லக்கீம்பூா் வன்முறையை இந்து- சீக்கிய மோதலாக மாற்ற முயற்சி-வருண் காந்தி எச்சரிக்கை.

எழுத்தாக்கம் : யாழினிரங்கநாதன்

உத்தர பிரதேச மாநிலம் லக்கீம்பூா் கெரியில் நிகழ்ந்த வன்முறையை ஹிந்து-சீக்கிய மத மோதலாக மாற்ற முயற்சிகள் நடப்பதாக பாஜக எம்.பி.வருண் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

லக்கீம்பூா் வன்முறை நிகழ்ந்தபோது, பாஜக அமைதி காத்த நிலையில் அக்கட்சி எம்.பி. வருண் காந்தி, உடனடியாக அந்த சம்பவத்தைக் கண்டித்து கருத்து தெரிவித்தாா். முன்னதாக, மத்திய அரசு கொண்டு வந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் வருண் காந்தி கருத்து கூறியிருந்தாா்.

லக்கிம்பூர் வன்முறையில் விவசாயிகள் உள்பட 8 பேர் பலியான சன்பவத்துக்கு பாஜக தலைவர்கள் யாரும் பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், அக்கட்சியை சேர்ந்த எம்.பி., வருண் காந்தி தனது எதிர்ப்பை காட்டமாக பதிவு செய்திருந்தார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விவசாயிகள் மீது கார் ஏறிய வீடியோவை பதிவிட்டு, “வீடியோ தெள்ளத் தெளிவாக உள்ளது. போராட்டக்காரர்களை கொலை செய்வதன் மூலம் அவர்களை அமைதியாக்க முடியாது. அப்பாவி விவசாயிகளின் ரத்தத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். ஆணவம், கொடூரம் ஆகியவை விவசாயிகளின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்குள் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.” என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு வருண் காந்தி கடிதம் எழுதியிருந்தார்.

லக்கீம்பூா் சம்பவம் தொடா்பாக கருத்து வெளியிட்ட அடுத்த சில நாள்களில் வெளியான பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா்கள் பட்டியலில் வருண் காந்தி, அவரது தாயாரும் எம்.பி.யுமான மேனகா காந்தி ஆகியோரது பெயா் இடம் பெறவில்லை. இதையடுத்து, வருண் காந்தி மீது பாஜக தலைமை அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் வருண் காந்தி சுட்டுரையில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘லக்கீம்பூா் கெரி வன்முறையால் ஏற்பட்ட ரணத்தை ஆறவிடாமல் தடுக்க முயற்சி நடக்கிறது. முக்கியமாக அதனை ஹிந்து-சீக்கிய மத மோதலாக சித்திரிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இது மிகவும் தவறான, அபாயகரமான செயலாகும். யாரும் குறுகிய அரசியல் லாபங்களை நோக்கமாகக் கொள்ளாமல், தேசிய ஒற்றுமைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.

எனினும், இந்த பதிவில் எந்த அரசியல் கட்சியையோ, அமைப்பையோ வருண் காந்தி நேரடியாக குற்றம்சாட்டவில்லை.

முன்னதாக, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மத்திய அமைச்சரும், கார் ஏற்றியதாக கைது செய்யப்பட்டுள்ள அஜய் மிஸ்ராவின் தந்தையுமான அஜய் மிஸ்ரா, லக்கிம்பூர் விவகாரத்தை காலிஸ்தான் பயங்கரவாதிகள் பெரிது படுத்துகின்றனர் என்று குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், தற்போது வருண் காந்தியும் அந்த வரிசையில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குற்ற உணர்வு உண்டா?

உத்தரப் பிரதேசமும் யோகி ஆதித்யநாத்தும் பாஜக எதிர்ப்பாளர்களால் குறி வைக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

எள் முனையளவு குற்ற உணர்வைக்கூட உ.பி. முதல்வரோ, பிரதமரோ காட்டவில்லை.இந்தியா மிக அபாயகரமானதொரு இடத்தில் நிற்கிறது என்றால் அது மிகையல்ல.

மனிதத்தின் சாயல் கொஞ்சமேனும் எஞ்சியிருக்கும் எவரும் கேட்டாலே மனம் பதைக்கும் படுபாதகச் செயல் ஒன்று உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்கீம்பூர் கேரி நகரில் அக்டோபர் 3ஆம் தேதியன்று பட்டப் பகலில் ஈவிரக்கமில்லாமல் நடந்தேறியது.

விவசாயிகளுக்கான மசோதா என்றழைக்கப்படும் மசோதாவுக்கெதிராக ஒரு நிகழ்வில் பங்கெடுத்துத் திரும்பிக்கொண்டிருந்த விவசாயிகள் கூட்டத்திடையே ஒரு வேன் தாறுமாறாக ஒடி எதிர்ப்பட்டவர்களைத் தூக்கி வீசிவிட்டுச் சென்றது. எட்டுப் பேர் இறந்தார்கள். வேனில் மத்திய துணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

வன்முறையும் அதற்குப் பின்னும்

எல்லாமே அரசியலாகிவிட்ட காலத்தில் இப்படி ஒரு நிகழ்வு அரசியல் பாரபட்சங்களூடாகத்தான் பார்க்கப்படுகிறது. நடந்தது விபத்து, என்ன நடந்தது என்று விசாரணை செய்து முடிவு தெரியும்வரை எதுவும் திட்டவட்டமாக எதிர்க்க முடியாது, பேரணி சென்றவர்கள் கல் வீசியதற்குப் பின் ஓட்டுனர் நிலை தடுமாறி ஓட்டினார் என்றெல்லாம் பாஜக வாக்காளர்கள் வாதிட்டார்கள்.

மோடி, பாஜக என்றாலே சீற்றம் கொள்ளுவோர் இப்போதும் சீற்றம் கொண்டார்கள். பொதுவாக உண்மை இரண்டு அதீத எல்லைகளுக்கு நடுவே இருக்கும் என்பார்கள். இந்நிகழ்வில் அது பொய்த்தது. உண்மை ஒரு பக்கமே இருக்கிறது. அதை மறுப்பதில் அரசியலும் மனச் சாய்வுகளும் இருக்கின்றன. இந்நிகழ்வுக்குள் மேலும் செல்லும் முன் ஓர் அமெரிக்க உதாரணம்.

லக்கீம்பூா் போன்றே அமெரிக்காவிலும்….

2017ஆம் ஆண்டு ஆகஸ்டு 11-12ஆம் தேதிகளில் வெர்ஜீனியா மாநிலத்தில் சார்லட்ஸ்வில் நகரில் வெள்ளை இனவாத நம்பிக்கையுடையோர் “Unite the Right” என்ற கோஷத்துடன் பேரணி நடத்தினார்கள். அவர்களுக்குப் போட்டியாக இடது சாரியினரும் மற்றவர்களும் இன்னொரு பேரணி நடத்தி எதிர் கோஷமும் எழுப்பினார்கள். அப்போது ஒரு கார் கூட்டத்திடையே சீறிப் பாய்ந்தது.

ஒருவர் இறந்தார், 19 பேர் காயமுற்றனர். அரசியல் ரீதியாக நாடு பிளவுப்பட்டிருக்கிறது என்று அமெரிக்கர்களுக்குத் தெரியும் ஆனால் இத்தகைய வன்முறை எதிர்வினை, அதுவும் இப்படி வெளிப்படையாக நடந்தது, பரவலான அதிர்ச்சியை அளித்தது. அப்போதும் 30% ரிபப்ளிக் கட்சியினர், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை எதிரொலித்து, வன்முறைக்கு இனவாதச் சாரார் பொறுப்பில்லை என்று கருத்துக் கணிப்பில் சொன்னார்கள்.

வன்முறை நடந்த அன்று மாலை ட்ரம்ப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். பத்திரிகையாளர்கள் கேள்விகளால் துளைக்க ட்ரம்ப் எல்லாப் பக்கமும் நல்லவர்களும் கெட்டவர்களும் இருக்கிறார்கள் என்று கூச்சலிட்டுப் பத்திரிகை சந்திப்பே களேபரத்தில் முடிந்தது. அவர் கட்சி மூத்தவர்களும், அமைச்சரவை அங்கத்தினர்களுமே ஜனாதிபதி இனவாதத்தை சந்தேகத்துக்கு இடமில்லாமல் எதிர்க்காதது எரிச்சலும் கோபமும் கொண்டனர்.

அடுத்த நாள் ட்ரம்ப், தான் இனவாதத்தை நியாயப்படுத்தவில்லை என்று மீண்டும் ஒரு காணொளி வேலியிட நிர்பந்திக்கப்பட்டார். இதெல்லாம் என் நினைவுக்கு வந்தது. நாடுகள், சமூகங்கள் கடந்து வெறுப்பரசியல் பொதுக் கூறுகள் உடையது.

தேர்தல் சமயத்தில் இப்படியொரு நிகழ்வு எங்கு நடந்தாலும் அதில் எதிர்க்கட்சியினர் யாராக இருந்தாலும் சிறிதேனும் அரசியல் ஆதாயம் தேடுவார்கள். இந்தியாவில் இந்நிகழ்வை அரசியல் கட்சியினர் கையில் எடுக்கவில்லையென்றால் இது மொத்தமாக மூடி மறைக்கப்பட்டிருக்கும்.

உத்தரப் பிரதேசமும் அதன் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் பாஜக எதிர்ப்பாளர்களால் குறி வைக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ள சட்டத்துக்கு எதிராக ஏன் போராட்டங்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக ஒரு பிரச்சினையை வைத்துத் தொடர் போராட்டம் நடத்துவது முறையா என்றெல்லாம் கேள்விகள் வருகின்றன. சில பதில்களைத் தருகிறேன்.

தேர்தல் வெற்றியின் எல்லைகள்

தேர்தலில் ஒரு கட்சி பெறும் வெற்றி, அது பலம் வாய்ந்த பெரும்பான்மையாக இருப்பினும், யதேச்சாதிகாரத்துக்கான அனுமதி அல்ல. நாடாளுமன்ற விதிகள், சட்டங்கள், அரசாட்சி அறம் ஆகியவை அந்த யதேச்சாதிகாரத்திதற்கு எதிரானவை.

வெற்றி என்பது தேர்தல் அறிக்கையில் சொன்ன எல்லாவற்றுக்கும் நிபந்தனையற்ற ஒப்புதல் அல்ல. கட்சிகள் வெற்றி பெறுவது பல காரணங்களுக்காக நிகழும். கூட்டணிகள், எதிர்க்கட்சிகளின் ஓட்டு பிரிவது, பண பலம், முந்தய அரசின் மீதான அதிருப்தி, ஜாதி அரசியல், மதம் சார்ந்த அரசியல் என்று அநேகக் காரணங்கள் இருக்கும்.

 இந்தியாவிலும், அமெரிக்காவிலும் – இரண்டு முக்கிய ஜனநாயக அரசுகள் – ஆளும் கட்சியினர் வெற்றி மமதையில் ஏதேனும் செய்ய முனையும்போது பெரும் மக்கள் எதிர்ப்பைச் சம்பாதித்ததுண்டு. தேர்தல் வெற்றி வெற்றுக் காசோலை அல்ல, எப்போது வேண்டுமானாலும் எழுதிக் காசாக்க.

பாஜகவின் ஆட்சிக்குப் பின் மசோதாக்களை நாடாளுமன்றக் குழுக்களுக்கு அனுப்பிக் கருத்துக் கேட்டு அதன் பின் நாடாளுமன்ற ஓட்டெடுப்புக்குக் கொண்டுவருவது வெகுவாகக் குறைந்துவிட்டதை ஜனநாயகத்துக்கு ஊறு விளைவிக்கும் போக்கு என்கிறார்கள் அரசியல் பார்வையாளார்கள்.

தொடர் போராட்டம் முறையா என்ற கேள்வி

30 வருட காலம் ராமர் கோயில் பிரச்சனையை முன்வைத்து அரசியல் செய்து, பல கலவரங்களுக்கு வித்திட்டு அதன் பலனாக ஆட்சி அதிகாரத்தையும் அடைந்த ஒரு கட்சிக்கு ஏகோபித்த ஆதரவளித்தவர்கள் இப்படிக் கேட்பது கேலிக்கூத்து. உச்ச நீதிமன்றம், அரசமைப்பு எதிலும் பல நியாயங்களோடு அவநம்பிக்கை கொண்டிருக்கும் பலர் இருக்கிறார்கள்.

அதனால்தான் நீதிமன்றம் நிறுத்திவைத்தாலும் கோரிக்கை நிறைவேறும்வரை போராட்டத்தைத் தொடர்கிறார்கள். எவ்வளவு காலம் வேண்டுமானாலும் யாரும் போராட்டம் நடத்தலாம், சட்டத்துக்குட்பட்டு.

உத்தரப் பிரதேசம் குறி வைக்கப்படுகிறதா?

மேலேயிருக்கும் பத்தியில் சொன்ன நிகழ்வுகளெல்லாம் ஆட்சியினரின் தூண்டுதலால் நடந்தவை அல்ல; கிட்டத்தட்ட எல்லா நிகழ்வுகளும் தங்களை மீறி, சமூக அமைதியைச் சீர்குலைப்பவர்கள் செய்ததென்றும் அந்நிகழ்வுகள் தங்கள் கொள்கைகளுக்குப் புறம்பானவை என்றும் சம்பிரதாயத்துக்காகவாவது ஆட்சியாளர்கள் சொல்வார்கள். அந்த சம்பிரதாய உணர்வுகூட இல்லாத பேயரசுதான் உத்தரப் பிரதேச அரசு.

மிகக் கொடூரமாக வண்புணர்வு செய்து அதைவிடக் கொடூரமாக உடல் சிதைக்கப்பட்ட பெண்னின் வழக்கை மூடி மறைக்க நினைத்தது, கலவரத்தில் ஈடுபட்டார்கள் என்று இஸ்லாமியரின் படங்களைச் சுவரொட்டிகளாக ஒட்டியது, மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் இறந்ததை அம்பலப்படுத்திய மருத்துவரை வேட்டையாடியது, தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் முதல் வேட்பாளர் வரை அப்பட்டமான மதவாதப் பேச்சுகள் பேசுவது என்று உத்தரப் பிரதேசத்தின் வரலாற்றுச் சிறப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

 நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் கொஞ்சமேனும் அற உணர்வுள்ளவர்கள் மனம் கூசும் நிகழ்வுகள். பல நிகழ்வுகள் கேட்டாலே குலை நடுங்க வைப்பவை. எதற்கும் அரசிடமிருந்தும் ஆதரவாளர்களிடமும் எந்தப் பச்சாதாபமுமற்ற எதிர்வினைகளே பதில்கள். இப்போதுகூட ட்ரம்ப் காண்பித்த எள் முனையளவு குற்ற உணர்வைக்கூட முதல்வரோ, பிரதமரோ காட்டவில்லை.

மிக முக்கியமாக யோகி ஆதித்யநாத் மோடியின் அடுத்த வாரிசாக உருவாகலாம் என்று பாஜக ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் கணிக்கிறார்கள். ஒரு தரப்பு அப்படி நடக்க வேண்டுமே என்று விரும்புபவர்கள். இன்னொரு தரப்பு அப்படி நடந்தால் மொத்தமாக இந்தியாவும் தடம் புரளும் என்று அச்சப்படுபவர்கள். உத்தரப் பிரதேசம் புதிய இந்தியாவுக்கான முன் மாதிரியாகுமோ என்பதே அம்மாநிலத்தின் மீது அத்தனை கவனம் குவியக் காரணம்.

இந்தப் பாதக நிகழ்வில் உயிர் இழந்தோருக்கு ஆறுதல் சொல்லவும் அரசியல் காரணங்களுக்காகவும் மாநிலத்திற்கு வரும் எதிர்கட்சியினரைக் கைது செய்யும் மும்முரத்தில் ஒரு சதவீதம்கூடக் குற்றம் சாட்டப்படும் அமைச்சர் மகனைக் கைது செய்வதில் அரசு காண்பிக்கவில்லை.

உத்தரப் பிரதேச மாடல்

பாஜக ஆளும் மாநில அரசவைகளில் இஸ்லாமியரின் பிரதிநிதித்துவம் வெகுவாகக் குறைந்திருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட இஸ்லாமியரும் கிட்டத்தட்ட மொத்தமாக எதிர்க்கட்சியினர்தான். அதாவது பாஜக சார்பில் இஸ்லாமியர் கிடையாது. உத்தரப் பிரதேசத்திலேயே இதுதான் நிலை.

 எதிர்க் கட்சியினரும் பாஜகவை எதிர்கொள்ளத் தத்தம் இஸ்லாமிய வேட்பாளர்களைக் குறைத்துக்கொள்கிறார்கள். இதெல்லாம் பாஜக வாக்காளர்களுக்கு மிகவும் உவப்பானவை. இன்னும் சொல்லப்போனால் இவைதான் குஜராத்திலும் உ.பி.யிலும் அக்கட்சி தொடர்ந்து ஜெயிக்க முக்கியக் காரணங்கள். பாஜக ஊழலற்றது, பொருளாதார முன்னேற்ற கொள்கைகள் உடையது என்பதெல்லாம் கற்பனாவாதப் புனைவுகள். ஆக, ஏன் இப்படி ஒரு கொலை பாதகச் செயல் நடந்தேறியது?

பாஜகவும் தேசமும் ஒன்று என்னும் கருத்து

பாஜகவின் எந்த ஒரு கொள்கையை எதிர்ப்பதும், மோடியை விமர்சிப்பதும் தேசத் துரோகம் என்று கட்டமைக்கப்பட்டதோடு அதனை எதிர்க்க எந்தக் குடிமகனும் எந்த முறையையும் கைக்கொள்ளலாம் என்று கட்டமைக்கப்பட்டுவிட்டது. அதனால்தான் யாரோ ஒருவர் சினிமா கொட்டகையில் தேசீய கீதம் ஒலிக்கும்போது எழாத ஒருவரை அடிப்பதற்குத் தனக்கு தார்மீக உரிமை இருப்பதாக நினைத்துக்கொள்கிறார்.

அதனால்தான் விவசாய மசோதாவை எதிர்க்கும் பஞ்சாபியர்களை தேசத் துரோகிகள் என்று வசைபாட முடிகிறது. இத்தகைய துராக்கிரதத்தை நடத்தும் மனத் துணிவையும் இது கொடுக்கிறது. கௌரி லங்கேஷை யாரோ ஒருவர் கொலை செய்யவும் இதுதான் காரணம். இந்தியா மிக அபாயகரமானதொரு இடத்தில் நிற்கிறது என்றால் அது மிகையல்ல.

பாஜக ஆளும் மாநிலங்கள் மாநில அரசியலாகப் பார்க்கப்படாததற்கு இந்த பாஜகவும் தேசமும் ஒன்று என்கிற பார்வையும் காரணம். தேசிய எதிர்க்கட்சியினர் எதற்கு உத்தரப் பிரதேசத்துக்கு விரைகிறார்கள் என்று கேட்பவர்கள் அமித் ஷா ஏன் ஐதராபாத் உள்ளாட்சி தேர்தலில் அதீத கவனம் செலுத்துகிறார், தேஜஸ்வி ஏன் தமிழ் நாட்டில் பிரச்சாரம் செய்கிறார் என்று கேட்பதில்லை. பாஜகவைப் பொறுத்தவரை நாடு முழுவதும் எல்லாத் தேர்தல்களிலும், அது முனிசிபாலிட்டி தேர்தலாக இருந்தாலும் சரி, வெற்றி பெற்றுத் தங்கள் இந்துத்துவக் கொள்கைகளை நிலைநிறுத்துவதே குறிக்கோள். அதனால்தான் உத்தரப் பிரதேசமாக இருந்தாலும் மோடி மீதே விமர்சனம் குவிகிறது.

காந்தி தேசமா, கோட்ஸே தேசமா?

இந்தியா அடைந்திருக்கும் ஆன்ம வீழ்ச்சி மிக அபாயகரமானது. இந்தியா காந்தி தேசமாக இருந்த காலம் முடிவுற்றதென்றே சொல்லலாம். கோட்ஸேவை ஆதரிப்பவர்கள் மட்டுமல்ல காந்திக் கொலையை மீட்டுருவாக்கம் செய்பவர்களே, அதுவும் காமிரா முன்னிலையில், ஆட்சி அதிகாரங்களில் இருக்கிறார்கள்.

இப்பேராபத்தை அரசியல் ரீதியாக எதிர்கொள்கிறோம் என்கிற பெயரில் பகுத்தறிவுவாதிகள் என்று பசப்பிக்கொண்டிருந்தவர்களும் இப்போது பாவ்லாக்களைத் துறந்து பாஜக வழியில் செல்கிறார்கள். பாஜகவுக்கும் அவர்களின் மதவாதத்தை எதிர்ப்பதாகச் சொல்லிக்கொள்பவர்களுக்கும் அதிகபட்ச வித்தியாசம் பிந்தியவர்கள் அப்பட்டமான சிறுபான்மை எதிர்ப்பைக் கைக்கொள்ளவில்லை என்பதே.