
இத்தனை நாட்களாக திராவிடனா? தமிழனா? என்று நடந்து கொண்டிருந்த விவாதம் இன்று சித்தாந்தமா? சினிமாவா? என்று மாறியிருக்கிறது.இலட்சியக் கூட்டத்திற்கும் ரசிகர் கூட்டத்திற்கும் இடையே அறிவாயுதம் ஏந்திய போர் மூண்டிருப்பதாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கூறியுள்ளார்.
திமுக இல்லையென்றால் அதிமுக, அதிமுக இல்லை என்றால் திமுக என்று இருந்த மக்கள், இது இரண்டும் வேண்டாம் என்றால் தேர்ந்தெடுக்கும் கட்சிகளின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த கட்சி நாம் தமிழர் கட்சியாகும்.மேலும் இளைஞர்களின் கணிசமான ஆதரவையும் பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த இடத்திற்கு போட்டியாக தற்போது விஜய் அவர்களுடைய தமிழக வெற்றிக் கழகமும் வந்திருக்கிறது.
தொடக்கத்தில் விஜய் தன்னுடைய தம்பி என்று சொல்லி அவருடைய கருத்துகள் அனைத்திற்கும் ஆதரவு கொடுத்து வந்தார் சீமான். ஆனால் விஜயுடைய கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்ரவாண்டியில் மக்களின் பேராதரவை பெற்ற பின் சீமானுடைய பேச்சுக்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டு விட்டது என்றே கூறலாம்.
அவருடைய தொடர்ச்சியான அரசியல் மேடைகளில் விஜயின் செயல்களை ஜாடையாக நகைப்புக்குள்ளாக்குவது, அவரை கண்டிப்பதையுமே பெரும் பகுதியாக செய்து வருகிறார்.
இதனிடையே சமீபமாக சென்னை சேப்பாக்கம் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், நாங்கள் ஒரு இலட்சிய கூட்டம் என்றும், இலட்சிய கூட்டத்திற்கும் ரசிகர் கூட்டத்திற்கும் இடையே அறிவு ஆயுதமாக ஏந்திய அரசியல் போர் நிகழ்வதாக கூறியுள்ளார்.
இனி சித்தப்பா மகனாக இருந்தாலும் சரி பெரியப்பா மகனாக இருந்தாலும் சரி பதிலடி கொடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
இத்தனை நாட்களாக திமுகவை விமர்சித்து வந்த சீமானின் பேச்சு சமீபமாக நடந்த முதலமைச்சருடனான சந்திப்பிற்குப் பின் அதிகம் மாற்றம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.