ஈழத்தமிழர்கள் இனப்படுகொலைக்கு நீதி எப்போது கிடைக்கும்?- கார்த்திக் சுந்தர்

இலங்கையில் விடுதலை புலிகளுடனான இராணுவ போராட்டம் இறுதிகட்டத்தை எட்டியிருந்த 2009 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், புலிகளின் பிரதேசங்களின் மூன்று மண்டலங்களை போர் தடை மண்டலமாக (Non Firing Zone) இலங்கை அரசு அறிவித்தது.  போரில் ஈடுபடாத பொதுமக்களை ஆயுத தாக்குதல்களிலிருந்து காப்பதற்காகவே இந்த மண்டலங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், நடந்தது என்ன?. விடுதலை புலிகளின் வீழ்ச்சிக்கு பிறகு தமிழ் மக்கள் எஞ்சியுள்ள தங்கள் உயிரை மட்டுமாவது காத்துக்கொள்ள, போர் தடை மண்டலங்களின் ஒரு பகுதியான முள்ளிவாய்க்காலில் தஞ்சம் புகுந்தனர். போர் விதிகளை துளியும் மதிக்காத சிங்கள இனவெறி இராணுவம் மே மாதம் 2009ல் முள்ளிவாய்க்காலில் கொலை வெறி தாக்குதல்களை நடத்தியது. இதில், வான்வழி தாக்குதல், பீரங்கி தாக்குதல்களில் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். பதுகுழிகளில் ஒழிந்து தப்பித்தவர்கள் மீதும் இராணுவத்தினர்  கையறி குண்டுகளை வீசி கொலை செய்தனர். ரத்தமும் சதையுமான ஒரு லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் வறண்ட பாலை மண்ணுக்கடியில் புதையுண்டுள்ளனர். உயிருக்காக போராடிய அம்மக்களின் மரண ஓலங்கள் காற்றில் கலந்து உலகம் முழுக்க ஒலித்தன.

கடந்த தசாப்தங்களில் நடந்த மிகப்பெரிய மனித உரிமை மற்றும் போர் விதி மீறல்களின் உச்சமாக முள்ளிவாய்க்கால் படுகொலை சம்பவம் அரங்கேறியது.  21 ஆம் நூற்றாண்டில் மனித குலத்திற்கெதிரான மிகப்பெரும் இனப்படுகொலை முள்ளிவாய்க்கால் மண்ணில் தான் நிகழ்ந்தது.

முள்ளிவாய்க்கால் ஈழத் தமிழனத்தின் இனப்படுகொலையின் குறியீடு. 30 வருட தனித் தமிழீழ போராட்ட வரலாற்றில் உலக தமிழர்கள் மனங்களில் என்றும் ஆழமாய் பதிந்து கிடைக்கும் ஆறாத வடு. முள்ளிவாய்க்காலில் இறந்த அம்மக்களின் நினைவாக எழுப்பப்பட்ட நினைவு தூபியின் ரத்தம் கசியும் கரங்கள் சொல்லும் கதைகள் ஏராளம். அங்கு நடைபெற்றது யுத்தம் அல்ல. திட்டமிட்டு நிகழ்ந்தேறிய இனப்படுகொலை. 

முள்ளிவாய்க்கால் நினைவுதூபியில்  ஆண்டு தோறும் மே 18 ஆம் தேதி மக்கள் பலர், உயிரிழந்த தங்கள் உறவுகளின் நினைவாக கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதுஒருபுறம் என்றால், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவினர்கள் செத்துவிட்டார்களா என்று கூட தெரியாத நிலையில் கண்ணீர்விடும் உறவுகளும் உண்டு.

இந்த வருடம் 13 வது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உலகத் தமிழர்களால் அனுசரிக்கப்படுகிறது. போர்க்குற்றம் நடந்தது உண்மை என உலகிற்கு வெட்ட வெளிச்சமாக தெரிவிக்கப்பட்ட பின்னரும்  குற்றவாளிகள் இதுவரை தண்டிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியும் இன்றளவும் உலக அரங்கில் மறுக்கப்பட்டு தான் வருகிறது. சர்வதேச சமூகம் ஈழத்தமிழர்களின் இனப்படுகொலை விவகாரத்தில் நீதி வழங்காமல் இன்னும் எத்தனை நாட்கள் காலம் தாழ்த்த போகிறது?

கார்த்திக் சுந்தர்