தமிழ்நாடு தேசிய கட்சி-கொள்கை அறிக்கை-பாகம்- 2

மறைக்கப்பட்ட ,திரிக்கப்பட்ட சமுக வரலாற்றின்  காரணமாகவும் அதன் விளைவாக விடுபட்ட கண்ணிகளை அறியமுடியாமலும் இதனால் எழுந்த அரசியல் மாற்றங்கள், அணிசேர்க்கைகளை புரிந்துக்கொள்ள முடியாமலும் தமிழ்நாடு தனக்குரிய அரசியல் பாதையில் முன்னேற முடியாமல் தடைபட்டு நிற்கிறது.  தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியாவில் தமிழ்நாடு- தேசிய ஒடுக்குமுறை, இன ஒடுக்குமுறை, மொழி  ஒடுக்குமுறை, சாதிய ஒடுக்குமுறை போன்ற பல்வேறு ஒடுக்குதல்களை ஏறக்குறைய ஒரே சமயத்தில் சந்தித்து வருகிறது.

இந்தியாவின் முதலாளித்துவம் சாதிய நிலவுடைமை தன்மையையும் உள்வாங்கிக்கொண்டது. காலம்கடந்த கட்டுத்தளைகளை காத்து நிற்கும் நிலவுடைமைத்தன்மையோடு அந்நியச் சுரண்டலை எதிர்க்கும் நாட்டுப்பற்றற்ற நிலையையும் கொண்டுள்ளது இந்திய முதலாளித்துவம். நீண்டகாலமாக உழன்று வரும் இச்சூழல் மாற்றம் பெற பல்வேறு போராட்ட கட்டங்களை படிப்படியாக அது தாண்ட வேண்டியிருக்கிறது. இச்சூழலை மாற்றிட அதன் தற்போதைய நிலையையும் அது எட்ட வேண்டிய நிலையையும் பற்றி நாம் விவாதிக்கலாம்.

தமிழ்நாடு இன்றைய கட்டத்தில் இந்திய துணைக்கண்டத்தில் நிலவும் அந்நிய சுரண்டலுக்கும், பிற்போக்கு சாதிய நிலவுடைமை போன்ற  ஒடுக்குமுறை மற்றும் சுரண்டல்களால் கடும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றது. இது இந்திய துணைக்கண்டம் முழுவதும் நிலவி வரும் சூழலாக தமிழ்நாடு, காஷ்மீர், வங்காளம், பஞ்சாப் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் வாழும் மக்கள் மொழி மற்றும் பண்பாட்டின் அடிப்படையில் இந்திய துணை கண்ட ஆளும் வர்க்கம் திணிக்கும் மொழி மற்றும் பண்பாட்டு அடையாளங்களுடன் ஒன்றி போக முடியாமல் முரண்பட்டு நிற்கின்றனர். தமிழ்நாட்டில் வளர்ந்து வந்த விழிப்புணர்ச்சி, முற்போக்கு அடையாளங்கள் மற்றும் கருத்தியல் வளர்ச்சியினால், இந்தியத் துணைக்கண்டத்தின் ஆளும் வர்க்கம்,அதற்கு துணைநிற்கும் பகுதியாக மாறிவிட்ட தமிழக முதலாளிவர்க்கம் ஆகியவற்றுடன்  தொடர்ச்சியாக முரண்பட்டு தங்கள் சொந்த உரிமைகளை நிறுவ முயற்சி செய்யும் போது அவர்கள் இந்தியத் துணைகண்ட அதிகார ஆளும் வர்க்கத்தால் கடுமையாக ஒடுக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டில் எழுந்த பார்ப்பனிய எதிர்ப்பு திராவிட கருத்தியல் வளர்ச்சியினை உருவாக்கி அரசியலில் மக்களை அதிக ஈடுபாடும் பங்களிப்பும் உடையவர்களாக மக்களை மாற்றியது. இதில் திராவிட கருத்தியல் தமிழ்நாட்டு அரசியலில் இன்றளவும் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தி ஆதிக்க, தமிழ் மொழி விரோத திட்டங்கள் இந்திய கூட்டமைப்பின் அரசால் முன்வைக்கப்பட்டபோது  எழுந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் திராவிட கட்சியின் ஆட்சி தமிழ்நாட்டில் காலூன்ற காரணமாக இருந்தது. அதே நேரத்தில் தமிழ்மொழி உணர்வும் அதை காக்கும் கடப்பாடும் மென்மேலும் தொடர்ச்சியாக வளர துவங்கியது. இந்திய துணைக்கண்டத்தின் கோர முகம் கண்ட பின்னர் தமிழ்நாட்டில் இந்திய விரோத மனப்பான்மையும் தன் உரிமைகளை தானே கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற தன்னாட்சி கருத்தும் தோன்றலாயிற்று. அடுத்ததாக ஈழப்போராட்டம் தமிழ்நாட்டில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஈழத்திற்கான விடுதலைப்போராட்டத்தை நடத்திக்கொண்டிருந்த தங்களின் தொப்புள்கொடி உறவுகள் தன் கண் முன்னே  சூறையாடப்படுவதை கண்ட தமிழ்நாட்டு மக்கள் ஈழத்தமிழர்களுக்காக பலமாக குரல் கொடுக்கத் துவங்கினர். ஈழத்தமிழர்கள் விடயத்தில் தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளுக்கு எதிரான நிலைபாட்டையே இந்திய அரசாங்கம் கடைபிடித்தது. எந்தவிதமான  காத்திரமான தாக்கத்தையும் செலுத்துவதற்கு தமிழகத்தின் முற்போக்கு அரசியல் ஆற்றல்களுக்கு போதிய பலமில்லை.ஓரு விடுதலைப்போராட்டத்திற்கு தார்மீக அடிப்படையில்  பலமான அழுத்தத்தை தமிழக அரசியல் களத்தில் உருவாக்குவதை ஈழ ஆதரவு நிலையில் இயங்கிக்கொண்டிருந்த எந்த ஓரு அமைப்பினாலும் சாதிக்க இயலவில்லை.இந்த விடயத்தில் தமிழக மக்களின் விருப்பத்திற்கு எதிராக லட்சக்கணக்கான ஈழமக்கள் அழித்தொழிப்புக்கு ஆளாக்கப்பட்டது தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு தேவையான அரசியல் இல்லாதது மிகப்பெரிய வெற்றிடம் இருப்பதை வெட்டவெளிச்சமாக்கியது. இதை இட்டுநிரப்புவதாக சொல்லி முகிழ்ந்து வந்த அமைப்புகளும் சரியான திசைவழியற்றும்  ,தமிழக அரசியலில் காத்திரமான தாக்கத்தை செலுத்த இயலாமலும் அடையாள அரசியலை மேற்கொள்வது  மக்கள் மத்தியில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது.

தமிழ்நாட்டின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த உணர்வு நிலை வளர்ந்தது. இந்த உணர்வு நிலையானது  தமிழ்நாடு ஒருசேர எதிர்கொண்டு வருகின்ற சாதிய ஒடுக்குமுறை, பின்தங்கிய நிலவுடமை, நிலவுடமைத்தளைகள் ,இனஒடுக்குமுறை பிறமொழி திணிப்பு, தமிழ்மொழி சிதைப்பு,  பண்பாட்டு ஒடுக்குமுறை, இந்திய, உலக வல்லாதிக்க சுமை போன்ற அனைத்து ஒடுக்குமுறைகளையும் வீழ்த்துவதற்கு, ஒடுக்குமுறைகளுக்கு எதிராக கிளர்ந்தெழும்  ஜனநாயக ஆற்றல்களையும் ஒருங்கிணைப்பதன் மூலமே ஈழத்திற்கு மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளையும் மீட்பதற்கான பாதையை உருவாக்க இயலும் என்பதை அறுதியிட்டு உணர்த்துகிறது.

இந்த நோக்கு நிலையிலிருந்து  அரசியலுக்கான கொள்கைகள் மற்றும் செயல் திட்டங்களை வகுப்போம். அவற்றை முன்னெடுத்துச் செல்ல அயராது பாடுபடுவோம். அதன் பொருட்டு இன்றைய தமிழ்நாட்டின் அரசியல் போக்கு, தத்துவார்த்த வளர்ச்சி, பொருளாதார நிலைமைகள் மற்றும் உறவுகள் மக்கள் வாழ்நிலைமைகள் சாதிய மத வேறுபாடுகள் போன்ற முக்கியமான விடயங்களை ஆய்வு செய்து பெறப்படும்  தீர்வுகளுக்கேற்ப கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் அமைத்துக் கொள்வோம்

மக்களின் பங்களிப்போடு இயக்கத்தின் வளர்ச்சிப் போக்கில் கொள்கைகளை செழுமைப்படுத்தி வளர்த்தெடுப்பதில் திறந்த மனதோடு அணுகவும் செயல்படவும் உறுதி கொள்வோம்


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *