தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் 4000 செவிலியர்கள் பணிநிரந்தரம் கோரியும் ஒன்றிய – மாநில அரசுகள் அறிவித்த ஊதியத்தை வழங்கக் கோரியும் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த திமுக ஆட்சியிலும் இதே கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
அப்போதைய செவிலியர் போராட்டத்தை ஆதரித்துப் பேசிய தற்போதைய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா த.வெ.க ஆட்சி அமைந்தவுடன் செவிலியர்கள் பணியிலமர்த்தப்படுவார்கள் எனப் போராடிய செவிலியர்களிடம் வாக்குறுதி அளித்தார்.
ஆனால் போராட்டம் தொடங்கிய முதல் நாளிலேயே பேச்சுவார்த்தைக்கு என அழைத்துச் செல்லப்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். போராடிய செவிலியர்களும் இரவோடு இரவாக கைதுசெய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
செவிலியர்கள் பின்தங்கிய குடும்பப் பின்னணியில் இருந்து வருபவர்கள் ; மக்கள் நலத்துறையின் அடிப்படை வேர்கள்;பெரும்பாலும் பெண்கள். தமிழ்நாடு மருத்துவக் கட்டமைப்புப் பலமாக இருப்பதற்குக் காரணம் செவிலியர்கள் நியமனம் காலந்தோறும் முறையாக நடந்ததேயாகும்.
இன்றைக்கு என்ன நடக்கிறது?
கடந்த 2011 க்குப் பிறகு செவிலியர்கள் பெரும்பாலும் பல்வேறுத் திட்டங்களின் பெயரில் ஒப்பந்த ஊழியர்களாக நியமிக்கப்படுகிறார்கள். மாநிலப் பட்டியலில் இருந்த மக்கள் நல்வாழ்வுத் துறையில் மெல்ல மெல்ல ஒன்றிய அரசு ஊடுருவி அதனை ஒத்திசைவுப் பட்டியலுக்கு நகர்த்தியுள்ளது. ஒத்திசைவுப் பட்டியலிலுள்ள மக்கள் நல்வாழ்விற்குப் போதுமான நிதியையும் வழங்குவதில்லை.
இந்த நிலையில் மாநில அரசுகளோ நிதிச்சுமையைக் காரணங்காட்டி பணிநிரந்தரம் , தகுதியான ஊதியம் ஆகியவற்றைப் புறக்கணித்து பல துறைகளில் வெளிப்பணி ஒப்படைப்பு அல்லது ஒப்பந்த பணி நியமனமாக மாற்றி வருகிறது. மக்கள் நல்வாழ்வுத் துறையும் இதற்கு விதிவிலக்கல்ல.
தற்போது வாதப் பொருளுக்கு வருவோம். மதிப்புமிகு வாழ்க்கை வாழ்வதற்கு நிரந்தர ஊதியம் , உழைப்புக்கேற்ற ஊதியம் என்பது அடிப்படை. அதுவும் செவிலியர் போன்ற பின்தங்கிய சமூகச் சூழலில் இருந்து வரும் பெண் பணியாளர்களுக்கு முதன்மைத் தேவை.
இதனை த.வெ.க அரசு கருத்தில் கொள்ளாமல் அண்ணன் சீர்திட்டம் எனும் பெயரில் தாலிக்குத் தங்கம் பட்டுப்புடவை போன்றவற்றைத் திருமணமாகும் பெண்களுக்குத் தருவதாக அறிவித்திருக்கிறது. இத்திட்டத்திற்காக ரூ.812 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. பெண்கள் தங்கள் சொந்தக் காலில் உழைத்து மதிப்புமிகு ஊதியத்தைப் பெறுவது அவர்களுக்கு தன்னம்பிக்பையைத் தருமா? அண்ணன் சீர் , தாய்மாம்ன் தங்க மோதிரத் திட்டம் ஆகியத் திட்டங்கள் தருமா? இவை மக்கள் நலத்திட்டங்கள் என்றாலும் ஒரு வளர்ச்சியை நோக்கி முற்போக்கானவை அல்ல என்பது மட்டும் உறுதி.
அதேநேரத்தில் போராடும் 4000 செவிலியர்களுக்கு மாத ஊதியமாக 50000 ரூபாய் கொடுத்தால் ஆண்டுக்கு ரூ 240 கோடி மட்டுமே செலவாகும். அது தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பையும் பலப்படுத்தும் . ஒரு மதிப்பான வாழ்க்கை வாழ பெண் பணியாளர்க்கு உதவும். இதை ஏன் செய்வதில்லை என்ற கேள்வி எழ வேண்டும். தமிழ்நாடு விரைவாக முதியோர்மயமாகி வரும் மாநிலம். மக்கள்நல்வாழ்வுத் துறையில் பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டிய அரசுகள் ஒப்பந்த பணியாளர்கள் எனும் பெயரில் பெண்களைச் சுரண்டுஙது ஏற்புடையதாகாது. அண்ணன்லசீர் ,தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் ஆகியவற்றை மறுஆய்வு செய்து செவிலயர்களுக்கு ஒரு மதிப்பான ஊதியத்தை வழங்குவதை அரசு கவனம் செலுத்த வேண்டும். ஒன்றிய அரசுடன் இணக்கமாகப் போகிறோம் எனப் பணிந்து போகாமல் மாநிலத்தின் மக்களநல்வாழ்வுத் துறை வளர்ச்சி ,தேவைகளுக்கு ஏற்ப ஒன்றிய அரசால் வசூலிக்கப்பட்டு மாநிலங்களோடு பகிர்ந்துகொள்ளப்படாத மேல்வரி , கூடுதல் கட்டணங்கள் ஆகியவற்றில் கூடுதலாக மாநிலங்களுக்கு ஒதுக்க வேண்டும்.
போராடும் செவிலியர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டும்.
குமரன்
