புதிய தேசிய கல்விக் கொள்கை 2020- வர்ணாசிரமத்தின் புதிய வடிவம்- ஜனநாயக கல்வி பாதுகாப்பு கூட்டியக்கம்

Estimated read time 1 min read

ஆங்கிலேயர்கள், தங்கள் ஆட்சி அதிகாரத்தை இந்தியாவில் நிலை நிறுத்திக் கொள்வதற்காக, உருவாக்கி, வளர்த்ததே, தற்போதைய இந்திய கல்வி முறைமை.

தொடக்கத்தில், சாதியப் படிநிலையில், மேல் தட்டில் இருந்தவர்களுக்கு வழங்கப்பட்ட ஆங்கில வழி கல்வி, பின்னர், அனைவருக்குமான கல்வியாக பிராந்திய முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, தாய்மொழி வழிக் கல்வியாக நீட்டிக்கப்பட்டது.

ஆங்கிலேயர்கள், தங்கள் ஆட்சி அதிகாரத்தை இந்தியாவில் நிலை நிறுத்திக் கொள்வதற்காக, உருவாக்கி, வளர்த்ததே, தற்போதைய இந்திய கல்வி முறைமை.

இன்று வரை – அதே கற்றல் — கற்பித்தல் முறைகள், மதிப்பீட்டு முறைகள், கல்வி நிறுவன நிர்வாக முறைகளே பெரும் மாற்றம் இன்றித் தொடர்கிறது.

அதே சமயம், ஆங்கிலக் கல்வி வளர்ச்சியின் காரணமாகத்தான், காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, சுதந்திரம் அடைய வேண்டுமென்ற உணர்வை நாடு முழுவதும் மொழி பேதம் இன்றி எடுத்துச் செல்ல முடிந்தது.

சுதந்திர இந்தியாவில் வெகு மக்களுக்கான பொதுக் கல்வி வளர்ச்சி இந்திய நாட்டின் வளர்ச்சிக்கான அறிவியல், தொழில்நுட்ப ஆற்றலை, வழங்கியது.

இத்தகைய கல்வி வளர்ச்சி என்பது, இந்திய நாட்டின் வளர்ச்சிப் போக்கில், இந்திய மக்களுக்கு போதுமானதாக கல்வி வளர்ச்சியாக இல்லை.
நெருக்கடிகள் முற்றின.

கல்விக்கென்று, ‘கோத்தாரி கல்வி குழு’ அமைக்கப்பட்டது.

கல்வி வளர்ச்சிக்கு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 6 விழுக்காடு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், என்று கோத்தாரி கல்வி குழு பரிந்துரை செய்தது. அது முற்றிலும் ஏற்கப்படா விட்டாலும், கல்விக்கு 6 விழுக்காடு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்ற அழுத்தம், கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை, அதிகரிக்க, இன்றுவரை காரணமாக இருந்து வருகிறது.

1986 ஆம் ஆண்டு, உருவாக்கப்பட்ட கல்விக் கொள்கை, அனைத்து மக்களின் தேவைக்கும், வளர்ச்சிக்கிற்கும் , ஏற்றதாக இல்லை.

கல்வியில் தனியார் மயத்திற்கான கதவுகளை, இக்கல்விக் திறந்து விட்டது.

கல்வி மக்களின் உரிமை என்பதைத் தாண்டி, ஒரு பிரிவினருக்கான சிறப்புரிமையாகவே நீடித்தது.

அரசியலமைப்பு சட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளில், அனைவருக்கும், தரமான, சமமான, இலவச, கட்டாய, கல்வி* நடைமுறையில் சாத்தியம் ஆகவில்லை.

தனியார் மயம், தாராள மயம் , உலக மயம்,* ஆகியவற்றின் அடிப்படையில், புதிய பொருளாதாரக் கொள்கை 1990 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது.

இதன் காரணமாக, நிதித்துறை தாராளமயம் ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. இந்த நிதித்துறை தாராளமயமாக்கல், தேசத்தின் முன்னுரிமைகளை முன்னெடுக்க பெரும் தடைகளை உருவாக்கியது.

உள்நாட்டு, வெளிநாட்டு நெருக்கடிகள் முற்றின. இதனால், கல்வி, வேலை வாய்ப்பு, ஆகியவற்றில் பெரும் பாதிப்புகள் உருவாயின.

கல்விக்கான நிதி ஒதுக்கீடு என்பது , பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை குறைக்கப்பட்டது.
இதன்காரணமாக, சுயநிதி பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், ஆகியவை, புற்றீசல் போல், நாடெங்கும் பெருக்கெடுத்தன.

கல்வி, ஓர் லாபமீட்டும் பண்டமாக மாற்றப்பட்டது.

*வேலைவாய்ப்பு சார்ந்த பாடங்கள் அனைத்தும் தனியார் உயர் கல்வி நிறுவனங்களில் என்ற நிலை இருந்தது. தனியார் கல்வி நிறுவனங்களில் இருந்து, வெளிவந்த மாணவர்களுக்கு, வேலை வாய்ப்புகள் பெருகியது. இது, மேலும் தனியார்மய மோகத்தை அதிகரித்தது.

தனியார் உயர்கல்வி நிறுவனங்களில், தொழில்நுட்ப கல்வி மேலோங்கி இருந்தது. அறிவியல், சமூக அறிவியல் கல்வி குறைத்து மதிப்பிடப்பட்டது.

தாராளமயக் கொள்கைகளின் காரணமாக, வருவாயிலும் வேலை வாய்ப்புகளிலும் பெருத்த ஏற்றத் தாழ்வுகள் தோன்றின.
வேலையின்மை அதிகரித்தது.

இத்தகைய சூழல், வகுப்புவாதம் வளரக் காரணமாயிற்று. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் நிலைக்கு அது இட்டுச் சென்றது.

வகுப்புவாதம், நவ தாராளமயமாக்கல் ஆகிய இரண்டும், அதன் அதன் சேவைக்கு ஒத்திசைவாக செயல்பட்டது. ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கவும், ஒன்றை ஒன்று வளர்த்துக் கொள்ளவும், உதவி புரிந்தது.

மக்களின், அடிப்படை உரிமைகளான, கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு போன்ற உரிமைகள் மறுக்கப்பட்டன.* மக்கள் ஒற்றுமை சீர்குலைக்கப்பட்டது. மக்களின் ஒன்றுபட்ட போராட்டங்கள் கடினமாயின. இதன் தொடர்ச்சியாக, அரசியல் சாசனத்தின்படி ஆட்சி, அரசியல் சாசன மாண்புகளை காத்தல், என்ற நிலை மாறி, பெரும்பான்மை வாதம் தலைதூக்கியது.

இந்தச் சூழலில், புதிய தேசிய கல்விக் கொள்கை உருவாக்க முயற்சிகள் 2016 ஆம் ஆண்டு துவங்கி, 2020 ஆம் ஆண்டு முற்றுப்பெற்றது.

புதிய தேசிய கல்விக் கொள்கை 2020ஆம் ஆண்டு அமலுக்கு வந்து, மூன்றாண்டுகள் நிறைவுற்று விட்டது. இருந்தாலும், புதிய தேசிய கல்விக் கொள்கை 2020 இல் கூறப்பட்டுள்ள, தொலைநோக்கு பார்வை சார்ந்த கொள்கைகள் திட்டங்கள் எதுவும் இதுவரை நடைமுறை ஆக்கம் செய்யப்படவில்லை.

2016 ஆம் ஆண்டு, புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு வித்திட்ட T.R சுப்பிரமணியம் கல்விக் குழு தொடங்கி, கஸ்தூரி ரங்கன் குழு அறிக்கை வரை, அதனைத் தொடர்ந்து, 68 பக்க “தேசிய கல்விக் கொள்கை 2020 ஆவணம்” வரை எடுத்துக் கொண்ட கால அவகாசம், அதில் ஈடுபடுத்தப்பட்டவர்கள், அமைப்புகள், எனப் பரிசீலனை செய்தால், அதில், இந்த நாட்டின் நலன் கருதி உழைத்திட்ட, அனைத்து தரப்பு மக்களும், கல்வியாளர்களும், அறிவு ஜீவிகளும் பயன்படுத்தப்படவில்லை. மேலும், *பாராளுமன்றம் வழியே, “புதிய தேசிய கல்விக் கொள்கை 2020” அறிமுகம் செய்யப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டு, அமலாக்கம் செய்யப்படவில்லை.

கல்விக் கொள்கை என்பது, நாட்டின் வளர்ச்சிக்காக, மக்களை ஆற்றல் படுத்தும், மிக முக்கியமான கருவி, என்பதை அனைவரும் அறிவோம். அத்தகைய சக்தி மிக்க கருவி, இந்திய நாட்டின் விழுமியங்களைக் காக்கவும், போற்றவும், அரசியல் சாசனத்தின் மாண்புகளை பாதுகாக்கவும், 21 ஆம் நூற்றாண்டின் சவால்களை சந்திக்கவும் உருவாக்கப்பட்டதா? என ஆய்ந்தால், ‘இல்லை’ என்ற பதிலே மிஞ்சுகிறது.

இந்திய நாடு, சுதந்திரம் அடைந்த பின்னர், கிடைத்த முன்னேற்றங்களை தக்கவைத்துக் கொள்ளவும், தற்போது நிலவும் குறைபாடுகளை சரி செய்யவும், கல்வியில் பின்தங்கியோரை முன்னேற்றவும் “புதிய தேசிய கல்விக் கொள்கை 2020” ஒருக்காலும் பயன்படாது.

அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கிய நமது முன்னோடிகள், கல்வியை மாநில பட்டியலில் வைத்தனர். அவசர கால நிலையை பயன்படுத்திக் கொண்டு, 42வது அரசியல் சாசன திருத்தம் வழியாக, கல்வி பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது.

இவ்வாறு பொதுப்பட்டிகளுக்கு மாற்றப்பட்ட பிறகும், *பள்ளிக்கல்வி, மாநில கல்வி வாரியங்களிலேயே நிர்வகிக்கப்பட்டு வந்தது.

புதிய தேசிய கல்விக் கொள்கை 2020″, தொடக்கக் கல்வி தொடங்கி, அனைத்தையும் மையப்படுத்தி விட்டது. பொதுப் பட்டியல் என்பதற்கு பொருளே இல்லாமல் செய்து விட்டது.

உயர்கல்வியை பொருத்தமட்டில், அதனை, ஒன்றிய அரசு முற்றிலும் தனதாக்கி கொண்டது. ஒன்றிய அரசு, இனி, அனைத்து விதமான உயர்கல்வியையும், பிரதமர் தலைமையிலான 12 பேர் கொண்ட குழுவே நிர்வகிக்கும். அந்த குழுவில் கல்வியாளர்கள் பெயருக்கு இருவர் மட்டுமே இடம் பெற்றிருப்பர். உயர் கல்விக்கான அங்கீகாரம், நிதி, தர நிர்ணயம், தேர்வு என நான்கு கட்டமைப்புகளையும், பிரதமர் தலைமையிலான உயர்கல்வி ஆணையமே கவனித்துக் கொள்ளும்.

ஆராய்ச்சி, நிதி ஆகியவற்றுக்கு வழிகாட்டும் அதிகாரமும், உயர் கல்வி ஆணையத்திடம் குவிந்திருக்கிறது.

மொழிக் கொள்கையை பொறுத்தமட்டில், சமஸ்கிருதத்திற்கு அதீத முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு பாடமாக அல்லாமல், இதர அனைத்து இந்திய மொழிகளின் மீதும் ஆதிக்கம் செலுத்துவதாகவும், இந்தி பேசாத மாநிலங்களில் இதனை நிறுவனமாக்குதல் , சுமையை அதிகரித்தல் என்ற நோக்கிலும், புதிய தேசிய கல்வி கொள்கை, சமஸ்கிருதத்தை நகர்த்தி உள்ளது.

இது தேசிய ஒற்றுமையையும், பன்முகத்தன்மையையும், கேள்விக்கு உட்படுத்தும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

பல்கலைக்கழகங்களில் நிர்வாக முறை, முற்றிலும் மறு கட்டமைப்பு செய்யப்பட உள்ளது. செனட், சிண்டிகேட் ஆகிய அமைப்புகள், கல்வி சார் அமைப்புகள், ஆகியவற்றின் கல்விப் புல ஜனநாயகம், முற்றிலும் முற்றுப்பெற்றுவிடும்.

உயர்கல்வி நிறுவனங்கள் தன்னாட்சி என்பது அதிவேக தனியார்மயமாக்கலுக்கான கருவியாகவே “புதிய தேசிய கல்விக் கொள்கை 2020” வழியாகப் பார்க்கப்படுகிறது.

ஒரே ஒரு, பட்டப் படிப்பில், முதலாம் ஆண்டில் சான்றிதழ் படிப்பு. இரண்டாம் ஆண்டில் பட்டயப் படிப்பு, மூன்றாமாண்டில், பட்டம் என்ற நிலை, உயர்கல்வியை, துண்டாடும் கருவியாகவே, புதிய தேசிய கல்விக் கொள்கை 2020″ செயல்படும்.

நடைமுறையில், இத்தகைய சான்றிதழ், பட்டயம், பட்டம் ஆகியவற்றுக்கான வேறுபாடுகளும் பலன்களும் பெருமளவில் இருக்காது.

பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல், எப்பொழுது வேண்டுமானாலும் பள்ளியை விட்டு வெளியேறலாம். பள்ளியில் சேரலாம்” என்ற நெகழ்ச்சியின் தன்மை, பள்ளியை விட்டு வெளியேறியவர்கள் பள்ளியை மீண்டும் வந்தடைதல் மிகவும் எளிதான காரியம் அல்ல. இதன் காரணமாக, பள்ளிக் கல்வியில் இடைவிலகல் அதிகரித்து, குழந்தை தொழிலாளர்கள் அதிகரிப்பர் என்பதே நிதர்சனமான உண்மை.

உயர்கல்வி நிறுவனங்களை, ஆராய்ச்சி பல்கலைக்கழகங்கள், கற்பித்தல் பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி கல்லூரிகள் என, மறு கட்டமைப்பு செய்தல் போன்றவை, நீண்ட காலத்தில், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவை, தங்களைத் தக்கவைத்துக் கொள்வதே பெரும் சவாலாக இருக்கும்,
கடினமான நிலையை எட்டும்.

ஒவ்வொரு கல்லூரியும், பட்டமளிக்கும் தன்னாட்சி கல்லூரிகளாக வளரும் என்று கூறப்பட்டுள்ளது. இது அதீத தனியார் மயத்தை உருவாக்கவே வித்திடும்.

“கோத்தாரி கல்விக் குழு”வில் பரிந்துரைக்கப்பட்ட, 6 விழுக்காடு நிதி ஒதுக்கீடு, இன்றும் கூட சாத்தியமாகாத சூழ்நிலையில், இந்த கல்வி குழுவும் 6 விழுக்காட்டை ஆதரிக்கிறது. ஆனால், எங்கிருந்து இந்த 6 விழுக்காடு நிதி வரும் என்ற தெளிவு இல்லை.

வளாகப் பள்ளிகள், கல்வி உரிமை சட்டத்தை, பொருள் அற்றதாக மாற்றி, பள்ளி இடை விலகலை அதிகரிக்கும். பள்ளி செல்லாக் குழந்தைகள் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதன் விளைவாக, கல்விக்கான முக்கியத்துவம் குறையும். கல்வி, வணிகமயமாதல், தனியார் மயமாதலை அதிகரிக்கும்.

அத்துடன் இணைய வழிக் கல்வி, அதன் தாக்கம், தலித்துகள், பழங்குடிகள், பெண்கள், சிறுபான்மையினர், விளிம்பு நிலை மக்கள், ஆகியோரின் மீது பெரும் தாக்கத்தை செலுத்தி, கல்வி வாய்ப்புகளை குறைக்கும்.

பாடத்திட்டத்தில்… வகுப்புவாத கருத்துக்கள் திணிப்பு, அறிவியல் மனப்பான்மைக்கு எதிரான கருத்துக்களைத் திணித்தல், வரலாற்று ரீதியான திரிபு, போன்ற கருத்து திணிப்புகளுக்கு ஆதரவான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா காலகட்டத்தை பயன்படுத்திக் கொண்டு, டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை நீக்கியதும், டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாடு, தொடர்பான பெட்டி செய்திகளை கூட அகற்றியதும் இதற்கு சிறந்த உதாரணங்களாகும்.

வர்ணாசிரமத்தையும் பார்ப்பனியத்தையும் உயர்த்தி பிடிக்கும் பல்வேறு வாய்ப்புகள் புதிய தேசிய கல்விக் கொள்கை வழியாக உருவாக்கப்பட்டுள்ளது. *சட்டத்தின் ஆட்சியைக் காட்டிலும், இந்து தர்மத்தின் ஆட்சி உயர்ந்தது என்று உயர்த்தி பிடிக்கும், சாத்திய கூறுகள் தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளது.

புராணத்திற்கும் வரலாற்றுக்கும் வேறுபாடு இன்றி கட்டமைத்து, அதனை ‘கல்வி’ என்று கற்பிக்கும் ஒரு கொள்கையாகவே புதிய தேசிய கல்விக் கொள்கை 2020 வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, பழைய சாதிய சமூகப் படிநிலை கட்டமைப்பு, ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குகிறது. பழமை வாதத்தின் மூலம், வர்ணாசிரம தர்மத்தின் தர்மத்தை உயர்த்தி பிடிக்கும் தன்மையும் புதிய தேசிய கல்வி கொள்கையின் மூலம் உருவாக்கப்பட உள்ளது. இதன் மூலம், சாதிய படிநிலை சமூகத்தின் கட்டமைப்பு சரி என்ற எண்ணத்தை உருவாக்க முயற்சிக்கப்படுகிறது. தலித்துகள், பெண்கள் மீதான குற்ற செயல்கள் சரி என்பதை, மறைமுகமாக ஏற்க வைக்கும் ஏற்பாடாக இது அமையும்.

பள்ளிக் கல்வி – கல்லூரிக் கல்வி இடைநிற்றல் அதிகரிப்பு, இணையவழி கல்வி அதிகரிப்பு, கல்விக்கான நிதி குறைப்பு, பள்ளி முதல் பல்கலைக்கழகங்கள் வரை மையப்படுத்துதல், கல்வி உரிமை சட்டம் காலாவதியாதல், பட்டியலின, பழங்குடியின மக்கள், பெண்கள், சிறுபான்மையினர் ஆகியோரின் கல்வி நலன்கள் பாதிப்புக்கு உள்ளாக்குதல், வரலாற்றைத் திருத்தி எழுதுதல், அறிவியல் கல்வி மீதான தாக்குதல், அறிவியல் மனப்பான்மையை சீர்குலைத்தல். வகுப்புவாதக் கருத்துகளை திணித்தல். மதசார்பின்மையை கேள்விக்குறியாக்குதல், கல்வி வளாகங்களில், ஜனநாயக செயல்பாடுகளை முடக்குதல், போன்றவை புதிய தேசிய கல்விக் கொள்கை 2020 இன் முக்கியமான அம்சங்களாக இடம்பெற்றுள்ளன.

இதன் காரணமாக… புதிய தேசிய கல்விக் கொள்கை 2020 ஐ, இந்த நாட்டின் நலன் கருதி திரும்பப் பெற வேண்டுமென, ‘ஜனநாயக கல்வி பாதுகாப்பு கூட்டியக்கம்’ கேட்டுக் கொள்கிறது.

மேலும், மக்களுக்கான மாற்று கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசை கேட்டுக் கொள்கிறது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours