
ராமாபுரத்தில் ரூ 100 கோடி மதிப்புள்ள ராமாபுரம் அரசு வருவாய் நிலத்தை மீட்கவும் நடந்துவரும் கட்டுமான ஆக்கிரமிப்புகளை தடுக்கவும், 11 மீ சாலையை 2.9 மீட்டராக சுருக்கிய ஆக்கிரமிப்பாளர்களிடம் சாலையை மீட்கவும் அறப்போர் இயக்கம் நேற்றைய தினம் முதல்வர், தலைமை செயலர், வருவாய் துறை செயலர், மாவட்ட ஆட்சியர் என பலருக்கு புகார் கொடுத்து உள்ளது.
ராமாபுரம் கலாசத்தம்மன் கோவில் அரசு வருவாய் நிலத்தில் சர்வே எண் 71 இல் ஓரிரண்டு சென்ட் ஆக்கிரமிப்பில் சிறிதாக பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது. ஆனால் அந்த சிறிய கோவிலின் குழு என்று சொல்லிக்கொள்பவர்கள் 5 ஏக்கர் அரசு நிலத்தை முழுவதும் கோவிலின் சொத்து என்று பூந்தமல்லீ நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்து அது தள்ளுபடி செய்யப்பட்டது. சொத்து அரசுடையது தான் என்று உயர்நீதிமன்றம் வரை ஊர்ஜிதப்படுத்தப்பட்டது. அதில் அரசு வருவாய் துறை மின்சார வாரியம் துணை மின்நிலையத்திற்கு கொடுத்தது போக மீதம் 2.6 ஏக்கர் அரசு வருவாய் துறை பெயரில் உள்ளது.
ஆனால் கடந்த 12 ஆண்டுகளாக கோவில் குழு என்ற பெயரிலே திமுக லோக்கல் கவுன்சிலர்கள் செல்வக்குமார் மற்றும் ராஜி, பாமக குமார் மற்றும் பலர் அரசு வருவாய் நிலத்தை அபகரிக்க சாலையை மடக்கி ஆக்கிரமித்து 11 மீட்டர் சாலையை 2.9 மீட்டராக சுருக்கி உள்ளனர். ஒரு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் கூட செல்ல முடியாதபடி சாலையில் இரும்பு தடுப்பு போட்டுள்ளனர். தொடர்ந்து கோவிலை விரிவு படுத்துகிறோம் என்று 2.6 ஏக்கர் அரசு வருவாய் நிலங்களை மேலும் மேலும் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர்.
தற்பொழுது கோவிலின் முன் பகுதியில் தளம் போடும் வேலையில் இறங்கி உள்ளனர். இதை தடுத்து நிறுத்தி அரசு வருவாய் நிலத்தை அரசு உடனடியாக மீட்க வேண்டும் என்று அறப்போர் இயக்கம் முதல்வர், தலைமை செயலர், வருவாய் துறை செயலர், மாவட்ட ஆட்சியர் என பலருக்கு புகார் கொடுத்து உள்ளோம். புகாரை இத்துடன் இணைத்துள்ளோம்.
ஜெயராம் வெங்கடேசன்
ஒருங்கிணைப்பாளர் – அறப்போர் இயக்கம்
Ph: 9841894700