ஆளுநர் மாளிகை முற்றுகை- அனைத்து தமிழ்நாடு மாணவர் சங்கம்.

தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரை தமிழக அரசே நியமிப்பதற்கான மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அனுப்பப்பட்ட பல மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்து தமிழக மக்களின் உரிமைகளுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

மேலும் அவருடைய அதிகார வரம்பினை மீறி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப் பட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் திருப்பி அனுப்பினார். மீண்டும் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டு பிப்ரவரி 8ஆம் தேதி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. சுமார் இரண்டு மாதங்களாகியும் மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படவில்லை. முதலமைச்சர் நேரில் சென்று வலியுறுத்தியும் பலனில்லை. இதுபோன்று பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து பாஜக அரசு பனிப்போர் நடத்தி வருகிறது. மாநில அரசுகளை கட்டுப்படுத்த டெல்லியிலிருந்து நீளும் கையாக ஆளுநர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அறிவிக்கப்படாத எதிர்கட்சிகள் போல் சில இடங்களில் ஆளுநர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

கூட்டுறவு சங்கங்களின் பதவிக் காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்கும் சட்ட திருத்த மசோதா, பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் சுயநிதி கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் இருந்து 5 உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பான மசோதா, தமிழக மீன் வள பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை தமிழக அரசே நியமிப்பது தொடர்பாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா, மாநில சட்ட கமிஷனின் பரிந்துரைகளை ஏற்று, சில சட்டங்களை வாபஸ் பெறுவது தொடர்பான மசோதா கிடப்பில் போடப்பட்டுள்ளன.

தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்துக்கு துணை வேந்தரை தமிழக அரசே நியமிப்பது குறித்து நிறைவேற்றப்பட்ட மசோதா, டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளில் பொதுத் தமிழை ஒரு பாடமாக சேர்ப்பதற்கான மசோதா, கூட்டுறவு சங்கத்தில் இயக்குனர் குழுவை சஸ்பெண்ட் செய்யும் பட்சத்தில், உடனடியாக நிர்வாக அதிகாரி ஒருவரை பதிவாளர் நியமிக்கும் அதிகாரம் வழங்குவதற்கான சட்ட திருத்த மசோதா, சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிக்கும் தேர்வு கமிட்டி தொடர்பான மசோதா என பல மசோதாக்கள் ஆளுநர் மாளிகையில் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

ஆளுநர் சட்டமன்ற மசோதாக்கள் மீது முடிவெடுக்க கால நிர்ணயம் இல்லை எனப்படுகிறது. அப்படியென்றால் ஆளுநர் காலம் தாமதிக்காமல் உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என்பது தான் பொருள்.

புதிய உலக கட்டமைப்பில் இந்தியாவின் பங்களிப்பு’ மற்றும் ‘2047ஆம் ஆண்டிற்குள் உலக நாடுகளை வழிநடத்தும் நாடாக இந்தியா இருக்க வேண்டும்` என்ற தலைப்பிலும் இரண்டு நாள் கருத்தரங்கு ஏப்ரல் 25, 26 ஆகிய தேதிகளில் ஆளுநர் மாளிகை ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு அறிவிக்காமல் தன்னிச்சையாக மாநில நிர்வாகத்தில் தலையிடும் ஆளுநரின் இந்தப்போக்கு கண்டிக்கத்தக்கது.

இதில் இந்துத்துவ கொள்கைவாதிகளாக செயல்படும் எம்.ஜெகதீஷ் குமார், சோஹோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர். 25-30 ஆண்டுகள் கல்வியாளர்களாக செயல்பட்டு துணைவேந்தர்களாக நியமிக்கப்படும் நபர்களுக்கு ஒரு தனியார் நிறுவனத்தின் தலைவரை சிறப்பு அழைப்பாளராக கொண்டு கல்வி குறித்து பாடமெடுப்பது எத்தனை அவமானகரமானது. துணைவேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் நடத்துவதற்கு எவ்வித அதிகாரமும் இல்லாதபோது தன்னிச்சையாக மாநில அரசுக்கு தெரியபடுத்தாமல் ஆளுநர் இவ்வாறு நடந்துக்கொள்வது போட்டி அரசாங்கத்தை நடத்துவது போன்றது. இம்மாநாட்டில் ஆளுநர் பேசுகையில், ‘இந்தியாவில் சுதந்திரத்துக்கு முந்தைய கல்வி முறை அப்போதைய சூழலுக்கு ஏற்றவாறு இருந்தது. ஆனால், தற்போது நாடு வளர்ந்து வரும் சூழ்நிலைக்கு ஏற்ப கல்வி முறையில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்’என்று கூறினார். அப்படியானால் சுதந்திரத்திற்கு முந்தைய ஆங்கிலேயர் காலத்தில் கொண்டுவரப்பட்ட ஆளுநர் பதவியையும் அதன் அதிகாரத்திலும் கூட மாற்றங்களை கொண்டு வரலாமே?அதிலென்ன தவறு?

தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் போடப்பட்ட பல்வேறு தீர்மானங்களை கிடப்பில் போட்டு வைத்துள்ள ஆளுநருக்கு தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் இருந்து எதற்கு ஆண்டுக்கு பல நூறு கோடி செலவிட வேண்டும்?

தமிழ்நாட்டின் மாநில பல்கலைக்கழகங்கள் தமிழர்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்டு உருவானதாகும். நமது மாநில பல்கலைக்கழகங்களில் வேற்று மாநிலத்தவர்களை துணைவேந்தராக நியமிக்கும் செயலை பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் ஆளுநராக இருப்போர்கள் செய்துவருகிறார்கள். இது தமிழ்நாட்டு கல்வியாளர்களை அவமதிக்கும் செயல்.

தமிழக பல்கலைக்கழகங்களில் வேற்று மாநில மாணவர்கள் அதிக இடங்களை பெறும் வகையில் பல்கலைக்கழக விதிகள் தளர்த்தப்பட்டுள்ளது. இதனால் தமிழக மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகிறார்கள். இந்த நிலை நீடித்தால் தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் உருவான கல்வி நிலையங்களில் தமிழக மாணவர்கள் நுழையக்கூட முடியாதபடி செய்துவிடுவார்கள்.

ஆளுநரை ஒரு கருவியாக பயன்படுத்தி ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறது. இதேபோல் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களான மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தெலுங்கானா, டெல்லி உள்ளிட்ட இடங்களிலும் ஒன்றிய அரசு குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

புதிய தேசிய கல்விக்கொள்கை என்ற பெயரில் நவீன குலக்கல்வி திட்டத்தையும், மறைமுகமாக மீண்டும் இந்தி திணிப்பை உருவாக்கும் அபாயமும் ஏற்பட்டிருப்பதை நாங்கள் உணர்கிறோம். இதனால் தமிழ்நாட்டில் மீண்டுமொரு இந்தி திணிப்பு எதிர்ப்பு போன்ற சூழல் உருவாகியுள்ளது. தமிழர்களுக்கு எதிரான பலவிதமான ஒன்றிய அரசின் செயல்பாடுகளை எதிர்த்து தவிடுபொடியாக்கிய வரலாறு தமிழ்நாட்டு மாணவர்களுக்கு உண்டு. அதை மீண்டும் நிரூபித்து காட்ட வேண்டிய சூழல் தற்போது உருவாகி வருகிறது. மாணவர் சமுதாயம் விழிப்புணர்வு கொள்ள வேண்டும். இதற்கான நடவடிக்கையை அனைத்து தமிழ்நாடு மாணவர் சங்கம் மேற்கொள்ளும். ஆளுநர் உரிய முறையில் சட்டமன்றத்தில் போடப்பட்ட பல்வேறு மசோதாக்களை உடனடியாக அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பாமல் அவர் தொடர்ந்து இதேபோன்று தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்பட்டுக்கொண்டிருந்தால் தமிழகமெங்கும் மாணவர்களை திரட்டி ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களும் நடத்திவோம். மேலும் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் திரண்டு ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாக செல்லவும் இருக்கிறோம் என்பதை இந்த செய்தியாளர் சந்திப்பு மூலமாக தெரிவித்துக்கொள்கிறோம்.