கொல்லப்படும் சமுக செயற்பாட்டாளர்கள்- அரசின் பதில் என்ன?- சண்முகம்.

தமிழகத்தில், கடந்த சில மாதங்களில் சட்டவிரோதமாக நடக்கும் கனிமவள கொள்ளை தடுக்கும் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும்,  கொல்லப்படுவதும், அதன் மீது தமிழக அரசு போதுமான நடவடிக்கை எடுக்காத அவல நிலையே நிலவி வருகிறது.

பழனி-காளிப்பட்டியில் பழ.ரகுபதி உள்ளிட்ட பலரும், கோவை – தடாகம் கணுவாயில் மக்கள் மருத்துவர் ரமேஷ் மகள் சாந்தலா மற்றும் மேக் மோகன் , கணேஷ், ஈரோடு – சென்னிமலையில் தமிழ்ச்செல்வன், தூத்துக்குடி – ஸ்ரீ மூலக்கரையில் முத்துச்செல்வன் ஆகியோர் பல்வேறு வகையில் சட்ட விரோதமாக கடுமையாக தாக்கப்பட்டதும், *கரூர் புகலூர் குப்பம் காளிபாளையம் ஜெகநாதன்*, நெல்லை காவல்கிணறு மணி உள்ளிட்டோர் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வும் நடந்துள்ளது.

கரூரில் சட்ட விரோத கல் குவாரி எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சண்முகம் மற்றும் முகிலன் ஆகியோர் கடத்தப்பட்டதும், கோவை கிணத்துக்கடவு -10 முத்தூர், கரூர் பரமத்தி – காட்டு முன்னூர், நாமக்கல் திருச்செங்கோடு – மரப்பரை உள்ளிட்ட பல்வேறு கருத்து கேட்பு கூட்டங்களில் முகிலன் மீது நேரடியாகவே கொலை மிரட்டலும் – அச்சுறுத்தலும் – தாக்க முயற்சியும் நடைபெற்றும் காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையே இன்று வரை உள்ளது.

இப்படி தமிழகம் முழுக்க சட்ட விரோதமாக பல்வேறு குற்ற சம்பவங்கள் சமூக விரோத கும்பலால் நடத்தப்பட்டும், அரசு குற்றவாளிகள் மீது போதுமான நடவடிக்கை எடுக்காத நிலையே உள்ளது.

இப்படி சட்ட விரோதமாக,  சமூக விரோதமாக செயல்படும் கும்பல் மீது அரசும் காவல்துறையும் இரும்பு கரம் கொண்டு போதுமான நடவடிக்கை எடுக்காததன் விளைவே, இன்று கள்ளக்குறிச்சி அருகே நக்கீரன் நிருபர் தாமோதரன் பிரகாஷ் மற்றும் புகைப்பட கலைஞர் அஜித்குமார் மீது பட்டப் பகலில் காரை தாக்கி, அவர்களைத் தாக்கும் சம்பவம் அரங்கேற்றப்பட்டு உள்ளது.

காவல்துறையை தனது கையில் வைத்துள்ள தமிழக முதல்வர் அவர்கள், சமூக செயல்பாட்டாளர்களை,  பத்திரிகையாளர்களை தாக்கும் சமூக விரோதிகளை கடுமையான நடவடிக்கை எடுத்து ஒடுக்க வேண்டும்.

*பத்திரிகையாளர்கள் மீது நடந்த  இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோத கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் .*

*தமிழகத்தில் மீண்டும் இது போன்ற கொடூர செயல்கள் அரங்கேறாமல், தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்!!*

ந. சண்முகம், ஒருங்கிணைப்பாளர், சட்டவிரோத கல் குவாரி எதிர்ப்பு இயக்கம்
97919-78786