பொன்முடி அமைச்சர், எம்.எல்.ஏ பதவி – தகுதி இழப்பு?!- புன்னை வளவன்

Estimated read time 1 min read

சொத்து குவிப்பு வழக்கில் திமுக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது இணையர் விசாலாட்சி பொன்முடி ஆகியோர் குற்றவாளி என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. தீர்ப்பின்/தண்டனையும் முழுமையான விபரங்கள் வருகிற 21 ஆம் தேதி வழங்கப்படும் எனவும், பொன்முடி மற்றும் அவரது மனைவி அன்றைய தினம் நேரடியாக அல்லது காணொளி காட்சி வாயிலாக ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவர் அந்த பதவியில் தொடரலாமா என்கிற விவாதம் தற்போது எழுந்துள்ளது.

இந்த இடத்தில் இரண்டு விதமான வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றால் தான் ஒருவருடைய எம்.பி அல்லது எம்.எல்.ஏ பதவி தகுதி நீக்கம் ஆகும், இப்போதைக்கு தண்டனை விபரம் அறிவிக்கப்படாத காரணத்தினால் பொன்முடி அமைச்சராக தொடர்கிறார் என ஒரு சாராரும்,

ஊழல்/சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட கணமே, அவருடைய பதவி தாமாக பறிபோகும் என மற்றொரு சாராரும் வாதிடுகின்றனர்.,

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் (Representation of the People act,1951) உட்கூறுகளை பார்க்கும் பொழுது,

சில வழக்குகளில் தண்டனை பெறுவது மட்டும் ஒருவரை எம்எல்ஏ அல்லது எம்பி பதவியில் இருந்து தகுதி இழப்பு செய்ய போதுமானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 8 (1) (m) இவ்வாறாக சொல்லுகிறது.

RPA Act, Section (8) Disqualification on conviction for certain offences.—1[
(1) A person convicted of an offence punishable under—
….
(m). The prevention of corruption Act, 1988 (41 of 1988)

Conviction – ஒருவர் குற்றவாளி என அறிவிக்கப்படுவதே அவரை தகுதி நீக்கம் செய்ய இந்த சட்டப்பிரிவு வழிவகை செய்கிறது.

அதே சமயம்,
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு

8(3) – இச்சட்டத்தின் 8(1), 8(2) ஆகிய இரண்டு பிரிவுகளில் குறிப்பிடப்படாத குற்ற வழக்குகளில், இரண்டு ஆண்டுகளுக்கு மிகாமல் தண்டனை பெற்றால் ஒருவர் எம்பி அல்லது எம்எல்ஏவாக தொடர்ந்து நீடிக்க முடியாது தகுதி இழப்பு நேரிடும் என குறிப்பிடுகிறது.

RPA Section 8(3),
A person convicted of any offence and sentenced to imprisonment for not less than two years [other than any offence referred to in sub-section (1) or sub-section (2)] shall be disqualified from the date of such conviction and shall continue to be disqualified for a further period of six years since his release…

sentenced to imprisonment for not less than two years – இரண்டு ஆண்டுகளுக்கு மிகாமல் தண்டனை பெற்றிருக்கும் பட்சத்தில் தகுதி இழப்பு செய்ய முடியும்.

ஆனால், இந்த சட்டப்பிரிவு, இதற்கு முந்தைய 8(1), 8(2) ஆகிய சட்டப்பிரிவுகளில் சொல்லப்பட்டுள்ள குற்றங்களுக்கு பொருந்தாது – [other than any offence referred to in sub-section (1) or sub-section (2)] .

இதன் அடிப்படையில் பார்க்கும் பொழுது, பொன்முடி அவர்கள் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட அந்த நிமிடமே அவர் தகுதி இழப்பு பெற்றதாக நாம் கருத வாய்ப்புள்ளது.

இரண்டு சமகால உதாரணங்களை பார்த்து இதில் இன்னும் கூடுதலாக தெளிவு பெறலாம்.

  1. ஜெ. ஜெயலலிதா:
    முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா 2014 ஆம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அறிவித்தார்.

குற்றவாளி என்று நண்பகல் அறிவிக்கப்பட்டு, மாலை தீர்ப்பு விபரங்களும், தண்டனையின் விபரங்களும் அறிவிக்கப்படும் என்று நீதிபதி சொல்லி இருந்தார்.

இதற்கு இடைப்பட்ட நேரத்திலேயே, ஜெயலலிதாவின் காரில் இருந்த தேசியக்கொடி அகற்றப்பட்டது (Disqualified upon Conviction irrespective of quantum of Judgment being undeclared at that time).

  1. ராகுல் காந்தி:
    ராகுல் காந்தி மோடி‌-க்கள் குறித்து கர்நாடகாவில் பேசிய வழக்கில், குஜராத்தில் வழக்கு நடந்து, இரண்டு ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு அவருடைய எம்.பி பதவி பறிக்கப்பட்டது.

தண்டனைக்கு தடை விதித்த உச்சநீதிமன்றம், இரண்டு ஆண்டுகள் என்பதற்கு ஒரு நாள் குறைவாக தண்டனை கொடுத்திருந்தாலும் அவர் பதவியை இழந்திருக்க மாட்டார் என்று குறிப்பிட்டார்கள்.

இது பொன்முடிக்கு பொருந்தாதா? என்கிற சந்தேகம் எழலாம். ராகுல் காந்தி பேசிய பேச்சு, குறிப்பிட்ட சமூகத்தின் மீதான அவதூறு என்பதாக, Slander என்பதாக பொருள் கொள்ளப்பட்டது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 8(1), 8(2) ஆகிய சட்டப்பிரிவுகளில் இந்த குற்றம் குறிப்பிடப்படவில்லை.

அதன் அடிப்படையில் பார்க்கும் பொழுது, 8(3)ல், இரண்டு ஆண்டுகள் தண்டனை பெற்றால் மட்டுமே ராகுல் பதவி பறிக்கப்பட முடியும் என்கிற சட்ட வாய்ப்பு வந்தது.

குஜராத் கீழமை நீதிமன்ற நீதிபதி, உச்சபட்ச தண்டனை கொடுத்ததால் பதவி பறிக்கப்பட்டது. எனவே இது இங்கு பொருந்தாது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன், இந்த சட்டப்பிரிவுகளை இவ்விதம் பொருள் கொண்டு அமைச்சர் பதவியை பறிக்கலாம். மேல் முறையீடு செய்ய நேரம் வழங்கலாம். தண்டனைக்கு குறிப்பிட்ட காலம் வரை அவரை தடை விதிக்கவும் செய்யலாம்.

அல்லது வேறு விதமாக பொருள் செய்து, இரண்டு ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை கிடைக்கும் பட்சத்தில் – அமைச்சர் பதவியில் தொடர‌ தடை இல்லை என தன்னுடைய தீர்ப்புகளை வழங்கவும் வாய்ப்பு இருக்கிறது.

இரண்டு ஆண்டுகளை தாண்டி சிறை தண்டனை கிடைக்கும் பட்சத்தில், சட்ட வியாக்கியான தர்க்கங்களுக்கு இடம் இன்றி இடமின்றி அமைச்சர் பதவியை பொன்முடி இழப்பார்.

சொத்து குவிப்பு வழக்கு என்பது அடிப்படையில் ஊழலா என்ற கேள்வி எழுப்பினால், Prevention of corruption Act-ல் தான் அத்தகைய வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. அரசியல்வாதியாக (அமைச்சராக) இருக்கும் தனிநபர், கூடுதலான சொத்துக்களை தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஊழல் மூலமாக ஈட்டியுள்ளார் என்பதாகத்தான் பார்க்கப்படும்.

இதற்கு நடுவில், மேலே நாம் குறிப்பிட்டுள்ள வியாக்கியானங்களை பயன்படுத்தி, தமிழ்நாடு ஆளுநர் அமைச்சர் பொன்முடியை, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

21 ம் தேதி பொன்முடி வழக்கின் தீர்ப்பு, பலவிதமான சுவாரசியங்களை தாங்கியதாக இருக்கப்போகிறது.

புன்னை வளவன்

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours