தமிழக ஆளுநருக்கு பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவரின் கடிதம்!

                                                                                                                                                             

சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் கடந்த 06.05.2022 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, ‘பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம்’ எனப் பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியது. அமைதிப்பூங்காவான தமிழகத்தில் பா.ஜ.க.,ஆர்.எஸ்.எஸ். போன்ற சங்பரிவார் அமைப்புகள் எப்படியாவது மதரீதியிலான பிரச்சனைகளை ஏற்படுத்தி அதன் மூலம் தங்கள் இருப்பை உறுதி செய்து கொள்ளவேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்ற சூழலில் ஆர்.எஸ்.எஸ்.அமைப்புகளை வளர்த்துவிடுவதற்கு வழிவகை செய்யும் விதமாக சமூக இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் மீது அபத்தமான குற்றசாட்டை முன் வைத்து ஆளுநர் பேசியதற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்தது. தமிழகம் எப்பொழுதும் வகுப்புவாதத்தையோ அல்லது பொய்யான குற்றச்சாட்டுகளையோ அங்கீகரிக்காது என்பதற்கு சான்றாக பாப்புலர் ஃப்ரண்ட் மீது அவதூறு சுமத்திய ஆளுநரை கண்டித்து தமிழகத்தில் உள்ள பல்வேறு சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள், இயக்கங்கள், ஜமாஅத்கள், சமூக ஆர்வலர்கள், முக்கியஸ்தர்கள்என அனைவரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். மேலும், பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக வன்மையான கண்டனத்தை பதிவு செய்யும் விதமாக பெருந்திரளாக மக்களை ஒருங்கிணைத்து ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக பாப்புலர் ஃப்ரண்ட் மீது அவதூறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆளுநரின் ஆர்.எஸ்.எஸ் மனநிலை பொறுப்பற்ற பேச்சை திரும்பப்பெற வேண்டும்  என ஆளுநருக்கு பாப்புலர் ஃப்ரண்ட் கடிதம் அனுப்பியுள்ளது.  அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது

மதிப்பிற்குரியஆளுநர் அவர்களுக்கு, 

கடந்த மே 6,2022 அன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பற்றி நீங்கள் கூறிய இழிவான கருத்துகளுக்கு பதிலளிக்கும் விதமாக இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.  உங்கள் உரையில் ”பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மிகவும் ஆபத்தான அமைப்பு. இது பதினாறுக்கும் அதிகமான துணை அமைப்புகளை, முகமூடிகளை கொண்டுள்ளது. மனித உரிமை முகமூடி, மறுவாழ்வு பணிகளை மேற்கொள்ளும் முகமூடி, மாணவர் அமைப்பு போன்ற முகமூடிகளை கொண்டுள்ளது. மேலும், இது ஒரு அரசியல் கட்சி வடிவத்தையும் எடுத்துள்ளது. ஆனால், அதன் முழுநோக்கமும் இந்த நாட்டை சீர்குலைப்பதேயாகும்.” என்று குறிப்பிட்டிருந்தீர்கள். பொது வெளியில் எங்கள் இயக்கத்தை தவறான கண்ணோட்டத்தில் நீங்கள் சித்தரித்த பாங்கு தேவையற்றது மற்றும் அவசியமற்றது. இச்செய்தி ஊடகங்களில் பரவலாக  வெளியாகி எங்கள் இயக்கத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்துள்ளது. எங்கள் அமைப்பிற்கு எதிராக நீங்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை; அடிப்படை ஆதாரமற்றவை; கற்பனையானவை மற்றும் அவதூறானவை. உங்களின் கருத்துகள் எங்களுக்கு மிகுந்த வேதனையையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் ஏதோ ஒரு சிறு ஊருக்குள்ளோ, நகருக்குள்ளோ, தெருவுக்குள்ளோ மட்டும் இயங்கிக் கொண்டிருக்கும் தான்தோன்றித்தனமான ஒரு சின்னஞ்சிறு குழு அல்ல. எங்களின் அமைப்பு 17 மாநிலங்களில் இலட்சக்கணக்கான உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் கொண்ட அகில இந்திய அமைப்பாகும். எங்கள் அமைப்பு சாதி, மதம், பாலினம், இனம், மொழி, கலாச்சாரம் மற்றும் பிரதேசம் ஆகியவற்றை கடந்து நமது நாட்டிற்கும் மக்களுக்கும் சேவை செய்யும் ஒரு அமைப்பு என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். எங்களுடைய செயல்பாடுகள் மூலம் நாட்டின் சகோதரத்துவம், ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்காக பாடுபட்டு வருகின்றோம். நாங்கள் ஒரு திறந்த புத்தகம்; எங்கள் செயல்பாடுகள்  வெளிப்படையாவை; அதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை. நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு செயல்படும் எங்களுக்கு, நீங்கள் குற்றம் சாட்டுவது போல் முகமூடி அணிந்து செயல்பட வேண்டிய எந்த அவசியமும் இல்லை.  ஐஎஸ்ஐஎஸ் (ISIS) போன்ற வெளிநாடுகளில் செயல்படும் அமைப்புகளின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளை நாங்கள் எங்கள் அறிக்கைகளின் மூலம்  தெளிவாகக் கண்டித்துள்ளோம். உண்மையில், ஐஎஸ்ஐஎஸ்-க்குஎதிராக முதலில் பிரச்சாரம் செய்த அமைப்புகளில் நாங்கள் ஒன்று. தேச விரோதச்செயல்களில் ஈடுபட்டதாக ஒரு வழக்கு கூட எங்களுக்கு எதிராக இதுவரை நிரூபிக்கப்படவில்லை. ஏனெனில், எங்களின் இலக்கும் தொலைநோக்குப்பார்வையும் தெளிவானது. எங்களின் உள்ளமும் கரங்களும் எப்போதும் பரிசுத்தமாகவும் நேர்மையாகவும் உண்மையாகவுமே உள்ளன.  தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்பு நிலை சமூக மக்கள் தங்களின்  சமூக-பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் அதிகாரத்தை அடைவதற்காக கடந்த 15 ஆண்டுகளாக தொலைநோக்கு பார்வையுடன் செயல்படும் ஒரு சமூக அமைப்பே பாப்புலர் ஃப்ரண்ட்ஆஃப் இந்தியா என்பதை உங்களின்  கனிவானகவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நாங்கள் நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றோம். பெருவெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களின்போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளோம். 2020மற்றும் 2021-ஆம்ஆண்டுகளில் கொரோனா பெருந்தொற்று பரவலின்போது, பரவலான நோய்த்தொற்றின் காரணமாக உயிருக்கு அச்சுறுத்தல் இருந்த போதிலும், பாப்புலர்ஃப்ரண்ட் உறுப்பினர்கள், கைவிடப்பட்ட நூற்றுக்கணக்கான இறந்த உடல்களை சாதி, மதம், இனம் மற்றும் பாலினம் ஆகியவற்றை கடந்து கண்ணியமான முறையில் அடக்கம் செய்தனர். ஆயிரக்கணக்கான ஏழை மக்களுக்கு அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை  விநியோகித்துள்ளோம். அதுமட்டுமல்லாமல், ஏழை மற்றும் தேவையுடைய மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் அவர்களின் உயர்கல்விக்கான உதவித் தொகைகளை வழங்கி வருகிறோம். அதேபோல நாங்கள் இரத்த தான முகாம்கள், மது மற்றும் போதைப்பொருள்களுக்கு எதிரான பிரச்சாரத்தையும் நடத்தியுள்ளோம். மேலும், ஒன்றிய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத கொள்கைகள் மற்றும் வகுப்புவாத அணுகுமுறையை ஜனநாயக மற்றும் சட்ட வழி முறைகளின் மூலம் கடுமையாக எதிர்த்து வருகிறோம். எங்களின் சமரசமற்ற நிலைப்பாடு மற்றும் உறுதியின் காரணமாக, தற்போதைய ஒன்றிய ஆட்சியானது வேண்டுமென்றே எங்கள் மீது அவதூறுகளை சுமத்துவதுடன் அரசியல் பழிவாங்கலுக்காக அவர்களின் கைப்பாவையாகச் செயல்படும் ஊடகங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள், விசாரணை அமைப்புகள் ஆகியவற்றின் மூலம் எங்களின் செயல்பாட்டு சுதந்திரத்தை முடக்குவதற்கு முயற்சிக்கின்றது.  சமூக நல்லிணக்கம் மற்றும் தேசத்தின் வளர்ச்சிக்காக பாடுப்படுவதற்கு எங்கள் அமைப்பு உறுதி பூண்டுள்ளது என்பதை நாங்கள் மீண்டும் தெளிவுபடுத்துகிறோம். எங்கள் மீதான சந்தேகங்களை தெளிவுபடுத்துவதற்கு எப்போதும் தயாராக இருக்கிறோம். அரசியல் சாசன அதிகாரத்தை கொண்ட மாண்புமிகு ஆளுநர், பொய் மற்றும் இழிவான அரசியல் அறிக்கைகளை ஒரு அமைப்பிற்கு எதிராக தெரிவிப்பது துரதிருஷ்டவசமானது. ஆளுங்கட்சியின் சித்தாந்தத்திற்கு எதிரான கருத்துகளைஒடுக்குவதற்கு ஆளுநர் பதவி பயன்படுத்தப்படுவது உண்மையில் ஒரு வருத்தத்திற்குரிய நடைமுறையாகும். மாண்புமிகு ஆளுநரின் இச்செயல் அரசியல் சாசனத்திற்கு எதிரானது.   எனவே, இக்கடிதத்தில் கூறப்பட்டுள்ள விளக்கத்தையும் தெளிவையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு எங்களுக்கு எதிரான இழிவான கருத்துகளை திரும்பப்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம். நேர்மறையான பதிலை தங்களிடமிருந்துவிரைவில் எதிர்பார்க்கிறோம்.

இப்படிக்கு

M. முஹம்மது சேக் அன்சாரி
மாநில தலைவர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.