தமிழக அரசியலில் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. வெறும் 15 நாட்கள் பிரச்சாரம், பத்திரிகையாளர் சந்திப்பு கிடையாது, முறையான கட்சி கட்டமைப்பு கிடையாது ,கரூர் மரணத்தில் முகம் காட்டாமல் விமானம் ஏறி ஓடிவிட்டார்,ஆனாலும் விஜய் 108 இடங்களைப் எப்படி வென்றார் என்பது பலருக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது.
திராவிடக் கட்சிகளின் 50 ஆண்டு காலக் கோட்டையை ஒரு சினிமா பிம்பம் எப்படி இவ்வளவு எளிதாகத் தகர்த்தது?
இதனை நாம் மூன்று மார்க்சியக் கண்ணோட்டத்தில் அணுக வேண்டும்.
மார்க்ஸ் லும்பன் பாட்டாளி வர்க்கம் என்று ஒரு பிரிவினரைக் குறிப்பிடுவார். அவர்கள் அரசியல் தெளிவற்ற, வேலைவாய்ப்பற்ற, விளிம்புநிலை இளைஞர்கள். கடந்த 15 ஆண்டுகளில் தமிழகத்தின் சிறு, குறு தொழில்கள் அழிந்து, இளைஞர்கள் ‘கிக் வேலைகளுக்கு தள்ளப்பட்டனர். இந்த இளைஞர்களுக்குத் தங்களை ஒரு தொழிலாளியாக அணிதிரட்டிக்கொள்ளும் தொழிற்சங்க அமைப்புகள் இல்லை.
இந்த அரசியல் வெற்றிடத்தை முதலாளித்துவம் சினிமா பிம்பம் எனும் போதையால் நிரப்பியது. விஜய் என்ற நடிகரைத் தங்களின் கஷ்டங்களைத் தீர்க்கும் மாயாஜால வீரனாக இந்த வர்க்கம் பார்த்ததன் விளைவே இந்த 108 இடங்கள்.
ஒரு தொழிலாளி தனது உழைப்பிலிருந்தும் சமூகத்திலிருந்தும் அந்நியப்படும்போது, அவன் ஒரு மீட்பரை தேடுவான். திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் வளர்ச்சி என்ற பெயரில் கார்ப்பரேட் கொள்கைகளை அமல்படுத்தியபோது, சாமானிய மக்கள் அதிகார மையங்களிலிருந்து அந்நியப்படுத்தப்பட்டனர்.
எந்தக் கட்சி வந்தாலும் நமக்குப் பலனில்லை என்ற விரக்தி மக்களிடம் இருந்தது.
இந்தச் சூழலில், நான் சிஸ்டத்தை மாற்ற வருகிறேன் என்று சொன்ன ஒரு புதிய முகத்தை (விஜய்), எந்தக் கேள்வியுமின்றி மக்கள் ஏற்றனர். இது ஒரு Protest Vote(எதிர்ப்பு வாக்கு). பழைய கட்சிகள் மீது இருந்த வெறுப்பு, ஒரு சினிமா பிம்பத்தை முதலமைச்சர் ஆக்கியிருக்கிறது.
புதிய முகத்தை மக்கள் விரும்புகிறார்கள் என்றால் ஏன் சீமானையும் ,கமலையும் ஏற்கவில்லை என கேள்வி எழுப்பலாம்?
இங்க தான் இருக்கிறது கார்ப்ரேட்களின் யுக்தி.
விஜய் ஏன் பேட்டி கொடுக்கவில்லை? ஏன் அதிக நாட்கள் பிரச்சாரம் செய்யவில்லை? இது அவரது பலவீனம் அல்ல, இது ஒரு கார்ப்பரேட் மார்க்கெட்டிங் உத்தி. மக்கள் பிரச்சனைகளைப் பேசினால் விவாதம் வரும், கேள்விகள் வரும். ஆனால், மௌனமாக இருந்துவிட்டு ஒரு பிம்பத்தைக் காட்டினால், மக்கள் தங்களுக்குத் தேவையான கற்பனைகளை அந்தப் பிம்பத்தின் மேல் ஏற்றி வைப்பார்கள்.
நோம் சோம்ஸ்கி சொல்வது போல, ஊடகங்கள் திட்டமிட்டு ஒரு பிம்பத்தை ஒரே மாற்று எனச் சித்தரித்தன. களத்தில் போராடிய இடதுசாரிகளையும், மக்கள் இயக்கங்களையும் இருட்டடிப்பு செய்துவிட்டு, விஜய்யின் வீட்டு வாசலில் கேமராவோடு நின்ற ஊடகங்கள், இந்த பிம்ப அரசியலை(Image Politics) வெற்றிகரமாக விற்பனை செய்துள்ளன.
விஜய் அளவிற்கு சீமானையோ,கமலையோ மீடியாக்கள் துதி பாடவில்லை
தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து முன்னணி மீடியாக்கள் எல்லாம் விஜயின் வீட்டு வாசலிலே படுத்து விட்டார்கள்.விஜய் பனையூர் செல்கிறார்,விஜய் நீலாங்கரை செல்கிறார் என விஜய் பற்றிய செய்திகளை துதி பாட ஆரம்பித்துவிட்டனர்.மக்கள் பிரச்சனைகளைப் பற்றி வாய்திறக்கவே இல்லை.
விஜய் ஏன் இவ்வளவு சுலபமாக வென்றார்? ஏனென்றால், தமிழகத்தில் இடதுசாரி அரசியல் சிதைந்து போயிருந்தது. உழைக்கும் மக்களுக்காகப் போராட வேண்டிய சிபிஐ, சிபிஎம் போன்ற கட்சிகள் திமுகவின் ஊழலுக்கு முரட்டு முட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தன.
கம்யூனிசம் பேச வேண்டிய இடத்தைப் பாப்புலிசம்” (Populism) பிடித்துக்கொண்டது. வர்க்க உணர்வை ஊட்டியிருக்க வேண்டிய இயக்கங்கள், வெறும் தேர்தல் இடங்களுக்காகச் சமரசம் செய்துகொண்டதன் விளைவுதான், இன்று ஒரு சினிமா நடிகரை நோக்கி மக்கள் தஞ்சம் புகுந்த அவலம்
விஜய் 120 இடங்களுடன் (கூட்டணி ஆதரவுடன்)ஆட்சி அமைத்தாலும், அவர் இயங்கப்போகும் அரசு இயந்திரம்(State Machinery) அதே முதலாளித்துவக் கட்டமைப்பில்தான் இருக்கும். டெல்லியின் பாசிச அழுத்தமும், கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப வெறியும் விஜய்யைச் சுதந்திரமாகச் செயல்பட விடுமா?
விஜய் 120 இடங்களுடன் ஆட்சி அமைத்தாலும், அவர் ஏன் ஒரு ‘கார்ப்பரேட் கைதியாகவே’ இருப்பார் என்பதற்கான காரணங்கள்:-
மார்க்ஸ் சொன்னது போல, அரசு என்பது ஆளும் வர்க்கத்தின் (முதலாளிகளின்) நலன்களைக் காக்கும் ஒரு மேலாண்மைக் குழுதான். விஜய் முதலமைச்சர் ஆனாலும், அவர் கையாளப்போகும் ‘ஐஏஎஸ்’ அதிகாரிகள், சட்டங்கள் மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் அனைத்தும் ஏற்கனவே கார்ப்பரேட் நலன்களுக்காக வடிவமைக்கப்பட்டவை. இந்த அமைப்பை உடைக்காமல், அதில் அமர்ந்து கொண்டு யாராலும் புரட்சி செய்ய முடியாது.
விஜய்க்கு எதிரான சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குகள் டெல்லி பாசிசத்தின் கையில் இருக்கும் ‘கழுத்துப் பட்டி. அவர் கார்ப்பரேட்டுகளுக்கு எதிராகவோ அல்லது மாநில சுயாட்சிக்காகவோ குரல் கொடுத்தால், அந்த வழக்குகள் அவரை முடக்கும். டெல்லிக்கு பயப்படும் ஒரு முதலமைச்சரால் எப்படி பாட்டாளி வர்க்கத்திற்காகப் போராட முடியும்?
சினிமாவில் ஒற்றை ஆளாக வில்லனை அடிப்பது எளிது. ஆனால் நிஜ வாழ்க்கையில் கார்ப்பரேட் சுரண்டல் என்பது ஒரு சங்கிலித் தொடர். பன்னாட்டு நிறுவனங்களின் லாபத்தில் கை வைத்தால், அவர்கள் முதலீட்டைத் திரும்பப் பெறுவார்கள். அதை எதிர்கொள்ளும் துணிவோ, மாற்றுப் பொருளாதாரத் திட்டமோ விஜய்யிடம் இல்லை.
விஜய் தானாக வளர்ந்த உழைப்பாளி அல்ல,அவர் ஒரு ‘ஸ்டார் பிம்பமாக முதலாளித்துவத்தால் வளர்க்கப்பட்டவர். ஒரு நுகர்வுப் பொருளாக (Consumer Product) தன்னை விற்றுப் பழகிய ஒருவரால், நுகர்வுப் பண்பாட்டிற்கு எதிராகப் போர் தொடுக்க முடியாது.
திரையில் வில்லன்களை உதைப்பது போல நிஜத்தில் கார்ப்பரேட் சுரண்டலை உதைப்பது எளிதல்ல. மாற்றம் என்பது முகத்தில் இல்லை, முறையில் இருக்கிறது .பிம்ப அரசியலை உடைப்போம், வர்க்க அரசியலைக் கட்டியமைப்போம்.
