ஒரு சமூகம் அரசியல்மயமாக வேண்டும்; அதுதான் ஆரோக்கியமான ஜனநாயகம். ஆனால், இன்று நாம் அரசியல்மயமாகவில்லை, விஜய்மயமாகிக்கொண்டிருக்கிறோம்.
பிரெஞ்சு நாடக ஆசிரியர் யூழேன் இயொனெஸ்கோ (Eugène Ionesco) எழுதிய உலகப் புகழ்பெற்ற நாடகம் ‘காண்டாமிருகம்’ (Rhinoceros). அந்த நாடகத்தில், ஒரு குறிப்பிட்ட ஊரில் வாழும் மனிதர்கள் ஒவ்வொருவராகக் காண்டாமிருகங்களாக மாறத் தொடங்குவார்கள்.
ஊரே திரண்டு அந்தக் காண்டாமிருகங்களைத் திட்டிக்கொண்டிருக்கும். ஆனால், விந்தை என்னவென்றால், திட்டியவர்களேகூடத் தங்களை அறியாமல் அடுத்தடுத்து காண்டாமிருகங்களாக மாறிக்கொண்டிருப்பார்கள். நாடகத்தின் இறுதியில், கதாநாயகனைத் தவிர ஒட்டுமொத்த ஊரே காண்டாமிருகமயமாகிவிடும்.
இன்று சமகாலத் தமிழகத்தின் அறிவுச் சூழலையும், பொதுச் சமூகத்தின் சிந்தனைப் போக்கையும் உற்றுநோக்கும்போது இந்த ‘காண்டாமிருகம்’ நாடகம்தான் நினைவுக்கு வருகிறது.
இன்று நம் சமூகம் விஜய்மயமாகிக்கொண்டிருக்கிறது. ஊடகங்கள், சமூக ஊடகங்கள், பொதுவெளி என எங்கு திரும்பினாலும், 24 மணி நேரமும் விஜய் என்னும் ஒற்றைப் பிம்பத்தைச் சுற்றியே நம் சிந்தனைச் சக்கரம் சுழன்று கொண்டிருக்கிறது. அவரை எதிர்ப்பவர்களும் சரி, ஆதரிப்பவர்களும் சரி, தங்களின் அன்றாட விவாதப் பொருளாக அவரையே மாற்றி, நம் சிந்தனையின் மையப் புள்ளியாக அவரை அரியாசனத்தில் அமர வைத்துள்ளனர்.
விஜய்மயமாதல்: சிந்தனைத் தணிக்கையின் புதிய வடிவம் ஒரு சமூகம் அரசியல்மயமாக வேண்டும்; அதுதான் ஆரோக்கியமான ஜனநாயகம். ஆனால், இன்று நாம் அரசியல்மயமாகவில்லை, விஜய்மயமாகிக்கொண்டிருக்கிறோம்.
விஜய்யைப் பற்றிப் பேசுவதன் மூலமும், ஊடகங்கள் அவரைத் தொடர்ந்து காட்டுவதன் மூலமும், நாம் விவாதிக்க வேண்டிய, சிந்திக்க வேண்டிய எத்தனையோ அத்தியாவசியமான சமூகப் பிரச்சினைகள் மறைக்கப்படுகின்றன.
கடந்த இரண்டாண்டுகளுக்கும் மேலாக காஸா மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் கிட்டத்தட்ட 72,000 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருக்கிறார்கள். லட்சக்கணக்கானோர் வீடு வாசல் இழந்து முகாம்களில் அடிப்படை வசதிகள்கூட இல்லாத நிலையில் வசிக்கிறார்கள்.
ஈரான் மீதும், லெபனான் மீதும் இஸ்ரேலும் அமெரிக்காவும் நிகழ்த்திவரும் தாக்குதல்களில் ஏழாயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கின்றனர். பல்லாயிரக்கணக்கானோர் வீடு வாசல் இழந்திருக்கின்றனர். கூடவே, இந்தப் போரால் உலகம் முழுதும் எரிபொருள் சேவையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. எரிபொருள் தட்டுப்பாடு, விலையுயர்வு ஏனைய தளங்களிலும் வாழ்வாதாரத்தைப் பாதித்துக்கொண்டிருக்கிறது. இவையெல்லாம் ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் காலநிலை மாற்றம். தொழிற்புரட்சிக்குப் பிந்தைய காலத்தில் முதன்முறையாக 2024இல் கூடுதலான 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருக்கிறது. இவையெல்லாம் உலகின் பெரும் செய்திகள். ஆனால், நமக்கு விஜய் மட்டுமே செய்தி. காட்டுவதன் மூலம் மறைப்பது என்று சமூகவியலில் கூறுவார்கள். அதுதான் இது. எதை காட்டாமல் மறைக்க வேண்டுமோ அந்த இடத்தில் இன்னொன்றை வைப்பது. இது பிரக்ஞைபூர்வமாக நிகழ்வதல்ல. ஒரு சமூகம் முழுவதும் பிரக்ஞையின்றி நிகழ்த்துவது. அரசியல் முக்கியமானதுதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், ஒரு சமூகத்தின் ஆன்மா அரசியலுடன், அதன் கலை, இலக்கியம், பண்பாடு, அன்றாட வாழ்க்கைப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றிலும் அடங்கியிருக்கிறது. இன்று இவற்றிலிருந்தெல்லாம் நம் கவனம் முற்றிலுமாகத் திசைதிருப்பப்பட்டுவிட்டது. முன்பெல்லாம் தமிழ்நாட்டில் தீவிர இலக்கியவாதிகள் அரசியல் பேசுவதில்லை.
‘தூய இலக்கியம்’ பேசிக்கொண்டு, அரசியல் என்பது இலக்கியத்துக்குத் தீட்டு என்ற ரீதியில் செயல்பட்டார்கள். அது ஒரு வகையான மேட்டிமைவாதம். ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது.
பெரும்பாலான இலக்கியவாதிகள், அறிவுஜீவிகள், ஊடகவியலாளர்கள் அளவுக்கதிகமாக அரசியல்மயமாகிவிட்டார்கள்; இன்னும் சொல்லப்போனால், விஜய்மயமாகிவிட்டார்கள். அவர்களின் சிந்தனையை இன்று விஜய் ஆக்கிரமித்திருக்கிறார். வரலாற்று மறதி இந்த விஜய்மயமாதலின் மிகப் பெரிய ஆபத்து, அது நம் அடுத்த தலைமுறையினரை ‘வரலாற்று மறதி’ என்னும் இருளுக்குள் தள்ளுவதுதான்.
இன்று ஒரு புதிய தலைமுறை உருவாகியிருக்கிறது. அவர்களுக்குத் தமிழ்நாட்டின் வரலாறே விஜய்யிலிருந்தும், அவரது தவெக என்ற கட்சியிலிருந்தும்தான் தொடங்குகிறது. சமீபகாலமாகச் சமூக ஊடகங்களில், தமிழ்நாட்டின் முதல் பெண் அமைச்சர் தவெகவைச் சேர்ந்த கீர்த்தனாதான் என்று ஒரு அப்பட்டமான பொய்ப் பதிவு தீவிரமாகப் பகிரப்பட்டுவருகிறது. வரலாற்றை அறியாத ஒரு தலைமுறை, இப்பொய்களை அப்படியே உண்மை என்று நம்பத் தொடங்குகிறது.
இவர்களுக்குத் தமிழ்நாட்டின் உண்மையான வரலாற்றுப் பக்கங்களை யார் எடுத்துச் சொல்வது? சுதந்திரத்துக்கு முன்பே, 1946இல் டி. பிரகாசம் அமைச்சரவையில் ருக்குமிணி லட்சுமிபதி அமைச்சராக இருந்தார். சுதந்திரத்துக்குப் பிறகு, ஜோதி வெங்கடாச்சலம் அமைச்சராகப் பணியாற்றினார். அதன் பிறகு லூர்தம்மாள் சைமன், சத்தியவாணி முத்து போன்ற ஆளுமைகளின் அரசியல் வரலாறு இங்கே இருக்கிறது.
அத்தோடு நின்றுவிடாமல், ஜானகி ராமச்சந்திரன், ஜெ.ஜெயலலிதா என இரு பெண் முதல்வர்களையே கண்ட மண் இது. இந்த நெடிய வரலாறு இன்று வரலாற்று மறதியாகிறது. நம்மிலிருந்தே வரலாறு தொடங்குகிறது என்று நம்புவது, சிந்தனைப் போக்கின் பெரும் வீழ்ச்சியாகும். அரசியல் நீக்கமும் அதன் அறுவடையும் தமிழ்நாட்டில் கடந்த இரண்டு தலைமுறையினர் ‘அரசியல் நீக்கம்’ செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு திராவிடக் கட்சிகளின் செயலற்ற தன்மைக்குப் பெரும் பங்கு உண்டு. சிந்தனையற்ற, வரலாறு தெரியாத ஒரு சமூகத்தை உருவாக்குவது அதிகார வர்க்கத்துக்கு எப்போதுமே எளிதானது. அரசியல் நீக்கம் செய்யப்பட்ட ஒரு சமூகம் இயல்பாகவே ‘அரசியல் மறதி’யில் ஆழ்ந்துவிடும். அந்த அரசியல் மறதி நிலவும் வரை, பிம்பங்களுக்கு எப்போதுமே எளிய வெற்றி சாத்தியமாகிறது. தத்துவஞானி பிளேட்டோ தனது ‘குகை உவமை’யில் குறிப்பிட்டது போல, நிழல்களை உண்மை என்று நம்பி வாழும் கைதிகளாக இன்றைய தலைமுறை மாற்றப்பட்டுள்ளது.
நம் முன்னே உள்ள பெரும் கேள்வி என்னவென்றால், நம் அடுத்த தலைமுறையினருக்கு நாம் கொடுக்கப்போகும் சிந்தனை மரபு என்ன? முந்தைய தலைமுறையின் அறிவுச் செறிவை, போராட்ட வரலாற்றை நாம் அவர்களுக்கு எப்படிக் கடத்தப் போகிறோம்? காந்தியை, அம்பேத்கரை, பெரியாரை, அண்ணாவை நம் அடுத்த தலைமுறைக்கு எப்படிக் கொண்டுசெல்லப்போகிறோம்? இந்தக் கேள்விகளையெல்லாம் விஜய் என்னும் ஒற்றைப் பிம்பம் இன்று பின்னுக்குத் தள்ளிவிட்டது. பட்டைகட்டிய குதிரை போல, ஒற்றைப் பாதையில் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கக் கூடியதாக நம் சமூகம் மாறக் கூடாது.
முதலில் இந்தச் சமூகம் ‘விஜய்’யிலிருந்து விடுபட வேண்டும். நம் சிந்தனையில், நம் அன்றாட விவாதங்களில் கலை, இலக்கியம், தத்துவம், உலக அரசியல், விவசாயிகள் பிரச்சினை, சுற்றுச்சூழல், விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரம் போன்ற பிற இன்றியமையாத விஷயங்களும் முதன்மை இடம்பிடிக்க வேண்டும். ஒற்றைமயமாதலின் சிறையிலிருந்து தமிழ்ச் சமூகம் விடுபட்டு, அறிவுப் பாதையில் பயணிக்கத் தொடங்கும்போதுதான், உண்மையான ஜனநாயகம் மலரும்; எல்லா வெளிகளிலும் நம்மால் சுதந்திரமாகச் செயல்பட முடியும்.
- எழுத்தாளர் ஆசை
