தமிழர்-பகைமை! -சுப. உதயகுமாரன்

Estimated read time 1 min read

பகல் பொழுதுகளில்
ஒன்றுதிரண்டு உண்ணாநோன்பிருந்து,
ஊரூராய் ஊர்வலம் போய்,
உற்ற வழி ஏதாவதொன்றில்
ஓரளவேனும் உதவிட இயலாதா என்றெண்ணி
இயன்றவரை இடைவிடாது இயங்கிக்கொண்டு,

இரவு வேளைகளில்
தன்னந்தனியனாய் கணினியின் முன்னமர்ந்து,
இன்றேதும் போர்த்திருப்பம் நிகழ்ந்திராதா,
யாரேனும் ஏதேனும் செய்திறாரா,
என்றெல்லாம் தோண்டித் துருவி, தேடிச் சலித்த நாட்கள்
குமரியிலேயே கொடூரமாய் எரிந்தன.

கைகளைப் பிசைந்து, வாய்விட்டு அழுது,
கண்ணீரும் கம்பலையுமாய்க் கழித்த
அந்த இனப்படுகொலை இழவுக் காலம்
இன்றும் கழுத்தை நெரித்து, மூச்சை நிறுத்துகிறது.
இது இனப்படுகொலை இல்லையென்றால்
எதுதான் அந்த கொலை மாபாதகம்?

தனியொரு யூதரை தகாத முறையில் நடத்தினால்,
‘அன்றி-செமிட்டிசம்’ என்று அலறித்துடிப்பது போல்,
தமிழரோ, பாலஸ்தீனரோ, சிறுபான்மையினரோ,
உக்ரெய்ன் மக்களோ, ஓர் ஆலை எதிர்ப்பாளரோ,
யாராக இருந்தாலும் மாறாத மாண்பும், கண்ணியமும்,
மக்களனைவர்க்கும் உண்டென்று உரக்கச் சொல்வோம்!

இங்குள்ள தமிழரெலாம் ஒன்றுகூடி
ஈழத் தமிழருக்காய் நியாயம் கேட்போம்!
தரணிமீதில் அங்கிங்கெனாதபடி பரந்து வாழும்
தனியொரு தமிழனுக்கு தீங்கு நேர்ந்தால்
தக்கதொரு வார்த்தையால் அதைக் குறிப்போம்,
தமிழராய் எதிர்த்து நின்று தட்டிக் கேட்போம்:
தமிழர்-பகைமை!

சுப. உதயகுமாரன்
நாகர்கோவில்,
மே 17-18, 2024.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours