பராசக்தி படத்தை திரைப்படக்கலையாகவோ, வரலாற்றுப்படமாகவோ எதிர்பார்த்தோமானால் சிறப்பான படமென்று சொல்லமுடியாது.
“இதைவிட சிறப்பான படமெடுக்கவோ, மொழிப்போராட்டத்தைப் பற்றி ஆய்வு செய்யவோ, ஆவணப்படுத்தவோ நமக்கு எக்காலத்திலும் துணிவு கிடையாது”
ஆனால் மொக்கையான ஒரு கதையை வைத்துத் தயாரிக்கப்பட்ட வணிகப்படத்தின் பின்புலத்தில் தமிழர்களின் ஒரு தொடர் போராட்டத்தின் நியாயத்தை வெற்றிகரமாக எடுத்துச் சொன்னதற்குப் பாராட்டவே வேண்டும்.

இதைவிட சிறப்பான படமெடுக்கவோ, மொழிப்போராட்டத்தைப் பற்றி ஆய்வு செய்யவோ, ஆவணப்படுத்தவோ நமக்கு எக்காலத்திலும் துணிவு கிடையாது. ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு நிகராக பொள்ளாச்சியில் இந்திய இராணுவம் நடத்திய படுகொலையைப் பற்றி இன்றுவரை முறையான விசாரணை இல்லை, மன்னிப்புக் கோரப்படவில்லை. 60 ஆண்டுகளாகியும் ஒரு நினைவாலயம் கூட எழுப்பப்படவில்லை. மாறாக, பக்தவத்சலம் என்கிற ஈவிரக்கமற்ற ஒரு கொலையாளி முதலமைச்சனுக்கு நினைவாலயத்தை நிறுவியிருக்கிறோம்.
இந்த இலட்சணத்தில் முதன்முறையாக வந்துள்ள இப்படத்தை தமிழ்நாட்டு அறிவுஜீவிகளே நொட்டை சொல்வது வேடிக்கையாகத்தான் இருக்கிறது. (இங்கே நான் காங்கிரசு அல்லது பாஜக கயவர்களைச் சொல்லவில்லை. சீமாறு, மணியரசன் பின்னால் திரியும் புதிய புல்லுருவிகளையும் குறிக்கவில்லை!)
இந்தியெதிர்ப்பு போராட்டத்தை ஒரு சமஉரிமைக்கான போராட்டமென்று சொல்வதற்குக்கூட அஞ்சி பெரும்பாலான தமிழர்கள் கூனிக்குறுகிச் செல்வதைத்தான் நான் என் வாழ்நாள் முழுவதும் கண்டிருக்கிறேன். விடுதலை பெற்ற ஒரு மக்களாட்சிக் குடியரசில் ஒரு பெரும்பான்மை இனம் இன்னொரு இனத்தின் மேல் தன் மொழியையும், பண்பாட்டையும் தொடர்ந்து திணித்து வன்முறையை ஏவிவருகிறது. அத்திணிப்பை எதிர்ப்பவர்கள் தேசவிரோதிகள் அல்லது குறுகிய மொழிவெறியர்களாம், திணிக்கும் வெறியர்கள் தேசப்பற்றாளர்களாம். என்னவொரு கொழுப்பு இந்திமொழி திணிப்பாளர்களுக்கு!

Gen-Z தலைமுறையைப் பற்றி ஏளனமாகத் தற்குறிகள் என்று அறிவுவீங்கிகள் குறிப்பிட்டாலும் அவர்கள் எளிமையாக “இந்தி தெரியாது போடா” என்று துணிச்சலோடு சொல்கிறார்கள். இந்திமொழி ஆதரவு வெறியர்கள் (காங்கிரசு, பாஜக) முன்னால் கூனிக்குறுகிக் சமாளிப்பவர்கள்தான் வரலாற்றை எப்படிப் படமெடுக்க வேண்டுமென்று தனியே பாடம் எடுக்கிறார்கள்.
பராசக்தியின் மொக்கையான கதையும் காலத்துக்கோ, நிலத்துக்கோ பொருத்தமில்லாத செயற்கையான காட்சிகளும் மணிரத்னத்தின் அரசியல் படங்களை நினைவுறுத்துகிறது. ஆனால் மணிரத்னத்தின் அரசியல் படங்களைவிட பராசக்தி இரசிக்கும்படியாகவும், விறுவிறுப்பாகவும், நல்ல தமிழில் உரையாடல்களும், பாடல்களும், இசையும் இருக்கிறது. மேலும் மணிரத்னத்தின் படங்களைப் போல் ஒடுக்குபவர்களின் வரலாற்றுக்கு முலாம் பூசாமல் ஒடுக்கப்பட்டவர்களின் நியாயத்தைப் பேசியதால் அந்த அளவில் பராசக்தி மாரிசெல்வராஜ், வெற்றிமாறன் படங்கள் போல் அமைந்திருக்கிறது. இளைஞர்கள் பலரும் இப்படத்தை எளிதில் உள்வாங்கியது போல்தான் தெரிகிறது.
தீ பரவட்டும்

சங்கரபாண்டி
