உயர்சாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு!- பேராசிரியர் த.செயராமன்

நவம்பர் 7 அன்று, உயர்சாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு செல்லும் என்று 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்ச் தீர்ப்பளித்தது.
உயர்சாதி ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்க, 8-9 சனவரி 2019- இல் அரசமைப்புச் சட்டம்103 -வது பிரிவில்  செய்யப்பட்ட திருத்தம் செல்லும் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

5 நீதிபதிகளின் தீர்ப்பில், 2 நீதிபதிகள் தலைமை நீதிபதி லலித் மற்றுமொருவர் இடஒதுக்கீடு கூடாது என்று தீர்ப்பு எழுதினர். 3 நீதிபதிகள், உயர்சாதி ஏழைகளுக்கு  இட ஒதுக்கீட்டிற்கான அரசியல் சட்ட திருத்தம் செல்லும் என்று தீர்ப்பளித்தனர்.

இந்திய நாடாளுமன்றத்தில் மக்களவையில் 303 பேர் பாஜக உறுப்பினர்கள். பார்ப்பனிய நலனுக்கான சட்டங்களை இயற்றிக் கொண்டே இருக்கிறார்கள். அவற்றை எவராவது நீதிமன்றத்தில் கேள்வி கேட்டால் பார்ப்பனியத்திற்கு ஆதரவான தீர்ப்புகளை உச்சநீதிமன்றம் வழங்கிக் கொண்டே வருகிறது.

இனி இதுதான் இங்கே நடைமுறை. பாஜகவை தேர்தல்கூட்டணி என்ற பெயரில் ஆதரித்தவர்கள், ஆதரித்துக் கொண்டிருப்பவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். பிற்படுத்தப்பட்ட- ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு இவர்கள் இழைத்திருக்கும் இந்த அநீதியை வரலாறு ஒருபோதும் மறக்காது.

மண்டல் பரிந்துரையின்படி பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு V.P. சிங் அரசு வழங்கிய போது, இது கூடாது என்று அலறி அடித்துக் கொண்டு உச்சநீதிமன்றத்திற்கு உயர்சாதிகள் ஓடின. அப்போது பிற்படுத்தப்பட்டோருக்கு மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தவருக்கு இட ஒதுக்கீடு 50% மேல் போகக்கூடாது என்று வரம்புகட்டி  தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், இப்போது உயர் சாதி ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு 10% என்றவுடன் பழைய தீர்ப்பு, விதிமுறைகள் எல்லாவற்றையும் தூக்கியெறிந்து
விட்டு, இது செல்லும் என்று தீர்ப்பளிக்கிறது.

#உயர்சாதி_ஏழைகளுக்கான_இடஒதுக்கீடை_ஆதரித்து_நீதிபதிகள்_இப்படியெல்லாம்_சப்பைக்கட்டு_கட்டுகிறார்கள்:

* 50 சதவீத உச்ச வரம்பு என்பதை 10 சதவீத இடஒதுக்கீடு இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பு, அரசியலமைப்பு விதிகளை மீறவில்லை.

*அனைவரும் இலக்குகளை அடைய தேவையான கருவியாக இட ஒதுக்கீடு பயன்படுகிறது.

*10 சதவீத இடஒதுக்கீடு என்பது சமத்துவத்திற்கு எதிரானதாக அமையவில்லை.

எனவே பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளனர்.

*மோசடியான வரையறுப்பு!*
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்ற சொல்லாடலே எவ்வளவு பெரிய *மோசடி?*  பொதுப்பிரிவினரில் இட ஒதுக்கீடு எப்படி வரும்?

*இடஒதுக்கீடு என்பது…*

கல்வியிலும் சமூக ரீதியாகவும் வரலாறு முழுவதும் பின்தங்கிக் கிடக்கக் கூடியவர்களை முன்னேறிய வகுப்பினர்களுக்கு இணையாக நிர்வாகத்தில் பங்கேற்க வைப்பது என்பதுதான் ஜனநாயகம். அதற்காகவே கல்வியிலும், சமூகத்திலும் நீண்ட காலமாக ஒடுக்கப்பட்டு வாய்ப்புகள் மறுக்கப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளித்து, சமத்துவத்தை ஏற்படுத்துவதற்காகக் கொண்டு வரப்பட்டது தான் இட ஒதுக்கீடு.

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு தரலாமா என்ற கேள்விக்கு 1953ல் அமைக்கப்பட்ட காகா கலேல்கர் குழு அப்படியெல்லாம் வழங்க முடியாது என்று அறிக்கை அளித்தது. மண்டல் குழுவும் தன் அறிக்கையில் அதையேதான் கூறியிருந்தது. பொருளாதாரத்தில்நலிந்தவர்கள் என்ற போர்வையில்  உயர் சாதியினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது என்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானது, ஆனால், பார்ப்பனர்களுக்கு நலன் செய்வதாக இருந்தால் அரசியல் சட்டத்தை தாறுமாறாகக் கிழித்தாவது, அதைச் செய்ய இந்திய அரசும் நீதிமன்றமும் தயாராக இருக்கின்றன.

#யார்_அந்த_பொருளாதாரத்தில்_பின்தங்கியவர்கள்?
ஆண்டுக்கு 8 லட்சம் வருமானம் அதாவது ஒவ்வொரு மாதமும் ரூ. 60,000 வருமானமும், சென்னையில், சென்னையை ஒட்டிய பகுதியில் 5 ஏக்கர் நிலமும் உடையவர்கள் பொருளாதாரத்தில் நலிந்தவர்களாம்!
மாதம் 5000 ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு, அதில் தன் குடும்பத்தை காப்பாற்றிக் கொண்டு, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழக்கூடிய தனியார் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்கள், பிற துறைகளில் செயல்படுவோர், மருத்துவமனையில் பணியாளர்களாக – செவிலியர்களாக வேலை பார்த்து வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்போர் என்று உண்மை யிலேயே பல்வேறு சமூகங்களில் இருக்கின்றனர், அவர்கள்தான் உண்மையில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள்.

ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த அவர்களுக்கு இல்லாத இட ஒதுக்கீட்டை, பார்ப்பனர்கள் உள்ளிட்ட உயர் சாதியினருக்கு வாரி வழங்கி இருக்கிறது இந்திய ஒன்றிய அரசும், உச்சநீதிமன்றமும். இது அப்பட்டமான அரசியல் சட்ட மீறல்!
மாதம் ரூபாய் 60,000 சம்பளம் பெறுகிறவர்கள் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவாம்!
மாதம் 5000 (அதாவது ஆண்டுக்கு ரூபாய் 60,000) சம்பளம் பெறுகிறவர்கள் நலிந்த பிரிவுக்குள் வரமாட்டார்களாம்!
பார்ப்பனியத்தின் அளவுகோலே தனிதான்!
பார்ப்பனியம் தன் விருப்பம் போல வாய்ப்புகளையும் வசதிகளையும் அள்ளிக் கொள்கிறது!

#நாடாளுமன்ற_உறுப்பினர்கள்_நமக்கானவர்களா?
2019 ஜனவரி 14ஆம் தேதி முதல் உயர் சாதி ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்து விட்டது. இதுதான் 124 வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம்.
2019 ஜனவரி 8ஆம் தேதி வாக்கெடுப்புடன்  மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் 323 எம்.பி.க்கள் ஆதரவளித்தார்கள். இந்தியா முழுவதிலிருந்தும் வந்திருந்த பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பிற சாதிகளைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் 3 பேர் மட்டுமே மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர். அன்று திமுகவுக்கு மக்களவையில் உறுப்பினர்களே கிடையாது. அ.தி.மு.கவுக்கு 37 உறுப்பினர்கள். தர்மபுரியில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சி அன்புமணி ராமதாஸ், கன்னியாகுமரியில் இருந்து பாஜக பொன். ராதாகிருஷ்ணன் மக்களவையில் உறுப்பினர்களாக இருந்தனர்.

9.1.2019 அன்று மாநிலங்களவையில் 8 மணி நேர விவாதத்திற்கு பிறகு சட்டம் வாக்கெடுப்புக்கு வந்தபோது 165 மாநிலங்களவை உறுப்பினர்கள் மசோதாவை ஆதரித்தார்கள். 7 பேர் மட்டுமே எதிர்த்தார்கள். தமிழ்நாட்டிலிருந்து சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் டி. கே. ரங்கராஜன் உயர் சாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீட்டை ஆதரித்து வாக்களித்து, அவர்கள் பேசும் மார்க்சியம் எப்படிப்பட்டது, அது யாருக்கானது என்பதை உலகுக்குப் புரிய வைத்தார்.

அன்று, மாநிலங்களவையில் மசோதா மீது வாக்கெடுப்பு நடந்தபோது
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், ஆம் ஆத்மி கட்சியும்  வெளிநடப்பு செய்தன. எதிர்த்து வாக்களிக்கவில்லை.

#இடஒதுக்கீடு_பெறுவதில்_பிற்படுத்தப்பட்டோருக்க_ஏன்_இவ்வளவு_துன்பம்?
*உயர்சாதியினருக்கு இடஒதுக்கீடு பெறுவது எவ்வளவு எளிதாக இருக்கிறது!*

பிற்படுத்தப்பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு பெறுவதில் எவ்வளவு இடர்பாடுகள் இருந்து வந்துள்ளன என்பது அனைவருக்கும் தெரியும். தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு 1987 இல் மருத்துவர் ராமதாஸ் பெரும் போராட்டத்தை முன்னெடுத்த போது 21 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் உள்-இட ஒதுக்கீடு கோரி மருத்துவர் ராமதாஸ் நீண்ட போராட்டத்தை நடத்தினார். இதன் விளைவாக 2021 இல் எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு 10.50% இட ஒதுக்கீட்டுக்கான அரசாணை இயற்றியது. அடுத்து வந்த திமுக அரசும் இதை ஏற்று நடைமுறைப்படுத்தியது. ஆனால் பிற்படுத்தப்பட்ட சமூகத்தவருக்கு இட ஒதுக்கீட்டில் உள்-ஒதுக்கீடு ஏற்க முடியாது என்று கூறி 50 பேர் வழக்குக்குப் போனார்கள்.  போராடிப் பெற்ற 10.50% உள் ஒதுக்கீடு செல்லாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து அந்த இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது.  இப்போதும் அது உறுதி செய்யப்படவில்லை,

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோருடைய இட ஒதுக்கீட்டுப் போராட்டம் மிக நீண்ட காலத்திற்கானது. நீண்ட காலம் போராடித்தான் பெற முடிந்தது. ஆனால் அதை இன்றளவும் ஒழுங்காக நடைமுறைப்படுத்தவில்லை.

ஆனால் உயர் சாதி ஏழைகளுக்கு 8.1.2019  அன்று சட்ட திருத்தத்திற்கு மக்களவை ஒப்புதல் தந்தது.
மறுநாள்  மாநிலங்களவை ஒப்புதல் தந்தது. நான்காம் நாள் (12 1 2019) அன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் தந்தார். உடனே நடைமுறைக்கு வந்து விட்டது. எதிர்த்தவர்கள் பிப்ரவரி 2019இல் வழக்குக்கு சென்றார்கள்.  10% சட்டத்திற்கு இடைக்காலத் தடை கூட விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.

செப்டம்பர் 2022ல் அரசியல் சாசன அமர்வு நியமிக்கப்பட்டு, அதே மாதம் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. இதோ 7 11 2022ல் தீர்ப்பு வந்துவிட்டது. எவ்வளவு எளிதாக மேல் சாதியினருக்கு அரசியல் சட்டத்தை புறந்தள்ளிவிட்டு இட ஒதுக்கீடு கிடைக்கிறது என்பதையும், மருத்துவர் ராமதாஸ் நடத்திய நீண்டகால போராட்டத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இங்கு உள்ள நிலைமை என்ன என்பது புரியும்.

“பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு இந்திய அமைச்சரவையின் அவசியமான அம்சமாகும்” என்று நீதிபதி பலா திரிவேதி குறிப்பிடுகிறார். பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடு என்பதே அரசியல் சட்டத்திற்கு விரோதமானது.மாதம் 60 ஆயிரம் வருமானமும், சென்னைக்குள் ஐந்து ஏக்கர் நிலமும் உள்ளவர்கள் எல்லாம் ஏழைகள் என்று வரையறுப்பதிலிருந்தே இந்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் பார்ப்பனிய வெறி வெளிய படையாகத் தெரிகிறது. அதை மூடியிருக்கும் முகமூடிகள் கிழிந்து தொங்குகின்றன.

*என்ன செய்வதாக இருக்கிறார்கள் தலைவர்கள்?*

உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்புக்கான சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும். சட்டப் போராட்டத்தை நடத்த வேண்டும்.

உயர்சாதிகளுக்கு 10% இட ஒதுக்கீடு என்பது, பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் “தகுதியின் அடிப்படையில் ” கைப்பற்றும் இட வாய்ப்புகளைப் பறித்தெடுத்து ஒட்டுமொத்தமாகப் பார்ப்பனர்களுக்கு வழங்கும் செயல்பாடுதான்.

இது பார்ப்பனியக் கட்டமைப்பு. பார்ப்பனிய நலன் காக்க பா.ஜ.க.வுக்கு மட்டுமே  303 மக்களவை உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஆர்எஸ்எஸ்-ஆல் வழிநடத்தப்படும் இக்கட்சி பார்ப்பனியத்தின் நலன் காக்க தேவையான சட்டங்களை இயற்றிக் கொண்டே இருக்கிறது. அதைத்தான் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்டசமூகங்களைச் சேர்ந்த பிற தலைவர்கள் தங்கள் சுயநலனுக்காக ஆதரித்துக் கிடக்கிறார்கள்.

இப்போது வந்திருக்கும் இத் தீர்ப்பு பிற்படுத்தப்பட்டோர் ஒடுக்கப்பட்டோருக்குக் கிடைத்த இட ஒதுக்கீட்டின் நோக்கத்தையே  அடித்து நொறுக்குகிறது.

பாஜகவை ஆதரித்து, அவர்களை இத்தகைய சட்டங்களை இயற்றுவதற்கான அதிகார பீடத்தில் அமர்த்திய பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ். ஆகிய  வற்றை வரலாறு மன்னித்தாலும் மன்னிக்கும், இவர்களை ஒரு காலத்திலும் மன்னிக்காது.

“எங்களின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது” என்று கூறி உயர்சாதி ஏழைகளுக்கு இடஒதுக்கீட்டை காங்கிரஸ் வரவேற்கிறது.தாங்கள்தான் இதற்கான முன் முயற்சிகளை 2005- 2006லயே செய்தது என்று காங்கிரஸ் மார் தட்டுகிறது. காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் காங்கிரசின் முன்னெடுப்பு குறித்து பெருமை பேசுகிறார். பாஜகவை எதிர்ப்பவர்கள், முரண்படுகிறவர்கள் கூட்டு சேர்வது இவர்களுடன்தான்.
இச்சட்ட திருத்தத்தை நாடாளுமன்றத்தில் எதிர்த்து பேசிவிட்டு, அதையே ஆதரித்த அதிசயத்தை நிகழ்த்தியது சி.பி.ஐ-எம். கட்சி.
ஆர்.எஸ்.எஸ். காரர்களுக்கும், இச்சட்டத்தை ஆதரித்த பல்வேறு கட்சிகளாக இயங்கும் பார்ப்பனிய ஆதரவாளர்களுக்கும் இத்தீர்ப்பு புளகாங்கிதத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை

சமூகநீதியில் நம்பிக்கை உள்ளவர்கள், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்த தலைவர்கள், உடனடியாக சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும். சட்டப் போராட்டம் நடத்தப் வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

இந்திய நாட்டின் மக்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்! நாடாளுமன்றத்தில் உயர்சாதி ஏழைகளுக்கு  இடஒதுக்கீடு அளிப்பதற்காக அரசியல் அமைப்புச்சட்டத்தை திருத்தியபோது,இச்சட்டத் திருத்தத்தை உங்கள் தலைவர்கள், உங்கள் கட்சிக்காரர்கள் எதிர்க்கவில்லை! ஆதரித்தார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்! உங்கள் நலனை பாதுகாப்பதற்கு பதிலாக யாருடைய நலனை பாதுகாக்க உங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்விக்கு பதில் தேடுங்கள்!

*பிரச்சனைக்கான நிரந்தரத் தீர்வைத் தேடுவோம்!*
இந்தியா என்பதே பார்ப்பனிய கட்டமைப்புதான். பார்ப்பனிய நலனைப் பாதுகாப்பதில், அதை உறுதிப்படுத்துவதில் இந்திய தேசியக் கட்சிகள் முனைப்பாக இருக்கின்றன. மாநில அளவில் உள்ள பல கட்சிகளின் தலைமைகள் தங்களுடைய சுயநலனுக்காக பார்ப்பனியத்தின் படைத்தளபதிகளாக செயல்படுவதில் தயக்கம் இல்லாமல் கிடக்கிறார்கள். சமூகநீதியில் நம்பிக்கை உள்ள தமிழகம் இந்திய கட்டமைப்புக்குள் சமூக நீதியை நீண்ட காலம் காத்துவிட முடியாது. அதிகாரத்தை பார்ப்பனியத்திடம் அள்ளிக் கொடுத்துவிட்டு இரவும் பகலுமாக காவல் காத்துக்கொண்டிருப்பது இயலாது. வீட்டின்கதவைப் பிடுங்கி தானம் கொடுத்துவிட்டு இரவு முழுவதும் வீட்டுக்குள் புகுந்து விடாமல் நாய் விரட்டுவதற்கு ஒப்பானது நம் நிலை.

அரசியல் ரீதியாக தேசிய இனங்கள் தம்மை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தியா முழுவதுமே இறையாண்மையுள்ள தேசிய இனக் குடியரசுகளின் கூட்டமைப்பாக மாறு வேண்டும்.  இந்தியாவுக்குள் ஒன்றாக இருந்தால் இப்படித்தான் நடக்கும் என்றால், தமிழ்நாடு தன் எதிர்கால திசை குறித்து தீர்க்கமான முடிவெடுக்க வேண்டும்.

உடனடியாக சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்!

சமூகநீதியில் அக்கறையுள்ளோர் அனைவரும் நடவடிக்கையில் இறங்கவேண்டும்!

பேராசிரியர் த.செயராமன், நெறியாளர்,
தமிழ்மண் தன்னுரிமை இயக்கம்