ஸ்ரீமதிக்கான நீதி எங்கே? 100 நாட்களை கடந்தும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாத காவல்துறை!- வழக்கறிஞர் பொ. இரத்தினம்

திமுகவின் அரசியல்  வெற்றுத்தனம், ஆளும் கட்சி முழுக்க முழுக்க மக்களுக்கு துரோகம் செய்கிறது. தாமதமில்லாமல் செயல்படுவோம்!

சட்ட ஆட்சியில் நம்பிக்கையுள்ளவர்கள், மக்கள் குடியரசில் பற்றுள்ளவர்கள் ஒருங்கிணைய வேண்டிய காலகட்டம். குறிப்பாக இடதுசாரி அமைப்புகள், குழுக்கள், கட்சிகள் ஒருங்கிணைந்து களமிறங்க வேண்டும். சட்டப்படியாகவே செயல்படவேண்டிய தேவை நிறைய இருக்கின்றது. இதனை தளர்வற்று செய்வோம்.

1. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கணியாமூர் கிராமத்தில் உள்ள சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியின் சொந்தக்காரர்கள் நடத்தியுள்ள படுகொலையின் வரிசையில் ஸ்ரீமதியின் படுகொலையை இறுதியாக முடித்துவைப்போம். இதற்கு மேலும் அந்த கொலைகார கும்பல் இளம்சிறார்களுக்கு கல்வி கொடுப்பதாக நடத்தும் முகமூடிக் கொலைக்கு முடிவுகட்டுவோம். இந்த அரசுக்கு அந்த பள்ளியை எடுத்து நடத்த வக்கில்லை. ஏனென்றால் இந்த அரசும் RSS அரசியல் கும்பலோடு கூட்டணிபோட்டுவிட்டது. இனி இவர்களை யாராலும் திருத்த முடியாது.  அது ஈழ போராட்டமாகட்டும் அல்லது மேலவளவு போன்ற தலித் மக்கள் கொல்லப்பட்ட பின்னணியாகட்டும். எல்லாவற்றிலும் இந்த குடும்ப கட்சி தொடர்ந்து துரோகத்தையே நடத்துகிறது. இன்றும் அதுதான் தொடர்கிறது.

2. நக்கீரன் ஏட்டில் தளர்வற்று சுற்றி சுற்றி வந்து உண்மைகளை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய போராளி செய்தியாளர் தாமோதரன் பிரகாஷ், தலைவாசல் பகுதியில் 19.09.2022 அன்று பிற்பகல் கடுமையாக  தாக்கப்பட்டுள்ளார். அவருடன் இருந்த போட்டோகிராபர் அஜித்குமாருடைய பற்கள் உடைக்கப்பட்டுள்ளன. அப்பகுதி தொடர்ந்து பதட்டமாகி  உள்ளது. நமக்கு ஓரளவுதான் செய்திகள் கிடைத்துள்ளன. ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

3. இந்த பின்னணியில், செயல்பட வேண்டியவர்களுக்கு ஒரு அவசர வேண்டுதல்   குரல் ஓங்கி  ஒலிக்கிறது. ஆட்சியிலுள்ள திமுக தனது துரோகச் செயல்களால் மக்களை உசுப்பி விட்டுக்கொண்டே இருக்கிறது.  சமூக மாற்றம், சமூகநீதி என, காலம்காலமாக சாத்தியப்படாத வேலைத்திட்டங்களால் முடமாகிவிட்டது. இன்று ஸ்ரீமதியின் படுகொலையும் அதற்கு முன்பு நடந்துள்ள அப்பள்ளி மாணவர்களின் கொலைகளும் மக்களை மாற்று அரசியலுக்கு தயாரித்துவிட்டன.

4. வெளிநாடுகளிலிருந்தும் தமிழ்ப்பெண்கள், தமிழ்நாட்டில் செயல்படும் முன்னணியாளர்களுடன் தொடர்பு கொண்டு ஊக்குவித்தலை  தளர்வின்றி செய்கிறார்கள். அமெரிக்க நாட்டிலிருந்து ஒரு குழு ஸ்ரீமதியின் உடலை உடற்கூறாய்வு செய்த மருத்துவ அறிக்கைகளை விஞ்ஞான ரீதியாக  பரிசீலித்து அச்சிறுமி கடுமையான பாலியல் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டே கொல்லப்பட்டுள்ளார் என வழக்கறிஞர் பொ. இரத்தினத்துக்கு அந்த ஆய்வின் செய்திகளை அனுப்பியுள்ளனர். இப்படி முழுக்க முழுக்க அம்பலமாகிவிட்ட காட்டுமிராண்டிகளின் செயல்களை மூடிமறைத்து பாதுகாப்பு கொடுக்கும் ஆட்சியாளர்கள், தங்களை முழுமையாக அம்பலமாக்கி கொண்டுள்ளனர். நீதிதுறையிலும் ஒரு சில நீதிபதிகள் ஆட்சியாளர்களுடன் சேர்ந்து தங்களது முகமூடிகளை அவர்களே கிழித்துள்ளனர்.

5. நீதி தேடும் அந்த குடும்பத்திற்கு ஆறுதலாக, ஓய்வு பெற்ற நீதிபதிகள்  வழக்கறிஞர்கள், ஊடக செய்தியாளர்கள், மாணவர்கள்,  ஆசிரியர்கள் போன்றோர் தங்கள் ஆதரவை அக்குடும்பத்துக்கு தொடர்ந்து கொடுத்து வருகிறார்கள். இந்த சூழலில் இனியும் இந்த நாறிப்போன கட்சிகளோடு கூட்டணி வைத்துக்கொண்டு மக்களது தேடலை, ஆர்வத்தை புறக்கணிப்பது வேதனைக்குரியது.  திமுக சென்னை கடற்கரையில் கருணாநிதியின் நினைவாக பேனா வைக்கும்  திட்டத்திற்கு  ரூ. 60- 70 கோடி அரசு பணத்தை செலவு செய்ய அறிவித்துள்ளது. இதற்கு ஒன்றிய அரசு துணை போகிறது. குடும்ப கட்சியான திமுக குடும்பம் ஆசியாவில் உள்ள பெரும் பணக்கார குடும்பங்களில் ஒன்று. கருணாநிதி முதன்முறையாக சென்னை வந்தபோது இரயிலில் பயணசீட்டு வாங்காமல் பயணித்ததற்கான காரணமாக பணமில்லாமையை சொல்லி ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

6. ஆம் ஆத்மி என்ற கட்சி படித்த, கூடுதல் சம்பளத்தில் பணி செய்த இளைஞர்களால் திடீரென உருவாக்கப்பட்டது. அவர்களுக்கு மாணவ பருவத்தில் இயக்கம் நடத்திய அனுபவம் இல்லை. சீரழிந்துவிட்ட அரசியல் போக்குகளை கண்டு, உணர்வுரீதியாக, தங்களுக்கு கிடைத்த பெரும் சம்பளத்தை தூக்கி எறிந்துவிட்டு களத்தில் இறங்கினார்கள். மக்கள் தேடலுக்கு ஆம் ஆத்மி என்ற கட்சியின் துவக்கம் பெரும் நம்பிக்கையை கொடுத்தது. புதுடில்லியில், சுதந்திரமடைவதற்கு முன்பிருந்து செயல்படும் பெரும் கட்சிகளை மக்கள் ஓரங்கட்டினர். ஆம் ஆத்மி இளைஞர்கள் புதிய விடியலை கொண்டு வர போகிறார்கள் என்று நம்பி வாக்களித்தனர். ஆனாலும் அந்த கட்சிக்குள் மோசடிக்காரர்கள் ஊடுருவி இருந்தனர். அக்கட்சியின் சட்ட அமைச்சர் போன்ற சிலர் பொய் ஆவணங்களை காட்டி பதவியில் இருந்து, கைதும் செய்யப்பட்டனர்.

7. ஆனாலும் மற்ற கட்சிகளின் சீரழிவு போக்கை அனுபவித்து துன்பப்படும் மக்கள் ஆம் ஆத்மி கட்சியை பஞ்சாப், குஜராத் கோவா போன்ற மாநிலங்களில் பெருமளவில் ஆதரிக்கிறார்கள். அந்த கட்சி கூட மக்கள் நம்பிக்கைக்கு ஏற்றபடி செயல்பட, அக்கட்சிக்குள் இருக்கும் சீரழிந்த சந்தர்ப்பவாதம் விட்டுவைக்காது.

8. ஆனால் தமிழ்நாட்டிற்கென இடதுசாரி பாரம்பரியம் வலுவாக உள்ள சூழலில் மக்கள் தேடலுக்கு, மக்களது எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி அரசியல் நடத்த போதுமான அனுபவமும், தியாகமும் வலுவாக உள்ளன. குறிப்பாக இந்திய மார்க்சிஸ்ட் கட்சி தாமதிக்காமல் முன்மாதிரியாக சீழ்வடியும் கூட்டணியிலிருந்து தன்னை விடுதலை செய்தாக வேண்டும். எனவே இன்றோடு இந்த கூட்டணி என்ற மோசடி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து தங்களை சுதந்திரப்படுத்திக்கொள்ள வேண்டும். மக்களோடு ஐக்கியப்பட்டு சமத்துவ சமூகம் கட்டமைக்கும் பார்வையோடு பணிகளை முன்னெடுத்து செல்ல தயாராகும்படி இந்த சிற்றறிக்கையின் மூலம் வேண்டிக்கொள்கிறோம். தாமதிக்கவேண்டாம்.

உறுதியோடு தளர்வற்று செயல்படுவோம்!.
புதிய சரித்திரத்தை கட்டமைப்போம்!.

*தொடர்புக்கு*
*பொ.இரத்தினம்.  வழக்கறிஞர்*
*அம்பேத்கர் சட்ட பணிகள் சங்கம்.*
*பவுத்த பொதுவுடைமை இயக்கம்*
*கைபேசி எண்: 9442881456/9443458118*