முக்கியமானத் தலைவர்கள் எல்லோரும் சினிமாவிலிருந்து வந்தால், சினிமாக் கலாச்சாரமே அரசியல் கலாச்சாரமாக மாறிப் போனால், இதுவும் நடக்கும், இன்னமும் நடக்கும்.
நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் அடிப்படையில் ஒரு சினிமா நடிகர். அவருடைய முகத்தையும், பெயரையும் தமிழர் வீடுகளில் கொண்டு சேர்ப்பதற்காக, அவரை ஒரு தலைவராக வளர்த்தெடுக்க, திட்டமிட்டு, திறமையற்ற அவரை வலிந்து நடிக்க வைத்தது அவரது குடும்பம். திமுகவின் அடுத்தத் தலைவரை உருவாக்கும் வியூகமாக அது அமைந்தது.
நம்முடைய முதல்வரும் ஒரு சினிமா நடிகர். அவரை அவருடைய தந்தையார் தன்னுடையப் படங்களில் நடிக்க வைத்து, அரசியலுக்குக் கொண்டுவர வேண்டும் என்கிற ஆசையோடு திட்டமிட்டு வளர்த்தெடுத்தார். அதுவும் இன்றைக்கு நிறைவேறியிருக்கிறது.
தமிழ்நாட்டின் முக்கியமானத் தலைவர்கள் இருவருமே நடிகர்கள். You do what you are, you become what you do! என்பது ஓர் ஆங்கிலச் சொலவடை. தமிழக அரசியல் உதய்-விஜய் போட்டி என்றாகிப் போகும் என்று பயந்து கொண்டிருந்த நிலையில், அது கொஞ்சம் மாறிப்போய், விஜய்-உதய் போட்டி என்றாகியிருக்கிறது.
காவிரி நதிநீர்ப் பிரச்சினை எண்ணிறந்த விவசாயிகளின் நிம்மதியைக் கெடுத்து, நிலைகுலையச் செய்திருக்கிறது. தமிழ்நாட்டில் பருவமழைப் பொய்த்துப் போயிருக்கிறது. “நீட் தேர்வு வேண்டாம்” என்கிற கோரிக்கையை முன்வைத்து நான்கு இளைஞர்கள் சென்னையில் உண்ணாவிரதம் இருந்து உருக்குலைந்து கொண்டிருக்கிறார்கள். ஒன்றிய அரசு தன்னுடைய கல்விக் கொள்கைகளால், திட்டங்களால் இந்தியைத் திணித்துக் கொண்டிருக்கிறது. பொதுப் போக்குவரத்து சிதைந்து கொண்டிருக்கிறது. ஆற்றல் தட்டுப்பாட்டால் மக்கள் அவதியுறுகிறார்கள். தமிழ்நாட்டை விட்டு முதலீடுகளும், தொழில்களும் இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றன என்று தொடர் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. மாநிலத்தின் கடன்சுமை எகிறிக் கொண்டிருக்கிறது. வருங்காலம் இருண்டு கொண்டிருக்கிறது. இன்னும் ஏராளமானப் பிரச்சினைகளால் கையறு நிலையில் நிற்கிறார்கள் தமிழர்கள்.
ஆனால் தமிழ்நாட்டில் நடப்பது என்ன? ஒரு நடிகை முக்கிய விவாதப் பொருளாக இருக்கிறார். அவரும் முதல்வர் கனவில் திளைக்கிறார் என்பது ஒரு முக்கியமான விடயம். அவரைச் சுற்றியே அரசியல் நடக்கிறது.
அவரைப் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் சினிமாத்தனம் நிறைந்த இரட்டை அர்த்தத்தில் சிலேடை வசனம் பேசுகிறார். யாரைப் பற்றியும் எள்ளளவும் கவலைப்படாத, எதைப் பற்றியும் எதுவும் பேசாத, கதாநாயக முக்கியத்துவத்தில் மூழ்கிக் கிடக்கும் முதல்வரோ, அதிரடி சினிமாப் பாணி நடவடிக்கையில் இறங்குகிறார்.
காவல்துறையை அனுப்புகிறார், கைது செய்கிறார், எதிர்க்கட்சித் தலைவரை தமிழகம் முழுக்கத் தரதரவென்று இழுத்துச் சென்று கொண்டிருக்கிறார். கோடம்பாக்கம் சினிமா ஒன்றின் கிளைமாக்ஸ் காட்சி போல நடக்கிறது தமிழ்நாட்டு அரசியல். ஆகா, அற்புதம்!
சமூக-பொருளாதார-அரசியல் பிரச்சினைகளால் துன்புறும் மக்களோடு நின்று போராடி, பொது வாழ்க்கைக்கு வந்திருந்தால், வாழ்வின் நெளிவு சுழிவுகள் தெரியும், பார்வை விசாலமாகும், சொல்லும் செயலும் பக்குவம் மிக்கவையாக இருக்கும். ஆனால் நமக்கு வாய்த்தவர்கள் எல்லாம் சினிமா நடிகர்கள் ஆயிற்றே?
முதிர்ச்சி மிக்க தலைவர் என்கிறவர் பார்வையாளர்கள் கேட்க விரும்புவதைப் பேசாமல், அவர்கள் அறிந்துகொள்ள வேண்டியதை, தெரிந்துகொள்ள வேண்டியதைப் பேசுவார். ஒரு பொறுப்பான அரசியல் தலைவர், ஒரு தேர்ந்த (பள்ளி/கல்லூரி) ஆசிரியர் போன்றவர். அரசியலரின் திறந்தவெளி வகுப்பில் கரும்பலகை இருக்காது, பாடப்புத்தகம் இருக்காது அவ்வளவுதான். ஓர் ஆசிரியர் தன் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது போல, ஓர் அரசியல் தலைவர் பொதுமக்களுக்கு தகவல்களை, அறிவை, பல்வேறு பார்வைகளை, தான் கைக்கொள்ளும் அணுகுமுறையை, அதற்கான காரணங்களை விளக்கிச் சொல்லி விளங்க வைப்பார். ஆனால் நமக்கு வாய்த்தவர்கள் எல்லாம் நடிகர்கள் ஆயிற்றே?
கோடிகளில் வருமானம், கோப்பையிலே குடியிருப்பு, கோலமகள்(கள்) துணையிருப்பு என்று வாழ்ந்து பழகிய சினிமாக்காரர்கள் தலைவர்கள் வேடமிட்டு அரசியலுக்கு வந்தால் என்ன ஆகும்? இப்படித்தான் ஆகும்!
கேட்பவர் விரும்புவதை பேசச் சொல்லும், கைத்தட்டலுக்கும், ஆரவாரத்துக்கும் ஆடச் சொல்லும். தான் ஒரு பெரிய “______” என்கிற கடவுள் மனப்பான்மையுடன் கண்டதையும் உளரச் சொல்லும், கண்ணியமற்றதைச் செய்யச் சொல்லும். நாடு நாறும்! நாட்டார் அழிவார்கள்!
பேய்க்கு வாழ்க்கைப் பட்டால், பிணம் தின்றே தீரவேண்டும், தமிழ்ப் பெருங்குடி மக்களே! இன்னும் நிறையப் பிணங்கள் வந்துகொண்டேயிருக்கும், நீங்கள் தின்று கொண்டேயிருங்கள்.
கூத்தாடிகளை கூத்துக்கு மட்டும் வைத்துக் கொண்டு, உங்கள் பிள்ளைகளை தலைவர்களாக வளர்த்தெடுக்காத வரை, உங்களை எந்த சக்தியாலும் காப்பாற்ற முடியாது. இதுதான் உங்கள் தலைவிதி!
சுப. உதயகுமாரன்
தலைமைப் பணியாளர்
பச்சைத் தமிழகம் கட்சி
