வைகோ குடும்ப அரசியல் செய்கிறாரா?
ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவுக்கு கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவர் சார்பாக கட்சி நிகழ்ச்சிகள், கட்சி நிர்வாகிகளின் குடும்ப நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் வைகோவின் மகன் துரை வைகோ பங்கேற்று வந்தார் என கட்சிக்காரர்கள் மத்தியில் பேச்சு நிலவியது. இதன் தொடர்ச்சியாக, கடந்த அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி ம.தி.மு.கவின் தலைமை அலுவலகமான தாயகத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் உயர் நிலைக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் வாக்கெடுப்பு ஒன்றை வைகோ நடத்தினார்.
என் மகன் என்பதற்காக பதவி வழங்க வேண்டியதில்லை, ரகசிய வாக்கெடுப்பு நடத்தலாம்' என்றார். இதையடுத்து நடந்த ரகசிய வாக்கெடுப்பில் 106 பேரில் 104 பேர் துரை வைகோவுக்கு ஆதரவாக வாக்களித்ததால் அவரை தலைமை நிலைய செயலாளராக நியமித்து அறிவிப்பு வெளியானது.
வாக்கெடுப்பில் எதிர்ப்பு தெரிவித்த இரண்டு பேர் யார்?’ என்ற கேள்வியும் எழுந்தது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, `துரைக்கு பதவி வழங்கப்பட்டது என்பது வாரிசு அரசியல் இல்லை. ஒருவரை திணிப்பதுதான் வாரிசு அரசியல். தொண்டர்களின் விருப்பப்படியே அவருக்கு பதவி வழங்கப்பட்டது. பொதுவாழ்வுக்குத் தேவையான அனைத்துத் தகுதிகளும் அவருக்கு உள்ளது. தொண்டர்களின் விருப்பப்படியே அவர் தேர்வு செய்யப்பட்டார்’ என்றார்.
அதேநேரம், இந்தக் கூட்டத்தை அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, ம.தி.மு.கவின் இளைஞரணி செயலாளராக இருந்த கோவை ஈஸ்வரன் உள்ளிட்ட சிலர் புறக்கணித்தனர். அடுத்து வந்த நாள்களில் கட்சிப் பதவியில் இருந்தும் கோவை ஈஸ்வரன் விலகிவிட்டார்.
இதன் தொடர்ச்சியாக, கடந்த 21 ஆம் தேதி ம.தி.மு.கவின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் செவந்தியப்பன், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன், விருதுநகர் மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம், உயர்நிலைக் குழு உறுப்பினர் அழகு சுந்தரம் என முக்கிய நிர்வாகிகள் கூடி, `கட்சியில் ஜனநாயகம் என்பது இல்லை. வாரிசு அரசியலை எதிர்த்து அரசியல் தொடங்கிவிட்டு நாமே வாரிசு அரசியலை ஊக்குவிப்பதா?’ என அதிருப்தி குரல் எழுப்பினர். மேலும், ம.தி.மு.கவை தி.மு.கவுடன் இணைப்பதற்கு பேரம் நடந்து வருவதாகவும் குற்றம் சுமத்தினர்.
இந்தச் சூழலில் ம.தி.மு.கவின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் புதன்கிழமையன்று நடைபெற்றது. இதில் தலைமைக் கழக செயலாளராக துரை வைகோ மற்றும் இரண்டு துணைப் பொதுச் செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதற்கு கூட்டத்தில் இருந்த ஐந்து பேர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் கூட்டத்தைவிட்டு வெளியேற்றப்பட்டதாக வைகோ தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தை திருப்பூர் துரைசாமி, செவந்தியப்பன், செங்குட்டுவன், அழகுசுந்தரம் உள்பட முக்கிய நிர்வாகிகள் சிலர் புறக்கணித்தனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ` நான் யாரையும் இழப்பதற்கு விரும்பவில்லை. என்னுடைய இதயத்துக்குள் வந்தவர்கள், இதயத்தை உடைத்து ரத்தம் கொட்ட செய்துவிட்டுப் போவார்களே தவிர, நான் யாரையும் புண்படுத்தி அனுப்பியது கிடையாது. எனவே அதிருப்தியாளர்களை நீக்குவது குறித்து தற்போது எதையும் கூற முடியாது’ என்றார்.
தொடர்ந்து, ம.தி.மு.கவை தி.மு.கவுடன் இணைப்பது தொடர்பான பேச்சு நடப்பதாக மாவட்ட செயலாளர்கள் சிலர் கூறியுள்ளது குறித்துக் கேட்டபோது, இந்தக் கட்சி என்றைக்கும் உறுதியாக இருக்கும்' என்றார். மேலும், பொதுக்குழுவை திருப்பூர் துரைசாமி புறக்கணித்தது தொடர்பான கேள்விக்குப் பதில் அளித்த வைகோ,
தற்போது அவர் தனிமரம் ஆகிவிட்டார். அவருக்குத் திருப்பூரிலேயே ஆதரவு கிடையாது. ம.தி.மு.க சட்டவிதிகளின்படி பொதுச் செயலாளருக்குத்தான் அதிகாரம் உள்ளது’ என்றார். இதன்பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரடியாக வைகோ உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்துப் பேசியுள்ளனர்.