
-தோழர் சுமதி விஜயகுமார்
இந்த ஆண்டு ஜனவரி மாதம் துவங்கி அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இல்லாமல் குடியேறிய மக்களை நாட்டை விட்டு வெளியேற்றியது அமெரிக்க அரசு. சட்ட விரோதமாக நடைபெறும் குடியேற்றங்கள் உலகெங்கிலும் மிக சகஜம். அவர்களை நாட்டை விட்டு அனுப்பியதில் சட்டப்படி பிழையில்லை. ஆனால் அப்படி குடியேறிய மக்களை, கடும் குற்றவாளிகளை போல, கை விலங்கு, கால் விலங்குகளால் பூட்டப்பட்டு, பல மணி நேரம் காத்திருக்க வைத்து, இயற்கை உபாதைகளுக்கு கூட உரிய அனுமதி வழங்காமல், ஆட்டு மந்தையை போல விமானத்தில் சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பியது அமெரிக்கா. அந்த செயல் உலகை அதிர்ச்சியடைய வைத்ததுடன், கடும் கண்டனங்களும் எழுந்தன.
கொலம்பியா, பிரேசில், மெக்ஸிகோ போன்ற நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவிக்க, இந்திய அரசோ அதை மறைமுகமாக நியாயப்படுத்தியது. அதானிக்காக டிரம்ப்பிடம் பம்மிக் கொண்டிருக்கும் மோடியிடம் அதை தாண்டி பெரிதாக எதிர்பார்க்க முடியாது என்பதால் அது பெரிய அதிர்ச்சியெல்லாம் கொடுக்கவில்லை. ஆனால் தன் சொந்த குடிமக்கள், விலங்குகளை போல வெளியேற்றப்பட்டதை கண்டிக்க துப்பில்லாத அரசு இப்பொது செய்திருக்கும் செயல் உலக அளவில் இந்தியர்களை வெட்கி தலை குனிய வைத்திருக்கிறது.
38 ரோஹிங்கிய இஸ்லாமிய அகதிகளை, நடுக்கடலில் இறக்கி இருக்கிறது இந்திய அரசு!!!! ஆமாம், சரியாகத்தான் படித்திருக்கிறீர்கள், Literally நடு கடலில் இறக்கி விட்டுருக்கிறது. அவர்களுக்கு உரிய உணவோ தண்ணீரோ அளிக்கப்படவில்லை. வெறும் life jacket மட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது. கைகளை கால்களை கட்டியதோடு மட்டுமல்லாமல், அவர்களின் கண்களையும் கட்டி அழைத்து சென்றிருக்கிறார்கள். அதில் 16 வயது நிரம்பிய, அப்பா அம்மா இல்லாத பெண், 50 வயது நிறம்பிய புற்றுநோய் கொண்ட பெண், அப்போது தான் கர்பப்பையை அகற்றிய 22 வயது பெண்களும் அடக்கம். சட்டவிரோதமாக குடியேறினால் இப்படித்தான் அகற்றப்படுவார்கள் என்று கூட நியாயம் பேசலாம். ஆனால் அவர்கள் ஐக்கிய நாடுகளின் இந்திய தூதரகம் மூலம் அகதிகள் என்று பதிவு செய்யப்பட்டவர்கள்.
இந்திய அரசின் இந்த மனித தன்மையற்ற செயலை ஐநா கடுமையாக கண்டித்திருக்கிறது. சட்ட விரோதமாக குடியேறிவர்கள் என்ற குற்றம் சாட்டி நடுக்கடலில் இறுக்கிவிடப்பட்டவர்கள், உண்மையில் சட்டவிரோதமாக தான் குடியேறினார்களா என்பதை, சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள படாமலே நடுக்கடலில் இறக்கிவிடப்பட்டிருக்கிறார்கள்!!!!! ஆண்களை கடுமையாக தாக்கியும், பெண்களை பாலியல் சீண்டல்களுக்கும் உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். 12 மணி நேரமாக கடலில் தத்தளித்து கரை ஒதுங்கி இருக்கிறார்கள்.
யார் இந்த ரொஹிங்கியர்கள்!!!
உலகின் நாடற்ற மக்களின் எண்ணிக்கையில் முதலில் இருப்பவர்கள் . உலகிலேயே மிகவும் துன்புறுத்தலுக்கு ஆளான சிறுபான்மையினர் என்று ஐநா சபையால் அறிவிக்கப்பட்டவர்கள். உலகின் மிக பெரிய அகதிகள் முகாம் என்று வரையறை செய்யப்படும் அளவிற்கு வங்கதேசத்தின் Cox பஜாரில் அடைக்கலம் அடைந்தனர். 12 லட்சம் மக்கள் அகதிகள் ஆக்கப்பட்டனர் என்று சொல்வதற்கும் கேட்பதற்கும் எளிதாக இருக்கலாம். ஆனால் அந்த 12 லட்சம் மனிதர்களுக்கு பின்னால் இருக்கும் கதைகளையும் வலிகளையும் கேட்டால், மனிதர்கள் உண்மையில் நாகரீகம் அடைந்தவர்கள் தானா என்ற சந்தேகம் பிறக்கும்.
ரொஹிங்கியார்கள் அன்பை போதித்த புத்த மத நாடான மியான்மாரில் பிறந்தவர்கள். 1982 ஆம் ஆண்டு மியான்மார் அரசு புதிய குடியுரிமை சட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன் அடிப்படையில், ரோஹிங்கிய மக்கள் தங்கள் குடியுரிமையை இழந்தார்கள். மியன்மாரின் ராணுவத்தினரால் நாட்டை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டு அகதிகள் ஆனவர்கள். நாடற்றவர்களான ரொஹிங்கியர்களுக்கு அடிப்படை உரிமையான கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு என்று எதுவுமே கிடையாது. அவ்வளவு ஏன், ஒருவரை சட்டப்படி திருமணம் செய்து கொள்ளும் உரிமை கூட கிடையாது. ஒரு ரொஹிங்கியார் ‘நாங்கள் நடமாடும் பிணங்கள்’ என்ற சொல்லும் அளவிற்கு தான் அவர்களின் வாழ்க்கை இருக்கிறது.
இன்றைய தேதிக்கு ஏறக்குறைய 28 லட்சம் ரொஹிங்கியார்கள் நாடற்றவர்களாக இருக்கிறார்கள். மியான்மார் அரசின் இன படுகொலைக்கு அஞ்சி, மலேசியா, தாய்லாந்து, வங்கதேசம், இந்தோனேஷியா மற்றும் இந்தியாவில் தஞ்சம் புகுந்தவர்கள்.
22500 ரொஹிங்கியார்கள் ஐநாவால் அங்கீகரிக்கப்பட்டு இந்தியாவில் அகதிகளாக குடியேறினார்கள். அப்படி சட்டப்படி குடியேறிய மக்களை, கணவன் மனைவி தனியாக, குழந்தைகள் தனியாக என்று தங்க வைத்தது இந்திய அரசு. அந்த குழந்தைகளுக்கு எந்த விதத்திலும் கல்வி புகட்டப்படுவதில்லை. விளையாட இடமோ, கொஞ்சமும் சுகாதாரமோ இல்லாத சூழ்நிலையில் தான் வளர்கிறார்கள்.
இந்த பாவப்பட்ட மக்களில் இருந்த 38 பேரை தான் நடுக்கடலில் இறுக்கிவிட்டுருக்கிறது இந்தியா. ‘நீங்கள் மியான்மாருக்கு செல்ல விரும்புகுறீர்களா, இந்தோனேஷியா செல்ல விரும்புகுறீர்களா?’ என்று இந்தியா கேட்க, ‘மியன்மார் சென்றால், எங்களை கொன்று விடுவார்கள். எங்களை இந்தோனேசியாவில் விட்டுவிடுங்கள்’ என்று கூறி இருக்கிறார்கள். அவர்களை இந்தோனேஷியா அழைத்து செல்ல எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நடுக்கடலில் தத்தளிக்க விட்டிருக்கிறது இந்தியா.
எல்லைகள் என்பது வெறும் வேலி தான். குடியுரிமை என்பது வெறும் காகிதம் தான். இந்த உலகில் ஒரு உயிர் பிறந்தால், நமக்கு என்ன உரிமைகள் இருக்கின்றதோ அவை அனைத்தும் அந்த உயிருக்கும் சொந்தம். அதை நிராகரிப்பதற்கு எவருக்கும் உரிமையில்லை. வெறும் ஒரே ஒரு சட்ட திருத்தும் தான், நாளை நாமும் அகதிகள் ஆக்கப்படலாம்.
புத்த மத அன்பின் நாடான மியான்மாரோ, ஹிந்து மத வேதங்களின் நாடான இந்தியாவோ அவர்களை எப்போதும் காப்பாற்றாது. நாடற்ற அந்த உயிர்களின் வலிகளை புரிந்து கொள்ள, அடையாளங்களை துறந்த மனிதர்களால் மட்டுமே உணர முடியும், குரல் கொடுக்க முடியும்.
மதங்கள் ஒருபோதும் உயிர்களை காப்பாற்றாது. மனிதத்தன்மை ஒருபோதும் உயிர்களை கைவிடாது.