‘தலையோலப் பறம்பு தங்கம்மா’ – ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியின் டைரிக் குறிப்பு – 2
நன்றி : இயக்குநர். திருமிகு. ஞான இராஜசேகரன் இ.ஆ.ப., (ஓய்வு) எல்லோருக்கும் வணக்கம்.! ‘சிம்மினி அணையும் ஆதிவாசிகளும்’ என்ற தலைப்பில் வெளியான என் பதிவிற்கு நீங்கள் கொடுத்த வரவேற்பிற்கும் வாழ்த்துக்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். பல அன்பர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க மேலும் சில அனுபவ குறிப்புக்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்: தமிழ்நாட்டு மக்கள் அரசாங்கத்தை அணுகுவதற்கும் கேரள மக்கள் அரசாங்கத்தை அணுகுவதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. கேரளாவில் பாமர மக்களுக்கு இருக்கின்ற பொது அறிவு நம்மை வியப்பில் ஆழ்த்தி விடும். நான் பாலா சப் கலெக்டராக இருந்தபோது ஒருநாள் ஒருவர் என்னை அவசரமாகப் பார்க்க வேண்டுமென்று என் ஆபீசுக்கு வந்திருந்தார். நான் அவரை உள்ளே வரச் சொன்னேன். என்ன விஷயம்? என்று கேட்டேன். அவர் பதற்றத்தோடு விவரித்தார். “நான் தலையோலப்பறம்பு கிராமத்தில் இருந்து வருகிறேன். அங்கே ஒரு மிகப்பெரிய தவறு நடந்திருக்கிறது. அந்த ஊரில் விதவையே ஆகாத ஒரு பெண்ணுக்கு விதவைப்பென்ஷன் சாங்ஷன் செய்யப்பட்டிருக்கிறது. அந்தப் பெண்ணோட பேரு தங்கம்மா” இப்படி அவர் சொன்னதும், நான் கேட்டேன் “நீங்க யாரு? உங்களுக்கு இந்த விஷயம் எப்படித் தெரியும்?” என்று. அவர் மிகவும் சாதாரணமாகச் சொன்னார் “அந்த தங்கம்மாவின் கணவரே நான்தான்” என்று. எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. கணவர் உயிரோடு இருக்கும்போது அவர் இறந்து விட்டார் என்று பொய் சொல்லி ஒரு பெண் விதவை பென்ஷன் வாங்குவது அரசாங்கத்தை ஏமாற்றும் வேலை இல்லையா? இது ,ஒரு சமூக நலத் திட்டத்தைக் கேலிப் பொருளாக்குவது இல்லையா? உடனே தாசில்தாரை வரவழைத்தேன். அவர்தான் விதவைப் பென்ஷன் சாங்ஷன் செய்த அதிகாரி. அவரும் பதறிப் போய் விட்டார். தலையோலப் பறம்பு வில்லேஜ் ஆபீசரின் விசாரணை ரிப்போர்ட்டின் அடிப்படையில்தான் சாங்ஷன் செய்ததாக அவர் சொன்னார். தவறாக ரிப்போர்ட் கொடுத்த வில்லேஜ் ஆபீசரை உடனே சஸ்பெண்ட் செய்ய ஆணை பிறப்பித்தேன். ஒரு குறிப்பிட்ட தேதியில் புகார் செய்த கணவர், தங்கம்மா ,வில்லேஜ் ஆபீசர், தாசில்தார் அனைவரையும் வரச் சொன்னேன். அந்தத் தேதியும் வந்தது .சம்பந்தப்பட்ட எல்லோரும் வந்திருந்தார்கள். அந்த தங்கமாவும் வந்திருந்தாள். குட்டு வெளிப்பட்டு விட்டதே என்ற குற்ற உணர்வோடு தொங்கிய முகத்துடன் வருவாள் என்று எதிர்பார்த்த எனக்கு அவள் தைரியமாக என் முன் வந்து நின்றது ஆச்சரியத்தைத் தந்தது. தங்கம்மாவின் மீதுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையே புகார் கொடுத்தவர் அவள் கணவரா? இல்லையா ?என்பதுதான். அதை முதலில் அறியவேண்டும் என்று தீர்மானித்த நான்,அந்தப் பெண்மணியிடம் கேட்டேன் “இவர் உன் கணவர்தானே ?” தங்கம்மா எந்த தயக்கமும் இல்லாமல் பதில் சொன்னாள் ” ஆமாம்” . நான் சற்று உணர்ச்சிவசப்பட்டுப் பேசத்தொடங்கினேன்.Continue Reading