அமெரிக்க கல்வி நிலையங்கள் வரை சாதியை கொண்டு போன சாதி ஆதிக்க இந்துக்கள்

பூத்தொட்டிகளில் ப்ளாஸ்டிக் பைகளில் விற்பனைக்கு வரக்கூடிய செடிகள், தாங்கள் வளர்க்கப்பட்ட இடத்தில் இருந்து கொஞ்சம் மண்ணையும் சேர்த்து எடுத்து கொண்டு போவதைப் போல, இந்தியாவில் இருந்து வெளிநாடு போகக் கூடிய சாதி ஆதிக்க உணர்வுடைய இந்துக்கள், அந்த சாதிய மனோநிலையையும் இறுக்கமாக தங்கள் வேரோடு சேர்த்து பற்றிக் கொண்டே போகிறார்கள்.

இவர்கள் வெளிநாடுகளுக்குப் போய் அங்கே வருகிற பிற இந்தியர்களிடம் சாதியத்தையும், தீண்டாமையையும் கடைபிடிக்கிற ஒரு மேட்டிமைவாத, ஆதிக்க, பிறழ்வு மனோநிலையில் தொடர்ந்து இருந்து வருகிறார்கள்.

வெளிநாடுகளில் இருந்து கொண்டு சர்வதேச சாதிச் சங்கங்கள் நிறுவி, அவர்கள் நடத்துகிற அவலங்களை எல்லாம் நாம் பார்த்து வருகிறோம். 
பன்னெடுங் காலமாகவே வெளிநாடுகளில் கல்வி நிலையங்களில் பணியிடங்களில் சாதி ஆதிக்க இந்துக்களினால் தலித்துகளும், பிற்படுத்தப்பட்ட மக்களும் தொடர்ந்து தீண்டாமைக்கு உள்ளாகி வருவது குறித்த உரையாடல்களை முன்னெடுக்கவேண்டும் என்று பல்வேறு ஜனநாயக முற்போக்கு சக்திகளை நிறுவி இருக்கக்கூடிய, ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்த சூழலில் அமெரிக்காவின் மிகப்பெரிய பல்கலைக்கழகமான கலிபோர்னியா மாகாண பல்கலைக்கழகம், தன்னுடைய கல்வி நிலையத்திற்குள் பாகுபாட்டிற்கு எதிரான கொள்கைகளில் இம்மாதம் சாதியையும் சேர்த்திருக்கிறது. 
இதன்படி, பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட நேரடி வகுப்புகள் நடைபெறும் 23 வளாகங்களிலும், தொலைதூர கல்வி அளிக்கும் 8 வளாகங்களிலும் இருந்து சாதிய மனோபாவத்தோடு சக மனிதர்களை அணுகுவது, அவர்களை பாகுபடுத்தி தீண்டாமை கடைபிடிப்பது என்பது முற்றிலுமாக தடை செய்யப்படுகிறது.

இப்பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜோசப் ஐ கேஸ்ட்ரோ, இது குறித்து தெரிவிக்கையில், பன்மைத்துவும், பன்முக கலாச்சாரமும் கொண்ட அனைவருக்குமான சமமான செயலாற்றும் வாய்ப்புகளை எங்கள் பல்கலைக்கழகத்தில் நாங்கள் உறுதி செய்துள்ளோம். இதனை செய்வதற்காக தொடர்ந்து அரும்பெரும் பணிகளை அர்ப்பணிப்பு உணர்வோடு செய்த மாணவர்கள், பணியாளர்கள் மற்றும் இதர (முற்போக்கு) அமைப்புகளுக்கும் நான் என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

இது குறித்து சான்பிரான்சிஸ்கோ மாகாண பல்கலைக்கழகத்தில் மாணவர் தலைவர் மன்மித் சிங் கூறுகையில், ” சாதிய பாகுபாட்டில் இருந்து கல்வி நிலையத்தில் பாதுகாப்பை உறுதி செய்வது என்பது மிக நீண்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி; ஒரு வரலாற்று வெற்றியாகவும் பார்க்கப்பட வேண்டியது; கிடைத்திருக்கக் கூடிய இந்த முடிவு என்பது மாத்திரமல்ல, இதற்கான நீண்ட நெடிய போராட்டம் முழுமையுமே வரலாறுதான்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கலிபோர்னியா மாகாண பல்கலைக்கழகத்தில் சமூகப்பணி துறையின் தலைமை நிர்வாகி, பேராசிரியர். டாக்டர். சாரா டெய்லர் இதுகுறித்து கூறுகையில், “சாதிய ஒடுக்குமுறை என்பது அமெரிக்காவில் இருந்து எங்கோ வெகு தொலைவில் நடக்கிறது என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால், எங்கள் மாணவர்கள் அதை அமெரிக்காவில் இருக்கும் அவர்கள் தினந்தோறும் தங்களுடைய வாழ்க்கையில் எதிர் கொண்டபடி இருப்பதை எங்களின் கவனத்திற்கு கொண்டு வந்தார்கள். அதன் காரணமாகவே அவர்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்றும், இத்தகைய சாதிய மனோ நிலைக்கு எதிரான கொள்கை உருவாக்குவதற்கும், அவர்கள் எடுத்த எல்லா முயற்சிகளும் நாங்கள் துணை நின்றோம்” என்று தெரிவித்துள்ளார். 
Equality Labs என்கிற ஒடுக்கப்பட்ட மக்கள் நல உரிமை அமைப்பின் செயல் இயக்குனர் தேன்மொழி சௌந்தர்ராஜன் கூறுகையில், ” மாறுபட்ட சமூக மற்றும் கலாச்சார பின்னணியில் இருந்து வந்த பல்வேறு ஒடுக்கப்பட்ட மாணவர்கள் எடுத்த முன்னெடுப்பினால் இது நடந்திருக்கிறது. தங்களுடைய பாகுபாடு தடுப்பு கொள்கைகளில் சாதியத்தையும் சேர்த்த கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்திற்கு நன்றி. தொடர்ந்து சாதியின் பேரால் ஒடுக்கப்பட்டு வரும் அமெரிக்க வாழ் மக்களுக்கு, அவர்களின் உரிமை மீட்புக்கான களங்களில் இந்த வெற்றி என்பது உந்துதலாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சாதி என்பது பல்வேறு தேசிய இனங்களின் ஒன்றியத் தொகுப்பான இந்தியாவுக்கு மாத்திரம் அவமானகரமான ஒன்றாக இருந்து வருகிற சூழலில், அதனை ஒரு சர்வதேசிய அவமானமாக மாற்றி இருக்கக்கூடிய சாதி ஆதிக்க வெறிபிடித்த இந்துக்களுக்கு நன்றி. இதற்கெல்லாம் கூச்சப்படுகிறவர்களா நாம்.?