தூய ஆட்சி என்று விளம்பரப்படுத்தி ஆட்சிக்கு வந்துவிட்டாலும் கடந்த இடைத்தேர்தலில் அந்த பிம்பம் உடைந்திருக்கிறது. ஐந்து நிமிடம் பேசினாலே கொத்து பரோட்டா போட்டு விடுவோம் என்று பேசியவர்கள் இன்று தலைகீழாக நின்று குறளிவித்தை காட்டுகிறார்கள்…
விஜய்யின் நிர்வாகத் தோல்வியும், திறனற்ற ஆட்சியையும் மக்கள் விமர்சிக்கத் துவங்கிவிட்டார்கள். வாக்களித்த நடுநிலையாளர்கள் வெறுக்கத் துவங்கிவிட்டார்கள்.
தேர்தல் முடிந்த ஒரு மாதத்துக்குள்ளாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து தவெகவில் ஐக்கியமானதை தவெக முதலில் ஹீரோயிசமாகக் காட்டிக்கொண்டது. ஆனால் தற்போது மக்கள் மனநிலையோ, அதனை பிக்காலித்தனமென்றும்… மக்களை ஏமாற்றும் செயலென்றும் உணர்ந்து, அதை விமர்சிக்கிறார்கள்! அதன் பின்னணியில் குதிரை பேரம் நடந்திருக்கும் என்பதை… கோடிகள் கைமாறியிருப்பதை… அமைச்சர் பதவி ஆசை காட்டப்பட்டதை உறுதியுடன் நம்புகிறார்கள்… ஆக, இதில் அம்பலப்பட்டுவிட்டார் விஜய்! இது மட்டுமா?
விஜயை சினிமா ஹீரோவாக மக்கள் பார்த்தார்கள்… ஆட்சியிலும் அப்படி எதிர்பார்த்தார்கள்… இப்போதுவரை பொதுக்கூட்டத்தில் பேசுவதில் மட்டுமே விஜயின் ஹீரோயிசத்தை காண முடிகிறதே ஒழிய, மற்றபடி, பத்திரிகையாளர்களைக் கண்டு பயந்து ஓடும் விஜயை மக்கள் ரசிக்கவில்லை! கூட்டணிக்கட்சிகளை மதிக்காத விஜயை அந்தந்த கட்சிகளும் எதிர்பார்க்கவில்லை! வெறுமனே அமைச்சர் பதவியை தூக்கிப்போட்டுவிட்டால் போதுமா? இண்டியா கூட்டணியில் தவெக பட்டும்படாத பங்கேற்பு, பாஜகவுடனான அதன் இணக்கத்தையே மறைமுகமாக வெளிப்படுத்துகிறது… இது தமிழ்நாடு காங்கிரஸுக்கு புரிந்தாலும் வெளிச்சொல்ல முடியாத அவஸ்தையில் நெளிகிறார்கள்!
அதுபோல், ஜோதிடர் சொன்னால் 1200 கோடி கூட செலவழிக்கத் தயாராக இருக்கும் விஜயை மக்கள் எதிர்பார்க்கவில்லை! வருசநாடு மலைப்பகுதிகளில் மக்களை வனத்துறை வெளியேற்றுவதை முதல்வர் விஜய் கண்டுகொள்ளவில்லை… பட்டினப்பாக்கம் மக்கள் போராட்டத்தையும் விஜய் கண்டுகொள்ளவில்லை… பரந்தூரில் மட்டும் எதோ வீம்புக்கு அந்த விமான நிலையத்தை நிறுத்தினார்… ஆனால் அந்த நிலம் திரும்ப ஒப்படைக்கப்படவில்லை… அத்தனையும் சொதப்பல் தான்! இதெல்லாம் விஜய் மீது நம்பிக்கையின்மையைத்தான் உருவாக்கியுள்ளது!
விஜய் & கோ, ஆட்சித்திறனில்லாத கூட்டமாக இருக்கிறது! ஆதவ் அர்ஜுனாவும், நிர்மல்குமாரும் சவடால் பேசவும், பொய் பேசவும் மட்டுமே திறன்வாய்ந்தவர்கள் என்றும், மற்றபடி நிர்வாகத்திறனற்றவர்கள் என்பதும் அம்பலப்பட்டுள்ளது! திமுக ஆட்சி முடியும்வரை இல்லாத மின்வெட்டு இப்போது எப்படி என்பதற்கு நிர்மல்குமாரிடம் பதிலில்லை… அதை சரிசெய்யவும் துப்பில்லை… மணிக்கணக்கான மின்வெட்டால் பலரும் அவதிப்படுகிறார்கள்… இதெல்லாம் மக்களுக்கு கோபமாக மாறிவருகிறது… இதனால் விஜய் ரசிகர்கள் யாரும் மனது மாறப்போவதில்லை… ஆனால் இந்த விஜய் ஆட்சிக்கு, விஜய் ரசிகர்களைத் தாண்டி, மாற்றத்தை விரும்பும் ஒரு சாராரும் வாக்களித்திருந்தார்கள்… அவர்கள் இப்போது யோசிக்கத் தொடங்கியுள்ளார்கள்… அவர்களின் வாக்கு திசை மாறுமென்ற பதட்டம் விஜய்க்கு இருக்கிறது!
உங்களுக்கு ஒண்ணுன்னா நான் வந்து நிற்பேன் என்று சொன்ன விஜயை… கண்டா வரச்சொல்லுங்க! என்ற நிலை தான்! விஜயாக எப்பவாவது மக்கள் முன் காட்சி தருவார்… ஆனால் மக்களுக்கான பிரச்சனைகளில் அவராக வந்து பார்ப்பதென்பதே இல்லை! சென்னைக்கு அருகில் பெரிய பாளையத்தில் விஷவாயுக்கசிவில் 14 பேர் உயிரிழந்தபோது எட்டிப்பார்க்கக்கூட இல்லை… மருத்துவமனை பக்கமும் செல்லவில்லை… கரூரில் பார்த்த அதே பொறுப்பற்ற விஜய் தான் முதல்வரான பின்பும் தொடர்கிறார்! ஆக, இந்த விஜய் மக்களால் அணுக முடியாதவராக இருப்பது ஏமாற்றம்!
மக்களை நேரடியாக பாதிக்கக்கூடிய போக்குவரத்து விஷயத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள்… ரிசர்வ் செய்தவர்களுக்கே பேருந்துகள் உறுதியில்லை! அதற்கான அமைச்சரோ வீலிங் சாகசம் செய்கிறாரே ஒழிய, கொஞ்சங்கூட பிரச்சனைகளை கண்டுகொள்ள வருவதே இல்லை… உண்மையில் மெத்தப் படித்தவராகச் சொல்லப்படும் அருண்ராஜ் உள்ளிட்ட எந்த அமைச்சருக்குமே நிர்வாகத்திறன் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை…
அரசு மருத்துவமனைகளில் ஆன்லைன் பதிவென்பது பெரிய பிரச்சனை! எந்த அமைச்சரும் அவரவர் துறையை கவனிப்பதில்லை… அரிசி, காய்கறிகள் விலைவாசி உயர்வு… ஆவின் பால் தட்டுப்பாடு… இப்படி மக்களின் தினசரி வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு சமாதானம் செய்யக்கூடிய பதிலளிக்கக்கூடிய யாருமே இந்த ஆட்சியில் இல்லை! மொத்தத்தில் அம்பலப்பட்டுள்ளது விஜயின் நிர்வாகம்!
சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வரை தொடர்ச்சியாகக் கலாய்ப்பது மட்டுமே விஜய் செய்யும் வேலையாக இருக்கிறது… தனது துறை சார்ந்த கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் தருவதாக இல்லை… அதிலும் ஹீரோயிசம் போல், தான் மட்டுமே இறுதி நாளில் பதிலளிக்கும் உத்தி ரசிகர்களுக்கு நன்றாக இருக்கலாம்… ஆட்சி நடத்துவதற்கு அது அழகல்ல! அனைத்தையும் 110 விதியின் கீழ் வாசிப்பதையே வழக்கமாக வைத்திருக்கிறார்… விவாதத்துக்கு தயாராக இல்லாத முதல்வரை இதுவரை தமிழக சட்டமன்றம் கண்டதில்லை… இதுவே முதன்முறை! இதுவும் பெருத்த ஏமாற்றமே!
ஆக, இவையனைத்தும் விஜய் சொன்னதுக்காக உடனே ஆர்வப்பட்டு வாக்களித்த சூழலை மாற்றிவிட்டது… இதுதான் விஜய்க்கு பதட்டத்தை தருகிறது! இப்போது ஓட்டுக்கு பணத்தை அள்ளி வீசுகிறார் விஜய்! இதை தோழர் சண்முகம் உறுதிப்படுத்துகிறார்… இதற்கு விஜய் தரப்பிலிருந்து எந்த பதிலும் இல்லை! ஆக, ஓட்டுக்கு பணம் கொடுக்காத கட்சி என்று பெருமை பேசியதெல்லாம் புஸ்ஸாகிவிட்டது! மேடையில் வேட்பாளரை அழவிட்டு விக்டிம் ப்ளே செய்து பார்க்கிறார் விஜய்! அதுவும் எடுபடுவதாக இல்லை!மொத்தத்தில், தேர்தலுக்கு முன்பு பேசிய விஜய்யும், தேர்தலில் வென்று ஆட்சியமைத்துள்ள விஜயும் தலைகீழாக தெரிகிறார்கள்!
ஆக, வைக்கோல் கன்றுக்குட்டியை காட்டி தாய்ப்பசுவை ஏமாற்றுவதுபோல், ரசிகர்களுக்குப் பிடித்த விஜய் என்ற கொலு பொம்மையை காட்டி இன்னும் எத்தனை காலம் மக்களை ஏமாற்றுவார்கள் என்பது தான் இப்போதைய கேள்வி!!
வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்
