2024- தேர்தலில் மாணவர்கள் ஆற்றவேண்டிய பங்கு   

Estimated read time 1 min read


எல்லோரும் பங்கேற்கவேண்டியே ஜனநாயக தேர்தல் திருவிழா! இப்படிதான் தேர்தல் விளம்பரப்படுத்தப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் மாணவர்கள் தேர்தலில் உரிய முறையில் பங்கெடுக்கிறார்களா என்பதுதான் இங்கே அலசப்படவேண்டிய விடயம். விஜய் கட்சி ஆரம்பிப்பதாக அறிவித்த உடனே 2026 இல் விஜய்தான் முதல்வர் என்று, இன்றைக்கு மாணவர்கள் பேசுவதை பார்க்க முடிகிறது. அரசியலின் முழுப்பரிணாமமும் புரியாமல் திரையில் பேசுவதையும், நடிப்பதையும் வைத்து கொண்டு ஹீரோயிசத்தை கொண்டு தனது மற்றும் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அளவிற்குத்தான் பெரும்பான்மையான மாணவர்கள்,இளைஞர்கள் இருக்கிறார்கள்.  அரசியல் ஒரு சாக்கடை, அரசியல் திருடர்களின் பாதை, மாணவர்களுக்கு அரசியல் எதற்கு? என்று பலவாறாக தவறான கற்பிதங்களை உருவாக்கி மாணவச் சமுகத்தை அரசியலில் இருந்து, சமூக பொறுப்புகளில் இருந்து விலக்கி வைக்க எப்போதும் சூழ்ச்சிகரமான பிரச்சாரம் நடந்து கொண்டே இருக்கிறது.

ஒரு மனிதனுடைய வாழ்நாளில் ஊக்கமும் ,கிளர்ச்சியும் ,துணிச்சலும் நிரம்பிய காலகட்டம் என்றால் அது மாணவப் பருவம்தான். கல்லூரிகளில் நுழைந்த உடனே மாணவர்களுக்கு சிறகுகள் முளைக்க துவங்கிவிடுகிறது. ஆனால் தன்  வாழ்நாளிலே முக்கியமான கல்வியை அங்கேதான் கற்க போகிறோம், கற்க வேண்டும் என்ற தெளிவுகள்  இல்லாமல் கிடைக்கும் சுதந்திரத்தை மனம்போன போக்கில் அனுபவித்துவிடவேண்டும் என்ற வேட்கையில் காலம் சடுதியாக  பறந்து விடுகிறது.எதிர்காலம் நிச்சயமற்றதாகிவிடுகிறது.

இந்தியா முழுவதும் நடந்தேறும் அரசியல் மாற்றங்களில் மாணவர்கள் எப்போதும் முன்னணிப் படையாகவே வரலாற்றை புரட்டி போட்டவர்களாகவே நாம் அறிகிறோம். ஆனால் சமீபத்திய சில பத்தாண்டுகளில் மாணவர்களிடமிருந்து அரசியல் திட்டமிட்டு விலக்கப்படுகிறது. அவர்களது உரிமைகள் பறிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் காங்கிரசை  வேரோடு வீழ்த்திய மாணவர் எழுச்சியை வரலாறு மறக்காது. ஆனால் வரலாற்றை மாணவர்கள் அறிந்துவிடாத அளவிற்கு இருட்டடிப்புகள் செய்யப்படுகின்றன. மீண்டுமொரு மாற்றத்தை யாரும் விரும்பவில்லை என்பது காரணமா இருக்கக்கூடும்.

மாணவப் பருவத்திலே கற்று கொள்ளும் கல்வியும், பண்புகள்தான் ஒரு மனிதனுடைய எதிர்கால வாழ்வை கட்டமைக்கிறது. அந்த வரிசையில் பல பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் தங்களுடைய மாணவர்களுக்கு எழுச்சிமிக்க வரலாற்றையும் அவர்களது கடமையும் உரிய முறையில் போதித்து வந்த போதல்லாம் நமது நாடு எப்பொழுதெல்லாம் பிரச்சனைகளை சந்தித்ததோ அப்பொழுதெல்லாம் மாணவர்கள் போராட்ட களத்தில் முன் வரிசையில் நின்றனர். சுதந்திர போராட்டம், இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் ,புரட்சிகர மாற்றங்களை கோரும் போராட்டம் ,சமூக நீதிக்கான போராட்டம், சர்வதேச பிரச்சனைக்கான போராட்டம் என்று மாணவர்கள் பங்களிக்காத போராட்டமே இல்லை.
இன்று அந்தப்போக்கு குறைந்திருக்கிறது.

இந்தியா ஜனநாயகப்பாதையில் திரும்பி விட்டது. மாணவர்கள் அரசியலில் பங்கேற்கும் அளவிற்கு நிலைமை அவசியமானதாக இல்லை என்ற காரணத்தால் மாணவர்கள் அரசியலில் இருந்து விலக்கி வைக்கப்படுகிறார்களா? அல்லது திட்டமிட்ட வகையில் மாணவர் சங்கங்களை கலைத்து, மாணவர் சங்க தேர்தல்களை தடை செய்து, மாணவர்கள் அரசியல் செய்கிறார்கள், அரசியல் கட்சிகள் மாணவர்களை தவறாக பயன்படுத்துகிறது என்றல்லாம் காரணங்களை சொல்லி மாணவர்களின் உரிமைகளை, சங்கமாக, அரசியலாக செயல்படுவதை மறுத்து, நாட்டின் அரசியல் எதிர்காலத்திற்கு தேவையான சிறந்த அரசியல்வாதிகள், அரசியலமைப்புகள் உருவாவதை தடுத்து ஊழல் மிகுந்த, பிற்போக்கு அரசியல் நீடிப்பது உறுதி செய்யப்படுகிறது?

தேர்தல் ஜனநாயக திருவிழாவில் நடக்காத அரசியல்களா ? குதிரை பேரங்களும், அருவருப்பான அணி மாறுதல்களும், மக்களுக்கு இழைக்கப்படும் துரோகங்களும்,
அமலாக்கத்துறை, வருவாய்த்துறை மிரட்டல்களும், கைதுகளும், சட்டமன்ற- நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிரட்டப்படுவதும் விலைக்கு வாங்கப்படுவதும், வாக்களிக்கும் இயந்திரம் களவாடப்படுவதும் திருத்தப்படுத்தலும், கோடிக்கணக்கான நிதிகள் மிரட்டியும் உருட்டியும் வாங்கப்படுவதும், இந்துத்துவ- சாதிய குண்டர்களை வைத்தும் மிரட்டுதல், நீதித்துறை- நிர்வாகத்துறை- ஊடகங்களை வளைத்து நமது ஜனநாயகம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. வரலாற்றின் முந்தைய காலங்களில் இந்நேரம் மாணவர்கள் களத்தில் வந்திருப்பார்கள்.இது போன்று எதுவும் நடக்கக்கூடாது என்பதால்தான் மாணவர்களை அரசியலில் இருந்து அகற்றி அவர்களை திசை திருப்பும் வேலையினை பார்ப்பனீய, அதிகார, அரசியல் கட்சிகள் முதற்கண் வேலையாக செய்துகொண்டிருக்கிறது.

மாணவர்களே, விழித்துக் கொள்ளுங்கள்,

இப்போது விழித்துவிட்டால் எப்போதும் விழித்திருக்கலாம். அரசியல் என்பது தேர்தல் காலத்தில் மட்டும் செய்யும் வேலையன்று, எப்போதும் செய்வது, ஆனால் தேர்தல் காலத்தில் செய்யும் வேலைகள் பன்மடங்கு பலனை தரக்கூடியது. வாக்களித்துவிட்டு ஐந்து வருடம் உறங்குவது அரசியல் கடமையை ஆற்றுவதாக ஆகாது. தேர்தலில் பங்கெடுக்கும் கட்சிகள், வேட்பாளர்களை கேள்விகளால் துளைக்க வேண்டும், அவர்களது கடந்தகால செயல்பாடுகளை கேள்விக்குள்ளாக்க வேண்டும். சரியான கருத்துகளை மக்கள் மத்தியில் பரப்ப வேண்டும். சரியான கருத்துகளுக்கு ஒரு பலம் உண்டு. அவை வெளிவந்துவிட்டால் அதனால் தாக்கத்தை உருவாக்காமல் இருக்க முடியாது. சில நாட்கள் தாமதமாகலாம். ஆனால் அவற்றுக்கு விடைகள் சொல்லப்பட்டே ஆகவேண்டும்.
இன்று சமுக ஊடகங்கள் இவற்றுக்கான வாய்ப்பை உருவாக்கி தந்துள்ளது. களத்தில் இறங்கி மக்களை நேருக்குநேர் சந்தித்து வேலை செய்ய வாய்ப்புள்ளவர்கள் அவற்றை தவற விடாதீர். வாய்ப்பு இல்லாதவர்கள் சமுக ஊடகங்கள் மூலமாக செயல்படுங்கள்.
தமிழ்நாட்டு மக்களின் எதிரிகளை இனம் காணுங்கள். அவர்கள் அவமானப்பட்டு ஓடி ஒளியும் வரை அவர்களை அம்பலப்படுத்துங்கள். மாணவர்களின் பலம், அரசியல் தெளிவினை இந்த நாடு கண்டுணரட்டும்.

அனைத்து தமிழ்நாடு மாணவர் சங்கம்

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours