ஆதீனங்கள் காவி உடைக்கு மாறியது ஏன்? – விக்கி கண்ணன்.

சைவ சமயத்துக்கே கடந்த பல நூற்றாண்டுகளாக பல பிரச்சனைகள் இருக்கு. சைவ கோவில்களே பெரும்பாலும் ஸ்மார்த்தா அபகரிச்சு மாமாங்கம் ஆச்சு. காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார சைவ கோவில்கள் இதற்கு கண்கண்ட சாட்சி. இதையெல்லாம் எதிர்க்காமல் ஆதினங்களே அமைதிகாத்து தான் வந்திருக்கின்றன. அதுவும் தருமையாதீனத்துக்கு காஞ்சி சங்கராச்சாரியார் என்றால் அவ்வளவு இஷ்டம். இவ்விடயத்தை எடுத்துக்கொண்டு பார்த்தால் கூட ஆகமத்துக்கு விரோதமாக தருமையாதீனம் பல இடங்களில் நடந்துக்கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் தஷிணாமூர்த்திக்கும் நவகிரக குருவுக்கும் கூட வேறுபாடு தெரியாத அளவில் சைவ சித்தாந்தம் தெளிந்து நடந்து வந்திருக்கிறது இந்த ஆதினம்.

பொதுவாக ஆதினம் என்றால் தனது சுயாதீன நிலையை இழந்து சிவபெருமானின் அருளால் அவனையே நினைந்து இவ்வுலக வாழ்க்கையினை மறந்த நிலையில் இருப்பதாக ஐதீகம். ஆதினம் எங்காவது புறப்பட்டாலும் கூட ‘கைலாக்’ போடும் சம்பிரதாயம் நிலவுகிறது. இது ஆதினத்தின் சுயாதீன நிலையை காட்டுவது தான். அப்படியான சம்பிரதாய நிலையில் தான் பட்டிணப் பிரவேசமும் பக்தர்களால் பல்லக்கு தூக்கப்பட்டு செல்வதும் நடந்து வருகிறது. ஆனால் இன்னிக்கு எந்த ஆதினம் மேற்கூறிய நிலையில் இருக்கிறது? உள்ளூர் அரசியல்ல இருந்து உலக அரசியல் வரை கருத்து சொல்றாங்க நம்மூர் ஆதினங்கள். இதுல சாதி அரசியல் அலாதியானது. சுயாதீன நிலையை இழந்தா இதெல்லாம் அணுகப்படுகிறது? நிச்சயமாக இல்லை. ‘துறவு ஒழுக்கம்’ என்கிற வார்த்தைக்கு அர்த்தம் என்னனு இவங்களுக்கு எல்லாம் தெரியுமா? துறவு ஒழுக்கம் குறித்து அவங்க அவங்களே தங்களது மனசாட்சியை தொட்டு கேட்டுக்கனும். அப்ப இதெல்லாம் மரபில்லையா?

சரி அதையும் விடுவோம். இதே தருமையாதீனத்தின் 26வது சன்னிதானம் இதே பட்டிணப் பிரவேசத்துக்கு பல்லக்கில் குருஞான சம்பந்தர் திருமேனி தானே வந்தது?இது மரபா? மரபு மீறலா?

பாலின வேறுபாடு இல்லாமல் ‘ஸ்பரிச தீக்ஷை’ (!) செய்வது மரபா ? மரபு மீறலா ? இராஜ ரிஷின்னு ராச லீலை செய்வது மரபா? மரபு மீறலா ?

எந்த ஆதினம் சைவ சமயத்திற்கும் சிவாகமத்திற்கும் சாத்திர நூல்களுக்கும் முக்கியத்துவம் அளித்து அவற்றை அப்படியே பின்பற்றுகிறது? 500 ஆண்டுகால மரபு பல்லக்கு தூக்குறதுக்கு மட்டும் தானா? இல்லை மரபுகளுக்கும் உண்டா? திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை விஜயேந்திர சரஸ்வதி முன்னிலையில் செய்தபோது ஆதினங்கள் அதில் சம்பிரதாயத்துக்குதானே கலந்துக்கொண்டன? யார் கோவிலுக்கு யார் குடமுழுக்கு செய்வது எனும் அடிப்படை கேள்வி கூட அங்கு எழவில்லை. அப்ப 500 வருச மரபான பாரம்பரியம் இந்த விடயத்தில் எங்க போனது?

ஆதினத்தின் ஆடை மரபே வெள்ளையாடை மரபு தான். ஆனால் எப்போது அது காவிக்கு மாறியதுனு யாருக்கும் தெரியாது. ஆக சிவாகம மரபுகளை உடைக்கலாம். சைவ சித்தாந்த சாத்திர நூல்களின் கருத்துக்களையும், மாணிக்கவாசகரின் திருவாசக கருத்தையும் கூட மீறி நிகழ்கால அரசியல் ஆதாயத்திற்காக அமைதி காத்து நிற்கலாம். ஆனால் பட்டிணப் பிரவேசத்துக்கு பல்லக்கு தூக்க தடை கோரினால் மட்டும் அங்கு 500வருச மரபு. பாரம்பரியம். கலாச்சாரம். இதெல்லாம் திடீர்னு வெளில வந்து விழும். எல்லாமே அவனவனுக்கான அரசியல் தான்.

அவன் அருளாளே அவன் தாள் வணங்குற மாதிரி, சைவத்தை சைவமே காப்பாற்றிக்கொள்ளும். அவரவர் அவரவர் வேலைய பாருங்க.