கோவிந்தசாமி நகர்: தரைமட்டமாக்கப்படும் வீடுகள், நொறுங்கும் ஏழைகளின் கனவுகள்…விக்கி கண்ணன்

திமுக அரசின் ஓராண்டு கால சாதனை நாள் அன்று சென்னை இராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகரில் 300 வீடுகளை இடிக்கும் சம்பவம் நடந்து வரும் சூழலில், இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்தவர் இன்று மரணமடைந்தார்.

மந்தைவெளி டூ பசுமைவழிச்சாலை இரயில் பாதையின் நடுவே அமைந்துள்ள கோவிந்தசாமி நகரில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 60ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றன. இந்த இடம் நீர்நிலை புறம்போக்கு என்றும் கோவிலுக்கு சொந்தமான நிலம் என்றும் அறியப்படுகின்றன. முண்டகண்ணியம்மன் எனும் அம்மன் சன்னதியும் நதிக்கரையில் அமைந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2006ஆம் ஆண்டு இந்த இடத்தை இராஜீவ் ராய் எனும் மார்வாடி இங்குள்ள உழைக்கும் மக்களின் வீடுகளை அகற்றிட பொதுநல வழக்கை நீதிமன்றத்தில் தொடர்ந்திருக்கிறார். தமிழக அரசு தரப்பில் சரியான வாதங்கள் வைக்கப்படவில்லை என்றும் அதனாலேயே இந்த வழக்கில் இராஜீவ் ராய் வெற்றி பெற்றிருக்கிறார் என்றும் கூறுகிறார்கள். இந்நிலையில் இன்று பெரும்பாலான வீடுகளை அகற்றும் பணியில் அரசு அதிகாரிகள் காவல்துறை உதவியுடன் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். மாற்று இடத்திற்கான டோக்கன் கூட வீட்டை இடிக்கும் சமயத்தில் தான் தரப்படுகிறது. நேற்று காலையில் ஐயா நல்லகண்ணு வருகை தந்து அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். முதல்வர் நிறுத்தக்கோரியதாக தகவல் தெரிவித்தார். எனினும் தற்போது மீண்டும் இடிக்கும் பணி நடக்கிறது. எந்த அரசியல்வாதிகளும் ஊடகங்களும் இதனை பேசாத நிலையில், நேற்று காலை வீடுகளை இடிக்கும் பணியினை நிறுத்துவதற்காக ஒருவர் தீக்குளித்து படுகாயம் அடைந்திருக்கிறார். இச்சம்பவம் இராஜா அண்ணாமலைபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவிந்தசாமி நகரில் நடந்துவரும் வீடுகள் இடிப்பு சம்பவம் கடந்த மூன்று நாட்களாக நடந்து வருகிறது. ஆனால் ஆளும் தரப்பில் இருந்து இந்த தொகுதியில் வெற்றிபெற்ற கவுன்சிலர், மாவட்ட செயலாளர், எம்எல்ஏ என யாரும் களத்திற்கே வரவில்லை. தருமபுர ஆதின பட்டினப்பிரவேசத்திற்கு மதிப்பளித்து சுமூகமாக தீர்வு கண்ட முதல்வருக்கு கோவிந்தசாமி நகர் மக்களின் பிரச்சனைக்கு சுமூகமாக தீர்வு காண முடியாதது ஏனோ?

மைலாப்பூர் தொகுதியில் திமுகவிற்கு வாக்களித்ததெல்லாம் யார்? மைலாப்பூர் ஆத்து மாமாக்களா? உழைக்கும் வர்க்கத்தினர் தானே? ஓட்டு கேட்கும்போது இருந்த பாசம் நேசம் எல்லாம் ஆட்சிக்கு வந்த ஓராண்டில் காணாமல் போவது விந்தை!

எல்லாவற்றிற்கும் தான் தான் காரணம் என்று மார்தட்டி கொள்ளும் தமிழக அரசு, கோவிந்தசாமி நகரில் நடந்துவரும் சம்பவத்திற்கும் பொறுப்பேற்குமா?

எந்த அரசியல் தலைவர்களும் தங்களுக்கு உதவாத சூழலில் தன் உயிரையும் மாய்த்துக்கொண்டு கோவிந்தசாமி நகர் மக்களின் வாழ்விடத்தை பாதுகாக்க கண்ணையா என்பவர் தீக்குளித்து உயிரை இழந்துள்ளார்.

இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? என்று நாங்கள் கேட்கவில்லை. கோவிந்தசாமி நகர் மக்கள் கேட்கிறார்கள். பதில் சொல்லுங்கள் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே!

முறையான மாற்று இடம் வழங்கப்படாமல், 10,11,12 ஆம் வகுப்பு தேர்வுகள் நடப்பதை கூட பொருட்படுத்தாமல், பெண்களை ஆபாச வார்த்தைகளால் திட்டியும், பூட்டிய வீட்டின் கதவை அரசு அதிகாரிகளே உடைத்து பொருட்களை தூக்கி வெளியில் போட்டு செய்துவந்த அடாவடியை தாங்க முடியாமல் பெட்ரோல் கேனை கையில் எடுத்து வந்து தீக்குளித்தார் முதியவர் கண்ணையா. ஆனால் அரசு அதிகாரிகளும் காவல்துறையும், ‘நீ இல்ல. இன்னும் பத்து பேர் செத்தாலும் நாங்க எங்க வேலையை நிறுத்தமாட்டோம்’ என கூறியதை கோவிந்தசாமி நகர் மக்கள் பலரும் பார்த்தனர். இந்நிலையில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார் கண்ணையா. ஆனால் அதை தடுக்கவும் கூட காவல்துறையும் அரசு அதிகாரிகளும் முன்வரவில்லை. அவர் உடலில் தீப்பற்றி எரியும்போதும் கூட மிக அலட்சியமாக வேடிக்கை பார்த்தது காவல்துறை. மக்கள் தான் சாக்குபையையும் வாழை இலையையும் கொண்டு வந்து போர்த்தி தீயை அணைத்தனர்.

மக்கள் மீது துளியும் இரக்கமின்றி, முதியவர் கண்ணையாவின் இறப்பிற்கு காரணமான DRO ஜெயராஜ், மாவட்ட ஆட்சியர் விஜயராணி, மைலாப்பூர் உதவி ஆணையர் சுப்ரமணி, நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரி இராஜ்திலக், பொதுப்பணித்துறை அதிகாரி E.E ஜெயக்குமாரி மற்றும் சம்பந்தப்பட்ட சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விக்கி கண்ணன்.