பொன்னியின் செல்வனும் தமிழினமும்!- முனைவர் விஜய் அசோகன்

சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, பொன்னியின் செல்வன் மூன்றும் அடுத்தடுத்து (கி.பி 900 – 1100) நிகழ்ந்த தொடர் தமிழின வரலாறுகளின் பின்னணியில் புனைவாக எழுதப்பட்டிருந்தாலும் அதை நான் படித்தக் காலம் ஈழத் தமிழர்கள் தனித் தேசக் கனவோடு தொடர் தியாகப் போராட்டங்களை நிகழ்த்திக் கொண்டிருந்த காலம்!

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழப்பேரரசுகள் உலகளாவிய அளவில் புகழ்ப்பெற்றிருந்தும் படிப்படியாக தொடர்ந்து சரிந்து, காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்து தலைநகர் உறையூர் ஆக மாறி, சோழப் பெருநிலம் திருச்சியின் காவேரி ஆற்றங்கரை ஒட்டியப் பகுதிகளுக்கு மட்டும் சுருங்கிய குறுநிலமாக நின்று, பல்லவப் பேரரசு கோலோட்சி கொண்டிருந்தக் காலத்தில் சிவகாமியின் சபதமும் பார்த்திபன் கனவும் புனைவாக எடுத்துக் கூறிய வரலாற்றுத் தொடர் நிகழ்வுகள் நடந்தேறியது.

பார்த்திபச்சோழனின் பெருந்தேசக் கனவோடு தொடங்கிய சோழர்களின் மீள் எழுச்சிப் போராட்டங்கள், தொடர்ந்து வந்த சோழர்களின் வீரத்தினால் சோழத்தேசம் மெல்ல மெல்ல எழுந்து, அன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழப் பெருநிலத்தை சோழவள நாடாக ஆட்சிச் செய்து, உலகளாவிய அளவில் புகழ் பரப்பிய கரிகாலச் சோழனின் வீரத்தின் சாயல் கொண்ட ஆதித்தக் கரிகாலன் எனும் மாவீரனின் போராற்றால் மீண்டெழுந்து, சோழ நிலம் மெல்ல மெல்ல விரிவடைந்துக் கொண்டிருந்தக் காலத்தினை பொன்னியின் செல்வன் முன் கொண்டு வந்தது.

ஆதித்தக் கரிகாலன் வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்டக் காலத்தின் பின் பொன்னியின் செல்வன் மேல் எழுந்து சோழப் பெருந்தேசத்தின் எல்லையை பிரம்மாண்டமாக கடல் கடந்தும் விரிவு படுத்தினார்.

இந்த மூன்று வரலாற்றுப் புனைவு நாவல்களையும் படித்துக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில் ஈழத்திலும் பார்த்திபன் (திலீபன் அவர்களின் இயற்பெயர்) பெரும் கனவோடு தன்னை வருத்தி உண்ணா நோன்பு இருந்து உயிர்த் துறந்த வரலாற்றையும் படித்துக் கொண்டிருந்த அன்றைய கல்லூரி வயது இளைஞன் ஆன எனக்கு, இக்கதைகள் வரலாற்றையும் நிகழ்காலத்தையும் ஒன்று சேர்த்து சில பாடங்களை நடத்தியதாகவே உணர்ந்தேன்.

பார்த்திபனின் கனவிற்கு பிறகு கரிகாலன் வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்ட பின் பொன்னியின் செல்வர்கள் உருவாகி வருவார்கள் என்பது வரலாற்றின் உறுதியான பக்கங்கள்…

சில நூற்றாண்டுகள் கூட ஆகலாம்! ஆனால், தமிழின வரலாற்று மீள் எழுச்சி நிகழ்ந்தேத் தீரும் என்ற உறுதியோடு நாமும் கனவு காண்போம்!

சிந்தித்தோம் பெருந்தேச கனவினை
சந்தித்தோம் கடும் போரின் கெடு வினை
நிந்தித்தோம் கொடுந் கூட்டப்பகை அழித்தோம்

மன்னித்தோம் அடி விழுந்த பகைவரை
தண்டித்தோம் எதிர் நின்ற கயவரை
கண்டித்தோம் அடங்காரை சிறை எடுத்தோம்

கற்பித்தோம் உயிர் சோழம் என
ஒப்பித்தோம் அதை வேதமென
மேகந்தொட்டு வானம் எட்டு
வேங்கை புலி இமயம் நாட்டு

முனைவர் விஜய் அசோகன்