உக்ரைன் தலைநகர் கீவ் இன் புறநகர் பகுதியை ரஷ்ய படைகளிடம் இருந்து மீட்டு இருப்பதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்திருக்கிறது.
மரியுபோல் நகரில் இரு நாட்டு படைகள் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. உக்ரைன் மீது ரஷ்ய படைகள் 4வது வாரமாக தாக்குதலைத் தொடர்ந்து வருகின்றனர். தலைநகர் கீவ்வை நோக்கி ரஷ்ய படைகள் முன்னேறி வரும் நிலையில், உக்ரைன் இராணுவத்தினரை சரணடையுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் கீவ்வின் புறநகரான மாக்ரிவ் பகுதியில் இரு நாட்டு படைகள் இடையே கடும் மோதல் நடைபெற்றது.

ரஷ்ய படைகள் வசமாக இருந்த அந்த பகுதியில் இவர்களின் கடும் தாக்குதலை சமாளிக்கமுடியாமல், ரஷ்யா வீரர்கள் பின்வாங்கியதாக உக்ரைன் ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் மார்க்கிவ் பகுதி மீண்டும் ராணுவ கட்டுப்பாட்டில் வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற புறநகர பகுதிகளான குசா, ஹாடோமில், இர்பின் ஆகியவற்றை தங்கள் வசம் கொண்டு வந்துள்ளதாக, ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.

மரியுபோல் நகரில் உக்ரைன் ராணுவ தளங்களை குறிவைத்து ரஷ்ய படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர் . இதனால் அந்த பகுதியில் இருந்து மக்கள் தொடர்ந்து வெளியேறி, அண்டை நாடுகளில் எல்லைகளின் தஞ்சமடைந்து வருகின்றனர். போர் தொடங்கியதில் இருந்து இதுவரை சுமார் 35லட்சம் உக்ரைனியர்கள் அகதிகளாக வெளியேறி உள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. இதுவரை சுமார் 900 அப்பாவி மக்கள் கொல்லப் பட்டுள்ளதாகவும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.