303 இடங்களில் வெற்றி.பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி-அபராஜிதன்.

பா.ஜ.க தோல்விடையும், அதனால் ஆட்சியமைக்க முடியாது. மாநில கட்சிகள் இணைந்து ஆட்சியமைக்க வாய்ப்பு என்பதாகத்தான் பெரும்பான்மையான எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால் இந்த எதிர்பார்ப்புகளுக்கு எதிராகவும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை உறுதிப்படுத்தும் விதமாகவும் பா.ஜ.க வின் வெற்றி அமைந்திருக்கின்றன.

இந்தி பேசும் மாநிலங்களில் காங்கிரசு முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டிருப்பதும், உத்தரபிரதேசத்தில் மாயாவதி- அகிலேஷ் மகா கூட்டணி தாக்கம் செலுத்த முடியாததும் இந்த தேர்தலில் முக்கிய பங்கினை ஆற்றியிருக்கிறது.

பா.ஜ.க செல்வாக்கு மாநிலங்களான உத்தரபிரதேசம்,மத்தியபிரதேசம்,பீகார்,மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ,குஐராத், ஜார்கண்ட் போன்றவற்றை தக்க வைத்துக்கொண்டதும் கர்நாடகா,மேற்கு வங்கம்,ஒதிசா இன்னும் பல மாநிலங்களில் கணிசமான இடங்களை கைப்பற்றியிருப்பதும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

பா.ஜ.க நிச்சயமாக தனிப்பெரும்பான்மை பெறாது என்ற அனைவருடைய கணிப்பையும் தவறாக்கி இருக்கிறது இந்த தேர்தல். பாலகோட் தாக்குதல், மோடி- அமித்ஷா பிரச்சார யுக்தி, இந்துத்வா பிரச்சாரம்,தேர்தல் கமிசன் ஆதரவு ,வாக்கு இயந்திரங்கள் மோசடி என்ற பல யுக்திகளில் வெற்றியை அளித்தது எது என பா.ஜ.க வுக்கே வெளிச்சம்.

வட இந்திய மக்கள் பா.ஜ.க வுக்கு வாக்களித்துள்ளனர்.தென்னிந்தியாவில் கர்நாடகம் நீங்கலாக மற்ற மாநிலங்கள் பா.ஐ.க வை புறக்கணித்துள்ளனர்.ஆனாலும் இந்தியா முழுமைக்கும் அவர்தான் பிரதமர்.
வாக்களித்தவர்களுக்கு வாய்க்கரிசி போடுவதில் மோடி சிறந்தவர் என்பதால் பல வாணவேடிக்கைகளை இனிவரும் ஐந்து ஆண்டுகளில் பார்க்கலாம்.

ஆனால் மக்களுக்காக உண்மையாக நிற்கப்போகும் கட்சிகளையும் ,நபர்களையும் அடையாளம் காட்டப்போவதும் இந்த ஐந்து ஆண்டுகள்தான்.இந்திய ,தமிழக அரசியலில் வரும் ஐந்து ஆண்டுகள் மிகவும் முக்கியமானவையாக அமையப்போகிறது.

அபராஜிதன்.