மெய்திகள் இந்துக்களான வரலாறு- க.இரா. தமிழரசன்

Estimated read time 1 min read

இந்துத்துவத்திற்கு இரையாகும் மணிப்பூர்- 6

18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வலுக்கட்டாயமாக இந்து மதத்திற்கு மாற்றப்படும் வரை மெய்திகள் இந்துக்களாக இருக்கவில்லை. 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இருந்த கியாம்பா மன்னரின் (1467 – 1523) ஆட்சியின் போது    வைணவம் வளரத் தொடங்கியது. குறிப்பாக, இந்துப் பார்ப்பனர்கள் மணிப்பூருக்கு வரத் தொடங்கியதிலிருந்து இந்துமத வரலாறு மணிப்பூரில் தொடங்கியது.

எழுத்தாளரும், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான டாக்டர் ஆர்.கே. நிமாய் கூறுகையில், வங்காள இந்துக்கள் குறிப்பாக பார்ப்பனர்கள் மணிப்பூருக்கு வந்து, கோவில்களைக் கட்டி, மணிப்பூர் சமூகத்தில் ஒருங்கிணைக்கப்பட்டதால், மணிப்பூரில் வைணவம் படிப்படியாக வேரூன்றியது என்கிறார்.

இதை சற்று விரிவாகப் பார்ப்போம், பாங் சாம்ராஜ்யத்தின் மன்னருக்கு கருடன் மீது விஷ்ணு அமர்ந்திருப்பது போல் கல்சிலை  ஒன்று  வழங்கப்பட்டது.
தனக்கு வழங்கப்பட்ட அந்த சிலையைப் பராமரிக்க பார்ப்பனர்கள் வரவழைக்கப்படுகின்றனர். இதன் விளைவாக, அப்போது முதல் மன்னரின்   அரண்மனையில்  விஷ்ணு வழிபாடு நடைபெறத் தொடங்கியது. சிறிது காலத்திற்குப் பிறகு இன்று “பிஷ்ணுபூர்” என்று அழைக்கப்படும் இடத்தில் ஒரு விஷ்ணு கோயில் கட்டப்பட்டது.

இந்தக் கோவிலை மையமாக வைத்து சிறு சிறு கோவில்கள் கட்டப்பட்டன. இதன் பின்னர், பார்ப்பனர்கள் அலை அலையாக மணிப்பூருக்குள் நுழையத் தொடங்கினர். இந்தியாவின் மேற்குப் பகுதிகளிலிருந்து பல பிராமணர்கள் மணிப்பூருக்கு வந்து குடியேறியுள்ளனர். பிராமணர்களின் வருகை பற்றிய பதிவு மணிப்பூர் வரலாற்றாய்வாளர்களின் புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது

கி.பி.1516 இல் (லாம்கியம்பா ஆட்சியில்) செய்தரோல் கும்பபா என்ற பார்ப்பனர்,  தெகாவோவிலிருந்து மணிப்பூருக்கு வந்ததாக வரலாற்றுப் பதிவு உள்ளது. மேலும் , இந்தியாவின் பல்வேறு இடங்களிலிருந்து எட்டு  பார்ப்பன குடும்பங்கள் மணிப்பூருக்குள் நுழைந்த நுழைவாயில் ‘பாமன் குந்தோக்லோன்’ என்று குறிப்பிடப்படுகிறது. பார்ப்பனர்களின் வருகை மணிப்பூரின் வரலாற்றையே மாற்றியமைத்தது.

பிராமணர்கள் அவர்களின் இனத்தில் தூய்மையான இரத்தம் கொண்டவர்கள். பிற இனத்தவர்களுடனோ அல்லது பிற சாதியினருடனோ எந்தவொரு கலப்புத் திருமணங்களும் ஏற்படுவதை அவர்கள் அனுமதிக்கவில்லை.  ஆனால்,
மணிப்பூருக்கு வருகை தந்த பார்ப்பனர்கள் இங்குள்ள மெய்திப் பெண்களையும் மணந்து அவர்களையும் இந்துக்களாக மாற்றினர்.
மணிப்பூரில் பிராமணர்கள் பாமன்கள் என அழைக்கப்பட்டார்கள். பிராமணப் பெண்கள் தூராணி என்றும்
அழைக்கப்பட்டார்கள்/ அழைக்கப்படுகிறார்கள்.

பார்ப்பனர்கள்  அறிவாளிகளாகக் கருதப்பட்டு  மணிப்பூரிகளின் வாழ்க்கை முறையில், குறிப்பாக ஜோதிடத்தில், பூசையில் செல்வாக்கு செலுத்தத் தொடங்கினர். இதன் விளைவாக ஆட்சியாளர்கள், பார்ப்பனர்களை நிர்வாக மற்றும் மத விடயங்களில், குறிப்பாக சடங்குகளை நிறைவேற்றும் பணிகளில் அமர்த்தினர்.

மெய்திகளின் மதமாற்றம் அவர்களின் சொந்த விருப்பத்தின் பெயரிலோ அல்லது கடவுளின் நம்பிக்கையின் பெயரிலோ அல்ல , மாறாக  பம்ஹெய்பா மன்னராட்சியில் மூலம்  கட்டாயப்படுத்தப்பட்டது.  அதாவது  சரைரோங்பா (1697-1709),  பம்ஹெய்பா அல்லது கரிப்னிவாஸ் (1709-1748) மற்றும்  சிங்தாங்கொம்பா அல்லது பாக்யச்சந்திரா (1749-1798) ஆகிய மூன்று வாரிசுகளின் ஆட்சியின் போதுதான் மெய்தி மக்களின் சமூக வாழ்க்கை இந்து மயமாக்கப்பட்டது.

ஏப்ரல் 1704 இல், ஒரிசாவிலிருந்து வந்ததாக நம்பப்படும் பனமாலி கிருஷ்ணாசார்யா என்ற பார்ப்பனரிடம் ஆசி பெற்று   சாரைரோங்பா வைஷ்ணவத்திற்கு மாறிய முதல் மன்னர் ஆனார்.  மன்னருக்குப் பிறகு அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் விரதம் இருந்து வைஷ்ணவ தீட்சையை ஏற்றுக்கொண்டனர்.

சாரைரோங்பா இந்துவாக மாறிய பின்பு  சடங்குகள் மற்றும் கோவில் வழிபாடுகளில் புதிய வைணவ நடைமுறைகளைச் செயல்படுத்தினார். “ஸ்ரீ கிருஷ்ணா” மற்றும் “ஸ்ரீ கிருஷ்ணா காரன்” ( தேவி 2003 ) போன்ற இந்து மரபுக் கடவுள்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நாணயங்களை வெளியிட்டார்.

சாரைரோங்பாவும் அவரது குடும்பத்தினரும் வைணவத்தில் தீட்சை பெற்றிருந்தாலும், அவர் வைணவத்தின் சமயப் பழக்கவழக்கங்களை மாநிலம் தழுவிய அளவில் செயல்படுத்தவில்லை, அவர் வைணவத்தை அரசு மதமாக அமல்படுத்த முயற்சிக்கவில்லை, பாரம்பரிய லை வழிபாட்டை அவர் புறக்கணிக்கவில்லை . பூர்வீகக் கடவுள்கள் தொடர்ந்து வழிபடப்பட்டன, அக்கடவுள்களுக்கும்  கோயில்களும் எழுப்பப்பட்டன.

வைணவத்தை ஒரு அரசு மதமாக நிறுவியவர் சரைரோங்பாவின் மகன்  பம்ஹெய்பா (எ) கரிப்னிவாஸ் ( 1709-1744) தான்.

1715 ஆம் ஆண்டில்,  கரிப்னிவாஸ்  ஆட்சியின் போது ராமர் வழிபாட்டு முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.  ​​குரு கோபால் தாஸ் தலைமையிலான அஹோம் அரச சபையிலிருந்து பார்ப்பனர்கள்  குழு ஒன்று மணிப்பூர் அரசவைக்கு வந்தது. மெய்தி மக்கள் சனாமாஹி மதத்திலிருந்து இந்து வைணவ மதத்திற்கு  மதமாற்றம் செய்யப்பட்டனர். 1717ஆம் ஆண்டில், கரிப்னிவாஸ் அவரது ஆதரவாளர்கள் பலருடன்  இந்து வைணவ மதத்திற்கு மாறினார். பின்னர், அதை  அரசு மதமாகவும் அறிவித்தார்.

வைணவத்தை பெரிய அளவில் பரப்பும் நோக்கத்துடன் மணிப்பூரில் முதன்முறையாக பரப்பப்பட்ட இதிஹாசங்கள் மற்றும் புராணங்கள் போன்ற இந்து நூல்களின் இலக்கியத் தயாரிப்பிற்கு கரிப்னிவாஸ் நிதியுதவி செய்தார் , திரிபுராவில் இருந்து மணிப்பூருக்கு பாகவத புராணத்தின் பிரதிகள் கொண்டுவரப்பட்டு பரப்பப்பட்ட்டன.

1720களில் இருந்து, கரிப்னிவாஸ் வைணவ உருவப்படத்தை நிறுவும் பல திட்டங்களைத் தொடங்கினார்.
அவரது அரசாங்கத்தால் அச்சிடப்பட்ட புதிய நாணயங்களில் “ஜெய் ஸ்ரீராம்” என்று பொறிக்கப்பட்டிருந்தது. மேலும் 1722 இல் கிருஷ்ணர் கோயிலும் , ஆஞ்சநேயருக்கு  ஒரு கோயிலும் கட்டப்பட்டது. 1729 மற்றும் 1734 இல் நிங்தெம் புக்ரி நகரில் ராமர், அவரது சகோதரர்கள் (லெட்சுமணன், பரதன் மற்றும் சத்ருக்னன்), மற்றும் மனைவி சீதா  ஆகியோரைக் கொண்ட கோயில்கள்  கட்டப்பட்டன.

சைவ உணவுப் பழக்க வழக்கத்தை ஏற்றுக்கொண்டு மாட்டிறைச்சி சாப்பிடுவதைத் தடை செய்தார். செப்டம்பர் 1722 இல், மாட்டிறைச்சி சாப்பிட்டதற்காக ஏழு முனிவர்கள் கைது செய்யப்பட்டு பொது இடங்களில் தாக்கப்பட்டுள்ளனர்.

இறுதிச் சடங்குகளில்  மாற்றங்கள் செய்யப்பட்டன. இறந்த உடல்களை அடக்கம் செய்வதை கூட நிறுத்திவிட்டார்கள், மேலும் இறந்தவர்களை தகனம் செய்யத் தொடங்கியுள்ளனர்.  இறந்த உடல்களை எரிக்கும் நடைமுறையை அறிமுகப்படுத்திய முதல் மணிப்பூரி மன்னர் கர்ப்னிவாஸ் ஆவார்.

1724 இல், கரிப்னிவாஸ் தனது மூதாதையர்களின் கல்லறைகளைத் தோண்டி, அவர்களின் தலைகள் மற்றும் எலும்புக்கூடுகளைச் சேகரித்து, நிங்தி ஆற்றின் கரையில் தகனச் சடங்குகளைச் செய்துள்ளார்.

1724 ஆம் ஆண்டில், அவர் “நிங்தெம்” என்பதிலிருந்து “மஹாராஜா” (பெரிய ராஜா) என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டார், பிற்காலத்தில் அவர் “மணிபுரேஷ்வர்” (மணிப்பூர் ஆண்டவர்) என்ற பட்டத்தையும் ஏற்றுக்கொண்டார் அவரது ஆட்சியில் இருந்து,
1724 ஆம் ஆண்டில் மணிப்பூர் (நகைகளின் உறைவிடம்) என்ற சமஸ்கிருத பெயர் சூட்டப்பட்டது. அப்போதிருந்து, மெய்தி இராச்சியம் மணிப்பூர் என்று குறிப்பிடுகிறது.

ஒரு பார்ப்பன  மதகுருவின் ஆலோசனையின் பேரில் மன்னர் கரிப்னிவாஸ், மெய்தியின் வரலாற்றைச் சொல்லும் புயாவை தீயிட்டு எரிக்க உத்தரவிட்டார்.

புயா என்பது மெய்தி முன்னோர்களின் போதனையாகும். அவை வரலாறு, அரச கணக்குகள், நிகழ்வுகள், சமூக நிறுவன அமைப்பு, சடங்குகள், சடங்கு நிபுணத்துவம், மத விழாக்கள் மற்றும் நடைமுறைகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன, பெரும்பாலும் அவை மைச்சஸ்  எனப்படும் பூசாரிகளால் எழுதப்பட்டது.”புயாக்கள் மெய்திகளின் முன்னோர்களால் சந்ததியினருக்கு எழுதப்பட்ட பதிவுகள் என வரையறுக்கப்படலாம். அவை மணிப்பூரி இலக்கியத்தில் ஒரு திட்டவட்டமான  வகுப்பை உருவாக்கும் ஒரு குறிப்பிட்ட வகையான பழைய தொகுப்பாகும்.

புயாஸ் மெய்திகளின் தோற்றம், அவர்களின் வரலாறு, மதம், சமூக மற்றும் கலாச்சார நடைமுறைகளை கூறும் நூலாகும். அது இல்லாமல், மெய்திகளின் அடையாளத்தைக் கண்டுபிடிக்க முடியாது. அப்படிப்பட்ட புயாஸ் 1729 இல்  எரிக்கப்பட்டது.

சமணருக்கும் ஞானசம்பந்தருக்கும் இடையே நிகழ்ந்த விவாதம் அனல்வாதம் புனல்வாதம் என்று கேள்விப்பட்டிருப்போம்.
  ஏடுகளை நீரில் தூக்கி எறிய வேண்டும்,அவை ஓட்டத்திற்கு எதிராகவந்தன என்றால் அத்தரப்பு வென்றது என நிறுவுவது புனல்வாதம். அனலில் இட எரியாமல் எஞ்சும் ஏடுகளில் உள்ள தரப்பு வென்றது என நிறுவுவது அனல்வாதம். இப்படி நம்முடைய வரலாற்றை, பண்பாட்டை பேசிய நூல்களை தந்திரமாக ஆற்றில் எறிய வைத்தார்கள் /எரிக்க வைத்தார்கள்.

ஆண்டுதோறும்  ஆடித்திங்கள் 18ஆம்நாள் வெள்ளப்பெருக்கில் ஏட்டைவிடுவது ‘புண்ணியச் செயல்’ என்றும் போலக் கருதப்பெற்றது.  தீயில் ஏட்டைப் போடுவது தெய்வத்திற்கு ‘ஆகுதி’ செய்வது  போல என்றும் கருத்துகள் விதைக்கப் பெற்று பழந் தமிழ் ஓலைச் சுவடிகள் அழிக்கப்பட்டன.  அந்த சூழ்ச்சியை மணிப்பூரிலும் பார்ப்பனர்கள் நடைமுறைப்படுத்தி அந்த மண்ணின் வரலாறு அழிக்கப்பட்டது.

மணிப்பூரில் சில இந்துப் புனித நூல்கள் உள்ளூர் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன.  1717 மற்றும் 1748 க்கு இடையில், மெய்திலோன், சமஸ்கிருதம் மற்றும் பெங்காலி மொழிகளில் சரளமாகப் பேசும் அங்கோம் கோபி என்ற கவிஞர் சிலவற்றை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். மகாபாரதம் மற்றும் பெங்காலி கிருத்திவாச ராமாயணத்தின் அத்தியாயங்கள் மணிப்பூரி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன.

1737, 1738 மற்றும் 1739 ஆம் ஆண்டுகளில், பலர் புனித நூல் விழாவின் மூலம் வைணவ தீட்சையை ஏற்றுக்கொண்டனர். அதன் பிறகு அம்மக்கள் தங்கள் நெற்றியில் வைணவ அடையாளங்களை அணிந்தனர்.

வைணவத்தை ஏற்றுக் கொண்ட பம்ஹெய்பா சில ஆண்டுகளில் மத வெறியராக உருவாகியிருந்தார், பாரம்பரிய மெய்தி மதத்திற்கு எதிராக தாக்குதலை நடத்தினார். எந்த வகையான இறைச்சியையும் உட்கொள்வது, பன்றிகள் மற்றும் கோழிகளை வளர்ப்பது போன்ற இந்துச் சட்டங்களை மீறுபவர்களை அவர் தண்டித்தார். புதிய மதத்தை ஏற்க விரும்பாதவர்கள் கடுமையான தண்டனையை எதிர்கொண்டனர். அவர் பல உமங்கலாய் கோயில்களையும் அழித்தார்.

பம்ஹெய்பாவின் ஆட்சியின் போது, ​​ புதிய மதத்தை ஏற்காத எவரும் அசுத்தமானவர்களாகவும் சாதிக்கு அப்பாற்பட்டவர்களாகவும் கருதப்பட்டனர். அவர்கள் சில சமயங்களில் தூக்கிலிடப்பட்டனர் அல்லது நிலத்திலிருந்து துரத்தப்பட்டனர். லோயிஸ் மற்றும் யெய்திபிஸ் ஆகிய இரண்டும் இந்து மதத்தை ஏற்காத இரண்டு மக்கள் குழுக்கள். இன்று அவர்கள் மெய்தே சமூகத்தில் தாழ்த்தப்பட்ட அல்லது வெளி சாதி மக்களாகக் கருதப்பட்டனர்.

மறுபுறம், இந்து மதத்தைத் தழுவுபவர்கள் பழங்குடியினர் உட்பட மற்ற மக்களை விட புனிதமானவர்கள் என்று கூறப்பட்டது.

நம்முடைய தமிழ்க் கடவுளான முருகன் என்பவன் இயற்கையோடு பின்னிப் பிணைந்தவன். அவனை ஆரியர் படையெடுப்பின் விளைவாக சுப்பிரமணியனாக்கி,  ரிக், யசுர் போன்ற வேதங்களினுாடாகப் போற்றப்படுபவனாகவும் அக்னியுடன் தொடர்புடையவனாகவும் பார்ப்பனர்கள் தங்கள் வைணவ இலக்கியங்களில் மாற்றியதைப் போல  மெய்தி மக்களின் கடவுள்களின் பெயர்களையும் சமற்கிருதமயமாக்கினர். மெய்தி பண்டிகைகளுக்கு  இந்துப் பெயர்கள் சூட்டப்பட்டன. மணிப்பூரிகளின் உள்நாட்டு திருவிழாக்களில், வைணவ மரபுகளின் கூறுகள் சேர்க்கப்பட்டன. உதாரணத்திற்கு, டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் லிலாங் சஹான்பூரில் நடைபெறும் வருடாந்திர நீராட்டு விழாவான அயங் யோரென் இருப்பா – ஸ்னான யாத்ராவாக மாற்றப்பட்டது ( மற்றும் வைர தென்கப் எனப்படும் வில்வித்தை திருவிழா கீர்த்தனை (பக்திப் பாடல்) மூலம் மாற்றப்பட்டது. ஹெய்க்ரு ஹிடோங்பா திருவிழா ஜல் ஜாத்ரா என மறுபெயரிடப்பட்டது. இப்படியாக கரிப்னிவாஸின் மரணம் வரை  மணிப்பூரில் ராமநந்தி பாரம்பரியத்தின் வைணவ செல்வாக்கு உச்சத்தில் இருந்தது. கரிப்னிவாசின் ஆட்சியின் போதுதான் மெய்தி சமூகம் ஏதோ ஒரு வகையில் இந்திய வர்ண (சாதி) கட்டமைப்பை ஒத்ததாக கட்டமைக்கப்பட்டது.

மன்னர் கரிப்னிவாசின் இறப்புக்குப் பிறகு அவர் அறிமுகப்படுத்திய  வங்காள எழுத்துக்களின் பயன்பாடு, கோயில்களில் வைணவ தெய்வங்களை வழிபடுவது, மகாபாரதம், ராமாயணம் மற்றும் பாகவத புராணம் போன்ற புனித நூல்களை உருவாக்குவது மற்றும் மெய்தி பண்டிகைகளின் சமஸ்கிருதமயமாக்கல் ஆகியவை இன்றுவரை நீடித்து வருகின்றன. அதனை அடித்தளமாக அமைத்து மணிப்பூரில் அடுத்தடுத்த ராஜ்ஜியங்கள் தங்கள் இறையாண்மையைக் கட்டியெழுப்பின. அவருக்கு அடுத்த படியாக  கி.பி.1780ல் ஆட்சிக்கு வந்த மன்னர் பாக்யச்சந்திராவின் ஆட்சியின் போது, ​​வைணவ வழிமுறை சில மாற்றங்களுடன் அதன் உச்சத்தை எட்டியது.

இந்து புனித நூல்கள் சேகரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டன. கீதகோவிந்தா , ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற சில நூல்களும் பொது மற்றும் திருவிழாக்களின் போது வாசிக்கப்பட்டன.  இதிகாசங்கள் மற்றும் புராணங்களை மத வல்லுநர்களால் பகிரங்கமாக வாசிக்க வைக்கப்பட்டது.


கரிப்னிவாசால் தொடங்கப்பட்ட லோயிசாங் என்ற அமைப்பு பாக்யசந்திராவால் விரிவுபடுத்தப்பட்டது. அவை பல்வேறு பொறுப்புகளைக் கொண்ட குழுக்களாக இருந்தன. இவற்றில் மிகவும் செல்வாக்கு மிக்கது மதப் பிரச்சினைகளுக்குப் பொறுப்பான பிராமண சபா . பிராமண சபா மதம் தொடர்பான விவாதங்கள் மற்றும் சர்ச்சைகளில் தீர்ப்பளிக்கும், குறிப்பாக தூய்மை மற்றும் தூய்மையற்ற  தொடர்பான பிரச்சினைகள் மற்றும் உள்ளூர் கவிஞர்களால் எழுதப்படும் நாடகங்கள் அல்லது நூல்கள் வெளியிடத் தகுதி பெற்றது தானா எனத் தீர்மானிக்கும் அதிகாரத்தைக் கொண்டிருந்தது. இந்த சபா பார்ப்பனர்களுக்கு உச்சபட்ச அதிகாரத்தை வழங்கியது.

பாக்ய சந்திராவின் ஆட்சியில்   ராமணந்தி வைணவம் படிப்படியாக செல்வாக்கு குறைக்கப்பட்டு, மணிப்பூரின் அரச மதமாக கௌதீய வைணவ மதம் மாற்றப்பட்டது.

கரிப்னிவாஸின் நிறுவப்பட்ட ஒழுங்கு முறைகளில் மாற்றம் செய்யப்பட்டு ஒரு புதிய வடிவம் கட்டமைக்கப்பட்டது. மணிப்பூரை மீண்டும் ஒருங்கிணைக்கும் செயல்பாட்டில் ஒரு முக்கிய மூலப்பொருளாக அவர் வைணவ-மெய்தி பழக்க வழக்கங்களை ஏற்றுக்கொண்டார்.  இந்தியாவின் பிற பகுதிகளில், வைணவ மரபுகள் பூர்வீக மதங்களை எப்படி உள்வாங்கிக்  கொண்டு வளர்ந்ததைப் போல பாக்யசந்திராவின் கௌதீய வைணவமும்,  ஒரு கலப்பு மதத்தை உருவாக்க மெய்திக்களின் பழங்குடி மரபைச் சேர்ந்த நடைமுறைகளை உள்வாங்கியது.

வைணவ தெய்வங்கள், சடங்குகள் மற்றும் நூல்களின் பிரத்தியேக வழிபாட்டை வலியுறுத்தும் ஒரு கடுமையான  நிலைப்பாட்டைக் கொண்டிராமல்  மெய்தி கலாச்சாரத்தின் கூறுகளை உள்வாங்கினர்.

பாக்யசந்திராவின் கலப்பு மாதிரியின் மிக முக்கியமான அம்சம் வைணவ தெய்வங்களுக்கும் லாயிகளுக்கும் இடையிலான உறவைக் கொண்டு வந்தது. சில சந்தர்ப்பங்களில், வைணவ தெய்வங்கள் மெய்தி திருவிழாக்களில் அறிமுகப்படுத்தப்பட்டன.   ​​வைணவமும் மெய்தே மதமும் பரஸ்பரம் மாற்றமடைந்தன.

மதக் கலப்பு பரவியிருந்தாலும், மெய்தி சடங்குகள் மற்றும் நடைமுறைகள் வைணவ மதக் கொள்கைகளுக்கு முரணாக இல்லாத அளவுக்கு மட்டுமே தக்கவைக்கப்பட்டது.

அவருக்குப் பிறகு பாக்யசந்திரனின் மகன் லாபன்யச்சந்திராவிடம் அரியணை ஒப்படைக்கப்பட்டது. அந்த நேரத்தில், இரண்டு மத மரபுகளும் ஒரு ஒத்திசைவான இணக்கமான கட்டமைப்பில் ஒன்றாக இருந்தன. வைணவத்தையோ அல்லது பூர்வீக மெய்தி மதத்தையோ ஒழிக்க எந்த முயற்சியும் இல்லை.

பாக்யசந்திரரால் நிறுவப்பட்ட இறையாண்மையின் கட்டமைப்பைப் பின்பற்றி, கௌடிய வைணவம் அதிகாரப்பூர்வ மாநில மதமாக இருந்தாலும், இரண்டு மத மரபுகளையும் பின் வந்தவர்களால் ஆதரிக்கப்பட்டது. இதனால் இந்து மதத்தை பின்பற்றுவதில் மணிப்பூரிகளுக்கு எந்தத் தடையும் இருக்கவில்லை.

இப்படியாக மணிப்பூரிகள் இந்துக்கள் என்ற அமைப்புக்குள் உள்வாங்கப்பட்டனர். இந்து அமைப்புக்குள் உள்வாங்கப்பட்ட  மணிப்பூரிகள் சாதியாக பிரிந்தார்கள், அவர்களுக்குள் தீண்டாமை வந்தது,  ஏற்றத்தாழ்வு உருவாகியது.

(தொடரும்)

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours