சாணிக்காயிதம் – வன்முறையை நியாயப்படுத்த முயற்சி- சேவற்கொடி செந்தில்

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இயக்குனர் செல்வராகவன் , நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோரது நடிப்பில் சாணிக் காயிதம் படம் வெளியாகி உள்ளது. இந்த படம் இப்போ பேசப்பட வேண்டிய திரைப்படம் காரணம், இதில் எந்த ஒரு கலை நுட்பமோ , சமூக கருத்தோ முற்ப்போக்கு செய்திகளோ இல்லை. அதற்கு மாறாக பழிவாங்கும் நடவடிக்கை என்ற பெயரில் வன்முறையை நியாயப்படுத்தி உள்ளார் இயக்குனர் அருண் மாதேஸ்வரன். படம் ஆரம்பிக்கும் போதே இது ஒரு புனையப்பட்ட கதை , இதன் மூலம் வன்முறையை ஊக்குவிக்கும் எண்ணம் இயக்குனருக்கு இல்லை , நீங்கள் விருப்பபட்டால் பார்க்கலாம்.

அதாவது மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இருவர் திரைபடத்தின் போது கூட இது உண்மை கதை அல்ல கற்பனையே என்று கூறியிருப்பார்.ஆனால் அந்த இருவர் யார் என்று ஊருக்கு தெரியும். அது போல தான் வன்முறையை ஊக்குவிக்கும் எண்ணம் இல்லை என்று இயக்குனர் கூறியிருப்பது.சமூகத்தின் பிரச்சனைகளை பிரதிபலிப்பதில் சினிமாத்துறைக்கு மிகப்பெரிய பங்கு உண்டு,ஆனால் எதை பிரதிபலிக்க வேண்டுமோ அதை தவிர்த்து விட்டு கொலை செய்வதை ,ரவுடிசம் செய்வதை மாஸாக காட்டும் போது அந்த பருவத்தில் இருக்கும் மாணவன் இளைஞன் அதனை பெருமையாக கருதுகிறான். உதாரணமாக தனுஷ் நடித்த 3 மற்றும் வேலையில்லா பட்டதாரி வந்த காலகட்டத்தில் பள்ளிகாதல் மற்றும் வேலை இல்லாமல் இருப்பது பெருமையாக காட்டப்பட்டது. இன்னும் ஒரு படி மேலே சென்று காட்டிய பெருமை ஜி.வி. பிரகாஷ்க்கு சேரும் . திரிஷா இல்லேன்னா நயன்தாரா, ஜெயில் , பேச்லர், போன்ற படங்கள் மூலம் ஜிவி பிரகாஷ் என்ன இந்த சமூகத்திற்கு சொல்ல நினைக்கிறார். இது தான் இவரது கலை ரசனையா ?

தேவர் மகன் படத்திற்கு பல்வேறு விமர்சனம் வந்தால் கூட வன்முறை கூடாது என்று கமல்ஹாசன் கூற நினைத்ததை மிகப்பெரிய கலவரம் வன்முறை நடந்த பிறகு தான் அவர் கிளைமேக்ஸில் புள்ள குட்டிகள படிக்க வைங்கடா என்று சாதரணமாக கூறிவிட்டு சென்றுவிடுவார். இந்த கால கட்டத்தில் வன்முறை அவ்வளவு சாதாரணமாக மாறிவிட்டது. சாணிக் காயிதத்தில் பழிவாங்குவது என்றால் என்ன ? என்று கீர்த்தி சுரேஷ் ஒரு விளக்கம் கொடுப்பார். பழிக்கு பழி என்பது நியாயம் என மாறி அனைவரும் கையில் ஆயுதம் ஏந்தினால் எல்லாம் மாறிவிடுமா ?. ஆயுதத்தை கையில் ஏந்தி எத்தனை பேர் அதே ஆயுதத்தால் மாண்டவர்கள் எத்தனை பேர் என்பதை வரலாற்றை கொஞ்சம் பின்னோக்கி சென்று பார்த்தால் நமக்கு புரியும்.

சாணிக்காயிதம் வருவதற்கு முன்பு வந்த திரைப்படம் பயணிகள் கவனத்திற்கு. சமூக வலைத்தளத்தில் நாம் போடும் பதிவு எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்திவிடும் என்று என்னுபவர்களுகாக எடுக்கப்பட்ட படம். உடற்சோர்வால் ரயிலில் தூங்கியவரை குடிபோதையில் படுத்து கிடப்பதாக போலியாக ஒரு பதிவை முகநூலில் பதிவிட்டு அந்த மாற்றுத்திறனாளிக்கு வேலை போகும் நிலை , அனைவரும் ஏளனமாக பார்க்கும் நிலைக்கு வந்து மிகவும் மனம் உடைந்து போகிறான்.கடைசியில் அந்த செய்தி போலி என்று நிரூபித்து பதிவு போட்ட நபரை கண்டுபிடித்து விடுகின்றனர். அந்த நபரை பழிவாங்க அந்த மாற்றுத்திறனாளியை கையில் ஆயுதம் ஏந்தி குற்றவாளியாக மாற்றியிருக்க முடியும்.ஆனால் அந்த மாற்றுத்திறனாளி கூறியது அவருக்கு மிகப்பெரிய தண்டனை கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் அது அவரை மன்னித்து விடுவது தான் என கூறுகிறார். இதன் மூலம் இயக்குனர் கூற வருவது நாம் சாதாரண மனிதர்கள் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே உள்ள வாழ்க்கையை பிழைப்பு நடத்தாமல் தனக்கும் மற்றவர்களுக்கு உபயோகமுள்ள வாழ்க்கையாக வாழலாம்.

உங்களுக்கு கற்பனைத்திறனை ரசிக்கும் படி இருக்க வேண்டுமே தவிர முகம் சுளிக்கும் படி இருக்க கூடாது. சாணிக்காயிதத்தை வெறும் ஒரு கமர்ஷியல் படம் அதற்கு இவ்வளவு பெரிய விளக்கம் தேவையா என்ற எண்ணம் வேண்டாம். இப்போது உள்ள காலகட்டத்தில் அனைத்திலும் அரசியல் உள்ளது, நீங்கள் எதை மக்களிடத்தில் போதிக்கிறீர்கள் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. தீவிரவாதிகள் என்றால் முஸ்லிம் தோற்றத்தில் இருப்பார்கள் என்று பீஸ்ட்டில் படத்தில் காண்பிக்கப்பட்டதே அதனை சாதாரண கமர்ஷியல் விஜய் படம் என கடந்து சென்று விட முடியாதே. விஜய் ரசிகரே சங்கடபட்டு பேசிய பல வீடியோக்கள் இணையத்தில் உலா வந்துகொண்டிருக்கின்றன. அப்போ மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக முற்போக்கை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் போது அனைத்தையும் பகுப்பாய்வு செய்தாக வேண்டிய கடமை நமக்கு உள்ளது

சேவற்கொடி செந்தில்