இன்றைய போருக்கு காரணம் நேட்டோ, ரஷ்யா அல்ல! – குகன் யோகராஜா

கட்டுரையாளர்:  குகன் யோகராஜா

ரஷ்யா உக்ரைன் போர் தொடர்ந்து நடந்து வருகிறது. இரு பக்க சேதங்கள் எதிர்பார்க்கப்படவேண்டியவைதான். இந்த சூழலில் 3500 ரஷ்யப்படையினர் கொல்லப்பட்டமை என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன.எனினும் இந்தச் செய்தியினை மேற்குலக ஊடகங்களே ஒத்துக்கொள்ளவில்லை.

இப்படியான செய்திகள் பரப்பப்படுவது, ரஷ்யர்களிடையே தோல்வி மனப்பான்மையை உருவாக்க செய்வதோடு, அதன் மூலமாக அழுத்தங்களை அதிபர் புதினுக்கு கொடுக்கும் முயற்சியே என்பதே மேற்குலக ஊடகர்களின் கருத்து.

மேலும்,உக்ரைன் மீதான போரில் பொதுமக்களின் உயிரிழப்புக்கள், அவர்கள் படும்  சிரமங்களை மேற்குலகம் கூடுதலாக வெளியிட்டு வருவதன் காரணம், ஒட்டுமொத்தமான  ரஷ்ய எதிர்ப்பை ஐரோப்பிய மக்களிடையே உண்டாக்குவதன்மூலம், அதிபர் புதின்  அழிக்கப்பட வேண்டியவர் என்ற மனோநிலையை உண்டாக்குவது மட்டுமே.

இதே மேற்குலக ஊடகங்கள், ஈராக், லிபியா, எகிப்த், சிரியா, ஆப்கான் மீதான  தாக்குதல்களின்போது, பொதுமக்களின்  அழிவை விடவும், அவர்களின் கஷ்டங்களை  விடவும், அந்தந்த நாடுகளின் தலைமைகள்  கொடூரமானவர்கள் என்ற பிம்பத்தையே மேற்குலக மக்களிடம் விதைத்ததை அவதானித்தால், மேற்குலக ஊடகங்களின் அரசியலும்  மிக நன்றாக புரியும்.

உதாரணத்துக்கு, ஈராக் மீதான தாக்குதல்களுக்கு, ஈராக் அணுவாயுதம் தயார் செய்கிறது என்பதே முதன்மையான குற்றச்சாட்டு. அப்படி இல்லை என சுயாதீன அமைப்புக்கள் மறுத்திருந்தாலும், ஈராக் சென்று அங்கு  ஆய்வுகளை நடத்திய அமெரிக்க சார்பு ஆய்வுக்குழுக்கள், ஈராக் அணுவாயுதம் தயாரிக்கும்  அறிகுறிகள் தென்படுகின்றன என்றே அறிக்கை அளித்தன.

ஐ.நா. சபையின் எதிர்ப்பையும் மீறி  அமெரிக்க / நேட்டோ படைகள் ஈராக்கை  துவம்சம் செய்தன. தாக்குதல் தொடங்கி, அதிபர் சதாம் ஹுசைன் பிடிபடுவதற்கு முன்னரேயே, ஈராக்கில் அணுவாயுதம்  தயாரிக்கும் வசதியே இல்லையென்பது நிரூபணமானது.

எனினும், தமது படையெடுப்பை  நியாயப்படுத்த அமெரிக்க அதிபர் என்ன செய்தார் தெரியுமா..? ஈராக் அணுவாயுதம்  வைத்திருக்கிறது என்பது பிரச்சனையல்ல, ஆனால், 1980 களில் ஈரானுடனான  போரில் இரசாயனக்குண்டுகளை ஈராக் பாவித்தற்கான தண்டனையாக அதிபர் சதாம் ஹுசைனை தூக்கில் போடவேண்டும் என்று எழுதிக்கொடுத்ததை, அமெரிக்காவால்  அமைக்கப்பட்ட ஈராக் உயர்நீதிமன்ற நீதிபதி அப்படியே வாசித்து, அதிபர் சதாம்  ஹுசைனை  தூக்கில் போட்டார்.

போர் தொடங்கியது அணுவாயுதம் ஈராக்கிடம் உள்ளது என்பதற்காக. ஆனால், அதிபர் சதாம் ஹுசைனுக்கு தூக்கு வழங்கப்பட்டது வேறு ஒரு காரணத்துக்காக. இவை அனைத்தும் எந்த மேற்குலக ஊடகங்களிலும் வெளியாகவில்லை.

போர் நிறுத்தப்படும் வரையிலும் அதிபர் சதாம் ஹுஸைன் கொடூரமானவர், அவர் அழிக்கப்படவேண்டயவர் என்ற முதன்மைக்கருத்தையே மேற்குலக ஊடகங்கள் (குறிப்பாக CNN, BBC போன்றவை) வெளியிட்டு வந்தன. இவையெல்லாம் அதிபர்  சதாம் ஹுஸைனுக்கு எதிராக  கட்டமைக்கப்பட்ட கடும் பரப்புரைகளாகவே இருந்தன.

எனினும், ஈராக் அணுவாயுதம் வைத்திருந்தது என்ற குற்றச்சாட்டு பொய் என்றும், பொய்யான  அறிக்கையின்படியே ஈராக் மீது தாக்குதல் நடத்தப்பட்டது எனவும், இது குறித்து தனக்கு  முன்பே தெரியும் என்றும், ஈராக்கிய  போரில் அமெரிக்காவுக்கு தோளோடு தோள் நின்று உதவிய அன்றைய பிரித்தானிய பிரதமர் டோனி பிளைர், பிரித்தானிய  நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்ட பின்பே இந்த விடயங்களை ஒவ்வொன்றாக “அல் ஜசீரா” போன்ற ஊடகங்கள்  வெளிக்கொண்டு வந்தன.

ஆக,மேற்குலகம் தனக்கு வேண்டியதை செய்து முடிப்பதற்கு எக்காரணத்தையும் சோடிக்க பின்நிற்காது. இதுவே இன்றைய உக்ரைன்  போரிலும் கடைப்பிடிக்கப்படுகிறது.

உக்ரைன் மீதான போரை வரவேற்பது நோக்கமல்ல. ரஷ்யா, உக்ரைன் மீது  படையெடுப்பதற்கு நியாயமான காரணங்கள் உண்டு. அதை அலச வேண்டுமானால் 1990 ஆம் ஆண்டிலிருந்து நோக்க வேண்டும். இன்றைய போருக்கு முழுமுதல் காரணம் நேட்டோ மாத்திரமே ஒழிய ரஷ்யா அல்ல!

நன்றி : குகன் யோகராஜா