நீதி வென்றது:ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உச்சநீதிமன்றம் தீர்ப்பு! -வைகோ அறிக்கை

Estimated read time 0 min read

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை 1994 ஆம் ஆண்டு ஜனவரி 1 இல் தொடங்கப்பட்டது. சுற்றுச்சூழலை நாசப்படுத்தியும், தூத்துக்குடி மக்களின் உடல் ஆரோக்கியத்தையும் கெடுத்ததோடு, வேளாண் நிலங்களையும் பாழ்படுத்திய ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூட வேண்டும் என்று 1996 ஆம் ஆண்டில் இருந்து மறுமலர்ச்சி திமுக மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் தொடர்ந்து போராடி வந்தது.

இறுதியாக உச்சநீதிமன்றத்தில், நீதி அரசர்கள் ரோகிங்டன் நாரிமன், நவீன் சின்கா அமர்வில் ஸ்டெர்லைட் வழக்கு இறுதி விசாரணை நடைபெற்றது. அப்போது 2019 பிப்ரவரி 07 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று 40 நிமிடங்கள் எனது வாதத்தை ஆணித்தரமாக எடுத்து வைத்தேன்.

2019 பிப்ரவரி 18 அன்று உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டு தீர்ப்பு அளித்தது.

இத்தீர்ப்பை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் மனு தாக்கல் செய்தபோது, சென்னை உயர்நீதிமன்றம் செல்லுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் 2020 ஆகஸ்ட் 18ஆம் தேதி மாண்பமை நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அமர்வு நாசக்கார ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூடுமாறு தீர்ப்பளித்தது.

இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை முடிவுற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று(29.02.2024) ஸ்டெர்லைட் நச்சு ஆலையை திறக்க அனுமதி கோரிய வேதாந்தா குழுமத்தின் மனுவை தள்ளுபடி செய்தது வரவேற்கத்தக்கது. மேலும், ஸ்டெர்லைட் ஆலை வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பாகக் கையாண்டதாக பாராட்டுத் தெரிவித்து இருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது.

இதன் மூலம் ஸ்டெர்லைட் நச்சு ஆலை நிரந்தரமாக மூடப்படுவது உறுதியாகி விட்டது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு போராடிய மக்களின் போராட்டம் வெற்றி பெற்று உள்ளது.

இது மறுமலர்ச்சி திமுக ஸ்டெர்லைட் ஆலையை மூட மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் 28 ஆண்டுகளாகப் போராடியதற்குக் கிடைத்த வெற்றி ஆகும்.

ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் போராடியபோது காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டு 13 அப்பாவி உயிர்கள் பறிபோனதற்கு உச்ச நீதிமன்றத்தில் உரிய நீதி கிடைத்திருக்கிறது.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க,

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours