தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் கண்டன அறிக்கை
திண்டுக்கல் மாவட்டத்தில், ஆதிக்கச் சாதியினரின் நிலத்தில் குதிரை மேய்ந்ததாகக் கூறி, தலித் இளைஞர் ராமர் என்பவர் 5 பேர் கொண்ட சாதி வெறிக் கும்பலால் அரிவாளால் வெட்டிக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்துகிறது.

இந்த ஆண்டிலேயே இது 6-ஆவது ஆணவப் படுகொலை. சட்டம் இருக்கிறது, வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் இருக்கிறது, அரசு இருக்கிறது, காவல்துறை இருக்கிறது. ஆனால், தலித் மக்களின் உயிரைக் காக்க வேண்டிய இடத்தில், சாதி வெறியர்களின் துணிச்சல்தான் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது அரசின் தோல்வியன்றி வேறென்ன?
தமிழகத்தில் 8 தலித் அமைச்சர்கள் இருக்கிறார்கள் என்று பெருமை பேசும் ஆட்சியாளர்கள், இந்தக் கொடூரக் கொலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறவும், நீதிக்காக உரக்கக் குரல் கொடுக்கவும் முன்வராதது ஏன்? அமைச்சரவையில் இருப்பது மட்டும் பிரதிநிதித்துவம் அல்ல. ஒடுக்கப்பட்ட மக்களின் உயிருக்கும் உரிமைக்கும் துணை நிற்பதுதான் உண்மையான பிரதிநிதித்துவம்.
இந்தப் படுகொலையில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் உடனடியாகக் கைது செய்து, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுத்து, விரைவு நீதிமன்றத்தில் விசாரித்து மிகக் கடுமையானத் தண்டனை வழங்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடு, பாதுகாப்பு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
தலித் மக்களின் உயிரைப் பறிக்கும் ஆணவப் படுகொலைகள் தொடர்ந்தால், அது சட்ட ஒழுங்கு சீர்குலைவின் அடையாளம் மட்டுமல்ல. சமூக நீதியின் மீதான நேரடித் தாக்குதலாகும்.
தலித் உயிர்களைக் காக்கத் தவறும் அரசின் மௌனத்தைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கண்டிப்பதோடு, சாதி வெறியர்களுக்கு எதிராக சட்டத்தின் இரும்புக்கரம் உடனடியாகச் செயல்பட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
தி.வேல்முருகன், தலைவர்
தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
