
புள்ளிவிவரங்கள் நாட்டின் வளர்ச்சியை வீழ்ச்சியை அறிந்து கொள்வதற்கு மிகவும் தேவையான ஒரு சிறந்த கணக்கியல் கருவியாகும்.
எழுத்தாளர்கள், வெளிநாட்டு அரசியல் விமர்சகர்கள் புள்ளிவிவரங்களைப் பற்றிக் கூறிய நகைச்சுவையான கருத்துக்கள் பல உண்டு.
அவற்றில் ஒன்று தான், “பொய்கள், எல்லையில்லாப் பொய்கள் புள்ளிவிவரங்கள்” என்று குறிப்பிடப்படுவது உண்டு.
(There are lies, damned lies and statistics)
ஆனால் இன்றைய தகவல் தொழில் நுட்பப் புரட்சிக் காலத்தில், புள்ளிவிவரங்களைச் சிறப்பான முறையில் எடுக்கக் கூடிய, தொகுக்கக் கூடிய, பல தொழில் நுட்பத் திறன்கள் நாள்தோறும் பெருகி வருகின்றன. எனவே தான் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது இந்தியாவில் சாதி வாரியான புள்ளி விவரங்களைச் சிறந்த முறையில் திரட்ட வேண்டும் , திரட்ட முடியும் என்று பல வல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
சான்றாக, ஆங்கில இந்து நாளிதழில் (மே-12- 2025- பக்கம் – 9-) புள்ளிவிவரங்கள் பக்கத்தில் -கொரோனா காலத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டியது பற்றிய உண்மைகளை, இரு ஆய்வாளர்களான சமீரின்வேணியும், விக்னேஷ் இராதாகிருஷ்ணனும் சுட்டியுள்ளனர்.
இதில் குஜராத் மாநிலத்தில் தற்போது கண்டறியப்பட்ட இறப்பு எண்ணிக்கை புள்ளிவிவரங்கள் நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகின்றன.
2019 ஆம் ஆண்டில் கொரோனா தொற்றுப் பரவுகிற காலத்தில் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டிரம்பை பிரதமர் மோடி அகமதாபாத்திற்கு அழைத்துப் பல கோடி ரூபாய் செலவு செய்து ஆடம்பர ஆர்ப்பாட்ட வரவேற்பை நடத்தினார்.
அன்று கொரோனா தொற்று பற்றி
டிரம்பும் அக்கறை காட்டவில்லை. பிரதமர் மோடிக்கு அது பற்றி கவலையும் இல்லை.
அத்தகைய உள்ளார்ந்த உறவு !
இன்று கூட இந்திய – பாகிஸ்தான் நான்கு நாட்கள் போரை நான்தான் முடிவுக்குக் கொண்டு வந்தேன் என்று அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டிரம்பால் அறிவிக்க முடிகிறது. பிரதமர் நரேந்திர மோடியால் மறுக்கவும் முடியவில்லை!
கனடா நாட்டை அமெரிக்காவின் 51 மாநிலமாக எடுத்துக் கொள்வேன் என்று அமெரிக்கக் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற சில நாட்களில் டிரம்ப் அறிவித்தார் அல்லவா!
நல்ல காலம்!
இந்தியாவை அமெரிக்காவின் 51 மாநிலமாகவும், பாகிஸ்தானை 52 மாநிலமாகவும் ஆக்கவும் என்னால் முடியும் தம்பி என்று சொல்லாமல் இருந்தாரே என்று சங்கிகள் ஆறுதல் அடையலாம்!
குஜராத் மாநிலத்தில் குரோனா காலத்தில் -2021 ஆம் ஆண்டில் 5,812 நபர்கள் குரோனா பாதிப்பால் இறந்தார்கள் என்று பாஜக குஜராத் அரசு அறிவித்தது. ஆனால் தற்போது மாநில அரசுகளால் வெளியாகியுள்ள, இறப்பு புள்ளிவிவரங்களை ஆய்வு செய்து, கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை கணக்கிட்டுப் பார்த்ததில், இறந்தவர்களின் எண்ணிக்கை 5,812 விட 44 .2 விகிதம் அதிகமாகும். நாட்டின் கொரோனா காலத் தேசிய இறப்பு சராசரியைவிடக் குஜராத் இறப்பு எண்ணிக்கை அதிகம். இன்றைய புள்ளிவிவரங்கள் ஆய்வின் படி குஜராத் மாநிலத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,55,728 ஆகும்.
இதே போன்று மக்கள் தொகை அதிகமாக உள்ள, பாஜக ஆளுகின்ற மாநிலங்களான உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசத்தில் 19.5 விகித அளவில் பல இலட்சம் நபர்கள் இறந்துள்ளனர்.
மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா,தெலுங்கான,பீகார், ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் இறப்பு எண்ணிக்கை குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களிலும் பல இலட்சம் நபர்கள் காட்டிய எண்ணிக்கையைவிட இறந்துள்ளனர்.
புள்ளிவிவரங்களைச் சரியான அணுகுமுறை முறையில் ஆய்வு நடத்தினால் பல உண்மைகளை அறியமுடியும்.
பாதிப்பு உள்ளாகிற மக்களின் எண்ணிக்கையை அறிந்து உரிய நலத் திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்பதையே மேற்குறிப்பிட்ட புள்ளிவிவர ஆய்வு உறுதிப்படுத்துகிறதல்லவா!
போர்க்களத்தில் புள்ளிவிவரங்கள் திரட்டுவது என்பது ஒன்று தான் மிகவும் அரிதான முயற்சியாகும். பொய்யையும் போரையும் பிரிக்கமுடியாது என்பது இரண்டாம் உலகப் போர் நமக்கு உணர்த்துகிறதல்லவா!
இட்லர்களையும், கோயபல்ஸ்களையும் மறக்க முடியுமா என்ன?
பேரா. மு. நாகநாதன்