பெண்ணடிமைத்தனமும், சுயசாதிப் பற்றும்- சுபத்ரா

பெண் அடிமைத்தனத்தின் வழியாகவும், ஆணாதிக்கம் வழியாகவும், சாதி என்ற கற்பனையை வாழ வைக்கிறோம்.
ஒவ்வொரு முறையும் அங்கே போகாதே, இங்கே போகாதே என்று பெண்ணை வீட்டில் கட்டிப்போட்டு வைக்க காரணம்? யாரையாவது வேற சாதி பையனை லவ் பண்ணிட்டா? வேற சாதி பையன் இவள் மனதை கெடுத்துட்டா, போன்ற ‘கவலைகள்’ . அந்த கவலைகளின் அடிப்படை தனது சாதியை பாதுகாப்பது ஒன்றே!

பெண்ணுக்கு சின்ன வயதில் இருந்தே சுதந்திரத்தை பழக்கிவிட்டு ஒரு நாள் அந்த பெண் வேற்று சாதி காதலோடு வந்து நிற்கும் போது திடீரென அந்த சுதந்திரத்தை பறிப்பது கடினம் என்பதால் சிறு வயது முதலே கட்டுப்பாடு அடிமைத்தனம் கல்வி கடினம், சுதந்திரமாக வெளியே எங்கும் போக முடியாது, பேச முடியாது, பெற்ற மகளையும் கூடப்பிறந்த சகோதரியையும் இப்படி சிறை போல வாழ வைத்து அதை நியாயப்படுத்துவது இந்த சாதி என்ற கற்பனைக்காக. எங்கும் வியாபித்து இருக்கும் ஆணாதிக்கம் சாதியை சேவகம் செய்ய மட்டுமே!

காதல் என்பது யார் மீது வேண்டுமானாலும் திடீரென வரலாம், அதற்கு முன் நட்பு வரும். ஆக வேற்று சாதி நட்பு பேச்சுக்கள் பழக்கம் அத்தனையையும் கட்டுப்பாடுத்தி இயற்கையாகவே ஒரு உயிருக்கும் இன்னொரு உயிருக்கும் நிகழும் அன்பை கட்டுப்படுத்தி, நீ இவர்களுடன் தான் அன்பாக இருக்க வேண்டும், இவர்களுடன் அன்பாக இருக்க கூடாது என்று விதிப்பது. முன்பின் தெரியாத யாரோ ஒருவரை சுயசாதி என்பதால் நாங்கள் ஆணையிடும்போது, உனது அன்பு எங்கள் ஆணைக்கு கட்டுப்பட்டு அந்த கணவர் மீது சீறி பாய வேண்டும். கட்டுப்பாடு, பயத்தின் மூலமே சாத்தியம் என்பதால் பெண்ணின் மீது வன்முறை.

எதற்கு எடுத்தாலும் குற்றம் கண்டுபிடித்து பெண் மீது வன்முறை செய்த வண்ணமே இருந்தால் தானே அவளை கட்டுப்படுத்த முடியும்?
இப்படி எல்லா ஒடுக்கு முறையும் வீட்டிற்குள் செய்து, தலித் மீது வன்முறையை வீட்டுக்கு வெளியே செய்து, அதுவும் பல தலைமுறைகளாக செய்து, சாதிப்பது பத்து பைசா பிரயோசனம் இல்லாத சாதி மட்டுமே!

சாதி காணாமல் போக ஒரேயொரு தலைமுறை தான் வேண்டும். எந்த தலைமுறை இந்த அன்பை கட்டுப்படுத்தும் கொடுமையை தனக்குத்தானே நிகழ்த்த மறுக்கிறதோ அந்த தலைமுறையோடு இந்தியா, சாதி எனும் முட்டாள்தனமான கற்பனையில் இருந்து வெளியே வரும்.
அதுவரை 400 பெரியார் வந்தாலும், கண்ணுக்கு தெரியாத சாதி, எந்த மெடிக்கல் டெஸ்ட்டிலும் நிரூபிக்க முடியாத சாதி, இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் வாழும்!

சுபத்ரா