இந்துத்வாவின் பிரச்சார மேடையா உலக திரைப்பட விழா?- பிரதீப்

53 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா வருகின்ற 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெறவுள்ளது. இதற்க்கான ஊடக அறிவிப்பு 14 /11 /22  அன்று டில்லியில் நடந்து முடிந்தது.  தகவல் ஒளிப்பரப்பு துறை அமைச்சர் அனுராக் தாகூர் தேர்தல் பிரச்சாரங்களில் முனைப்பு காட்டிவரும் நிலையில் அவருக்கு பதிலாக அந்த துறையின் இணை அமைச்சர் எல் முருகன் அவர்கள்  அறிவிப்பை வெளியிட்டார்.

எல் முருகன் அவர்கள் மிக சிறப்பாக பணிசெய்துகொண்டிருக்கிறார் என்று தமிழக பாஜக  உறுப்பினர்கள் மார்தட்டி பேசி கொண்டிருக்கையில் , அதை சுக்கு நூறாக உடைக்கும் வண்ணம் அமைந்தது இந்த ஊடக சந்திப்பு. அப்படி என்ன பேசிவிட்டார் ? இல்லாத பொல்லாத செய்திகளையா கூறினார் என்ற குழப்பம் உங்களுக்கு வருமாயின், குழப்பமே வேண்டாம். இல்லாத ஒன்றை தான் அவர் சொல்லிருக்கிறார்.  அந்த அறிவிப்பில் அவர் சொன்னது என்னவென்றால், ” இஸ்ரேலிய திரைப்பட இயக்குனர் நடாவ் லேபிட் தலைமையிலான 5 பேர் கொண்ட  சர்வதேச ஜூரி குழு, சர்வதேச பிரிவில் 180 திரைப்படங்களை , கோவாவில் திரையிடுவதற்காக தேர்வு செய்துள்ளது” . இங்கு தான் பல முரண்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச திரைப்பட விழாவில் , சர்வதேச பிரிவின் கீழ் அனுப்பப்படும் திரைப்படங்களை , பிரிவியூ கமிட்டி என படும் முன்னோட்ட குழு ஒன்று , டில்லியில் தங்கி திரைப்படங்களை பார்த்து , பட்டியலை பல பிரிவுகளின் அடிப்படையில்  பரிந்துரைக்கும். பின்னர் அந்த பட்டியலில் சர்வதேச போட்டியில் இடம்பெறும் திரைப்படங்களை , இந்த சர்வதேச ஜூரி குழு கோவாவில் பார்த்து , போட்டியில் வெற்றி திரைப்படங்களை தேர்வு செய்து வெளியிடும். ஆனால் இணை அமைச்சரோ இதற்க்கு முரணாக ஊடக அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இதன் மூலம் நமக்கு அவர் உணர்த்தியது என்னவென்றால், அவர் துறை சார்ந்த இந்த நிகழ்வை பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது என்பதையும், துண்டு சீட்டு தந்துவிட்டால் அப்படியே பார்த்து படித்து கக்கும் வல்லுநர் அவர் என்பதையும் நிரூபித்துவிட்டார்.

ஒரு சில நாட்களுக்கு முன்பு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் சில கேள்விகள் கேட்கப்பட்டன. கடந்த ஆண்டு  52 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பெறப்பட்ட மொத்த திரைப்படங்களின் எண்ணிக்கையை கேட்டபோது , அதற்க்கு தரப்பட்ட பதில் 375 . ஆனால் கடந்தாண்டு பிரஸ் இன்போர்மஷன் பியூரோ வெளியிட்ட எண்ணிக்கை 624 . இந்த தவறான தகவலை தந்தமைக்கு எதிராக முதல் முறையீடும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன் பின்னர் இந்த ஆண்டிற்கான பிரஸ் இன்போர்மஷன் பியூரோ வெளியீட்டில், நடப்பாண்டில் பெறப்பட்ட எண்ணிக்கையினை வெளியிடவே இல்லை. இவை மட்டுமின்றி, இந்தியன் பனோரமாவில் இருந்து சர்வதேச போட்டியினுள் காஷ்மீர் பைல், தி ஸ்டோரிடெல்லேர், குரங்கு பெடல் போன்ற திரைப்படங்கள் தேர்வாகியுள்ள நிலையில், சர்வதேச அளவில் பல விருதுகள் பெற்ற  ஜெய் பீம் இடம்பெறாதது பல சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது. தகவல் மற்றும் ஒளிப்பரப்பு துறையே இப்படி முன்னுக்கும் பின்னுக்கும் முரணான தகவல்களை கொடுத்திருப்பது மட்டுமின்றி இதே துறையின் இணை அமைச்சர் எல் முருகன் அவர்களே தவறான தகவல்களை கொடுத்திருப்பது , இந்த துறையில் நிலவும் அவலத்தை இன்று அவர்கள் வெளியிட்ட தகவலின் மூலமே வெளியாகியிருப்பது வேடிக்கையாகிருக்கிறது.

மேலும் ஒரு தகவல் என்னவென்றால் தற்பொழுது NFDC தான் இந்த விழாவினை ஏற்பாடு செய்கிறது. NFDC இன் கீழ் இது போன்ற அனைத்து நடவடிக்கைகளுக்காக 2026 வரை 1,304.52 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கீட்டை நடுவண் அரசு செய்துள்ளது.

இதை நிருபிப்பது போல இந்த திரைப்பட விழாவில் நடுவராக பங்கேற்ற இஸ்ரேலிய இயக்குநரான நடாவ் லாப்பிட் , காஷ்மீர் பைல்ஸ் ஒரு அப்பட்டமான பிரச்சார படம், கலை என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை என்பதை வெளிப்படையாகவே விமர்சித்துவிட்டார். அவருடைய விமர்சனம் உலக அளவில் பார்க்கப்பட்டு இந்தியா அவமானப்பட நேர்ந்தது. இவர்களால் திரைப்பட கலைத்துறைக்கு அவமானம் என்பது  மட்டுமல்லாமல் அதனை சீரழித்தும் விடுவார்கள் என்பது மிகுந்த கவலைக்குரிய விடயமாகும்

பிரதீப்