மணிப்பூரிகள் இந்தியர்களான கதை- க.இரா. தமிழரசன்

Estimated read time 1 min read

இந்துத்துவத்திற்கு இரையாகும் மணிப்பூர்- 9

1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஆங்கிலேய அரசு இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கியது. அதே நாளில் தன்னுடைய கட்டுப்பாட்டில் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த மணிப்பூருக்கும் சுதந்திரம் வழங்கியது. அதுவரை மணிப்பூருக்கும் இந்தியாவிற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

மணிப்பூர் 1819 இல் பர்மியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. மணிப்பூரி மன்னர் ஆங்கிலேயர்களிடம் உதவி கோரியதன் விளைவாக ஆங்கிலேயர்கள் பர்மியர்களின் ஆக்கிரமிப்பை வெளியேற்றி 1824 முதல் 1891 வரை மணிப்பூரைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

மணிப்பூரின் உள் அரசியல் விவகாரங்களில் பிரிட்டிஷ் அரசர் தொடர்ந்து தன்னிச்சையாக தலையிட்டு வந்ததன் விளைவாக, 1891 இல் ஆங்கிலேயர்களுக்கும் மணிப்பூரிகளுக்கும் இடையே போர் வெடித்தது. இறுதியில், ஆங்கிலேயப் படைகள் வெற்றிபெற்றது, இதன் விளைவாக மணிப்பூர் மாநிலம், 1891 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 21, 1891 தேதியிட்ட இங்கிலாந்து ராணியின் பிரகடனத்தின்படி, 1891 ஆம் ஆண்டிலிருந்து மற்ற இந்திய சமஸ்தானங்களைப் போலவே, பிரிட்டன் ஆட்சியின் கீழ் ஒரு அடிமை மாநிலமாக, அதே நேரம் தன்னிச்சையாக இயங்கி வந்தது. இந்நிலை 1891 முதல் ஆகஸ்ட் 1947 வரை நீடித்தது.

1947 ஆகஸ்ட் 15 இல் இந்தியாவிலிருந்து வெளியேறுவது என்று முடிவெடித்த பிரிட்டன், தன்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள எல்லா சமஸ்தானங்களையும் அழைத்து தாங்கள் வெளியேறப் போகும் முடிவைத் தெரிவித்தனர். அப்படி, மணிப்பூரின் அப்போதைய அரசியல் முகவர் திரு ஸ்டீவர்ட், 1947 ஆகஸ்ட் 14 நள்ளிரவில் தன்னுடைய இல்லத்திற்கு வருமாறு மன்னர் போதச்சந்திரருக்கு அழைப்பு விடுத்திருந்தார். அந்த அடிப்படையில் மன்னர் போதச்சந்திராவும் தன்னுடைய தனிச் செயலாளர் கவுரஹரி மற்றும் சிலருடன் திரு. ஸ்டீவர்ட் குடியிருப்புக்குச் சென்றார்.

மணிப்பூரில் ஆங்கிலேயர் ஆட்சி இன்று முதல் ஒழிந்துவிடும் என்றும், அரசு நிர்வாகம் உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் இந்தியா, பாகிஸ்தான் என்று இருநாடுகள் பிரிக்கப்பட்டுள்ளதாகவும், எந்த நாட்டுடன் மணிப்பூரை இணைப்பது என்பது தங்களுடைய விருப்பம் என்றும் கூறிவிட்டு மன்னர் போதசந்திராவுக்கு வாழ்த்து தெரிவித்தார். அடுத்த நிமிடமே மன்னர் போதச்சந்திரர், மணிப்பூர் சுதந்திரம் அடைந்ததை உணர்ந்து கொண்டு அடுத்தடுத்த நகர்வுக்கு முன்னேறினார்.

1891 ஆம் ஆண்டு முதல் காங்லா கோட்டையில் பறந்து கொண்டிருந்த பிரிட்டன் கொடி இறக்கப்பட்டு, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி காலை காங்லாவில் மணிப்பூரின் அரசக் கொடி பறக்கவிடப்பட்டது.

மணிப்பூர் சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே, மணிப்பூருக்கு என அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கும் பணி தொடங்கியிருந்தது, அந்தப் பணி நிறைவு செய்யப்பட்டு மணிப்பூர் அரசியலமைப்புச் சட்டம் – 1947 என பெயரிடப்பட்டு சட்டம் உடனடியாக ஒப்புதல் பெறப்பட்டது. மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளுக்கு தனி நிர்வாகத்தின் அவசியத்தை உணர்ந்து , மணிப்பூர் மலை மக்கள் ஒழுங்குமுறைச் சட்டமும் உருவாக்கப்பட்டது.

மன்னர் போதசந்திரா தனது சகோதரர் மன்னர் குமார் பிரியோபிரதாவிடம் ஒரு இடைக்கால அரசாங்கத்தை உருவாக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். போதாசந்திர மன்னர் குமார் பிரியோபிரதாவை முதலமைச்சராக நியமித்தார். இடைக்காலச் சபை உருவாக்கப்பட்டது. அதில் முதலமைச்சர் உட்பட ஏழு அமைச்சர்கள் குழு இடம்பெற்றனர்.

1948 இல், மணிப்பூர் மாநிலத்தை ஜனநாயக வழியில் இயக்கும் பொருட்டு மணிப்பூர் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ், மணிப்பூரின் முதல் சட்டமன்றத் தேர்தல் ஜூன் 1948 இல் நடைபெற்றது. இந்தத் தேர்தல் உலகளாவிய வயது வந்தோருக்கான வாக்குரிமையை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்டது. மணிப்பூரின் முதல் பொதுத் தேர்தல் கீழ்கண்ட விகிதாச்சார அடிப்படையில் (1) 30 பொது (2) மலைகளுக்கு 18 (3) 3 முகமதியர்களுக்கு (4) 1 கல்வியாளர் (5) வணிகம் சார்ந்தவர் 1 என மொத்தம் 53 சட்டமன்ற இடங்கள் உருவாக்கப்பட்டு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.

மணிப்பூர் மாநில காங்கிரஸ் 14 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்ததால் அக்கட்சியால் ஆட்சி அமைக்க முடியவில்லை. 12 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவுடன் பிரஜா சாந்தி தலைமையிலான கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. எம்.கே.பிரியோபிரதா முதலமைச்சராக பதவியேற்றார். மேலும் 6 அமைச்சர்களும் பதவியேற்றனர். சட்டசபையின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் என முடிவு செய்யப்பட்டிருந்தது.

தேர்ந்தெடுக்கப்பட்ட மணிப்பூர் சட்டமன்ற உறுப்பினர்கள் 18 அக்டோபர் 1948 அன்று இம்பால் அரண்மனை தர்பார் மண்டபத்தில் பதவியேற்றனர். மணிப்பூர் மாநில அரசியலமைப்புச் சட்டம், 1947 இன் வரையறையின்படி, மன்னர் போத்சந்திர சிங் அவர்கள் மாநிலத்தின் அரசியலமைப்புத் தலைவராக இருந்ததால், அவரின் தலைமையில் சத்தியப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.

அதே நாளில் 1948 ஆம் ஆண்டு அக்டோபர் 18 ஆம் தேதி முதல் சட்டமன்றக் கூட்டம் அரண்மனை தர்பார் மண்டபத்தில் நடைபெற்றது. மன்னர் போதச்சந்திர அவர்கள் தலைமை உரை ஆற்றி அமர்வைத் தொடக்கி வைத்தார்.

இந்தியா தனக்கான அரசியலமைப்புச் சட்டத்தை முடிப்பதற்கு முன்பாகவே மணிப்பூர் மாநிலம் தனக்கென அரசியலமைப்பைச் சட்டத்தை எழுதி அதன் அடிப்படையில் தேர்தலையும் நடத்தி இந்தியாவிற்கு முன்னுதாரணமாக ஜனநாயக வழியில் சுதந்திரமாக ஆட்சியை நடத்திக் கொண்டிருந்து.

ஆங்கிலேயர் ஆட்சியின் நுகத்தடியிலிருந்து விடுபட்டு, மற்ற எந்த இந்திய மாநிலங்களைப் போலல்லாமல், ஒரு சுதந்திர மாநிலமாக தனது சொந்த அரசியல் விவகாரங்கள் மற்றும் நிர்வாகத்தை “ஜனநாயக வழியில் நடத்தத் தொடங்கியதை இந்திய அரசாலும் மணிப்பூர் மாநிலக் காங்கிரசு கட்சியாலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

மணிப்பூரைக் காரணம் காட்டி மற்ற மாநிலங்களும் இதே நிலைப்பாட்டை எடுத்தால் தமது விரிவாதிக்க நலனிற்கு அது கேடாக முடிந்துவிடும் என்றெண்ணிய இந்திய அரசு
மணிப்பூரை எப்படியாவது இந்தியாவுடன் இணைத்து விட வேண்டும் என்று முடிவு செய்தது. அதற்கு மணிப்பூர் – அஸ்ஸாம் காங்கிரசை அப்போதைய நேரு தலைமையிலான இந்தியக் காங்கிரஸ் அரசாங்கத் தலைமை பயன்படுத்திக் கொண்டது. மணிப்பூர் காங்கிரஸ் அதற்காகத் தீவிரமாகச் செயல்படத் தொடங்கியது.

அஸ்ஸாம் கவர்னர் சர் அக்பர் ஹைதாரியைப் பயன்படுத்தி அஸ்ஸாம் காங்கிரசின் பொறுப்பாளர் தேவேஷோர் சர்மாவை மணிப்பூருக்கு அனுப்பி மணிப்பூரின் அரசியல் விவகாரங்களில் தலையிடத் தொடங்கினார்கள். அதன் பிறகு டெல்லியிலிருந்து ராவல் அமர் சிங் என்பவர் மணிப்பூருக்கு திவான் பதவி கொடுத்து அனுப்பப்பட்டார்.

தற்போது பா.ஜ.க தமது ஆளுநர்களைப் பயன்படுத்தி தான் சாராத மாநிலங்களில் தலையிடுவது போன்று அப்போது திவானை வைத்து அரசியல் குறுக்கீடுகள் செய்தனர். மன்னருக்குப் பதிலாக திவான் பல வேலைகளைத் தன்னிச்சையாக செய்யத் தொடங்கினார். இது நிர்வாக ரீதியில் பல குழப்பங்களை உருவாக்கியது. இந்தச் செயல்கள் மன்னர் போதச்சந்திரனை ஏமாற்றமடையச் செய்தது.

இப்படியான நிலையில், அஸ்ஸாம் கவர்னர் ஸ்ரீ பிரகாஷ் அதிகாரப்பூர்வமாக மணிப்பூருக்கு வந்து, மணிப்பூரை இந்தியாவுடன் இணைப்பது குறித்து மன்னர் போதச்சந்திராவுடன் பேசினார். ஆனால், மணிப்பூரை இணைப்பது சாத்தியமில்லை என்று மன்னர் போதசந்திரர் தன் கருத்தில் பிடிவாதமாக இருந்து விட்டார்.

இதனிடையே மணிப்பூரில் திவானைப் பயன்படுத்தி பல்வேறு அரசியல் குழப்பங்களை மணிப்பூர் காங்கிரஸ் கட்சி நடத்திக் கொண்டிருந்தது. எனவே, இது குறித்து பேசுவதற்கு 1949 செப்டம்பர் முதல் வாரத்தில் ஷில்லாங்கிற்கு வர வேண்டும் என்று போதச்சந்திரா கவர்னர் பிரகாஷுக்கு தந்தி அனுப்பினார்.

மணிப்பூரை எப்படி இந்தியாவுடன் இணைப்பது என்று நினைத்துக் கொண்டிருந்த இந்திய அரசு மன்னர் போதச் சந்திரா ஷில்லாங்கிற்கு வருவதை பயன்படுத்தி இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கி விடுவதென்று முடிவு செய்தது .

மன்னர் ஷில்லாங்கிற்கு வரவிருக்கும் வருகையின் போது, தமது இராணுவ ​​பலத்தை பயன்படுத்தி கூட, இணைப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட வேண்டும் என்று அஸ்ஸாம் ஆளுநரிடம் அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் வலியுறுத்தினார்.

16 செப்டம்பர் 1949 அன்று இம்பாலில் இருந்து ஷில்லாங்கிற்கு புறப்பட்ட மகாராஜ் போதச்சந்திரா , 18 செப்டம்பர் 1949 அன்று காலை 11 மணியளவில் தனிச் செயலாளர் கவுரஹரி மற்றும் ஏடிசி ஆனந்த் மோகன் ஆகியோருடன் கவர்னர் பிரகாஷை சந்திக்க அரசு இல்லமான ராஜ்பவனுக்குச் சென்றார்.

கவர்னர் பிரகாசை மன்னர் போதச்சந்திரன் சந்தித்து தமது மாநிலத்தில் நடக்கும் அரசியல் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு கோரிக்கை வைத்தார். அதைக் கொஞ்சம் கூட பொருட்படுத்தாத கவர்னர் பிரகாஷ் தமது கையில் இருந்த ஆவணங்களை மன்னர் போதச்சந்திரனிடம் கொடுத்து விட்டு இது மணிப்பூரை இந்தியாவுடன் இணைப்பதற்கான ஒப்பந்தம் இதில் கையெழுத்திடுங்கள் எல்லாக் குழப்பங்களும் முடிவுக்கு வரும் என்றார்.

மேலும், மணிப்பூர் மாநிலத்தை இந்தியாவின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதென இந்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் அதற்கு தாங்கள் ஒத்துழைக்கவில்லை என்றால் இராணுவ ரீதியாக நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அவர் மிரட்டும் தொணியில் கூறினார்.

ஆனால், மணிப்பூர் மன்னர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு மறுத்து விட்டார். ஒரு கட்டத்தில் கடுமையான அழுத்தங்களையும் எதிர்கொள்ள முடியாமல் மணிப்பூர் சென்று அமைச்சர்கள் குழுவுடன் கலந்து பேசிவிட்டு மீண்டும் விவாதத்திற்கு வருவதாக ஆளுநரிடம் கூறினார். ஆனால், அது எதையும் ஏற்கும் நிலையில் இந்திய அரசு இல்லை.

19ந் தேதி மணிப்பூரின் முன்னாள் எஸ்பி மற்றும் ஷில்லாங் எஸ்பியாக பணியாற்றிய தாஸ் குப்தா அங்கு வரவழைக்கப்பட்டார்.

தாஸ் குப்தா மணிப்பூர் மன்னரோடு வந்தவர்களை அழைத்து ஆட்சியாளரிடம், இணைப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிடாமல் மன்னர் ஷில்லாங்கை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார், அது மீறும் பட்சத்தில் தற்போதை மன்னருக்குப் பதிலாக புதிய மன்னர் நியமிக்கப்படுவார் என்று எச்சரிக்கும் தொணியில் பேசினார்.

19 ந் தேதி இரவு மன்னர் போதசந்திரர் ரெட் லான்ஸில் ஆயுதந்தாங்கிய ராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். எனவே, இதற்கு மேலும் நம்மால் தாக்குப் பிடிக்க முடியாது என்பதை உணர்ந்த மன்னர் அடுத்த நாள், 20ஆம் தேதி நடந்த விவாதத்தில், வரைவு ஒப்பந்தத்தை விரிவாக ஆராய்வதற்கு ஒப்புக்கொண்டார்.

மகாராஜாவுக்கு முழு சலுகைகள், வழக்கமான உரிமைகள் மற்றும் மூன்று லட்சம் ரூபாய்க்கான தனியுரிமை உத்தரவாதம் அளிக்கப்பட்டது. மணிப்பூரி மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றும், அவர்களின் வழக்கமான சட்டங்கள் மற்றும் கலாச்சார நடைமுறைகள் தடையின்றி தொடரும் என்றும் இந்திய அரசு உறுதியளித்த
நிலையில் கடைசியாக இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடிவு செய்தார்.

21 செப்டம்பர் 1949 அன்று மகாராஜ் போதச்சந்திரா, தனிச் செயலாளர் கவுரஹரி மற்றும் ஏடிசி ஆனந்த் மோகன் ஆகியோர் அரசு இல்லத்திற்குச் சென்று மணிப்பூர் இணைப்பு ஒப்பந்தத்தில் முறைப்படி கையெழுத்திட்டனர்.

இந்திய கவர்னர் ஜெனரலுக்கும், மணிப்பூர் மன்னருக்கும் இடையே ஏற்பட்ட இந்த ஒப்பந்தம், மணிப்பூர் மாநிலத்தின் நிலப்பரப்பை இந்தியாவின் முழு ஆதிக்கத்தின் கீழ் வராமல் பாதுகாப்பு, நாணயம் உள்ளிட்ட அடிப்படை அதிகாரங்களை மட்டுமே விட்டுக்கொடுக்கும் என்று கூறப்பட்டது

மணிப்பூர் மாநிலம் இந்தியாவுடன் இணைவது இரண்டு இறையாண்மை கொண்ட நாடுகளுக்கு இடையிலான சர்வதேச ஒப்பந்தத்தின் தன்மையை ஏற்றுக்கொண்டது.

உண்மையில், மணிப்பூரின் ஆட்சியாளர் என்ற முறையில் மணிப்பூர் மகாராஜாவுக்கு மணிப்பூரின் நிலப்பரப்பை இந்தியாவின் ஆதிக்கத்துடன் இணைப்பதற்கு எந்த உரிமையும், அதிகாரமும் இல்லை. ஆளுநருக்கு மணிப்பூரின் இறையாண்மையை மாற்றவோ அல்லது மணிப்பூரின் உள்விவகாரங்களில் தலையிட உரிமை இல்லை.

அவர் பெயரளவிலான அரசியலமைப்பு மாநிலத் தலைவராக இருக்கிறாரே தவிர, அவர் மணிப்பூர் மாநிலத்தின் முழு அதிகாரம் பெற்றவராக இல்லை. மேலும், மாநில அமைச்சர்கள் குழு அல்லது மாநில சட்டமன்றக் குழு மன்னருக்கு இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட எந்த ஒப்புதலும் வழங்கவில்லை என்பதை இந்திய அரசு அறிந்திருந்தாலும் கூட அதையெல்லாம் அரசு பொருட்படுத்தவில்லை.

ஜனநாயக ரீதியில் இந்தப் பிரச்சினையை அணுகாமல் இராணுவ பலத்துடன் மணிப்பூரை இணைத்துக் கொள்வதில் குறியாக இருந்த இந்தியா, ஒரு தலைமை ஆணையரின் ஆட்சியின் கீழ், இந்தியாவின் ஆட்சிப் பகுதியில் ‘ சி ‘ தகுதியுடைய மாநிலமாக மணிப்பூர் இருக்கும் என்று கூறி இந்தியாவுடன் மணிப்பூர் இணைந்து விட்டதாக இந்திய அரசு அறிவித்தது.

இந்த அறிவிப்பை, மணிப்பூர் சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டவிரோதமாகக் கருதினர். இந்திய – மணிப்பூர் இணைப்பை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டனர். எனவே, மணிப்பூர் சட்டமன்ற உறுப்பினர்கள் 28 செப்டம்பர் 1949 அன்று ஜான்ஸ்டோன் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள சட்டசபை அறையில் பிற்பகல் 2.30 மணிக்கு கூடி
மன்னர் போதச்சந்திர சிங் மற்றும் இந்திய அரசின் பிரதிநிதிகளுக்கு இடையே போடப்பட்ட இணைப்பு ஒப்பந்தம் சட்டவிரோதம் என்றும் இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும் ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றினர்.

மன்னர் போதச்சந்திர சிங், அஸ்ஸாம் கவர்னர் பிரகாஸ் ஷா, வி.பி.மேனன், மாநில விவகார அமைச்சர் மற்றும் சர்தார் பல்லபாய் படேல் ஆகியோரின் கடுமையான அழுத்தம் மற்றும் “வற்புறுத்தலுக்கு” உட்பட்டு 21 செப்டம்பர் 1949 அன்று ஷில்லாங்கில் போடப்பட்ட ஒப்பந்தத்தை மணிப்பூர் சட்டமன்றத்தால் கைவிடப்படுகிறது, அதாவது ஒப்பந்தத்திற்குக் கட்டுப்படாது என அறிவித்தது.

அதையெல்லாம் பொருட்படுத்தாத இந்திய அரசு மணிப்பூர் தலைமை ஆணையராக மேஜர் ஜெனரல் ராவல் அமர் சிங்கை அக்டோபர் 15 இல் நியமித்தது. அதே நாளில் மேஜர் ஜெனரல் ராவல் அமர் சிங், 15 அக்டோபர் 1949 அன்று மாநில அமைச்சர்களின் செயல்பாட்டை நிறுத்தி மணிப்பூர் சட்டமன்றத்தைக் கலைத்ததோடு மணிப்பூரின் நிர்வாகத்தைக் கைப்பற்றுவதற்கான அறிவிப்பை வெளியிட்டார். முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மணிப்பூர் சட்டப்பேரவையும் அதே நாளில் கலைக்கப்பட்டது.

உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜனநாயகக் கோட்பாடுகளின்படி, இரு நாடுகளின் இணைப்பு ஒப்பந்தம் குறித்து அந்தந்த மாநில அரசுகள் தங்கள் நாடாளுமன்றத்தில் அல்லது சட்டமன்றத்தில் இது குறித்து விவாதிக்க வேண்டும். மேலும், பொதுமக்களின் கருத்தைக் கலந்தாலோசிக்க வேண்டும். இது எதுவும் மணிப்பூர் விசயத்தில் நடத்தப்படவில்லை. இதையே தான் காசுமீர் விசயத்திலும் இந்திய அரசு கடைபிடித்தது.

மணிப்பூர் இந்தியாவுடன் இணைக்கப்படுவதற்கு முன் ஒரு பெருமைமிக்க “இறையாண்மை கொண்ட தேசமாக” இருந்தது. இணைப்புக்குப் பிறகு அது ஒரு “சிறைபட்ட மாநிலமாக” மாற்றப்பட்டது.

பல நூறாண்டு கால வரலாற்றைக் கொண்ட மணிப்பூரிகள் வரலாறற்ற இந்தியர்களாக மாற்றப்பட்டனர்.

மணிப்பூர் மாநிலக் காங்கிரஸ், ராணுவம், ஆளுநர் என அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தி, இந்திய அரசு மிக அவசரமாகவும், தந்திரமாகவும், சூழ்ச்சியாகவும், மணிப்பூர் சட்டமன்றத்தை ஒழித்து, சட்டப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் அரசாங்கத்தை கலைத்து.

தங்கள் தேசத்தை இந்திய ஆட்சிப் பகுதியுடன் இணைத்ததை ஏற்றுக் கொள்ள மறுத்த மணிப்பூர் மக்கள் ” மணிப்பூர் மணிப்புரிகளுக்கே ” என தங்கள் போராட்டத்தைத் தொடங்கினர்

க.இரா. தமிழரசன்

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours