உலக நாடுகள் ஏன் ரஷ்யாவிற்கு எதிராக அணி திரளவில்லை?

ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டபோது, உலக நாடுகள் ஏன் மேற்கத்திய தேசங்களை ஆதரித்து ஒற்றைக் குடையில் அணி திரளவில்லை?

ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், தைவான் போன்ற சிறிய தேசங்கள் கூட பக்கச்சார்புடன் அணிதிரளும் போது இலத்தீன் அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஆசியா போன்ற பெரிய பகுதியிலிருந்து ஒரு சிறிய முனகல் கூட கேட்காதது வருத்தமளிக்கவில்லையா? ஏன் இப்படி?

இறையாண்மை மிக்க உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் போர்தொடுத்தபோது, மொத்தமுள்ள 193 நாடுகளில் 141 நாடுகள் ‘வருத்தம்’ தெரிவித்தும் ஏன் இந்த நிலைமை?

ஒன்று, தன் தேச மக்கள் வாழ ஒவ்வொரு நாட்டின் பண்டமும் இன்றியமையாதது ஆகிறது.

மற்றொன்று, தன் ஒருதலைப்பட்சமான முடிவுகளால், அண்டிப் பிழைக்கவரும் தேசங்களை அமெரிக்கா அச்சுறுத்துகிறது.

இதை என்னால் முடிந்த அளவுக்கு சுலபமாகச் சொல்கிறேன். இது வெறும் வெகுஜனப்படுத்தும் நடவடிக்கை அல்ல. பொய்களும் கட்டுக்கதைகளுமாய் புளுகித் தள்ளும் விலைபோன ஊடகங்களை தோலுரிக்கும் நடவடிக்கை.

அமெரிக்காவும் மேற்குலகும் கையேந்தும் பொருட்கள் எவை?

சாதாரண கோதுமையில் இருந்து தொடங்குவோம்.

பெனீன் போன்ற ஒரு சிறிய தேசத்திற்கு ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் குறைந்த விலையிலான கோதுமையின் தேவை அளப்பரியது.

ஆனால் பெனீன் போன்ற தேசம் உங்கள் மனதில் கொஞ்சம் கூட இடம்பெறாது. ஐரோப்பாவின் முக்கால் பங்கு நிலத்தை முழுங்கிவிடும் நிலப்பரப்பும் – மகத்தான மக்கள்தொகையும் கொண்ட ஒரு ஆப்பிரிக்க தேசம் இது. இத்துடன் உங்கள் கனவுலகத்தில் பொதிந்து வைக்கப்பட்ட பெல்ஜியம், டென்மார்க், கிரீஸ், போர்ச்சுக்கல், அயர்லாந்து, செக் குடியரசு, சுவிட்சர்லாந்து, சுவீடன் போன்ற தேசங்கள் எல்லாம் ஒப்பிட்டுப் பார்க்கையில் மங்கலாகிவிடும். செய்தித் தாள் முழுக்க நிறைந்திருக்கும் நியூசிலாந்து கூட, பெனீனை விட பலமடங்கு குறைந்த மக்கள் தொகை கொண்ட தேசம்தான்.

25-க்கும் குறையாத ஆப்பிரிக்க தேசங்களுக்கு ரஷ்ய கோதுமையின் தேவை இருக்கிறது.

மத்தியதரைக் கடலிலிருந்து பசிபிக் வரை நீளும் வேளாண் வளத்தால், ஒட்டுமொத்த உலகின் சரிபாதி கோதுமை விளைச்சல் ஈடு செய்யப்படுகிறது; 85% அரிசி உற்பத்தி சமன் செய்யப்படுகிறது.

நம்மில் பலருக்கும் தெரிந்த ஒன்று. உலகின் 70% எண்ணெய் வயல்களும் 65% இயற்கை வாயுக்களும் மத்திய கிழக்கு, மத்திய ஆசிய மற்றும் ரஷ்ய தேசங்களில் தான் மையம் கொண்டிருக்கின்றன.

ஆனால் நாம் அன்றாடம் பயன்படுத்தும் மின் கடத்தி, நுண்ணிய மின்னணு உபகரணங்கள் தயாரிக்கத் தேவைப்படும் சிலிகான்கள் மூன்றில் இரண்டு பங்கு ரஷ்ய மற்றும் சீன தேசங்களில் கிடைப்பதை நம்மில் பலரும் அறிந்திருக்கவில்லை.

காந்தங்கள், மின்கலன்கள் மற்றும் மடிக்கணினி உதிரி பாகங்கள் தயாரிக்கத் தேவைப்படும் மிக அரிய உலோகங்களான இட்ரியம், டிஸ்ப்ரோசியம், டெர்பியம் போன்றவை சீனாவில் மட்டுமே கிடைக்கின்றன.

ரஷ்யாவைப் பகைத்துவிட்டு, அவன் அண்ணன்மார் சீனாவோடு கண்மூடித்தனமாக நட்புறவு நீட்டிக்க முடியுமா என்ன?

அரிய வாய்ப்பு அது.‌

உணவு பற்றாக்குறை ஏற்பட்டு, பணவீக்கம் அதிகரித்தால் சொந்த நாடு அமைதி இல்லாமல் போவதை பூமிப்பந்தின் தென்திசை பிராந்தியங்களும் – ஆப்பிரிக்க நாடுகளும் – வளர்ச்சி குன்றிய குட்டி, குட்டிப் பிரதேசங்களும் அறியாமல் இல்லை.

ஆனால் எப்படியும் மேற்கின் பொருளாதாரத் தடைகளால், ரஷ்யப் பொருட்களை வாங்க முடியாதே?

அப்படியானால், அந்தப் பொருளாதாரத் தடைகள் எதற்காக? ரஷ்யாவை தனிமைப்படுத்த. அவர்களிடம் யாரும் பண்டம் புழங்காமல் இருக்க. அதன்மூலம் ரஷ்ய ரூபிள் மதிப்பை அதல பாதாளத்திற்கு தள்ள.

ஆனால் இங்குதான் மாற்றுப் பொருளாதாரம் இருக்கிறது. பெட்ரோ – டாலர் போல, இந்திய – யுவான்; சௌதி – யுவான்; ரூபாய் – ரியால் போன்ற பரிமாற்றம் சாத்தியப்படுகிறது.

SDR எனப்படும் சிறப்பு பரிவர்த்தனை உரிமை (Special Drawing Rights), டிஜிட்டல் தளத்தில் ஒரு புதிய நாணயமுறையாக உருவெடுத்திருக்கிறது. வர்த்தகத்திற்கு உட்படும் பண்டத்திற்கு நிகரான, பொருட்களின் மதிப்பிற்கு நிகரான அசல் தொகையில் இது மறுமதிப்பீடு செய்யப்படுகிறது.

இந்த மாதம்தான், SDR – ஐ இருப்பு நாணயமாக யுரேசிய பொருளாதார ஒன்றியம் அறிவித்தது. ஆனால் இதை எதிர்பாராத ஒன்று என நாம் பார்க்கக் கூடாது. சர்வதேச வணிகத்தில் இது பலநாட்களாய் கிடப்பில் இருந்துவந்தது. 2014-ல் சர்வதேச நாணய நிதியம் இதற்கு ஒப்புதல் அளித்தது. பின்னர் உலக வங்கி 2016-ல் SDR-கான தன் ஒப்பந்தப் பத்திரத்தை வெளியிட்டது.

2019-ல் அனைத்து மத்திய வங்கிகளும் தன் அந்நியச் செலாவணி இருப்பை SDR-ல் தாக்கல் செய்தன. இப்படியாகத்தான் 2022, மார்ச் 14-ல் யுரேசிய பொருளாதார ஒன்றியம் SDR-ல் இருப்பு நாணயமாக அறிவித்திருக்கிறது.

இது நிச்சயமாய், உலக நாடுகள் ஏன் மேற்குலகின் தடையுத்தரவுகளில் இருந்து விலகி நிற்கிறது என்பதற்கு பதிலளிக்கும். இப்போது ஏன் அமெரிக்காவின் ஒருதலைப்பட்சமான முடிவுகளுக்கு அச்சப்படவேண்டி உள்ளது என பார்ப்போம்.

உலகம் ஏன் அமெரிக்காவை கண்டு நடுங்குகிறது?
தங்கள் நாட்டில் உள்ள அனைத்துவித ரஷ்ய சொத்துக்களை அமெரிக்காவும் அதன் பாதச்சுவட்டில் குடிகொண்டிருக்கும் மேற்குலகும், முடக்கியதை நாம் அறிவோம்.

தங்கம், முதலீட்டுப் பொருட்கள், ரியல் எஸ்டேட் என அனைத்துவித ரஷ்ய சொத்துக்களும், ரஷ்ய பெரும்புள்ளிகளின் சொத்துக்களும் அமெரிக்கா தொடங்கிய பொருளாதாரத் தடைகளால் முடக்கப்பட்டுள்ளன.

உண்மையில் இது ‘சட்டவிரோத பொருளாதாரத் தடை’ என்றே கூற வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்கள் மற்றும் சட்டத்திற்கு புறம்பான இது, வற்புறுத்தல் நடவடிக்கைகளை ஒழிக்கக் கோரும் உறுப்பு நாடுகளின் 29 தீர்மானங்களுக்கும் முரணானதாக இருக்கிறது. எனவே ரஷ்யா மீது விதிக்கப்பட்டிருக்கும் இந்தப் பொருளாதாரத் தடை தனி ஒருவரின் நடவடிக்கை அல்ல.

இந்த மரபார்ந்த கொல்லைக்காரத் தனத்தில், அமெரிக்காவிற்கு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. ஷா தன் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டபோது, ஈரான் தன் சொத்துக்களை இழந்தது. பின்னர் ஆப்கானிஸ்தான் உதவி செய்தது. வெனிசுவேலாவின் தங்கம் பிரிட்டனால் மறுக்கப்பட்டபோது, ரஷ்யா உதவிக்கு வந்தது.

தன் கொள்கைப் பிடிப்பிற்கு இணங்க மறுக்கும் எவரையும் அமெரிக்கா சுலபத்தில் விடுவதில்லை. இதை அறிந்துகொண்டுதான் Fed Reserve -ல் வைத்திருக்கும் தன் தங்கத்தை விமானம் மூலம் தாய்நாட்டிற்கு திரும்பி கொண்டுவந்திருக்கிறது, ஜெர்மனி. ஆனால் இவையெல்லாம் இந்த உலகிற்கு தெரியாமல் போவதுதான் பாவம்.

நாட்டை ஆள்பவருக்குத் தெரிந்தும், ஊடகங்களால் மூலைச் சலவை செய்யப்பட்ட நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்குத் தெரியாததுமான ஒரு செய்தியை சொல்கிறேன் கேளுங்கள். BIS-க்கு உட்பட்ட 143 நாடுகளின் கூட்டமைப்பிலும் EEU, SCO, ASEAN, RCEP போன்ற தேசங்களின் கூட்டமைப்பிலும் அமெரிக்கப் பிரதிநிதி ஒருவரும் கிடையாது.‌ ஆனால் மேற்சொன்ன எல்லாக் கூட்டமைப்பிலும் ரஷ்ய இணைந்திருக்கிறது. டாலரின் நச்சுத்தன்மையை உணர்ந்துகொள்க.

மேலும் அந்த டாலர் அரசின் கையிலிருந்தும், பணப் பரிமாற்றத்திலிருந்தும், பொருளாதாரத் தடையிலிருந்தும் விடுபடவில்லை.

அமெரிக்க வங்கியிலும், அதன் கருவூலப் பத்திரங்களிலும் முதலீடு செய்திருக்கும் இந்த உலகத்தோர் மிகவும் பாதுகாக்கப்பட்ட சேமிப்பாக அதைக் கருதுகிறார்கள். ஆனால் அது பாதுகாப்பற்றது என நீங்கள் உணர்ந்தால், இந்த உலகை குறை சொல்ல முடியுமா?

1971-ல் தொடங்கி, சுமார் 50 ஆண்டுகளாக இந்த உலகம் டாலரை உச்சத்தில் வைத்திருக்கிறது. அந்த ஆண்டில்தான் அமெரிக்கா தனது டாலருக்கு இணையான உத்தரவாதமாக தங்கம் தேவையில்லை என்று அறிவித்தது. கருவூலப் பத்திரங்களை வாங்குவதன் மூலம், அமெரிக்க வரவு – செலவுக்கும்; நிதி பற்றாக்குறைக்கும் தீனி போடப்பட்டது. இப்படியாகத்தான் உலகம் முழுக்க இந்த டாலர் படையெடுத்தது.

இப்போது இந்த உலகம் டாலரின் பணயக்கைதி என்று அஞ்சி நடுங்குவது யாரின் தவறு?

காலனிய காலத்தில் அந்நியர் ஆட்சியை எதிர்த்ததில் இருந்து ரஷ்யாவின் உற்ற தோழனாக ஆப்பிரிக்கா இருந்து வருகிறது. மாஸ்கோ மீதான பொருளாதாரத் தடையை மீறுவதற்கு ஆப்பிரிக்க துணிந்ததன் காரணம் இதுவே. ஆனால் அமெரிக்காவுடன் கைக்கோர்த்ததன் மூலம் ஐரோப்பா தன் சொந்த காலை புதைமண்ணில் குழிதோண்டிப் புதைத்திருக்கிறது.

ஒருவேளை ரஷ்யா விரும்பினால், ஐரோப்பா முழுதும் முடங்கிப் போகலாம். வெறுமனே அது எரிவாயு விநியோகத்தை தடை செய்வதோடு நின்றுபோகாது. அத்தனையும் தெரிந்தே ஏன், ஐரோப்பா நெருப்பு வளையத்திற்குள் செல்கிறது? நேட்டோ அமைப்பில் உக்ரைனின் உறுப்பினர் பதவியை அங்கீகரிக்காமல் இருப்பது மட்டுமே, தங்களுக்கு ஏதுவான எதிர்காலத்தை  வழங்கிட வழிசெய்யும்போது, ஏன் இவர்கள் தற்கொலைச் செய்ய தயாராய் இருக்கிறார்கள்?

மூலம் : அஸீஸ் சுக்லா.
தமிழில் : இஸ்க்ரா.