தமிழ்நாட்டில் ஓர் ஆபத்தான அரசியல் கலாச்சாரம் உருவாகிக் கொண்டிருக்கிறது.
ஓரிரு திரைப்படங்களில் நடித்து முகமும், பெயரும் மக்களுக்குப் பரிச்சயமாகிவிட்டால் சில நடிகர், நடிகைகளுக்கு உடனே பதவி, அதிகார ஆசை வந்துவிடுகிறது.
சொந்தப் பணமோ, சுருட்டியப் பணமோ, கையில் கொஞ்சம் காசு இருந்தால் சில பணக்காரர்களுக்கு பதவி, அதிகார ஆசை வந்துவிடுகிறது.
குடும்பப் பெருசு ஒன்று ஒரு பதவியில் இருந்தால், அக்குடும்பச் சிறுசுகளுக்கு பதவி, அதிகார ஆசை வந்துவிடுகிறது.
ஒரு சனநாயக அமைப்பில் யார் வேண்டுமானாலும் பதவி, அதிகாரம் பெறலாம்தான், மக்கள் பிரதிநிதி ஆகலாம்தான். ஆனால் அடிப்படை அறிவோ, ஆற்றலோ, அனுபவமோ எதுவுமே இல்லாமல் ஒருவரை எப்படித் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியும்?
ஒருவர் மருத்துவராக வேண்டுமென்றால், இத்தனை ஆண்டுகள் படிக்க வேண்டும், இத்தனை ஆண்டுகள் பயிற்சி பெற வேண்டும் என்று ஏற்பாடு செய்து வைத்திருக்கிறோம்.
ஒருவர் கிரேன் ஓட்டுநராகப் பணியாற்ற வேண்டுமென்றால், இத்தனைப் படிநிலைகளைக் கடக்கவேண்டும், இத்தனை மணிநேர அனுபவம் வேண்டும் என்று நிர்பந்திக்கிறோம்.
குழந்தைகள் மலங்கழிக்கக்கூட toilet training என்கிற பெயரில் பயிற்சிகள் அளிக்கிறோம்.
ஆனால் ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த சமூக-பொருளாதார-அரசியல் வாழ்வை, வளங்களை, வருங்காலத்தைத் தகவமைக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கு எந்தவிதமானப் படிப்பறிவோ, பட்டறிவோ எதுவுமே தேவையில்லையாம்.
பொதுவாழ்வுக்கு வருகிறவர்கள் எல்லோரும் அரசியலில் முதுகலைப் பட்டம் பெற வேண்டும், ஓராண்டு காலம் போஸ்டர் ஒட்ட வேண்டும் என்றெல்லாம் நிபந்தனைகள் விதிக்க முடியாது, கூடாது.
அதேபோல, ஒரு கல்வி நிலையத்தையோ, ஒரு பாடத்திட்டத்தையோ, பட்டப் படிப்பையோ அரசு நிறுவ முடியாது. நீட் (NEET) போன்ற ஒரு தேர்வை நடத்தி மக்கள் பிரதிநிதிகளைத் தேர்வு செய்ய இயலாது.
ஆனால் பொதுப் பதவிகள் மீது ஆர்வம் கொண்டவர்கள் தங்களுக்கு உரிய தகுதிகள், திறமைகள், அனுபவங்கள் இருக்கின்றனவா என்று தன்னளவில் ஓர் ஆய்வை நடத்தி, தெளிவடைந்து, முடிவெடுக்க வேண்டும். இது தத்தம் மனசாட்சிப்படி முடிவு செய்யும் ஒரு சுயக் கட்டுப்பாட்டு (self-regulatory) நடவடிக்கையாகவே அமையும்.
கொஞ்ச காலத்துக்கு முன்னால்கூட, பொதுப் பதவிகளுக்கு பெரும்பாலானோர் முண்டியடித்து முன்னால் வந்து நிற்க மாட்டார்கள். காரணம் அந்தப் பொறுப்புக்களுக்கான கடமைகள், தேவைகள், பணிச் சுமைகள் போன்றவற்றை மனங்கொள்வார்கள்.
ஆனால் இன்றோ பொதுவாழ்வு என்பது பணத்தைப் போட்டு, பெரும் பணத்தை அள்ளும் ஒரு தொழிலாக மாறிவிட்டிருக்கிறது. எனவே கையெழுத்துப் போடத் தெரியாதவர்கள், மொழியறிவு இல்லாதவர்கள், பேசத் தெரியாதவர்கள், எழுதி வைத்திருப்பதைப் பார்த்துப் படிக்கத் தெரியாதவர்கள், பிறவிக் கூமுட்டைகள் எல்லோருமே எல்லாப் பதவிகளுக்கும் போட்டியிடுகின்றனர்.
அன்று உழைப்பு, தொண்டு, துன்பம், தியாகம் என்றிருந்த பொதுவாழ்வு, இன்று திருட்டு, கொள்ளை, மோசடி, லஞ்சம், ஊழல், ஊதாரித்தனம் என்று மாறிவிட்டிருக்கிறது.
ஒரு சினிமாக்காரி, தமிழ்நாடு என்னவோ அவளின் அறியப்படாத அப்பன் வீட்டு குடும்பச் சொத்து போல கருதிக்கொண்டு, நான் முதல்வர் ஆகியேத் தீருவேன் என்று அடம்பிடிக்கிறாள். இன்னொரு சுள்ளான் நடிகர் சினிமாப் பாணியில் சிலரை அழைத்துவந்து காலில் விழவைத்து சூட்டிங் நடத்துகிறான். பத்துக்கும் மேற்பட்ட சினிமா முதல்வர்கள் வரிசைக் கட்டி வருகின்றனர்.
இந்த முட்டாள்களை அம்பலப்படுத்த வேண்டிய ஊடகங்கள் வியாபாரத்துக்காக இவர்களைப் பற்றியச் செய்திகளை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி காசுப் பார்க்கின்றன. இந்த கூத்தாடிகள் கைகளில் காசும், கவர்ச்சியும், மன்றமும், கூட்டமும் இருப்பதால், ஒன்றுக்கும் உதவாத இவர்களை உயரத்தில் நிறுவி ஆதாயம் அடைய முயல்கின்றனர் பலரும்.
ஒரு வெற்று தமிழ்நாட்டு வரைபடத்தை (blank map) இந்தக் கூத்தாடிகள் கைகளில் கொடுத்து, பத்து நகரங்களை அடையாளப்படுத்தச் சொல்லுங்கள். பத்து மாவட்டங்களின் பெயர்களைச் சொல்லி, அவற்றின் தலைநகரங்களின் பெயர்களைக் கேளுங்கள். ஸ்டெர்லைட், ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ, மோனோசைட் போன்றவையெல்லாம் என்னவென்று விளக்கச் சொல்லுங்கள். சாயம் வெளுத்துப் போகும்!
சனநாயக அமைப்பின் இடுக்குகள் வழியாக முட்டாள்களும், மூடர்களும், ஓடுகாலிகளும், உதவாக்கரைகளும் பதவிகளில், அதிகாரத்தில் ஏறி அமர்ந்து, நாட்டை நாசமாக்குவதைத் தடுக்க குடிமைச் சமூக அமைப்புக்கள் பல்கிப் பெருக வேண்டும். தகுதியற்றோரைத் தடுத்திடும் இயக்கங்கள், களப்பணியாளர்கள் ஏராளமானோர் வேண்டும்! இந்த நாசகார அரசியல் பிணிகளின் கொட்டத்தை அடக்கியே ஆக வேண்டும்.
சுப. உதயகுமாரன்
பச்சைத் தமிழகம் கட்சி
