சமத்துவப் பார்வையோடும் தோழமை உணர்வோடும் நின்று, இளைஞர்களின் விமர்சனங்களையும் கேள்விகளையும் திறந்த மனதுடன் எதிர்கொண்டு கனிவோடு உரையாட வேண்டும்;
இளைஞர்களை வெறும் தேர்தல் காலத் தொண்டர்களாகப் பார்க்காமல், இயக்கத்தின் கொள்கை ரீதியான வாரிசுகளாக மாற்றி, அவர்களுக்குச் சித்தாந்த உரிமையையும் மதிப்பையும் வழங்குவதன் மூலமே, இந்த இயக்கத்தின் பால் உணர்வுப்பூர்வமாகப் பற்றுகொண்ட ஒரு சீரிய கொள்கைப் பட்டாளத்தை நாம் எதிர்காலத்திற்காகக் கட்டியெழுப்ப முடியும்.
திராவிடக் கருத்தியலின் ஆகச்சிறந்த பலமே முரண்பாடுகளை உடன்பாடுகளாக மாற்றும் அதன் தனித்துவமான “இயக்கவியல்” (Dialectics) நெறிதான். கொள்கை ரீதியாக முற்றிலும் மாறுபட்டிருக்கும் இன்றைய இளந்தலைமுறையினரைக் கூட, தன்பால் ஈர்க்கும் சித்தாந்த வீரியம் திராவிடத்திற்கு இன்றும் உண்டு. ஆனால், அத்தகைய ஆழமானக் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்த்து, அவர்களோடு சமரசமின்றி உரையாடக்கூடிய ஆளுமைமிக்க, அர்ப்பணிப்புள்ள தலைவர்களின் பற்றாக்குறையே தற்போதைய முதன்மையான சவாலாகும்.
இயக்கத்தின் சமீபத்திய தற்காலிகத் தொய்வுகளுக்கு, இன்ஸ்டாகிராம் (Instagram) போன்ற சமூக ஊடகங்களின் தாக்கம் தான் காரணம் என்று மேலோட்டமாகக் கருதி தப்பிப்பது ஆபத்தானது. இது ஒருபோதும் வெறும் சமூக ஊடகப் பிரச்சினை அல்ல (Not an Instagram issue); மாறாக, இது இயக்கத்தின் உட்கட்டமைப்புச் சார்ந்த, நிறுவனமயப்பட்ட சிக்கலாகும் (Institutional issue). அடிப்படைப் பிணிகளைச் சீர்செய்யாமல், நவீனத் தொழில்நுட்பக் கவர்ச்சிகளை மட்டுமே நம்பிப் பேரட்டவணை அடுக்குவது இயக்கத்தின் சித்தாந்த வளர்ச்சிக்கு உகந்ததல்ல.
“உழைப்பவனைத் தேடிக் கண்டுபிடித்து இயக்கம் நடத்தினால் பலனுண்டு. கிடைத்தவனைக் கொண்டு நடத்தினால் பலனில்லை” என்ற பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழி தற்போதைய சூழலுக்கு மிகத் துல்லியப் பொருத்தம்.
இயக்கத்தின் முகப்பை (Facade) மாற்ற முற்படுவதை விடுத்து, அதன் அடிப்படை சித்தாந்த ‘முகவரியை’ (Core Identity) நோக்கித் திரும்புவதே இந்த வரலாற்றுப் பேரியக்கம் தன் காலத்தால் அழியாத கம்பீரத்தை மீண்டும் நிலைநிறுத்துவதற்கான ஒரே வழியாகும்!
