டெல்லியில் நீட் தேர்வு முறைகேட்டுக்கு எதிராக பல நாட்கள் கரப்பான் பூச்சி மக்கள் கட்சியால் ஒன்றுதிரட்டப்பட்டு பெருந்திரளாக கூடிய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது ஜூலை 20 அன்று நடாளுமன்றம் முற்றுகை போராட்டத்தின் போது ஒன்றிய அரசால் நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து இந்தியா முழுவதும் மாணவ அமைப்புகள் மூலம் கண்டன ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன ; ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலக கோரியும், நீட் தேர்வு ரத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களுக்கு ஒரு கோடி இழப்பீடு கோரியும் டெல்லியில் தொடங்கிய போராட்டம் ஒட்டுமொத்த ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரான இளம் தலைமுறையின் போராட்டமாக வட இந்தியாவில் மாறாத் துவங்கியது.
தொடர்ச்சியாக வலுபெற்றுக்கொண்டிருந்த போராட்டங்களை கட்டுப்படுத்த இயலாமல் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலக செய்தது பாஜக அரசு. பெரிய அளவிலான தொலைநோக்கு மாற்றம் இல்லை என்றாலும் வட இந்தியாவில் அசைக்கவே முடியாது என்று பெருமை பீற்றிக்கொண்டிருந்த பாஜகவின் அஸ்திவாரத்தையே அசைத்துவிட்டது இந்த போராட்டம்.
ஆனால் நீட் தேர்வு எதிர்ப்பிலும் பாஜக எதிர்ப்பிலும் பத்து ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே முதன்மை மாநிலமாக இருந்த தமிழ்நாட்டில் நிலைமை வேறு விதமாக இருந்தது. டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து தென்னிந்தியாவில் முதல்வர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அதே நாளில் தமிழ்நாடு முதல்வர் தன் கடைசி படமான ஜனநாயகனை அதன் மறுநாள் (ஜூலை 23) வெளியீட்டிற்கு முன் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்,அரசு அதிகாரிகளுடன்.
அதே வேளையில் சென்னையின் எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் முன் போராட்டம் நடத்திய மாணவர்களை அடித்து அப்புறப்படுத்தியது இதே அரசின் காவல்துறை. செய்தி ஊடகங்கள் தமிழ்நாடு முழுவதும் ஜனநாயகன் வெளியீடு விஜய் ரசிகர்களால் திருவிழா போல் கொண்டாடப்படுவதையும், முன்போல வெளியீட்டிற்கு எந்த தடையும் ஏற்படாமல் இருக்க மண்சோறு சாப்பிடுவதையும் அபிஷேகம் செய்வதையும் மறுநாள் அரசின் அமைச்சர்கள் தங்கள் தலைவரை “கடைசி முறை ” திரையில் நடிகராக கண்டு கண்ணீர் வடிப்பதையும் இடைவிடாமல் காட்டின.
இடையிடையில் சென்னையிலும் மதுரையிலும் கோவையிலும் நெல்லையிலும் மாணவ அமைப்புகள் போராடுவதையும் அவற்றை நீட் தேர்வுக்கு எதிரான கட்சி என்று கூறிக்கொள்ளும் தவெக அரசின் காவல்துறை அராஜகமான முறையில் தடுத்து நிறுத்துவதும் நடந்தது.
யாருக்கேனும் ரோம் எரியும்போது பிடில் வாசித்த நீரோ மன்னன் ஞாபகம் வருகிறதா? இங்கு மன்னனோடு சேர்ந்து ஒரு பாதி மக்கள் தொகையும் அந்த பிடில் இசையின் மயக்கத்தில் கிடந்தது. இந்த மயக்கத்தை விட கேலிக்கூத்தான விஷயங்கள் அதன் பின்னர் போராட்டங்கள் என்ற பெயரில் நடந்தன.
ஜூலை 22 ஆம் தேதி சென்னையில் வலுக்கட்டாயமாக மாணவர் அமைப்பின் போராட்டம் காவல்துறையால் மூர்க்கத்தனமாக தடுத்து நிறுத்தப்பட்டதை தவெக அரசின் அமைச்சர் ராஜ்மோகன் “அனுமதி பெறாமல் பொது இடங்களில் மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பொது சாலைகளில் போராட்டம் நடத்தினால் இது தான் நடக்கும்” என்று நியாயப்படுத்தினார். பொது இடங்களில் நடத்தாமல் எவ்வாறு போராட்டம் நடத்துவது என்ற முரண் ஒரு புறமும், ஜனநாயகன் பட வெளியீட்டு கொண்டாட்டங்களின் போது ரசிகர் மன்றங்கள் சாலை முழுவதும் ஆக்கிரமித்ததையும் அதற்கு மாணவர் போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கிய இதே காவல் துறை பாதுகாப்பு கொடுத்ததையும் பார்க்க முடிந்தது.
பொது வெளியில் போராட்டங்கள் நடந்து ஜல்லிக்கட்டு போராட்டம் போல் ஒரு பெருந்திரளான மக்கள் போராட்டத்தில் கலந்து கொள்வது போன்ற சூழல் ஏற்பட்டு விட கூடாது என்பதில் இந்த அரசு தெளிவாக இருந்தது. அதற்கு தவெக-விற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவாக செயல்படும் கட்சிகளும் இயக்கங்களும் அயராது உழைத்ததையும் பார்க்க முடிந்தது.
ஜூலை 22ல் இருந்து கரப்பான் பூச்சி மக்கள் கட்சிக்கு போராடுவதற்கான இட அனுமதி கிடைக்காததால் “பாதுகாப்பான” போராட்டக்களமாக சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகமான பாலன் இல்லத்தைக் கொடுத்தது அந்தக் கட்சி. பெருவாரியான வாக்குகளைப் பெறாத தவெகவை தங்கள் ஆதரவால் ஆட்சியில் அமரவைத்த கம்யூனிஸ்ட்களால் “நீட்-க்கு எதிரான” கட்சியான தவெகவை மக்கள் போராட்டத்திற்கு பொது இடங்களில் அனுமதி வழங்க அழுத்தம் கொடுக்கவோ, மாணவர் போராட்டங்களை அராஜகமாகத் தடுப்பதைக் கடுமையாக கண்டிக்கவோ இயலவில்லை. அல்லது அப்படி செய்ய வேண்டும் என்ற எண்ணமே இல்லையா?
பாலன் இல்லத்தின் சிறிய வளாகத்திற்குள் மூன்று நாள் காத்திருப்பு போராட்டம் நடந்தது; டெல்லி போராட்டத்தால் ஈர்க்கப்பட்ட பல மாணவர்களும் இளைஞர்களும் மேல்தட்டு-நடுத்தர வர்க்கத்து குடும்பங்களும் கூட பாலன் இல்லத்தில் வந்து தங்கள் ஆதரவைக் காட்ட வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. ஆனால் தெருவிற்கே வராமல் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் எப்படி போராடுவது? இந்த போராட்டத்தை காவல் துறை பெரிதாக கூட எடுத்துக்கொள்ளவில்லை – அவர்களுக்கு தெரியும் இதனால் அரசிற்கோ ஜனநாயகனுக்கோ எந்த பாதிப்பும் இல்லை என்று. இன்னொரு புறம் செலிபிரிட்டிகளுக்கு என்றே தனியாக ஒரு நாள் “போராட்டத்தை” காவல் துறை மாணவர் அமைப்புகளின் போராட்டத்திற்கு அனுமதி மறுத்த அதே இடத்தில் அனுமதியுடன் நடத்தியது நீலம் அமைப்பு.
நீட் பற்றிய புரிதலே தனக்கு இல்லை என அயோத்தி கோவிலுக்கு ஆனந்த கண்ணீர் வடித்த நடிகை ரேவதி மேடையில் பேசினார். இந்த போராட்டத்திற்கு முந்தின நாள் தமிழக சட்டமன்றம் முன்பு கோஷம் போட்டதால் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவால் செல்லமாக கண்டிக்கப்பட்ட பாடகர் அறிவு அரசை எதிர்த்தோ முதல்வர் குறித்தோ வெளிப்படையாக பேசவில்லை. போராட்டம் இரவு எட்டு மணிக்குள் இனிதே காவல் துறை விதிகளுக்கு ஏற்றபடி முடிந்தது. இதனை கண்துடைப்பு என்று கூட சொல்ல முடியாது. இன்னொரு புறம் தமிழகம் முழுவதும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக வளாகங்களில் புகுந்து மாணவர் போராட்டங்களை மிரட்டி ஒடுக்கி கொண்டிருந்தது தமிழக காவல்துறை.
ஜூலை 24 ஆம் தேதி சென்னை ராஜரத்தினம் மைதானம் முன் 48 மணி நேரம் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி காத்திருப்பு போராட்டம் நடத்த அனுமதி வாங்கி இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகளான அனைத்திந்திய மாணவர் சங்கம் (SFI) மற்றும் இந்திய ஜனநாயக இளைஞர் சங்கம் (DYFI) ஆகிய அமைப்புகள் போராட துவங்கியது. ஆனால் பாலன் இல்லத்தில் அதே நேரத்தில் நடந்து கொண்டிருந்த போராட்டத்தைப் போல ஒரு பொது இடத்தில் ஒரு பிரதான சாலையில் நடந்த இந்த போரட்டத்தில் கூட்டம் வரவில்லை. டெல்லியிலும் போராட்டம் இறுதி கட்டத்தை எட்டி சிஜேபி கட்சியினர் அரசுடன் பேச்சுவார்த்தைக்கு சென்று விட்ட பின் இங்கு போராட்டங்கள் நீர்த்துப் போக தொடங்கின.
SFI-ன் போராட்டம் குறித்து பெரும்பாலான இளைஞர்களுக்கு தெரியவே இல்லை; பலர் பாலன் இல்லத்தில் உட்காரவே இடம் இல்லாததால் போரட்டப் பதாகைகளுடன் சுயபடங்கள் எடுத்துக்கொண்டு திரும்பி சென்றதை பார்க்க முடிந்தது. ராஜரத்தினம் மைதானம் முன் நடந்த போராட்டம் ஒரு பொது இடம் என்பதால் பெருந்திரளாக மக்கள் திரண்டால் அரசிற்கு உடனே செயல்படுவதற்கான அழுத்தம் வந்திருக்குமோ என்னவோ. ஆனால் கம்யூனிஸ்ட்களே கட்சி வேறுபாடுகளை விடுத்து ஒன்றாகப் போராட முன்வரவில்லை.
பாலன் இல்லத்தில் நடந்த போராட்டம் முற்றிலும் பயனற்றதாக இல்லை; நியாயமான நீட் என்ற வட இந்திய போராட்ட கோரிக்கையை விடுத்து தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கையான நீட் ஒழிப்பு இந்த போராட்டத்தின் கோரிக்கையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இளம் தலைமுறையினர் நடுவே நீட் தேர்வின் அநீதி குறித்த உரையாடல்கள் பல நடந்தன; கரப்பான் பூச்சி கட்சியின் கோரிக்கைகள் தாண்டி தமிழ் நாட்டின் நீண்ட நாள் நீட் ஒழிப்பு கோரிக்கையுடன் போராட்டத்திற்கு வந்த இளைஞர்கள் ஒத்துப்போயினர். இந்த உரையாடலும் விழிப்புணர்வும் தான் இந்த போராட்டங்களின் மிக முக்கிய விளைவுகள். ஆனால் இந்த கோரிக்கைகளுடன் பெரிய அளவிலான போராட்டங்களை இளைஞர்கள் முன்னெடுப்பதை பாலன் இல்லத்தில் இடம் கொடுத்தவர்களே விரும்பவில்லை என்பது ஜூலை 25ஆம் தேதி நடந்த நிகழ்வுகள் உணர்த்தின.
ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர ப்ரதான் பதவி விலகிய பின் டெல்லியில் கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டங்களைக் கைவிடும்படி கேட்டுக்கொண்டவுடன் இங்கும் உடனடியாக போராட்டங்கள் கைவிடப்பட தொடங்கின. நீட் ஒழிப்பிற்காக போராடுவதாகக் கூறிய இந்திய மாணவர் சங்கத்தினர் அந்த கோரிக்கை நிறைவேறாமலே வெற்றிப் பேரணியில் ஈடுபட்டு போராட்டத்தைக் கைவிட்டனர்.
பாலன் இல்லத்திலும் ஜூலை 25 இரவு போராட்டத்தைக் கலைத்து திரும்புமாறு கூறப்பட்டது. நீட் ஒழிப்பிற்காக போராடுவதற்காக கூறிய இளைஞர்கள் கலைய மறுத்தபோது “இது தனியார் இடம்” என்று கம்யூனிஸ்ட்களே கூறிய நகைமுரண் நிகழ்ந்தது. பெரும் எழுச்சியுடன் கூடிய இளைஞர்கள் பலர் அரசியல் போராட்டங்கள் குறித்த கசப்பான அனுபவங்களுடன் திரும்பினர்.
இந்த நிகழ்வுகளைக் கூர்ந்து ஆராயும்போது பெயரளவில் நீட் எதிர்ப்பாளர்களாகக் காட்டிக்கொள்ளும் இந்தக் கட்சிகள் தெளிவாகத் திட்டமிட்டுப் பிரிந்து போராட்டங்களை நிகழ்த்தி மாணவர்களையும் இளைஞர்களையும் ஒன்றிணைந்து போராட விடாமல் செய்து மாநில அரசிற்கும் அதன் மூலம் ஒன்றிய அரசிற்கும் உதவியது போலவே இருந்தது. எதிர்க்கட்சி என்று கூறிக்கொள்ளும் திமுக இவற்றை தள்ளி இருந்து வேடிக்கை பார்த்து தன் கடந்தகால நீட் எதிர்ப்பு செயல்பாடுகளைப் பேசிக்கொண்டிருந்தது. களத்தில் நின்று போராட்டங்களை முன்னெடுக்கும் நிலையில் அக்கட்சி இல்லை போலும்.
மொத்தத்தில் தமிழ்நாட்டு கல்வி, நீட் எதிர்ப்பு, மாணவர் நலன் போன்ற விஷயங்களில் இப்போதைய தவெக அரசையும் எந்த அரசியல் கட்சியையும் (குறிப்பாக கம்யூனிஸ்ட்கள், காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகள்) நம்பி எந்த பயனும் இல்லை என்பது வெளிச்சம். தமிழ்நாட்டு நலனைக் காக்க டெல்லிக்கும், சுயலாபத்திற்கும் அடிபணிபவர்களை எப்படி நம்ப முடியும்?
வித்யா விகாசினி
