சென்னை ஃபோர்டு தொழிலாளர்களின் வேலை நிறுத்தம்- பிரபுராம்

சென்னை மறைமலை நகரில் இயங்கி வரும் அமெரிக்க நிறுவனமான ஃபோர்ட் கார் உற்பத்தி தொழிற்சாலை 2022 ஆம் ஆண்டின் முதல் காலண்டில் தனது உற்பத்தியை நிறுத்த போவதாக கடந்த ஆண்டே அறிவித்தது . தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை உறுதிபடுத்தும் விதமாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர் .இந்நிலையில் ஃபோர்ட் நிறுவனம் இந்தியாவில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி செய்யும் பட்டியலில் உள்ளதால் தற்போது தொழிற்சாலையில் உள்ள 2600 நிரந்தர தொழிலாளர்களை வேலை இழக்க செய்து விட்டு, சில ஆண்டுகளில் ஒப்பந்த மற்றும் பயிற்சி தொழிலாளர்கள் கொண்டு உற்பத்தியை துவங்கலாம் என தொழிலாளர்கள் அச்சம் தெரிவித்தனர். நிறுவனத்தின் எதிர்கால உற்பத்தி திட்டம் பற்றி முறையாக அறிவிக்க வேண்டும் என நிறுவனத்திற்கும் அரசுக்கும் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி செய்யும் திட்டம் எதுவும் இல்லை என கடந்த மாதம் அறிவித்தது. தொழிலாளர்களின் எந்த ஒரு கோரிக்கையும் நிர்வாகம் செயல்படுத்த மறுக்கிறது. வேலைவாய்ப்பு உறுதி தராத நிலையில் சொற்பமான இழப்பீட்டு தொகையையே நிர்வாகம் தர முன் வருவதால் கடந்த நான்கு நாட்களாக தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் மூலமாக வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இறுதி கட்ட உற்பத்தியை பாதியில் நிறுத்தி போராடி வருவதால் நிர்வாகம் தனது மூர்க்கத்தனத்தை காட்டி வருகிறது .

தொழிற்சாலையை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கழிவறைகள் மூடப்பட்டு இருக்கிறது . தண்ணீர் இணைப்புகள் துண்டிகப்பட்டு வருகிறது. 25 ஆண்டுகள் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி கொழுத்த நிர்வாகம் தனது சந்தை வாய்பை இழந்து அடுத்த சந்தையை நோக்கி நகரும் போதும் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்காமல் தொழிலாளர்களை பழிவாங்க துடிக்கிறது. மத்திய மாநில அரசுகள் இதுபோன்ற எந்த ஒரு போக்கையும் கண்டுகொள்வதில்லை.

மேலும் மேலும் தொழிலாளர்களுக்கு எதிரான முதலாளிகளுக்கு ஆதரவான சட்டங்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வருகின்றன .கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது மூலதனத்தை பெருகிக்கொண்டு அடுத்த சந்தையை நோக்கி நகர்ந்து விடுகின்றன. இது ஏதோ ஒரு தொழிற்சாலை சார்ந்த பிரச்சினை என்பதை மறந்து ஒட்டுமொத்த தொழிலாளி வர்க்கத்தின் பிரச்சனையாக பார்க்கும் போதுதான் இதன் தீவிரத்தன்மை நமக்கு புரியும் . கடும் நெருக்கடியில் தொழிலாளர் வர்க்கம் உள்ளது. அனைத்து வர்க்க தொழிலாளர்களும் இணைந்து செயல்பட வேண்டியது அவசிய தேவையாக உள்ளது.