8-வது நாளாக தொடரும் தூய்மைத் தொழிலாளர்களின் போராட்டம்.

சென்னை வாசிகளுக்கு ‘சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தை சேர்ந்த’ தூய்மைத் தொழிலாளர்கள் எழுதிக்கொள்ளும் திறந்த மடல்.

சென்னை மக்களுக்கு வணக்கம். வெயிலோ வறட்சியோ, புயலோ வெள்ளமோ, விழாக்காலமோ பேரிடர் காலமோ, நாங்களின்றி சென்னை மாநகரம் வாழத்தகுந்த நகரமாக இருக்க முடியாது. “சிங்கார சென்னை”, “தூய்மை இந்தியா”, “ஸ்மார்ட் சிட்டி” போன்ற ஆட்சியாளர்களின் வானளாவிய கற்பனைகள் அனைத்திற்கும் உருவம் கொடுப்பதில் எங்களுக்கு அலாதி பங்குண்டு. கொரொனா தொற்றால் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருந்த சூழலிலும் கூட, எங்கள் பணிக்கு முடக்கமோ ஓய்வோ இல்லை. இந்நகரத்து மக்களின் அன்றாட இருப்பிலும் இந்நகரத்தின் வளர்ச்சியிலும் எங்களது உழைப்பு தவிர்க்க முடியாததாக இருந்துள்ள போதும், சமூக வாழ்விலாகட்டும் அரசாங்க பார்வையிலாகட்டும் நாங்கள் தவிர்க்கப்படுபவர்களாகவே இருக்கிறோம். ஆம், நாங்கள் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் (CMWSSB) பல ஆண்டுகளாக பணிபுரியும் நூற்றுக்கணக்கான தற்காலிக தொழிலாளர்கள்.

களப்பணியாளர்கள், சில்ட் (தூர்வாரும்) வண்டி ஓட்டுனர்கள், ஜெட் ராட்டிங் மற்றும் சூப்பர் சக்கர் வண்டி ஓட்டுநர்கள் – ஆப்பரேட்டர்கள் ஆகிய பணிகளில் 20-30 வருடங்களுக்கு மேலாக ஈடுபட்டுள்ளோம். கைகளால் மனித மலம் அள்ளுவதை தடை செய்யும் சட்டம் கொண்டுவரப்படுவதற்கு முன்னர், மலக்குழிகளுக்குள்ளும் கழிவுநீர் சேகரிப்பு தொட்டிகளுக்குள்ளும் பாதாள கிணறுகளுக்குள்ளும் இறங்கி உயிரை பணயம் வைத்து வேலை செய்துள்ளோம்.

எங்களைப் போன்ற தொழிலாளிகளுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் வழங்கப்படுவதில்லை என்பதை நீங்களே கண்கூடாக பார்த்திருப்பீர்கள். போதுமான இயந்திர வசதிகள் இல்லாததையும் சகித்துக்கொண்டு தான் கழிவுநீர் அடைப்புகளை அகற்றி வருகிறோம். நூற்றாண்டுகள் கடந்தும் நவீனமயமாக்கப்படத்தாத பழுதடைந்த கழிவுநீர் கட்டமைப்பால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகும்போதெல்லாம், உடனுக்குடன் தலையிட்டு சீர்செய்கிறோம். விஷவாயுக்களாலும் மனிதக்கழிவு கலந்த படிமண்ணின் தாக்கத்தாலும் எங்கள் உடலில் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. பணிபுரியும் இடத்தில் விபத்துகளையும் அவமரியாதைகளையும் சந்திக்காத நாட்களே இல்லை.

இப்படி முழு நேர ஊழியர்களாய் தொடர்ந்து பல ஆண்டுகள் பணியில் நீடித்தாலும், நாங்கள் இன்றும் “தற்காலிக” ஊழியர்களாகவே நடத்தப்படுகிறோம். எங்களுக்கு ஊதியத்துடனான விடுப்பு, ESI, PF, ஓய்வூதியம், பணிக்கொடை ஆகிய தொழிலாளர் நலச் சட்டங்களின் பலன்கள் எதுவும் கிடைப்பதில்லை. வேலை நாட்களுக்கேற்ப ஊதியம் முறையாக கணக்கிடப்பட்டு வழங்கப்படுவதில்லை, குறிப்பிட்ட தேதிக்குள்ளும் வழங்கப்படுவதில்லை. எங்களுக்கென்று ஒரு அடையாள அட்டையோ அதிகாரபூர்வமான சான்றிதழோ கூட அளிக்கப்படுவதில்லை.

எங்களது சீருடைகளையும் நாங்களே செலவு செய்து வாங்க வேண்டிய அவலம் நிலவுகிறது. வேலையின் தன்மை காரணமாக நோய்வாய் பட்டு எங்களில் பலர் உயிரையும் உடல் திறனையும் இழந்துள்ளனர். சிலர் மன உளைச்சலால் தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நாங்கள் பணிபுரியும் போது இறந்தால், எங்கள் வாரிசுகளுக்கு அரசு வேலை வாய்ப்பும் இல்லை. உயிருக்கு உத்தரவாதம் இல்லாத இத்தகைய வேலையில், பணி நிரந்தரம் ஒன்றே எங்களுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் குறைந்தபட்ச அரணாக இருக்கும் என்பதை உணர்ந்து, பல ஆண்டுகளாக CMWSSB நிர்வாகிகளிடம் வலியுறுத்தி வருகிறோம். ஆனால், அவர்கள் எங்களை துச்சமாக எண்ணுகிறார்கள்.

புதிய அரசாங்கம் பதவி ஏற்ற பிறகு, எங்களுக்கும் “விடியல் ஆட்சியில்” நல்லதொரு மாற்றம் ஏற்படும் என்று காத்திருந்தோம். நமது முதல்வர், CMWSSB இன் மேலாண்மை இயக்குனர் மற்றும் எங்கள் துறை அமைச்சர் திரு. கே.என்.நேரு என அனைவரையும் சந்தித்து மனு அளித்துள்ளோம். எங்கள் மனு பரிசீலிக்கப்படும் என்று மூவரும் உத்தரவாதம் அளித்தனர். ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக எங்களை மாதாந்திர ஒப்பந்தத்திற்குள் கொண்டுவந்து தினக் கூலிகளைப்போல நடத்துகிறார்கள். இப்பின்னணியில் தான், நிரந்தர பணி மட்டுமே எங்களுக்கு ஒற்றைத்தீர்வு என்று வலியுறுத்தி #காலவரையற்ற_வேலை_நிறுத்தப்_போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

மாணவர்களே! உங்களுக்கான சிறந்த எதிர்காலம் அமைய தேர்வுகளுடன் போராடிக் கொண்டிருக்கும் நேரம் இது என்பதை நாங்கள் அறிவோம். எனினும், எங்களது போராட்டத்தின் நியாயத்தையும் சற்று கவனத்தில் எடுத்துக்கொண்டு உங்களது சமூக வலைதங்களில் எங்களுக்கு ஆதரவு தெரிவியுங்கள். வாய்ப்பிருந்தால் எங்களுக்கு களத்திலும் ஆதரவு தாருங்கள்.

உழைக்கும் மக்களே! இளைஞர்களே! நீங்கள் செலுத்தும் வரியில் தான் CMWSSB செயல்படுகிறது. அயராத உழைப்பாலும், ரத்தத்தாலும், உயிர்மூச்சாலும் சென்னை மாநகருக்கு உயிர்ப்பூட்டும் உழைப்பாளி பெருமக்களுக்கு எங்களது துயரம் தவறாது புரிந்திருக்கும். எங்களது வேலை நிறுத்தப் போராட்டம், சக மனிதர்களுக்கு இன்னல்கள் ஏற்படுத்தும் நோக்கத்த்தோடு மேற்கொள்ளப்படுவது அல்ல, மாறாக நாங்களும் சுயமரியாதை மிக்க நிம்மதியான வாழ்க்கைக்கு ஏங்கும் மனிதர்களே என்பதை அரசு இயந்திரத்திற்கு உணர்த்த எங்களிடம் மிஞ்சி இருக்கும் கடைசி கருவி இது.

இந்நகரத்தை தூய்மையாகவும், சுகாதாரமிக்கதாகவும் பராமரிப்பவர்கள் வெறும் புள்ளிவிவரமாக வாழ்ந்து மடியும் காலம் கடந்து விட்டது. ரத்தமும் சதையும் கனவுகளுமாக உள்ள எங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை, நீங்கள் அனைவரும் உணர்வுபூர்வமான ஆதரவை எங்களுக்கும், எங்கள் குடும்பத்தாருக்கும், எங்களது போராட்டத்திற்கும் வழங்குவீர் என்ற நம்பிக்கையுடன் களத்தில் சமர் செய்ய உள்ளோம்.

உங்களது பேராதரவைக் கோரி, CMWSSB தூய்மைத் தொழிலாளர்கள்
தொடர்புக்கு: 6383277248 | 9381199216 | 7358418782