ஜேஎன்யு-வில் முனைவர் பட்ட நேர்காணலில் தலித், ஆதிவாசி மாணவர்களுக்கு பாரபட்சம் – ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

டெல்லி பல்கலைக்கழகத்தில் விளிம்பு நிலை மாணவர்களை குறிவைத்து அவர்களை ஒதுக்குவதை எதிர்த்து பல்வேறு மாணவர் அமைப்புகள் போராட்டங்களை நடத்தியதால், தற்போது பல்கலைக்கழகங்களில் இந்த பிரச்சினை வெடித்துள்ளது.

டெல்லி: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பிஎச்டி (phd)  படிப்புகளுக்கான நேர்காணலில் பாரபட்சமாக மதிப்பெண்கள் அளிப்பதாக புகார்கள் எழுந்ததையடுத்து, மாணவர்களின் பிரதிநிதிகள் குழு, விண்ணப்பித்த மாணவர்கள் மதிப்பீடு செய்யப்பட்ட விதம் குறித்து தங்களது வேதனையை தெரிவிக்கும் வகையில், துணைப் பதிவாளரை சந்தித்தனர்.

பட்டியல் சாதிகள், பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் தொடர்ந்து குறைந்த மதிப்பெண்கள் வழங்கியதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் ஐஷே கோஷ், பல்கலைக் கழகத்திற்கு எழுதிய குறிப்பில் கூறியிருப்பதாவது: எழுத்துத் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற போதும் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட மாணவர்களின் பல சான்றுகளை மாணவ தொழிற்சங்கம் பெற்றுள்ளது.

மாணவர் சேர்க்கைக்கான வைவா மதிப்பெண்கள் 0-5 அல்லது 25-30 வரம்பில் உள்ள மதிப்பெண்களுடன் ஒரு விசித்திரமான விநியோகத்தைக் காட்டுகின்றன. பெரும்பாலான சூழ்நிலைகளில், சராசரி மதிப்பெண்கள் 10-20க்கு இடையில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேர்முகத்தேர்வு வாரியம் இந்த இருதரப்பு மதிப்பெண் வினியோகத்தை வைவா (நேர்காணல் கேள்வி பதில் ) அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்ய அல்லது நிராகரிக்க பயன்படுத்துகிறது என்பது தெளிவாகிறது.

அஜய் ஹாசியா மற்றும் காலித் முஜிப் செஹ்ரவர்தி & ஆர்ஸ் வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் 1980 ஆம் ஆண்டு வழங்கிய 30% வைவா வெயிட்டேஜ்  தீர்ப்பை பல்கலைக்கழகம்  மீறுவதாக அகில இந்திய மாணவர் சங்கம்  செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

பெஞ்ச் தனது தீர்ப்பில், “தற்போதுள்ள சூழ்நிலையில், வாய்வழி நேர்காணலுக்கான மொத்த மதிப்பெண்களில் 15% க்கும் அதிகமாக ஒதுக்குவது தன்னிச்சையானது மற்றும் நியாயமற்றது என்று நாங்கள் கருதுகிறோம். இது அரசியலமைப்பு ரீதியாக செல்லாது.

2011 ஆம் ஆண்டில், ICAR இன் வைவா தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம், 1980 ஆம் ஆண்டின் இந்த தீர்ப்பின் செல்லுபடியை மற்றொரு தீர்ப்பில் உறுதி செய்தது. எனவே, புறநிலை மற்றும் பாரபட்சமற்ற சேர்க்கை அளவுகோலை நிறுவுவது காலத்தின் தேவை.

நேர்காணலின் மொத்த மதிப்பெண்களை 15 மதிப்பெண்களாகக் குறைக்க வேண்டும் என்ற அப்துல் நஃபே கமிட்டி அறிக்கையின் பரிந்துரைகளை பல்கலைக்கழகம் பின்பற்றவில்லை என்று மாணவர்கள் குற்றம் சாட்டினர். பல்கலைக்கழகத்தால் 2016 இல் நிறுவப்பட்ட குழு, 2012 முதல் 2015 வரையிலான சேர்க்கை தொடர்பான தரவுகளை ஆய்வு செய்தது.

2013 ஆம் ஆண்டின் சேர்க்கை தரவுகளின் அடிப்படையில் தோரட் கமிட்டியின் அறிக்கையையும் குழு ஆலோசித்தது. அதில் அந்த குழு “பாகுபாட்டைக் குறிக்கும் அனைத்து சமூகப் பிரிவுகளிலும் எழுதப்பட்ட மற்றும் வாய்மொழி மதிப்பெண்களில் உள்ள வேறுபாட்டின் வடிவத்தை தரவு தொடர்ந்து குறிக்கிறது என்பது குழுவின் பரிசீலிக்கப்பட்ட பார்வை.

 எனவே தற்போது 30 மதிப்பெண்ணில் இருந்து 15 மதிப்பெண்ணாக நேர்முக கேள்வி பதில் சுற்று மதிப்பெண்கள் குறைக்கப்பட்டால் பாரபட்சமான முறை தணிக்கப்படும் என்று பரிந்துரைக்கிறது. பல்கலைக்கழகம் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் ” என்று குறிப்பிட்டது.

இந்த பிரச்சினை மற்ற பல்கலைக்கழகங்களில் வெடித்ததை தொடர்ந்து பாகுபாடுகளுக்கு எதிராக மாணவர்கள் போராட்டங்களை நடத்துகிறார்கள். சமூகத்தின் விளிம்புநிலைப் பிரிவுகளான SC/ST/OBC/PWD போன்ற மாணவர்களின் PhD viva வாய்ஸ் மூலம் இலக்கு ஒதுக்கப்பட்டதை எதிர்த்து இந்திய மாணவர் கூட்டமைப்பு மற்ற மாணவர் அமைப்புகளுடன் இணைந்து டெல்லி பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தில் போராட்டம் நடத்தியது.

பிஎச்டிக்கான தேர்வு நேர்காணலில் விளிம்புநிலை சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மிகவும் குறைவாகத்தான் சேர்ந்துள்ளார்கள் என்று போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர். இது ஜேஎன்யுஇஇயில் அரசியலமைப்புச் சட்டப்படி விதிக்கப்பட்ட இடஒதுக்கீட்டுக் கொள்கையை மீறுவதாகும்.

கண்டனக் கூட்டத்தில் கலந்து கொண்ட விகாஸ் குப்தா, வரலாற்றுத் துறை, டெல்லி பல்கலைக்கழகம்; அபா தேவ் ஹபீப், (மிராண்டா ஹவுஸ் கல்லூரி) மற்றும் ஜிதேந்திர மீனா, (ஷியாம் லால் கல்லூரி) போன்றோர் பல்கலைக்கழகத்தில் நிகழும் பாரபட்சமான கொள்கை குறித்து  கவலை தெரிவித்தனர்.

விகாஸ் குப்தா,  “நேர்காணல் செயல்முறை மாற்றுத் திறனாளர்கள்  (pwd)  பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. எனவே, நேர்காணல்கள் மிகவும் தப்பெண்ணத்துடன் இருக்கும் என்பதால், நேர்காணலைத் தவிர மாணவர்களை மதிப்பிடுவதற்கு பிற வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்” என்றார்.

நேர்காணல் அட்டவணையின் குறுகிய காலத்தைப் பற்றிப் பிரதிபலிக்கும் வகையில், முன்னாள் டெல்லி பல்கலைக்கழகத்தை சேர்ந்த உறுப்பினர் அபா ஹபீப், “ஒரு நேர்காணலின் 5-10 நிமிடங்களில் மாணவர்களின் கற்றல் மற்றும் அறிவை நீங்கள் மதிப்பீடு செய்ய முடியாது.

ஒரு குறிப்பிட்ட துறையில் மாணவரின்  அறிவு மற்றும் கற்றல் திறனை அணுகுவதற்கு எங்களிடம் வெவ்வேறு வழிகள் உள்ளன” என்று குறிப்பிட்டார்.

விவேகானந்தர் கல்லூரியின் ஆசிரியை ஜிதேந்திர மீனா, ஆங்கில மொழி எவ்வாறு விலக்கு சக்தியாக இருக்க முடியும் என்பது குறித்து கருத்து தெரிவித்தார். மேலும், “பல்வேறு முறைகளில் பாரபட்சம் விளையாடுகிறது.

ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதற்கு தடையாக இருப்பது ஒரு துறையைப் பற்றிய அறிவுக்கு ஒரு குறிகாட்டியாக இல்லை. பல திறமையான இந்தி மீடியம் மாணவர்கள் உயர்கல்வியிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள்” என்று கூறினார்.

கலைப் பீடத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, டெல்லி எஸ்.எஃப்.ஐ-யின் மாநிலத் தலைவர் சுமித் கட்டாரியா தலைமை வகித்தார். அவர் கூறுகையில், “ஜேஎன்யுவில் உள்ள நிறுவன பாகுபாட்டின் கதைக்கு நீண்ட வரலாறு உண்டு.

 2017ல், நான் உட்பட SC/ST மற்றும் OBC பின்னணியில் உள்ள பல மாணவர்களுக்கு வைவா நேர்காணலில் 1 அல்லது 2 மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இதற்கு எதிராக 2017ல் SFI மனு தாக்கல் செய்து,நஃபே கமிட்டி 15% மதிப்பெண் ஒதுக்கீட்டை கேள்வி பதில் நேர்காணல் சுற்றுக்கு பரிந்துரைத்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மக்களின் கோரிக்கை 10%தான். அதனால் இதை உடனடியாக அமல்படுத்த வேண்டும்” என்றார்.

நன்றி : News Click

தமிழாக்கம் : யாழினி ரங்கநாதன்