கன்னியாகுமரியில் ஆணவக்கொலை ? குற்றம் சாட்டும் வி சி க.!

வி சி க தன்னுடைய அதிகார பூர்வ சமூக வலைதளக் கணக்கில் கன்னியாகுமரியில் கடந்த வாரத்தில் ஒரு சாதி ஆணவக்கொலை நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறைக்கு எழுதப்பட்டுள்ள கடிதம் பின்வருமாறு :

தமிழக அரசு மற்றும் காவல் துறையின் கவனத்திற்கு

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை புதூர் கிராமத்தில், தலித் குடும்பத்தில், பிறந்தவர் சுரேஷ்குமார். த/பெ சொர்ணப்பன். பி.காம் படித்த 27 வயதுடைய சுரேஷ்குமார், பக்கத்து ஊரான காட்டுப்புதூர் ஆதிக்க சமூகத்தை சார்ந்த நீலகண்ட பிள்ளையின் மகள் தங்கநிலாவோடு கடந்த எட்டு வருடங்களாக காதல் புரிந்ததாக கூறப்படுகிறது.

தங்கநிலாவும் சுரேஷ்குமார் குடும்பத்தோடு அடிக்கடி அலைபேசி வாயிலாக பேசிவந்துள்ளார். இந்நிலையில், தங்க நிலாவுக்கு அவருடைய குடும்பத்தினர் சுயசாதியில் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். இதை சுரேஷ்குமாருக்கு தெரிவித்த தங்க நிலா, தம்முடைய வீட்டிற்கு வந்துபேசும்படி அழைத்துள்ளார்.

இதற்கிடையில், கடந்த 18/9/2021 அன்று தூவாளை வழக்கறிஞர் பழனி என்பவர் வீட்டில், சுரேஷ்குமார் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படுகிறார். தம்முடைய உறவினர்கள் சுமார் 15 பேருடன் சுரேஷ்குமார் செல்கிறார்.அங்கே, பெண் வீட்டார் தரப்பில் கலந்துகொண்ட பெண்ணின் அண்ணன் தாமோதரன் மற்றும் பலர் சாதி ரீதியாக இழிவு செய்ததோடு, கொலைமிரட்டலும் விடுத்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து 7/11/2021 மதியம் 12 மணிவாக்கில் பூதப்பாண்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜோசப் ராஜ் என்பவர் சுரேஷ்குமார் வீட்டிற்கு வந்து, சுரேஷ் குமார் பூதப்பாண்டி காவல் நிலையத்திற்கு வர வேண்டும் என்று கூறியிருக்கிறார். அந்த உதவி ஆய்வாளரோடு தங்கநிலாவின் அண்ணன் தாமோதரன் மற்றும் இன்னொரு அண்ணனும் வந்துள்ளார். அவர்களைத் தொடர்ந்து சென்ற சுரேஷ்குமார், காவல் நிலையத்திற்கு போய் சேரவில்லை.

வழக்கறிஞரோடு காவல்நிலையத்திற்கு சென்று சுரேஷ்குமரின் சகோதரர்கள் சுரேஷ்குமாரை காணததால் தேடி சென்றுள்ளனர். சுரேஷ்குமார் அலைபேசியை தொடர்பு கொண்டபோது, அது அணைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து தேடியபோது, சுமார் 5:30 மணிவாக்கில் தங்க நிலா ஊரான காட்டுப்புதூர் அருகிலுள்ள, ஆலடி சிவன்கோயில் தெப்பக்குளம்சாலையோரத்தில் சுரேஷ்குமாரின் இருசக்கர வாகனம் கிடந்ததைக் கண்ட சுரேஷ்குமாரின் சகோதரர்கள், அருகில் தேடியபோது, தோட்டத்தில் மயக்க நிலையில் கிடந்துள்ளார் சுரேஷ்குமார்.

அவருடைய அருகில் அவருடைய அலைபேசி சேதமடைந்த நிலையில் கிடந்துள்ளது. அதை எடுத்துப் பார்த்த போது, அதிலிருந்த சிம்கார்டு மற்றும் மெமரி கார்டு ஆகியவை காணாமல் போயிருந்தது. சுரேஷ்குமாரை எழுப்பி பார்த்த சகோதரர்கள், அவரை மீட்டு அருகிலுள்ள நான்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக கொண்டு சென்றபோது சிகிச்சை மறுக்கப்பட்டுள்ளது. இறுதியில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்தபோது, சுரேஷ்குமார் இறந்துவிட்டார் என்று மருத்துவர் கூறியுள்ளார். தற்போது, உடல்கூறாய்வு நடக்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. காவல்துறை தற்கொலை என்று வழக்குப் பதிவு செய்துள்ளது.

தொடரும் இத்தகைய சாதியாணவக் கொலைகள், மரணங்கள் மீது அரசும் காவல்துறையும் தனிக் கவனம்செலுத்ததாது இக்கொடுமைகள் தொடர வழிவகுக்கிறது. இன்றைய அதன் சாட்சியாக நம்முன் சகோதரர் சுரேஷ்குமாரின் உடல் கிடக்கிறது.

சுரேஷ்குமாரின் மரணத்திற்கு நீதி கிடைத்தாக வேண்டும் என்பதை குரலுயர்த்தி முழங்குவோம்!

அரசே!

• சுரேஷ்குமார் மரணத்தின் மீது சிறப்பு விசாரணை நடத்தி உண்மையை மீட்டெடு!• காவல்துறை ஆய்வாளருடன் சுரேஷ்குமார் வீட்டிற்கு சென்ற தாமோதரன் மற்றும் அவருடைய சகோதரர் ஆகியோரை உடனேக் கைது செய்து விசாரணை நடத்து!

•கடந்த 18/9/2021 அன்று வழக்கறிஞர் பழனி என்பவர் வீட்டில் சுரேஷ் குமாரை மிரட்டிய நீலகண்டனின் குடும்பத்தினர் அத்தனை பேர் மீதும் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்து!

• சுரேஷ்குமாருக்கு சிகிச்சை மறுத்த நான்கு தனியார் மருத்துவமனைகள் மீதும் உடனே நடவடிக்கை எடு!

என்று வலியுறுத்தி அந்தக் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது.

– இந்த சம்பவம் சமூக இயக்கங்கள், பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . இது தொடர்பான விரிவான விசாரணை நடத்தப்படுமா என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

நன்றி: விடுதலை சிறுத்தைகள் ட்விட்டர்