முள்ளிவாய்க்கால் இனவழிப்பில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கும், அரசியல் கைதிகளுக்கும் நீதி வழங்க மறுத்து, போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறத் தவறிய சிங்கள அரசு, சர்வதேச அரங்கில் மனித உரிமைகள் குறித்துப் பேசுவது வெட்கக்கேடானது. சுதந்திரத்திற்குப் பின்னர், வட-கிழக்கில் திட்டமிட்ட குடியேற்றங்கள் வாயிலாகத் தமிழர் நிலங்களை அபகரித்ததோடு, அதற்காக இனப்படுகொலையையும் அரங்கேற்றிவிட்டு, இன்று உலக அரங்கில் பிற நாடுகளின் எல்லைகள் குறித்து நியாயம் கற்பிப்பது கேவலத்தின் உச்சமாகும். சர்வதேச அளவில் பாலஸ்தீனத்தின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கும் சிங்கள ஆட்சி, உள்நாட்டில் சுயநிர்ணய உரிமையையும் சமஷ்டி அதிகாரப் பகிர்வையும் கோரிய தமிழர்களின் ஜனநாயக மற்றும் ஆயுதப் போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு நசுக்கியது. உள்நாட்டில் ஓர் ஒடுக்குமுறையைக் கையாண்டுவிட்டு, சர்வதேச அரங்கில் ஒடுக்கப்படும் இன்னொரு தேசிய இனத்திற்காகக் குரல் கொடுப்பது உலகை ஏமாற்றும் அரசியல் கபட நாடகமாகும். இலங்கை பிரதிநிதிகள் ஆற்றும் இந்த உரைகள் ஒடுக்கப்படும் மக்கள் மீதான உண்மையான கரிசனையால் வந்தவையல்ல. ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக இலங்கை நெருக்கடிகளைச் சந்திக்கும்போதெல்லாம், சர்வதேச அரங்கில் அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் வாக்குகளைத் தக்கவைத்துக்கொள்ளப் பயன்படுத்தப்படும் மலிவான இராஜதந்திர தந்திரோபாயமே இது. போருக்கு முன் இஸ்ரேலுக்குச் சாமரம் வீசிவிட்டு, போர் முடிந்ததும் இஸ்ரேல் எதிர்ப்பாளராக வேஷம் போட்ட மகிந்தவின் அதே நாடகத்தைத்தான் இப்போது ஜே.வி.பி-யினரும் அரங்கேற்றுகின்றனர். தாங்கள் ஏகாதிபத்தியத்திற்கு எதிரானவர்கள், ஒடுக்கப்படும் மக்களின் பக்கம் நிற்பவர்கள் என்ற ஒரு போலி முற்போக்கு பிம்பத்தை சர்வதேச சமூகத்திற்கு முன்னால் கட்டமைக்க இந்த மேடைகளை சிங்கள ஆட்சியாளர்கள் தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். 2009-க்கு முற்பட்ட ஈழப்போர்க் காலகட்டத்தில், தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை நசுக்குவதற்குத் தேவைப்பட்ட அதிநவீன ஆயுதங்களுக்காக இஸ்ரேலுடன் நெருங்கிய இராணுவ மற்றும் உளவுத்துறை உறவுகளை இலங்கை பேணியது. தமிழர்களின் பேரழிவுக்குக் காரணமான முக்கிய ஆயுதங்களில் சில இஸ்ரேலியத் தயாரிப்புகளே. செஞ்சோலை முதல் முள்ளிவாய்க்கால் வரை தமிழர்கள் மீது குண்டுமழை பொழிந்த வான்படையின் ‘கபீர்’ (Kfir) போர் விமானங்கள், கடற்படையின் ‘சூப்பர் டோரா’ (Super Dvora) தாக்குதல் படகுகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் ஆகியவற்றை இஸ்ரேலே வழங்கி, இலங்கை அரசின் போர்க்கள வெற்றியில் முக்கியப் பங்காற்றியது. அக்காலகட்டத்தில் இஸ்ரேலின் மனித உரிமை மீறல்கள் குறித்து சிங்கள ஆட்சியாளர்கள் எவ்விதக் கேள்வியும் எழுப்பவில்லை. பாலஸ்தீனத்திற்கு 1967-ஆம் ஆண்டிற்கு முந்தைய எல்லைகளுடன் கூடிய ‘சுதந்திர அரசு’ அமைய வேண்டும் என வாதிடும் இதே ஜே.வி.பி.தான், தமிழர்களின் வரலாற்றுத் தாயகமான வடக்கு – கிழக்கு மாகாணங்களின் இணைப்பைக் கடுமையாக எதிர்த்தது. அதுமட்டுமின்றி, 2006-ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, அந்த இரு மாகாணங்களின் இணைப்பையும் சட்டத்தின் மூலம் ரத்துச் செய்து, தமிழர்களின் நிலத்தொடர்ச்சியைக் குலைத்தது என்பதும் இங்கு நினைவுகூரத்தக்கது. இஸ்ரேல் எவ்வாறு ‘தொல்பொருள் ஆய்வுகள்’, ‘பாதுகாப்பு வலயங்கள்’ என்ற போர்வையில் பாலஸ்தீனர்களின் பூர்வீக நிலங்களைப் படிப்படியாக ஆக்கிரமிக்கிறதோ, அதே உத்தியைத்தான் சிங்களப் பேரினவாத அரசுகளும் பின்பற்றுகின்றன. வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தொல்பொருள் திணைக்களம், வனவளத் திணைக்களம் மற்றும் மகாவலி அதிகார சபை ஆகியவற்றைப் பயன்படுத்தித் தமிழர்களின் நிலங்களைச் சுவீகரிக்கும் அரச பொறிமுறையானது, இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு வடிவத்தை அடியொற்றியதே ஆகும். பாலஸ்தீன நிலங்களை அபகரிப்பதற்காக, விவசாயத்தையும் இராணுவப் பாதுகாப்பையும் ஒருங்கிணைத்த ‘கிபுட்ஸ்’ (Kibbutz) எனும் ஆயுதமேந்திய குடியேற்ற முறையை இஸ்ரேல் பயன்படுத்தியது. 1980-களில் ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் அரசாங்கம் இதே இஸ்ரேலிய உத்தியைக் கையாண்டுதான், தமிழர் தாயகப் பகுதிகளில் ஆயுதமேந்திய ‘சிங்கள எல்லைக் கிராமங்களை’ (மணலாறு / வெலிஓயா) உருவாக்கியது. ஒட்டுமொத்தத்தில், தமிழர் நில அபகரிப்புக்கான இந்த மூலோபாயத்தை இஸ்ரேலிடமிருந்துதான் இலங்கை கற்றுக்கொண்டது. இஸ்ரேலின் அரச நீர் முகாமைத்துவ மற்றும் பொறியியல் ஆலோசனை நிறுவனமான ‘தஹால்’ இலங்கையின் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தில் நேரடியாகப் பணியாற்றியது. இந்த மகாவலித் திட்டத்தின் (குறிப்பாக System L) ஊடாகவே, தமிழர்களின் தாயகப் பகுதியான மணலாறு (வெலிஓயா) பகுதிகளில் பாரிய சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன. அதாவது, சிங்கள அரசு தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து அங்கு குடியேற்றங்களைச் செய்வதற்கு, இஸ்ரேலிய நிறுவனத்தின் தொழில்நுட்ப அறிவே நேரடியாகப் பயன்படுத்தப்பட்டது. பாலஸ்தீனப் போராளிகள் தாக்குதல் நடத்தினால், அவர்களின் குடும்ப வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்குவது, ஒட்டுமொத்த மக்கள் மீதும் பொருளாதாரத் தடைகளை விதிப்பது, அவர்களைக் கொல்லுவது ஆகியவை இஸ்ரேல் கையாளும் ‘கூட்டுத் தண்டனை’ (Collective Punishment) உத்தியாகும். 1990-களில் இலங்கையின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக இருந்த ரஞ்சன் விஜேரத்ன போன்றவர்கள், இஸ்ரேலின் இந்த ஒடுக்குமுறை உத்திகளை வெளிப்படையாகவே புகழ்ந்து அதனைப் பின்பற்றினார்கள். ஈழப்போர்க் காலத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் மீது பல ஆண்டுகளாக விதிக்கப்பட்ட கடுமையான மருத்துவ, எரிபொருள் மற்றும் பொருளாதார தடைகளும், மக்கள் வாழ்விடங்கள் மீதான கண்மூடித்தனமான குண்டுவீச்சுகளும் தற்செயலானவை அல்ல; இவை இஸ்ரேலிய இராணுவ மற்றும் உளவுத்துறை மூலோபாயங்களின் நேரடிப் பிரதிபலிப்புகளே ஆகும். முன்னாள் ஜனாதிபதியும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ச, இஸ்ரேலின் கொடூரமான இராணுவ மற்றும் புலனாய்வுக் கட்டமைப்பை அடியொற்றிச் செயல்பட்டவர். தனது பதவிக்காலத்தில் இஸ்ரேலுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய அவர், பல இரகசியப் பயணங்களை அங்கு மேற்கொண்டுள்ளார். இஸ்ரேல் எவ்வாறு பாலஸ்தீனர்களை வீதித் தடைகள், அதிஉயர் இராணுவக் கண்காணிப்பு, அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் (HSZ) மற்றும் திட்டமிட்ட குடித்தொகை மாற்றியமைப்பு ஆகியவற்றின் மூலம் ஒடுக்குகிறதோ, அதே “இஸ்ரேலிய ஒடுக்குமுறை மாதிரியை” வடக்கு – கிழக்குத் தமிழர் தாயகத்தில் அவர் நடைமுறைப்படுத்தினார். இதற்காக, அதிநவீன உளவுத் தொழில்நுட்பங்களையும், நேரடி மூலோபாய ஆலோசனைகளையும் அவர் இஸ்ரேலிய நிபுணர்களிடமிருந்தே நேரடியாகப் பெற்றுக்கொண்டார். இஸ்ரேல் தன் மீது முன்வைக்கப்படும் நியாயமான மனித உரிமை விமர்சனங்களை எல்லாம் “யூத எதிர்ப்பு” என்று முத்திரைகுத்தி, சர்வதேச சமூகத்தின் வாயை அடைக்க முற்படுகின்றது. இதே உத்தியைத்தான் சிங்கள அரசும் அச்சுப்பிசகாமல் கையாள்கிறது. ஐ.நா சபையோ, மனித உரிமை அமைப்புகளோ, அல்லது தனிநபர்களோ யார் தன் மீதான இனவழிப்பு மற்றும் போர்க்குற்றங்களைச் சுட்டிக்காட்டினாலும், அவர்களை “புலிகளின் பினாமிகள்” அல்லது “பயங்கரவாதத்திற்குத் துணைபோவோர்” என்று சிங்கள அரசு முத்திரைகுத்துகிறது. மனித உரிமை மீறல்களுக்குப் பதிலளிக்காமல் தட்டிக்கழிப்பதற்கும், சர்வதேச விசாரணைகளை முடக்குவதற்கும் இரு நாடுகளின் அரசப் பிரச்சார இயந்திரங்களும் ஒரே மாதிரியான தற்காப்பு மொழியையே ஆயுதமாகப் பயன்படுத்துகின்றன. இஸ்ரேல் அரசு தமது போர்க்குற்றங்களையும், ஆக்கிரமிப்புகளையும் சர்வதேச அரங்கில் நியாயப்படுத்துவதற்கு “ஹஸ்பாரா” (Hasbara – Public Diplomacy) என்ற நன்கு திட்டமிடப்பட்ட அரச பிரச்சாரக் கட்டமைப்பைப் பயன்படுத்துகிறது. ‘நாங்கள் ஜனநாயக நாடு, எங்களைச் சுற்றிலும் பயங்கரவாதிகள்’ என்பதே அந்தப் பிரச்சாரத்தின் மையக்கருத்து. இதையே அச்சுப்பிசகாமல் இலங்கை அரசும் பின்பற்றியது. தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை நசுக்குவதற்கு, ‘நாம் மக்களை மீட்கவே பயங்கரவாதத்தை ஒழிக்கிறோம்’ எனக் கூறி, அதனை ஒரு “மனிதாபிமான மீட்பு நடவடிக்கை” என்ற போலிப் பிரச்சாரமாக உலக அரங்கில் கட்டமைப்பதற்கு, இலங்கை இந்த இஸ்ரேலிய உத்தியையே முழுமையாகக் கையாண்டது. இஸ்ரேல் அரசாங்கம் பாலஸ்தீனர்களை எவ்விதக் குற்றச்சாட்டுகளோ, முறையான நீதிமன்ற விசாரணைகளோ இன்றிப் பல ஆண்டுகளாகச் சிறையில் அடைத்து வைப்பதற்கு “நிர்வாகக் காவல்” (Administrative Detention) என்ற கொடூரமான சட்டத்தைப் பயன்படுத்துகிறது. இதனை ஐ.நா. போன்ற சர்வதேச மன்றங்களில் இலங்கை அரசு கண்டிக்கிறது. ஆனால், அச்சுப்பிசகாமல் இதே ஒடுக்குமுறை அதிகாரங்களைக் கொண்ட “பயங்கரவாதத் தடைச் சட்டத்தை” ஆயுதமாகப் பயன்படுத்தி, இலங்கை அரசு பல தமிழ் அரசியல் கைதிகளைத் தசாப்தக் கணக்கில் விசாரணையின்றிச் சிறைகளில் அடைத்து வைத்துள்ளது. ‘தேசியப் பாதுகாப்பு’ என்ற பெயரில் இஸ்ரேலின் ஒடுக்குமுறை உத்திகளை உள்நாட்டில் அப்படியே பிரயோகித்துவிட்டு, சர்வதேச மேடைகளில் மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பது அப்பட்டமான உலக மகா நாடகமேயன்றி வேறில்லை. அதேவேளை தங்களின் சுயநிர்ணய உரிமைக்காக உலக நாடுகளின் ஆதரவைக் கோரும் பாலஸ்தீனத் தலைமை, ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றத் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்ட போதெல்லாம், இலங்கை அரசுக்கே ஆதரவளித்தது. ஒரு ஒடுக்கப்படும் இனம், இன்னொரு ஒடுக்கப்படும் இனத்தின் (தமிழர்களின்) நியாயமான போராட்டத்தை நிராகரித்து, ஒடுக்கும் இலங்கை அரச இயந்திரத்தின் ‘இறையாண்மைக்கு’ ஆதரவளித்தது உலக அரசியலின் இருண்ட பக்கமாகும்....
International
சிட்னியில் உள்ள பிளாக்டவுன் நகராட்சியில், இராவணனின் உருவத்தை எரிக்கும் நிகழ்ச்சி இந்த ஆண்டும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து, பெரியார்–அம்பேத்கர் சிந்தனை வட்டம்...
இந்த நிகழ்வில் பேசப்பட்ட ஒவ்வொரு கருப்பொருளும் விவாதமும் ஒன்றோடொன்று பிணைப்பினைக் கொண்டிருந்தன. மொழி, அடையாளம், கலை, பண்பாடு, பொருளாதாரம், சர்வதேச உறவு என்ற...
-தோழர் சுமதி விஜயகுமார் இந்த ஆண்டு ஜனவரி மாதம் துவங்கி அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இல்லாமல் குடியேறிய மக்களை நாட்டை விட்டு வெளியேற்றியது...
தந்தை பெரியார் அவர்களையும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களையும் எதிர்த் துருவங்களாக முன்னிறுத்தி நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்...
“ மொழிபெயர்ப்பு- சபுர் அலி “மாய” போர்க்கப்பல்கள் பிரச்சினைக்குரிய மண்டலங்களில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன.இந்த “போலி கப்பல்கள்”உலகளாவிய தகவல் போரின் இன்றைய ஆயுதங்களாக மோசமாக...
உக்ரைனில் நடக்கும் அழிவுகளுக்கு உலகம் பொறுப்பேற்க வேண்டும்,இதற்கு மேல் இழப்பதற்கு என்னிடம் உயிர்களும் இல்லை, உணர்வுகளும் இல்லை, இதற்கு மேல் எந்தவித ராஜதந்திர...
Unskilled Migration எனப்படும் தொழில்நுட்ப பணி அல்லாத பணிகளுக்கு ஐரோப்பாவில் வாய்ப்புகள் எப்படி? எவ்வாறு வருவது? இன்றைக்கு Unskilled Migration நிறைய நடைபெறுவது...
