அரண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் ஆதிசங்கரர்!- விக்கி கண்ணன்.

நிகழ்கால தமிழர்களுக்கு சமய தத்துவம் தெரிந்திராதிருப்பது தமிழர் வரலாற்றை வேற்று சமயத்தினர் அபகரிப்பதற்கு ஏதுவாக அமைகிறது. ‘இந்து’ எனும் சாம்பார் சமயத்தை புறக்கணித்து எழுதுவதற்கும் இதுவொரு காரணியாக இருக்கிறது. இஸ்லாமிய, கிருத்துவ சமய வெறுப்பில் ‘இந்து’வாக ஒருங்கிணைப்பதே பார்ப்பனீயத்தின் வெற்றியாக அமைகிறது. அங்ஙனம் ஒருங்கிணைப்பது வாயிலாக பிற சமயத்தின் நெறிமுறைகளை மாற்றி அங்கு வர்ணாசிரம முறைகளை மறைமுகமாக திணிப்பது எளிமையாகிறது. நிற்க!

சைவத்தை ஒரு சமயமாகவே ஏற்றுக்கொள்ளாதவர்கள் ஆதி சங்கரர் வழி வந்த ஸ்மார்த்தர்கள். சிவபெருமானை பரம்பொருளாக ஏற்கும் சைவர்களுக்கும், தங்களையே சிவனாக பாவிக்கும் ஸ்மார்த்தர்களுக்கும் அநேக வேறுபாடுகள் உண்டு. அதிலும் ஆகமத்தை ஸ்மார்த்தர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை. சிவாகமங்கள், ஸ்மார்த்தர்கள் கோவிலுக்குள் நுழைவதில் சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது. ஆனால் சமீபத்தில் சிலர் காஞ்சி கைலாசநாதர் கோவிலில் அமைந்துள்ள தட்சிணாமூர்த்தியின் கீழ் காணப்படும் சிற்பத்தை ‘ஆதி சங்கரர்’ என்று வரையறுக்கிறார்கள். அக்கோவில் கிபி 8ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டப்பட்டது. ஆதி சங்கரர் என்பவரின் காலத்தை வரலாற்றாளர்கள் ஏற்றுக்கொள்வதே கிபி 8ஆம் நூற்றாண்டின் இறுதியில் தான். ஆனால் சிலரோ இந்த கைலாசநாதர் ஆலய சிற்பத்தை முன்னிருத்தி சங்கரரின் காலத்தையும் முன்கொண்டு செல்ல முற்படுகிறார்கள். இவர்களுக்கெல்லாம் ஆகம அறிவு இருக்கிறதா என்பதே வலுவான சந்தேகமாக இருக்கிறது.

காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தை எழுப்பிய இரண்டாம் நரசிம்மன் எனும் இராஜசிம்மன் இதே கோவிலில் தனது பட்டப்பெயர்களை பதிவு செய்யும்போது, ‘ஆகமபிரியன்’ என்றும், ‘சைவசித்தாந்த மார்க்கன்’என்றும் குறிப்பிடுகிறான். இது கல்வெட்டு வாயிலாக அறியப்படும் தகவலாக இருக்கும்போது ஆகமத்தை ஏற்காதவரும், சிவனை பரம்பொருளாக கருதாதவருமான ஆதி சங்கரர் இக்கோவிலில் தட்சிணாமூர்த்தியின் கீழ் ஏன் காட்டப்பட வேண்டும்? அங்ஙனம் இதனை ஆதி சங்கரர் தான் என வாதிட்டால் சனகாதி முனிவர்களுக்கு நான்மறை ஆறங்கம் அருளிய தட்சிணாமூர்த்தியிடம் தான் சங்கரரும் உபதேசம் பெற்றார் எனும் கருத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் தானே?! ‘அரண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்பதுபோல் எங்கு யார் தண்டத்தை தூக்கி வைத்திருந்தாலும் அதை ஆதி சங்கரர் என கருதுவது நகைப்புக்குறியது.

சரி அப்படியானால் தட்சிணாமூர்த்தியின் கீழ் காட்டப்பட்டிருக்கும் அறுவர் யார் எனும் கேள்வியும் எழுகிறது. இதற்கு ஆகம நூல்களும், பல்லவர்களின் செப்பேடுகள் மற்றும் கல்வெட்டுகளே ஓரளவு தரவுகளை தருகிறது.

Encyclopedia of Maha Dakshinamurthy in Puranas, Agamas, poojas and silpa sastras ‘மகா தட்சிணாமூர்த்தி’ எனும் நூலினை திருவாவடுதுறை ஆதினம் வெளியிட்டுள்ளது. சரஸ்வதி மகால் நூல் நிலையம் மற்றும் ஆய்வு மையத்தில் கிடைக்கிறது. இந்நூலில் தட்சணாமூர்த்தியிடம் உபதேசம் பெற்ற முனிவர்களின் வடிவங்கள் குறித்தும், ஆகமங்களில் எங்கெல்லாம் தட்சிணாமூர்த்தியின் கீழ் உபதேசம் பெற்ற முனிவர்கள் குறித்தும் இடம்பெற்றிருக்கிறது என்பதை விரிவாக தருகிறது. அந்நூலில் இருந்து,

‘சாத்திரங்களை கற்கும் பேரார்வத்துடன் ரிஷிகள் இப்பரம குருவை சூழ்ந்திருப்பர். பல நூல்களில் இம்மாணாக்கர்களின் பெயர்கள் பலவிதமாக கூறப்பட்டுள்ளன. அம்சுமேதாகமத்தில் நாரதர், ஜமதக்னி, வசிஷ்டர், பிருகு, பரத்வாஜர், சனகர், அகஸ்தியர் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

காமிகாமகத்தில் – கௌசிகர், காஸ்யபர், பரத்வாஜர், அத்ரி, கௌதமர் முதலான ரிஷிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மற்ற இரு முனிவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. ஆனால் மொத்தம் ஏழு பேர் என்கிறது காமிகம்.

காரணாகமத்தில் – அகஸ்தியர், புலஸ்தியர், விஷ்வாமித்திரர், அங்கிரஸர் முதலான முனிவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. மேற்சொன்ன முனிவர்களின் தலையிலும் ஜடாமகுடம் அமைதல் வேண்டும் என்கிறது காரணம்.

இவர்கள் கழுத்தில் உருத்திராக்க மாலையும், மார்பில் யக்ஞோபவீதமும் அணியச்செய்தல் வேண்டும். உடலில் திருநீறு அணிந்தும், வெள்ளை உடையிலும் இருக்க வேண்டும். இம்முனிவர்களின் உயரம் தட்சிணாமூர்த்தியின் மார்புக்கு மிகக்கூடாது. கௌசிகர் மற்றும் காஸ்யபரின் நிறம் கருப்பாகவும், மற்ற இருவர் மஞ்சளாகவும், பரத்வாஜர் சிவப்பாகவும், அத்ரி மற்றும் கௌதமர் சிவப்பு கருப்பு கலவையாகவும் இருத்தல் வேண்டும் என காமிகம் கூறுகிறது. இம்முனிவர்கள் தட்சிணாமூர்த்தியின் இருபுறங்களிலும் இருவர் இருவராக ஒருபுறமும் மூவர் மூவராக ஒருபுறமும் அமரச்செய்யலாம் என்கிறது. இரண்டு பக்கமும் மூவர் மூவராகவும் இருக்கச்செய்யலாம்’.

மேற்கண்ட பத்தி ஆகமங்களில் இம்முனிவர்கள் குறித்து தெரிவிப்பது. இதில் ஆதி சங்கரர் எங்கு வந்தார்? அப்படியே வந்தாலும் ஆகமங்கள் குறிப்பிடுவது போன்று திருநீறு அணிந்து, வெள்ளை ஆடை உடுத்தி தான் அங்கு அமைந்திருக்கிறாரா? சரி இதனையும் விடுத்து ஆதி சங்கரரின் உருவ அமைதி வைத்தே பார்ப்போம். தலையில் முக்காடு காட்டப்படவில்லை. தாழ்சடையுடனேயே அந்த சிற்பம் அமைந்திருக்கிறது. அப்படியானால் சங்கரர் சிகையலங்காரத்துடன் பல்லவர் காலத்தில் காட்டப்பட்டாரா? அல்லது சைவத்தில் அடக்கி வைக்கப்பட்டாரா?

தட்சிணாமூர்த்தியிடம் ஆதிசங்கரர் உபதேசம் பெற்றதாக இதுவரை வெளிவந்துள்ள ஏகப்பட்ட சங்கர விஜயங்களில் எங்காவது குறிப்பிடப்பட்டுள்ளதா? அது சரி … இவா கூற்றுப்படி இவாளே பரம்பொருள்ன்னா, இவா எதுக்கு தக்ஷிணாமூர்த்திகிட்ட உபதேசம் வாங்கணும் ? எல்லாமே இவா தான்னா – ஏக ஆன்மா – ன்னா கூட காட்டியிருக்க மத்தவாலாம் யாரு ?

‘This me sitting at the feet of that me, along with five other me and listening to me, telling about me.. அப்படி தானே..

கையில் இருப்பது ஏகதண்டம் என முடிவுக்கு வந்திருக்கிறார் அந்த வரல் ஆற்று ஆய்வாளர். சங்கரர் அல்லாது கையில் தண்டம் வைத்துள்ள முனிகளின் பெயர்களை சொல்லுங்கள் என்றும் கேட்டிருக்கிறார். இதற்கும் திருவாவடுதுறை ஆதினம் வெளியிட்ட நூல் விடையளிக்கிறது.

‘புலஸ்தியர் ஜபமாலை-தண்டத்தை உடையவர்’
‘கௌதமர் ஜபமாலை-கமண்டலம்-தண்டத்தை உடையவர்’
‘பரத்வாஜர் யோக தண்டத்தை உடையவர்’

மேற்கண்ட மூன்று முனிவர்களும் தண்டத்தை கொண்டிருப்பர் என்பது புலனாகிறது. இதில் ஆகமங்கள் குறிப்பிடும் பரத்வாஜர், அங்கீரஸ் முதலானவர்கள் பல்லவர்களின் புராண முன்னோர் என்பது பல்லவர் கால கல்வெட்டு மற்றும் செப்பேடுகள் வாயிலாக அறியலாம். ஆகவே தட்சணாமூர்த்தியின் இருபுறமும் காட்டப்படும் முனிவர்கள் ஆகம வழியிலும், பல்லவர் கால கல்வெட்டுகளில் இருந்தும் ஆராயப்படும்போது அங்கு ஆதி சங்கரருக்கு எல்லாம் வேலையே இல்லை என்பது உண்மையாகிறது.

ஆக சைவ கோவில்களுக்குள் ஸ்மார்த்த கதைகளை சொருகிவிட்டு வாழ்ந்துக்கொண்டிருக்கும் சங்கராச்சாரியார்கள் வழிவந்த சிஷ்யப்பிள்ளைகள் இப்படி ஏதும் டகால்டி காட்டவில்லை என்றால் தான் ஆச்சரியம். மற்றபடி இது அவாள் உருட்டிய பல உருட்டில் ஒன்று தான். ஆனால் பெரியவாவே உருட்டாத உருட்டு இது.